கிறிஸ்மஸ் செய்தி.
ஆதியில் ஆண்டவர் கொடுத்த வாக்கை நிறைவேற்றினார்.
"ஆண்டவர் சொன்ன வாக்கு நிறைவேறும் என்று விசுவசித்தவள் (மரியாள்) பேறுபெற்றவள்" (லூக்.1:45)
* * * * * * * * * * * *
ஏதாவது ஒரு பொருளை யாருக்காவது கொடுத்து விட்டால்
அதைப்பற்றிய பொறுப்பு நம்மைவிட்டு நீங்கி விடுகிறது.
நண்பனுடைய திருமணத்தின் போது அவனுக்கு ஒரு பரிசு கொடுத்தால்,
அதை அவன் பத்திரமாக வைத்திருக்கிறானா, தொலைத்து விட்டானா என்று கண்காணிக்கிற வேலை நமக்கு இல்லை.
கொடுத்ததோடு நம் கடமை முடிந்து விட்டது.
ஆனால், ஒன்று இருக்கிறது.
அதை நாம் மற்றவர்களுக்குக் கொடுத்துவிட்டால் அதை நாம்தான் காப்பாற்ற வேண்டும்.
அதுதான் நமது வாக்கு.
வாக்குக் கொடுத்தபின் அதைக் காப்பாற்றியே ஆக வேண்டும்.
ஆனால் சில வள்ளல்கள் அள்ளி அள்ளி கொடுப்பார்கள், வாக்குகளை, ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால்.
காரியம் ஆகிவிட்டால் கொடுத்ததை மறந்து
விடுவார்கள்
வள்ளல்கள் ஆச்சே!
நம்மால் காப்பாற்றப்படக் கூடிய வாக்குகளையே நாம் கொடுக்க வேண்டும்.
இறைவன் சர்வ வல்லவர். அவரால் ஆகாதது எதுவுமில்லை. ஆகவே அவர் வாக்குத் தவறவே மாட்டார்.
"விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம்: என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா." (மத்.24:35)
வார்த்தை மனுவானார்.
நம்மிடையே வாழ்ந்தார்.
வார்த்தைகளால் நம்மிடம் பேசினார்.
அவரது வார்த்தைகளை வாழ்ந்து காட்டினார்.
வார்த்தைகளால் வாக்குகள் கொடுத்தார்.
அவர் கொடுத்த அனைத்து வாக்குககளும் நிறைவேறின, நிறைவேறுகின்றன, நிறைவேறும்.
ஆனால், நாம்?
நாம் அவரைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொள்கிறோம்.
அவரது சீடர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்.
கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்.
ஆனால், வாக்கு மாறா தேவனின் பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் வாக்கு மாறாமல் இருக்கிறோமா?
ஆதியில் ஆண்டவர் கொடுத்த வாக்கு என்ன?
"உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்:
அவள் உன் தலையை நசுக்குவாள்:
நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் என்றார்."
(ஆதி.3:15)
நமது முதல் பெற்றோரைப் பாவத்தில் விழச் செய்த சாத்தானுக்கு கடவுள் கொடுத்த சாபத்திலேயே
மனிதனை மீட்க கடவுள் கொடுத்த வாக்கு அடங்கியிருக்கிறது.
சாத்தானின் தோல்வி மனிதனின் வெற்றி.
அதாவது பாவம் அழியும்போது மனிதன் மீடட்கப்படுகிறான்.
சாத்தானைத் தோற்கடித்து,
பாவத்தை அழித்து,
பாவத்திலிருந்து மனிதனை மீட்க
ஆதியிலேயே கடவுள் வாக்குக் கொடுத்தார்.
"சாத்தானே, நீ நான் படைத்த ஏவாள் என்னும் பெண்ணை பாவத்தில் விழச் செய்தாய்.
நான் படைக்கப்போகும் இரண்டாவது ஏவாளாகிய மரியாளை உன்னால் பாவத்தில் விழச்செய்ய முடியாது!
உனது வித்தாகிய பாவத்தை, அவளது வித்தாகப் பிறக்கப் போகும் நானே அழிப்பேன்!"
பாவமாசற்ற மரியாளின் வயிற்றில் மனிதனாய்ப் பிறந்து,
மனிதனைப் பாவத்திலிருந்து மீட்கப் போவதாக
ஆதியிலேயே வாக்குக் கொடுத்தார், கடவுள்.
அந்த வாக்கின்டியே மனிதனாய்ப் பிறந்தார்.
கொடுத்த வாக்கை நிறைவேற்றினார்.
தாயைப்போல பிள்ளை என்பார்கள்.
தமக்குத் தந்தை மட்டுமல்ல தாயும் இறைவன்தான்.
"தாயைப்போல பிள்ளை" என்ற வார்த்தைகள் நமக்குப் பொறுந்துமா?
1.இயேசு "பாவிகளைத் மீட்க வந்தேன்" என்றார். தன் உயிரைச் சிலுவையில் பலிகொடுத்து நம்மை மீட்டிருக்கிறார்.
மீட்பிற்காக நமது பாவங்களை பாவசங்கீர்த்தனம் மூலம் மன்னித்துக் கொண்டிருக்கிறார்.
2."உலகம் முடியுமட்டும் உங்களோடு இருப்பேன்" என்றார். காரணத்தினாலும், ஞானத்தினாலும் மட்டுமல்ல,
திவ்ய நற்கருணையில் உண்மைப் பிரசன்னத்தின் (Real presence) மூலமும் நம்மோடு இருக்கிறார்.
3.தன்னையே நமக்கு உணவாகத் தருவதாக வாக்குக் கொடுத்தார்.
திவ்ய நற்கருணை மூலம் தனது உடலையும் இரத்தத்தையும் நமது ஆன்மீக உணவாகத் தந்து கொண்டிருக்கிறார்.
4."நானே வழி" என்றார். தனது பிரதிநிதிகளாகிய குருக்கள் மூலம் அவரது ஆன்மீக வழியில் நடத்திச் செல்கிறார்.
5."கேளுங்கள், கொடுக்கப்படும்" என்றார்.
விசுவாசத்தோடு கேட்கும் எதையும்,
நமக்கு நன்மை பயப்பதாய் இருந்தால்,
தருகிறார்.
நன்மை பயப்பதாய் இல்லாவிட்டால்,
நமக்கு எது பயன்டுமோ அதைத் தருகிறார்.
நாம் எப்படி?
1.நாம் அவருக்குக் கொடுத்த
வாக்கைக் காப்பாற்றுகிறோமா?
2. 'கிறிஸ்தவர்கள்' என்ற நமது பெயருக்கு ஏற்றபடி நடந்து கொள்கிறோமா அல்லது பெயரளவில் பெயர் வைத்திருக்கிறோமா?
1. நாம் ஞானஸ்நானம் பெற்றுதான் கிறிஸ்துவின் சீடர்களானோம்.
ஞானஸ்நானத்தின் போது
கடவுளுக்குக் கொடுத்த வாக்குகளைக் காப்பாற்றுகிறோமா?
ஞானஸ்நானத்தின் போது
கடவுள் குருவானவர் மூலம் நம்மிடம் கேட்ட முதல் கேள்வி,
"பசாசை விட்டுவிடுகிறாயா?"
நாமும், "விட்டுவிடுகிறேன்" என்று நமது ஞானப் பெற்றோர் மூலம் வாக்குக் கொடுத்தோம்.
எந்த ஞானப் பெற்றோராவது குழந்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்தவுடன் தங்கள் ஞானப் பிள்ளையிடம்,
"உன் சார்பில் பசாசை விட்டு விடுகிறேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறேன்.
அந்த வாக்கைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு. அதைக் கண்காணிக்க வேண்டியது எங்கள் கடமை" என்று கூறியிருக்கிறார்களா?
ஞானக் குழந்தைகளின் ஞான வாழ்க்கையில் கொஞ்சமாவது அக்கரை காட்டுகிறார்களா?
