Saturday, December 28, 2019

இயேசுவை நமது வாழ்வாக்குவோம்.

இயேசுவை நமது வாழ்வாக்குவோம்.
*   *    *   *   *    *  *   *    *   *   *    *
நாம் நமது வாழ்வின் நடவடிக்கைகளில்  கெளரவம்      (prestige) பார்க்கிறோம்.

நம்மை விட ஏதாவது ஒரு வகையில் குறைந்தவர் நம்மை ஒரு வேலை ஏவினால் அது நமது கெளரவத்தைப் பாதிக்கிறது.

நமது கெளரவத்தைப் பாதிக்கும் வகையில் யாராவது பேசினால்கூட நமக்குக் கோபம் வருகிறது.

ஆனால் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும்    கௌரவமே பார்க்காத ஒருவர் இருக்கிறார்.

அவர்தான் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.   

இப்பபிரபஞ்சத்தையே படைத்து ஆண்டுவருகிற சர்வ வல்லப கடவுளாக இருந்தாலும்

 தன்னால் படைக்கப்பட்ட சாதாரண மனித குலத்தில் மனிதனாகப் பிறந்து மனிதர்களோடு வாழ விரும்பினார்.

உலகத்திலுள்ள அத்தனை செல்வங்களுக்கும் ஏக உரிமையாளர் அவர்தான்.

ஆயினும் ஒரு ஏழைக் கன்னியையே தன் தாயாகவும்,

ஒரு ஏழைத் தச்சனையே தன் வளர்ப்புத் தந்தையாகவும் தேர்ந்தெடுத்தார்.

திருக்குடும்பத்தின் தலைவராகிய சூசையப்பர் ஒரு உழைப்பாளி.

மரியாளின் வயிற்றில் வளர்ந்தது இறைமகன் என்பது அவருக்குத் தெரியும்.

அதற்காக இறைவனிடமிருந்து விசேச சலுகை எதையும் எதிர் பார்க்கவில்லை.

நசரேத்திலிருந்து பெத்லகேமுக்கு தூரம்157கி.மீ.

 மக்கட் தொகைக் கணக்கெடுபிற்காக நடந்தே  சென்றார்,

நிறைமாதக் கற்பிணியான மாதாவைக் கழுதையில் ஏற்றிக் கொண்டு. 

தங்க இடம் கிடைக்காமல் மாடடைக் குடிலில் தங்குகிறார்கள்.

இயேசு பிறக்கிறார் நடுங்கும் குளிரில்.

இயேசு கடவுள் என்று இருவருக்கும் தெரியும். 

ஆனால் தாங்கள் கஸ்டப்பட நேர்ந்தமைக்காக அவரிடம் முறையிட்டார்களா?

அல்லது

கஸ்டத்தை நீக்கும்படி. அவரிடம் கேட்டார்களா?

இல்லை. ஏனெனில் கஸ்டத்தை தேர்ந்தெடுத்தவரே அவர்தான் என்று அவர்கட்குத் தெரியும்.

சூசையப்பரைப் பொறுத்த மட்டில் சம்மனசு என்ன சொன்னாலும் ஏன், எதற்கு என்று கேட்காமல் கீழ்ப்படிபவர்.


"சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்."

மறு பேச்சின்றி ஏற்றுக் கொண்டார்.

"எழுந்து பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்கு ஓடிப்போம். 

நான் சொல்லும்வரை அங்கேயே இரும்."

மறு பேச்சின்றி சொன்னபடியே செய்தார்.

"எழுந்து, பிள்ளையையும் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ராயேல் நாட்டுக்குச் செல்லும்."

சென்றார்.

"கலிலேயா நாட்டுக்குச் செல்லும்."

சென்றார்.

" நான் கடவுளுக்கே வளர்ப்புத் தந்தை. நீர் அவருடைய தூதர் மட்டுமே. உமக்கெல்லாம் கீழ்ப்படிந்தால் என் கௌரவம் என்னாகிறது?"

என்று கேட்டாரா?

மாதா 'இதோ ஆண்டவருடைய அடிமை' என்று சொல்லிவிட்டு கீழ்ப்படிந்தார்.

ஆனால் சூசையப்பர் சொல்லாமலே கீழ்ப்படிந்தார்! 

திருக்குடும்பமே இறைவன் சித்தத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்தது.

நாம் ஒவ்வொரு ஆண்டும் இயேசுவின் பெயராலும், மாதாவின் பெயராலும், மற்ற புனிதர்கள் பெயராலும் எண்ணிறந்த விழாக்கள் கொண்டாடுகிறோம்.

எதற்காக?

நாம் கொண்டாடும் விழாக்கள் நம் வாழ்வில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறதா?

டிப்டாப்பா உடையணிந்து கந்தல் துணியால் போர்த்தப்பட்டிருக்கும் ஏழைச் சிறுவனைப் பார்க்கப் போகிறோம்.

அவர் பசியால் அழுதுகொண்டு இருப்பதைப் பார்த்துக்கொண்டே, 

அவர் பெயரால் விதவிதமான உணவு வகைகளை உண்கிறோம்.

ஒரு ஏழைச் சிறுவன் பெயருக்கு விழா எடுக்க இலட்சக் கணக்கில் செலவழிக்கிறோம்.

கேட்டால் அந்த ஏழைச் சிறுவனைப் பின்பற்றுபவர்கள்(followers) என்கிறோம்.

விழா எடுப்பது பின்பற்றுதல் அல்ல.

யாருக்கு விழா எடுக்கிறோமோ அவர்களின் நற்பண்புகளை 

நமது பண்புகளாக ஏற்று வாழ்வதுதான் உண்மையான சீடனின் குணம்.

இவ்வுலகச் செல்வங்கள் மீது பற்று இல்லாதவன்தான் இயேசுவின் சீடனாக இருக்க முடியும்.

ஆண்டவரின் அடிமையாக வாழ்பவன்தான் மாதாவின் பிள்ளையாக  இருக்க முடியும்.

கேள்வி கேட்காமல் திருச்சபையின் சொற்படி நடப்பவன்தான் சூசையப்பரின் பக்தனாக இருக்க முடியும்.

கடவுளாகிய இயேசுவே இரண்டு மனிதர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்.

நாம் கீழ்ப்படிதலை கௌரவ குறைச்சல் என்று எண்ணுகிறோம்.

இயேசு மற்றவர்கட்காக நிறைய புதுமைகள் செய்தார்.

தனது அம்மாவுக்காகவோ வளர்த்த தந்தைக்காகவோ ஒரு புதுமை கூட செய்யவில்லை.

ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளித்தார்.

ஆனால் அவர் வீட்டில் உழைத்துதான் சாப்பாடு.

எண்ணற்ற மக்களின் நோய்களை புதுமைகள் செய்து குணமாக்கினார்.

ஆனால் சூசையப்பருக்கு வாதநோய் வந்தபோது அதைக் குணமாக்கவில்லை.

இறந்த பலருக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

ஆனால் சூசையப்பர் இறந்த போது , அவரை எழுப்பவில்லை.

இதை எல்லாம் நமக்குப் பாடமாகத்தான் செய்தார்.

நாம் அவரது வாழ்விலிருந்து பாடம் கற்றிருக்கிறோமா?

சிந்திப்போம்.

இந்த ஆண்டு கடந்துவிட்டது.

புத்தாண்டிலாவது இயேசுவை நமது வாழ்வாக்குவோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment