"அனைவருக்கும் குழந்தையைப்பற்றி எடுத்துரைத்தாள்." (லூக்.2:39)
* * * * * * * * * * * *
" கண்ட பின்னர், அப்பாலனைப் பற்றித் தமக்குக் கூறப்பட்டதைப் பிறருக்கு அறிவித்தனர்." (லூக்.2:17)
உலக மீட்பர் பிறந்த செய்தி முதன் முதல் அறிவிக்கப்பட்டது,
மிக ஏழைகளான இடையர்களுக்கு,
நேரடியாக விண்ணக தூதர்களால்.
அவர்கள் இயேசு பாலனைச் சந்தித்து ஆராதித்துவிட்டு சும்மா இருக்கவில்லை
தாங்கள் கேட்டதை கண்டதை
பிறருக்கு அறிவித்தனர்.
திருச்சபை வரலாற்றில் முதல் நற்செய்திப் பணியாளர்கள் ஏழைகளான இடையர்களே!
அவர்கள் நற்செய்தியை அறிவிப்பதற்காக தேவசாத்திரம், தத்துவ சாத்திரம் ஒன்றும் கற்றுத் தேர்ந்திருக்கவில்லை.
அவர்கள் செய்ததெல்லாம:
"கண்ட பின்னர்,
அப்பாலனைப் பற்றித்
தமக்குக் கூறப்பட்டதைப்
பிறருக்கு அறிவித்தனர்."
இறைத்தூதர்கள் தங்களுக்குக் கூறியபடி சென்று இயேசு பாலனைக் கண்டார்கள்.
நிச்சயமாக மாதாவும் சூசையப்பரும் பாலனது பிறப்புப் பற்றிய அன்றைய அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருந்திருப்பார்கள்.
இடையர்கள்
தூதர்கள் கூறியவற்றையும் மாதா கூறியவற்றையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டார்கள்.
நிச்சயமாக இந்த இறை அனுபவப் பகிர்வை தங்கள் வாழ்நாளெல்லாம் செய்திருப்பார்கள்.
ஏனெனில் இது சாதாரண அனுபவமல்ல.
விண்ணிலும் மண்ணிலும் இருந்து கிடைத்த அனுபவம்.
அடுத்து ஒருவர் மாதாவுக்கே ஒரு நற்செய்தியை அறிவிக்கிறார்.
அவர் சிமியோன் என்னும் நீதிமான், கடவுள் பக்தர்.
எட்டாம் நாளில் மாதாவும் சூசையப்பரும் குழந்தையுடன் கோவிலுக்கு வந்து,
குழந்தைக்கு " இயேசு " என்னும் பெயரை இட்டார்கள்.
அப்போதுதான் சிமியோன் மாதாவுக்கு ஒரு நற்செய்தியை அறிவித்தார்.
"இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு
வீழ்ச்சியாகவோ
எழுச்சியாகவோ
அமைந்துள்ளான்:
எதிர்க்கப்படும்
அறிகுறியாக இருப்பான்"
இயேசு நற்செய்தி அறிவித்து மக்களை மீட்கவே வந்தார்.
ஆனாலும் நற்செய்திப்படி வாழ்பவர்கள் மீட்கப்படுவார்கள்,
வாழாதவர்கள் வீழ்ச்சி அடைவார்கள்.
இந்த இரண்டு வகையினரும் இருப்பார்கள் என்ற செய்தியை சிமியோன் மாதாவுக்கு அறிவிக்கிறார்.
இந்தச் செய்தியை இயேசுவே அவரது நற்செய்தி அறிவிப்புக் காலத்தில் உறுதிப்படுத்துகிறார்.
"நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்?
இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்."
என்ன செய்வது?
சட்டம் உறுவாக்கப் படும்போதே
சட்டத்தை அனுசரிப்பவர்களும்,
மீறுபவர்களும் வந்து விடுகிறார்களே!
ஆனால் இயேசு பிரிவினையை உறுவாக்க வரவில்லை.
ஒற்றுமையை ஏற்படுத்தி
மீட்கவே வந்தார்.
அது அவருக்கே தெரியும்.
ஆனாலும் நடக்கப்போகும் உண்மை நடப்பை முன்னாலேயே நமக்குத் தெரியப் படுத்தவே இவ்வாறு கூறுகிறார்.
