Friday, December 20, 2019

"கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" (லூக்.1:37)

"கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" (லூக்.1:37)
*   *    *   *   *    *   *    *    *   *  *  *

நமது வாழ்வின் மிகப் பெரிய பிரச்சனையே நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான்.

நமது வாழ்வை  ஆரம்பித்ததே நாம் அல்ல.

முதலில் நாம் பிறக்கவே இல்லை.

ஒன்றுமில்லாதிருந்த நாம் நமது தாயின் வயிற்றில் கடவுளால் படைக்கப் பட்டோம்.

நமது தாய் நம்மைப் பெற்றாள்.

நாம் பிறக்கவே இல்லை, 

பெறப்பட்டோம்.

We were born by our mother.

இருந்தாலும் ஏதோ  நாம் சாதித்து விட்டதுபோல

"நான் பிறந்தேன்" என்று பீற்றிக் கொள்கிறோம்.

சரி, அது மொழி வழக்காகையால் (Usage) அப்படியே வைத்துக் கொள்வோம்.

நாம் பிறந்தவுடன் நாமாகச் செய்தது ஒன்றே ஒன்றுதான்,

நாம் அழுதது மட்டும்தான்.

நாம் அழுததைப் பார்த்து நம்மைச் சுற்றி இருந்தவர்கள் சந்தோசப் பட்டார்கள்.

அதன்பின் நாம் வளரவில்லை, வளர்க்கப் பட்டோம்.

நமது வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் நாம் சுயமாக இயங்கவில்லை, இயக்கப் பட்டோம்.

யாரையும் சார்ந்திராமல் நாம் எதையும் செய்ய முடியாது.

இந்த வாக்கியத்தை எழுதக்கூட ஒரு Phone இல்லாவிட்டால் முடியாது.

"நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன், 

இதைச் சாதித்தேன், அதைச் சாதித்தேன்

என்பதெல்லாம் வடிகட்டின பொய்.

நாம் யாரைச் சார்ந்திருக்கிறோமோ அவரைப் பொறுத்துதான்

'நமது சாதனை' என்று  சொல்லப் படுவது அடங்கி இருக்கிறது.

சரி,மொழி வழக்கிற்காக 'நாம் சாதித்தோம்' என்றே வைத்துக் கொள்வோம்.

நாம் யாரைச் சார்ந்திருக்கிறோமோ,

அவருடைய திறமையின் அடிப்படையில்தான்

நமது சாதனையின் அளவு இருக்கும்.

ஆகவே நாம் பெரிதாக சாதிக்க வேண்டுமென்றால் நாம் திறமை உள்ள, 

சக்தி உள்ள ஒருவரைச் சார்ந்திருக்க வேண்டும்.

இப்போ நேரடியாகக் கேட்டு விடுவோம்.

எல்லாம் வல்ல கடவுளைச் சார்ந்திருந்தால் சாதிக்க முடியுமா?

மனிதர்களைச் சார்ந்திருந்தால் சாதிக்க முடியுமா?

மனிதனால், 

அவன் எவ்வளவு பெரிய கில்லாடியாக இருந்தாலும் சரி,

 சுயமாக ஒன்றும் செய்ய முடியாது.

சுயமாக ஒன்றும் செய்ய முடியாதவனை நம்பி நம்மால் எதையும் சாதிக்க முடியாது.

ஆனால் கடவுள் சர்வ வல்லவர்.


"அவரால் ஆகாதது ஒன்றுமில்லை."

இது இறைத்தூதரே அறிவித்த நற்செய்தி.

அறிவியல் ரீதியாக கன்னி கருத்தரிக்க இயலாது.

அறிவியல் ரீதியாக களிமண்ணிலிருந்து உயிருள்ள மனிதனை உருவாக்க முடியுமா?

பொம்மை வேணும்னா செய்யலாம்.

ஒன்றுமில்லாமையிலிருந்து நம்மை உருவாக்கிய கடவுளால்,

களிமண்ணிலிருந்து மனிதனை உருவாக்கிய கடவுளால்

கன்னியின் வயிற்றில் தானே மனுவுரு எடுக்க முடியாதா? 

முடியும்.

அவரால் யாருடைய உதவியும் இன்றி எதையும் செய்ய முடியும்.


கோடானுகோடி நட்சத்திரங்களையும் "ஆகுக" என்ற ஒரே சொல்லால் படைத்தவர்.

நம்மையும் ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தவர்.

நாம் சார்ந்திருக்க வேண்டியது அவரை மட்டும்தான்.

நமது ஆன்மாவை நேரடியாகப் படைத்தார்.

நமது உடலை உருவாக்க நமது பெற்றோரைக் கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டார்.

"இதோ ஆண்டவருடைய அடிமை"

என்று மரியாள் தன்னையே ஒப்புக்கொடுத்ததுபோல

நாமும் நம்மை முழுவதும் அவரிடம் கையெளித்து விட்டால்

(Total and unconditional surrender)

அவரே செயலாற்றுவார், நம்மைக் கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டு.

இதுல Double benefit இருக்கு.

1.செயல் புரிபவர் அவர். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவர் காட்டிய வழியே போக வேண்டியது மட்டும்தான்.

2. அவர் காட்டிய வழி நடந்ததற்காக மட்டுமே நமக்கு நித்திய சம்பாவனை கிடைக்கிறது! 

கிறிஸ்தவத்தின் அடிப்படை நமது விசுவாசம்தான்.

 நமக்கு இருக்கும் விசுவாசத்தின் அளவிற்கு ஏற்ப

 நமது நம்பிக்கையின் அளவும்,

 தேவ சிநேகத்தின் அளவும் இருக்கும்.


விசுவாசத்தால் கடவுளை அவர் உள்ளபடியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதாவது அவரது அளவற்ற அன்பையும்,

அளவற்ற நீதியையும்,

அளவற்ற வல்லமையையும்,

அளவற்ற ஞானத்தையும்,

ஏற்றுக் கொள்வதோடு,

இத்தகைய அளவற்ற பண்புகள் கொண்ட அவர் 

நமது அன்புத் தந்தை என்பதையும்,

நாம் அவரது முழுமையான பராமரிப்பில் இருக்கிறோம் என்பதையும் 

முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அதுதான் முழுமையான விசுவாசம்.

நமது விசுவாசம் முழுமையாக இருந்தால்,

நமது நம்பிக்கையும் முழுமையாக இருக்கும்,

நமது அன்பும் முழுமையாக இருக்கும்.

நமது விசுவாசம் குறைவானதாக இருந்தால்,

நமது நம்பிக்கையும், அன்பும் குறைந்துவிடும்.

உலக ரீதியான ஒரு உதாரணம் கொடுப்போம்.

ஒரே வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்களுக்கும் ஒரே பிரச்சனை.

கையில் இருந்த பணம் முழுவதும் செலவழிந்து விட்டது.

இன்னும் 24 மணி நேரத்தில் பத்தாயிரம் ரூபாய் Exam fees அலுவலகத்தில் கட்டினால் மட்டுமே தேர்வு எழுதமுடியும் என்று கல்லூரித் தலைவர் சொல்லிவிட்டார்.

ஒரு மாணவன் இதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை.

எப்போதும்போல மகிழ்ச்சியாக இருந்தான்.

ஏனெனில் அவனது அப்பாவைப் பற்றி நன்கு தெரியும்.

ஒரு Phone பண்ணினால் போதும். அடுத்த வினாடி பள்ளிக் கணக்கிற்குப் பணம் Transfer ஆகிவிடும்.

ஆனால் அடுத்த மாணவன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.

அப்பாவிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ.

Phone பண்ணினாலும் பணம் வருமோ, வராதோ!


.இப்போ நம் வாழ்வுக்கு வருவோம்.

நாம்

உதாரணத்தில் வரும் முதல்  மாணவன் மாதிரியா?

இரண்டாம் மாணவன் மாதிரியா?

வாழ்க்கையில் ஒரு பிரச்சனை வருகிறது.

எந்தப் பிரச்சனையாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நாம் கடவுளுடைய அளவுகடந்த அன்பிலும், 

வல்லமையிலும், 

ஞானத்திலும் 

விசுவாசம் வைத்திருக்கிறோம்  என்றால் 

நாம் கலங்கவும் மாட்டோம்.

கவலைப்படவும் மாட்டோம்.

நமது பிரச்சனையைப் பற்றி கடவுளுக்கு முழுவதும் தெரியும், 

ஏனெனில் அவர் அளவற்ற ஞானமுள்ளவர்.

நமது பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் அதிக அக்கரை
உள்ளவர்,

ஏனெனில் அவர் நம்மீது அளவற்ற அன்பு உள்ளவர்.

நம் பிரச்சனைக்கு அவரால் தீர்வு காணமுடியும்,

ஏனெனில் அவர் அளவற்ற வல்லமை உள்ளவர்.

நம் பிரச்சனைக்கு அவர் கட்டாயம் தீர்வு காண்பார்,

 ஏனெனில் நாம் தந்தையாகிய அவரின் பராமரிப்பில்தான் இருக்கிறோம். 

இவ்வளவும் இருந்தும் நாம் கவலைப் பட்டால்  

நாம் அற்ப விசுவாசம் உள்ளவர்கள் என்று அருத்தம்.

ஆழமான விசுவாசம் உள்ளவன் 

உறுதியாக நம்புவான்,

அவனது அன்பும் ஆழமானதாக இருக்கும்.

அப்படியானால் பிரச்சனைக்குத் தீர்வுகாண நாம் முயற்சி எடுக்க வேண்டாமா?

முயற்சி எடுக்க வேண்டும். 

ஆழமான விசுவாசத்தோடும்,

உறுதியான நம்பிக்கையோடும்,

பொங்கிவடியும் அன்புடனும்

முயற்சி எடுக்க வேண்டும்.

கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை,

அவரோடு நாம் இருந்தால்,

நம்மால் ஆகாததும் ஒன்றுமில்லை!

"எனக்கு உறுதியூட்டும் இறைவனால் எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு."
(பிலிப்பியர்4:13)

லூர்துசெல்வம். 


No comments:

Post a Comment