குழந்தையைப் பெற்றவர்கள் குழந்தையின் லௌகீக வாழ்க்கை மீது காட்டும் அக்கரையை
ஆன்மீகவாழ்க்கை மீது காட்டுகிறார்களா?
" பசாசை விட்டு விடுகிறேன்" என்றால் "பாவம்
செய்ய மாட்டேன்" என்று பொருள்.
நாம் பாவம் செய்யும் ஒவ்வொரு முறையும்
இறைவனின் கட்டளையை மட்டுமல்ல,
நமது வாக்குறுதியையும் மீறுகிறோம்.
நாம் கர்த்தர் கற்பித்த செபம் சொல்லும் ஒவ்வொரு முறையும் பின்வரும் வாக்குறுதிகளைக் கடவுளுக்குக் கொடுக்கிறோம்.
"இறைவா! உம்மை எங்கள் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம்.
உம்மை எங்கள் அரசராக ஏற்றுக் கொள்கிறோம்.
விண்ணக வாசிகள் உமது சித்தத்தை நிறைவேற்றுவது போல்
நாங்களும் உமது சித்தத்தை நிறைவேற்றுவோம்.
ஒவ்வொரு நாளும் அன்றன்றைய உணவை நீர் தருகிறீர்.
அதுவே போதும்.
எதிர்காலத்திற்குத் தேவைப்படும் என்று உணவைப் பதுக்கி வைக்க மாட்டோம்.
எங்களுக்கு எதிராக யாராவது தீங்கு செய்தால் அவர்களை மன்னிப்போம்.
அவர்களை நாங்கள் மன்னிக்காவிட்டால் நீர் எங்கள் பாவங்களை மன்னிக்க வேண்டாம்.
சோதனைகள் வரும்போது உமது உதவியை நாடுவோம்."
இந்த வாக்குறுதிகளை நாம் நிறைவேற்றுகிறோமா?
'எங்கள் தந்தையே' என்று கூறும்போதே
கடவுளைத் தந்தையாகவும், மனிதர்களை உடன் பிறந்தவர்களாகவும் ஏற்றுக் கொள்கிறோம்.
ஏற்றுக்கொண்டபடி நடக்கிறோமா?
ஏற்றுக்கொண்டபடி நடந்தால் உலகில் சமாதானம் நிலவுமே!
குடும்பங்களில், பங்குகளில், நாட்டில், உலகில் சண்டை சச்சரவுகள் வராதே!
ஒவ்வொருநாளும் கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுகிறோமா,
அல்லது,
நமது ஆசைகளை நிறைவேற்ற கடவுளை உதவிக்கு அழைக்கிறோமா?
நம்மிடம் இருப்பதை தேவைப்படுவோரோடு பகிர்ந்து கொள்கிறோமா,
அல்லது
எல்லாம் நமக்கே என்று பதுக்கு கிறோமா?
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்துக்குக் காரணமே பதுக்குதல்தானே!
நமது மனதை நோகச் செய்தவர்களை அவர்கள் கேட்காமலேயே மன்னிக்கிறோமா?
மன்னிப்பதுதான் நம்மை மன்னிப்பதற்காகவே மனிதனாய்ப் பிறந்த இயேசுவுக்கு நாம் காட்டும் நன்றி.
2. ஞானஸ்நானத்தில் நாம் கொடுத்த வாக்கையும்,
செபிக்கும்போது தினமும் கொடுக்கும் வாக்குகளையும் நிறைவேற்றினால்தான் நாம்
உண்மைக் கிறிஸ்தவர்கள்.
நாம் உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ்வதுதான் இயேசு பாலனுக்கு நாம் செலுத்தும் நன்றி.
வாழ்க்கையால் நன்றி கூறுவோம்.
கிறிஸ்து பிறந்த தின வாழ்த்துக்கள், எல்லோருக்கும்.
Wish you all a very Happy Christmas!
லூர்துசெல்வம்.
No comments:
Post a Comment