இது ஒரு அப்பா
சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பிள்ளைகளைப்
பார்த்து,
"உங்கள் சண்டைகளுக்கு நான்தான்ல காரணம். நான் தான உங்களைப் பெற்றேன்"
என்று சொல்வது மாதிரி.
அடுத்து அன்னாள் என்னும் விதவை ஆண்டவருக்கு பெயர் சூட்டும்போது கோவிலில் இருந்தாள்.
38 அவளும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து, யெருசலேமின் விடுதலையை எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் குழந்தையைப்பற்றி எடுத்துரைத்தாள்
." (லூக்.2:38)
அன்னாள் ஆண்டவருடைய வருகையை எதிர்பார்த்திருந்த
அனைவருக்கும் குழந்தையைப்பற்றி எடுத்துரைத்தாள்.
வந்தோம் பார்த்தோம் புகழ்ந்தோம் போனோம்
என்றிராமல்
மெசியாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம் சென்று
" நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெசியா பிறந்துவிட்டார்",
என்ற நற்செய்திச் செய்தியை அறிவித்தாள்.
நாம் பார்த்த, இடையர், சிமியோன், அன்னாள் ஆகியோர்
இயேசு குழந்தையாய் இருக்கும்போதே
" நற்செய்தி அறிவியுங்கள்"
என்று கூறுமுன்னாலேயே,
தாங்களாகவே தங்களுக்குத் தெரிந்த நற்செய்தியை
தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு அறிவித்தார்கள்.
இதை நாம் நற்செய்தி நூலில் வாசிக்கிறோம்.
வாசித்துவிட்டு?
பைபிளை மூடிவிடுகிறோம்.
சாமியார் தினமும் பைபிள் வாசிங்கன்னு சொன்னார்,
வாசித்துவிட்டோம். அவ்வளவுதான்.
நற்செய்தியை அறிவிக்க வேண்டியது சாமிமார் மட்டுமல்ல,
அதை அறிந்த அனைவருக்கும் அந்த உரிமை உண்டு .
நான் அதைக் கடமை என்று கூறவில்லை.
கடமைக்காகச் செய்வதை விட உரிமையோடு செய்வதுதான்
அதிக பலன் தரும்.
நாம் கடவுளுக்கு உரியவர்கள். ஆகையினால்தான் அவரை உரிமையோடு அப்பா என்கிறோம்.
நமது தந்தையை அறியாதவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்த நமக்கு முழு உரிமையுண்டு.
நற்செய்தி அறிவிப்பதற்கு பெரிய படிப்பெல்லாம் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாம் கடவுளை அறிந்திருக்க வேண்டும்,
அவரை நேசிக்க வேண்டும்,
பிறரையும் நேசிக்க வேண்டும்.
இடையர்களோ, அன்னாளோ நற்செய்தி வகுப்புகள் நடத்தவில்லை,
நற்செய்திக் கூட்டங்கள் போடவில்லை.
தாங்கள் அறிந்ததை தாங்கள் சந்தித்தவர்களிடம் கூறினார்கள்,
இயல்பாக, திட்டம் போட்டல்ல.
இயல்பாகச் சொல்லுவது தான் மனதைத் தொடும்.
யாரையாவது பார்த்து
" இங்கே வாருங்கள், உட்காருங்கள், நான் உங்களுக்கு இயேசுவைப் பற்றி சொல்லப் போகிறேன்"
ஆரம்பித்தால், உடனே ஓடிப் போய்விடுவார்கள்.
இயல்பாகப் பேசும்போதே ,
நம்முடைய இறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.
அனுபவப் பகிர்வின்போது இயேசுவைப் பற்றி, நமது இரட்சண்யம் பற்றி, நமது சமைய உண்மைகள் பற்றி பேசுலாம்.
ஒரே நாளில் அல்ல , எப்பப்போ , சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்பப்போவெல்லாம்.
நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு விதை.
விதையை நண்பர்களின் மனமாகிய நிலத்தில் விதைக்கிறோம்.
சதர்ப்பம் கிடைக்கும்போது விதை முளைத்து வளரும்.
நாம் எல்லோருமே நற்செய்திப் பணியாளர்கள்தான்.
முதன்முதல் இடையர்கள் நற்செய்தியைப் பரப்பினார்கள்.
இயேசுவும் தன்னை ஒரு இடையனாக (ஆயன்) உருவகித்துக் கொண்டார்.
நற்செய்தியைப் பொறுத்தமட்டில் நாமும் இடையர்களாக மாறுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment