Tuesday, December 24, 2019

நீதிமானின் நினைவலைகள்.

நீதிமானின் நினைவலைகள்.
*   *    *   *   *    *  *   *    *   *   *    *  


"அவள் கணவர் சூசை நீதிமானாயும், அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராயும், இருந்ததால் 

அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்.

இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில்,
(மத்.1:19,20)

மேற்படி பைபிள் வசனங்களை வாசித்துக் கொண்டிருக்கும் போதே என் மனதில் ஒரு சிந்தனை ஓடியது.

ஒரு கேள்வியும் எழுந்தது.

"சூசையப்பர் என்ன சிந்தித்துக்
கொண்டிருந்திருப்பார்?"

அதாவது மரியாளைப் பார்த்ததற்கும், கபிரியேல் தூதர் அவர் கனவில் தோன்றியதற்கும் இடைப்பட்ட நேரத்தில்.

யாருடைய நினைவுகளையும்,

 அவர்களால் வெளிப்படுத்தப் படாவிட்டால்

நம்மால் கண்டுபிடிக்க முடியாது.

நாம் கற்பனை வேண்டுமானால் செய்து கொள்ள முடியும்.

நமது கற்பனையும் சம்பந்தப் பட்டவர்களின் நினைவுகளோடு ஒத்துவரும் என்பதற்கில்லை.

அதிலும் மற்றவர்களைப் பற்றி கண்டபடி,

அவர்கட்கு எதிராக,

 கற்பனை செய்ய நமக்கு உரிமை இல்லை.


அவர்களின் நல்ல குணங்களின் அடிப்படையில்,

அவர்களுக்கும் நமக்கும் உள்ள
நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் கற்பனை செய்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

'சூசையப்பர் நீதிமான். 

 மரியாளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவர்'

என்ற பைபிள் வார்த்தைகளின் அடிப்படையில்,  

அவர்மீது நமக்கிருக்கும் பக்தியை அதிகரிக்கும் வகையில் 

கற்பனை செய்கிறேன்.

நீதிமானான,

 மரியாளைக் காட்டிக்கொடுத்து அதனால் அவளுக்கு எந்தவிதமான அவமானமும் வந்து விடக்கூடாது என்று நினைக்கும், 

மரியாள் மீது உண்மையான அன்பு கொண்ட சூசையப்பர்

 இவ்வாறு சிந்தித்திருக்கலாம்.

"வாழ்நாள் முழுவதும் தன் கற்பைக் காப்பாற்றுவதாக இறைவனுக்கு வாக்குக் கொடுத்திருப்பவள் மரியாள்.

'என் கற்பிற்கு நமது திருமணத்தால் எந்தவித பங்கமும் வந்துவிடக்கூடாது,

 நீங்கள் எனது கற்புக்குப் பாதுகாவலராய் இருக்க வேண்டும்' என்று அவள் என்னிடம் கூறி,

'உங்கள் கற்புக்குப்  பாதுகாவலனாக இருப்பேன்,


சட்டத்தின் முன்னால் மட்டுமே நீங்கள் என் மனைவியாய் இருப்பீர்கள்,

 உறவின் அடிப்படையில் நீங்கள் எனது சகோதரிதான்' 

என்று நான் சத்தியம் செய்து கொடுத்த பின்புதான் 

திருமண நிச்சயத்திற்கே (betrothal)  சம்மதித்தாள்.

அப்படிப் பட்ட புனிதவதி  தவறு செய்திருக்க முடியாது.

இது எப்படி நடந்திருக்கும் என்று என்னால் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.

நிச்சயமாக மரியாள் தவறு செய்திருக்க முடியாது.

ஆனாலும் நீதியின் அடிப்படையில்,

 குழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது.

ஆகவே ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதே சரி.

இதைச் சட்டப்படி செய்தால் மரியாளுக்குப் பெருத்த அவமானம்.

நிச்சயமாக அவள் குற்றம் அற்றவள்.

குற்றமற்றவளை அவமானப் படுத்துவதும் நீதிக்கு எதிரானது.

அப்படியானால் ஒன்று செய்யலாம்.

இரகசியமாக அவளை விலக்கிவிடலாம்.

அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறதே.

நான்  அவளை இரகசியமாக நீக்கிவிட்டு, 

நானும் இரகசியமாக விலகி விட்டால் 

தனித்திருக்கும் அவளை அவளது வயிறு காட்டிக் கொடுத்து விடுமே.

அப்போது ஏற்படும் அவமானத்தை அவள் எப்படித் தாங்கிக் கொள்வாள்?

அவளது பிழை இன்றி யாரோ செய்த தவறுக்கு அவள் அவமானப் படக்கூடாது.

அதுவும் நீதிக்கு எதிரானது.

என்ன செய்யலாம்.

இப்படிச் செய்யலாம்.

நான் அவளை இரகசியமாக நீக்கிவிட்டாலும் அதை அவளிடம் சொல்ல வேண்டாம்.

திருமணமும் முடிக்க வேண்டாம்.

எப்படியும் சகோதரனாக வாழத்தான் வாக்குக் கொடுத்திருக்கிறேன்.

அவளுடைய சகோதரனாக,

பிறக்கவிருக்கும் அவளது குழந்தைக்கு வளர்ப்புத் தந்தையாக,

சாகும் வரை அவளோடு வாழ்வேன், பாசமுள்ள அண்ணனாக.

கற்பத்தின் காரணத்தைக் கேட்கமாட்டேன்

அவளாகச் சொன்னால் பரிவோடு ஏற்றுக்கொள்வேன்.

அவள்மீது எனக்குக் கோபமே வராது.

ஏனெனில் அவள் என் பாசமுள்ள தங்கை.

யாரோ செய்த தப்பிற்காக அவளை எப்படி வெறுக்க முடியும்?

நீதியும் அன்பும் இணைந்து வாழ்வதே வாழ்க்கை.

 ஒப்பந்தத்தை விட்டு விலகுகிறேன், நீதிப்படி.

அண்ணனாகச் சேர்ந்து வாழ்வேன், அன்புப்படி.

அவளது குழந்தை எனது வளர்ப்புக் குழந்தை."

இவ்வாறு சிந்தித்துக் கொண்டு   இருக்கும்போதே தூங்கிவிட்டார்.


 ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். 

ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.

21 அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். 

ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.

சூசையப்பரும் விழித்தெழுந்து, 

ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு 

தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

அவளோடு அவள் கற்புக்குப் பாதுகாவலனாகவும்,

இறைமகனுக்கு வளர்ப்புத் தந்தையாகவும் வாழ ஏற்றுக்கொண்டார்.

இறைவன் நீதியும், அன்பும் நிறைந்தவர்.

நீதி நாம் செய்த பாவத்திற்குப் பரிகாரம் கேட்டது.

அன்பு அந்தப் பரிகாரத்தை அவரையே செய்யவைத்தது.

நீதிமானாகிய சூசையப்பரிடம் அன்பும் இருந்தது.

நீதி விலகச் சொன்னது. 
அன்பு சேர்த்து வைத்தது.

நம்மிடமும் நீதி இருக்க வேண்டும்.

தீர்ப்பிட அல்ல. 
அன்புடன் ஏற்றுக்கொள்ள.

லூர்துசெல்வம்

No comments:

Post a Comment