Tuesday, December 17, 2019

கடவுள் ஏன் மனிதன் ஆனார்?

இயேசு ஏன் பிறந்தார்?
*   *    *   *   *    *   *    *    *   *  *  *

இனம் இனத்தோடு சேரும் என்பார்கள்.

அன்பு அன்போடு சேரும்.

அன்பே உருவான கடவுள் தன் முழுமையான அன்பைப் பகிர்ந்து கொள்ளவே 

தன் சாயலாக மனிதனைப் படைத்தார்.

அவருடைய அன்பை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

ஆகவேதான் நாமும் யாரையாவது அன்பு செய்ய ஆசிக்கிறோம்.

நாம் யாரை அன்பு செய்கிறோமோ அவரோடு நெருங்கி வாழவே ஆசைப்படுகிறோம்.

நாம் யாரை அன்பு செய்கிறோமோ அவரால் அன்பு செய்யப்படவும் விரும்புகிறோம்.

இது நாம் இறைவனின் சாயலாய் இருப்பதால்தான்.

சாயலுக்கு இருக்கும் குணம் நிஜத்திலிருந்து வந்தது.

ஆக இறைவன் என்றென்றும் நம்மோடு இருக்க விரும்புகிறார் என்பது சொல்லாமலே புரியும்.

தன்னுடைய காரணத்தாலும்,(By being the primary Cause of everything)

 ஞானத்தாலும் (Wisdom)

அவர் எங்கும் இருக்கிறார்.

இது தவிர்க்க முடியாதது.

ஆனால் அதையும் தாண்டி, அதைவிட நெருக்கமாக நம்மோடு இருக்க விரும்புகிறார்.

எப்படி?

சர்வ வல்லப கடவுள்

மனிதன் மீது கொண்டிருந்த அளவு கடந்த அன்பின் காரணமாக, 

மனிதனாகவே ஆகவிரும்பினார்! 

உண்மையான மனித சுபாவம் கொண்ட மனிதனாக ஆக விரும்பினார்! 

He wanted to become 

fully man   

being at the same time 

fully God! 


God wanted to share in the fullness of our humanity! 

முழுமையாக கடவுளாக இருந்துகொண்டே முழுமையாக மனிதனாக ஆக விரும்பினார்!

என்னே அன்பின் ஆழம்!

துவக்கமும் முடிவும் இல்லாத கடவுள்

பிறப்பும் இறப்பும் உள்ள மனிதன் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாக

அவனைப் போலவே பிறப்பும் இறப்பும் உள்ள மனிதனாக ஆக விரும்பினார்!

இது அவரது நித்திய காலத் திட்டம்.



அவர் மனிதனை அன்பு செய்வதற்காக மட்டுமே படைத்தார், பாவம் செய்வதற்காக அல்ல.

ஆதாம் படைக்கப்பட்டபோது அவனிடம் பாவ மாசு கொஞ்சங்கூட இல்லை.

ஆனால் அவன் கடவுளால் தனக்குப் பரிசாக அளிக்கப் பட்டிருந்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாவம் செய்தான்.

தனது பாவத்தினால் மனிதன் இறைவனோடு தனக்கிருந்த அன்புறவை முறித்துக் கொண்டான்.

ஆனால் கடவுளின் அன்பு சிறிதும் குறையவில்லை.

ஆகவே மனிதன் செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்து

அவன் முறித்துக் கொண்ட அன்புறவை மீட்டுக்கொடுக்கத்

தனது மனிதனாகப் பிறக்கும்  திட்டத்தைப் பயன்டுத்திக்கொண்டார்.

இப்போது ஒரு கேள்வி எழும்.

கடவுள் மனிதனை இரட்சிக்க மனிதனாய்ப் பிறந்தாரா?

அல்லது

மனிதனாக வேண்டும் என்பதற்காக மனிதனாய்ப் பிறந்தாரா?

ஒரு சின்ன Analogy.

நான் மாணவனாக இருந்தபோது பூகோள பாடம் படிக்கும்போது அமெரிக்காவிற்குப் போய்ச் சுற்றிப் பார்க்க ஆசையாய் இருந்தது.

அப்போது வயது 13.

இப்போது வயது 82.

என் பேரன்மாரும், பேத்தியும், பூட்டிமாரும் அமெரிக்காவில் இருக்காங்க.

போன வருசம் அமெரிக்காவிற்குப் போனேன்.

அமெரிக்காவைப் பார்க்கப் போனேனா?

பேரன்பேத்தியைப் பார்க்கப் போனேனா?

ஒரே பதில்தான்.

இரண்டு ஆசைகளும் ஒன்றாய் நிறைவேறின.

அதேபோல்தான் மனிதனாய்ப் பிறக்க வேண்டும் என்ற திட்டமும்,

 மனிதனை மீட்க வேண்டும் என்ற திட்டமும் 

ஒன்றாய் நிறைவேறின.


கடவுளின் நித்திய திட்டப்படி பரிசுத்த தமதிரித்துவத்தின் இரண்டாம் ஆளாகிய மகன் தேவன் கன்னிமரியின் வயிற்றில் மனித உரு எடுத்தார்.

மனு உரு எடுக்குமுன் மகன் தேவனுக்கு ஒரே சுபாவம், தேவ சுபாவம்.

மனு உரு எடுத்த பின் இரண்டு சுபாவங்கள்.

ஆள் ஒன்று, தேவ ஆள்.
சுபாவங்கள் இரண்டு.

தேவ சுபாவம்,
மனித சுபாவம்.

இயேசு முழுமையாக கடவுள்,
முழுமையாக மனிதன்.

Jesus is fully God and fully Man.

நமக்காகப் பாடுபட்டது, தேவ ஆள், மனித சுபாவத்தில்.

பாடுபட்டது, தேவ ஆள், 
ஆகவே பாடுபட்டது கடவுள்.

மரியாளின் வயிற்றில் மனித உரு எடுத்தது கடவுள், ஆகவே மரியாள் கடவுளின் தாய்.

மனுக்குலத்தைப் படைத்த கடவுள் இப்போது மனுக்குலத்தின் ஒரு உறுப்பினர்!

நமது சகோதரர்! 

அது நமக்கு எவ்வளவு பெருமை! 

பெருமைப்பட்டுக் கொண்டால் மட்டும் போதாது.

இறைவனும், நமது சகோதரருமாகிய இயேசுவுக்கு பிரியமானவர்களாக வாழ வேண்டும்.

அவர் நம்மை அன்பு செய்வது  போல நாமும் அவரை அன்பு செய்ய வேண்டும்.

பாவம் செய்யாமல் புண்ணியவான்களாக வாழ வேண்டும்.

அவர் மனுக்குலம் முழுவதையும் அன்பு செய்வது போல 

நாமும் மனுக்குலம் முழுவதையும் அன்பு செய்ய வேண்டும்.

அவரது அன்பு எவ்வளவு ஆழமானது என்றால் அவர் நம்மோடு மட்டுமல்ல நமக்கு உள்ளும் வாழ விரும்புகிறார்.

அதற்காகவே திவ்ய நற்கருணையை ஏற்படுத்தி,

நமது ஆன்மீக உணவாக நமக்குள் வருகிறார்.

அடிக்கடி திருப்பலியில் கலந்து கொண்டு, 

அவரை உண்டு, 

அவரோடு இணைந்து வாழ வேண்டும் என்பதே அவரது நித்திய ஆசை!

அவரது ஆசையை நிறைவேற்றுவது நமது கடமை.


ஞான உபதேச வகுப்பில்  ஒரு பையனிடம் கேட்டேன்,

"நீ எதற்காகப் பிறந்தாய்?"

"வாழ்வதற்காக."

"இயேசு எதற்காகப் பிறந்தார்?" 

"மரிப்பதற்காக."

"கொஞ்சம் விளக்க முடியுமா? "

"தனது மரணத்தின்மூலம் எனக்கு நித்திய வாழ்வு பெற்றுத்தர இயேசு பிறந்தார்."

கடவுள் நம்மைப் படைத்ததே நித்திய வாழ்வுக்காகத்தான்.

ஆனால் நமது பாவம் இடையில் குட்டையைக் குழப்பி விட்டது, மரணம் புகுந்தது.

இயேசு பிறந்தது தன் மரணத்தினால் நம் மரணத்தை வெல்ல.

தீமையிலிருந்து  நன்மையை  வரவழைக்க கடவுளால் முடியும்.

பாவத்தின் விளைவான நமது மரணத்தை

தனது மரணத்தினால்

நமது நிலை வாழ்வின் வாயிலாக மாற்றியவர் இயேசு. 

நமது பாவம் இயேசுவின் மரணத்திற்குக் காரணமாய் இருந்தது.


இயேசுவின் மரணம் நமது பாவத்தின் மரணத்திற்குக் காரணமாய் இருந்தது.

இயேசு பிறந்தார், வாழ்ந்தார், மரித்தார் நமக்காக.

பிறந்த நாம் வாழ்வோம், மரிப்போம் அவருக்காக.

அவரது மரணம் நமது இரட்சண்யம்.

நமது மரணம்  நமது நிலை வாழ்வுக்கான வாசல்.

மரண வாயில் வழியே நித்திய பேரின்ப வீட்டிற்குள் நுழைவோம்,

இறைவனோடு இணைந்து நிலை வாழ்வு வாழ்வோம்.

லூர்துசெல்வம் 


















 

No comments:

Post a Comment