"இஸ்ராயேலில் யாரிடமும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை." (மத்.8:10)
* * * * * * * * * * * *
தன் ஊழியனுக்கு சுகம் வேண்டி வந்த நூற்றுவர் தலைவனின் விசுவாசத்தைக் குறித்து இயேசு கூறிய வார்த்தைகள் இவை.
நூற்றுவர் தலைவன், தன் ஊழியன் திமிர்வாதத்தால் வீட்டில் கிடந்து மிகுந்த வேதனைப்படுகிறான் என்றான்.
உடனே இயேசு அவனை நோக்கி,
"நான் வந்து அவனைக் குணமாக்குவேன்"
என்றார்.
நூற்றுவர் தலைவனோ,
"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன்.
ஆனால், ஒரு வார்த்தை சொன்னால் போதும்: என் ஊழியன் குணமடைவான்."
என்றான்.
தன் வார்த்தைகளின் மீது அவனுக்கு இருந்த ஆழமான விசுவாசத்தைக் குறிக்கும் வகையில் இயேசு,
"இஸ்ராயேலில் யாரிடமும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை."
என்றார்.
நூற்றுவர் தலைவனிடமிருந்து
நாம் சில பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
1. முதலில் அவனது ஆழமான விசுவாசம்.
நம்மிடமும் விசுவாசம் இருக்கிறது. ஆனால் ஆழம் போதாது.
"ஒரு வார்த்தை சொன்னால் போதும்: என் ஊழியன் குணமடைவான்."
இறைவார்த்தையின் வல்லமைமீது நூற்றுவர் தலைவனுக்கு இருந்த
அசைக்க முடியாத விசுவாசத்தை
அவனுடைய வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.
அந்த இடத்தில் நானாக இருந்திருந்தால்,
''ஆண்டவரே, என் வீட்டிற்கு வாரும். என் ஊழியனைத் தொடும். அப்போதுதான் அவன் குணமாவான்."
என்று மாறிமாறிச் சொல்லி அவரைப் பாடாய்ப் படுத்தியிருப்பேன்.
அவரும் தொந்தரவு தாங்க மாட்டாமல் வந்திருப்பார்.
அல்லது,"அற்ப விசுவாசியே, முதலில் உன் விசுவாசத்தை உறுதிப்படுத்து." என்று சொல்லியிருப்பார்
"அதையும் நீர்தான் செய்யவேண்டும்."
என்று அவர் காலைப் பிடித்திருப்பேன்.
அவரும் "ஐயோ! பாவம்" என்று இரக்கப்பட்டு வந்து, குணமாக்கியிருப்பார்!
நாம் நமது விசுவாசத்தை ஆழப்படுத்துவோம்.
2. அடுத்து அவனது தாழ்ச்சி.
அவன் நூறு படைவீரர்களுக்குத் தலைவன்.
ஆனால் இயேசுவின் முன் தனது தகுதி இன்மையை உணர்ந்தான்.
"ஆண்டவரே, நீர் என் இல்லத்துள் வர நான் தகுதியற்றவன். "
இயேசுவை ஆண்டவர் என்று விசுவாச அறிக்கை செய்ததோடு,
தான் பாவி என்பதை ஏற்றுக் கொண்டதோடு,
பரிசுத்தரின் கால்பட தன் இல்லம் தகுதி அற்றது
என்று தன்னையே தாழ்த்திக் கொண்டான்.
அந்த தாழ்ச்சியே அவனுக்குப் பெருமையைத் தேடித்தந்தது.
"இஸ்ராயேலில் யாரிடமும் இத்துணை விசுவாசத்தை நான் கண்டதில்லை."
என்று கூறி, சர்வ வல்லப கடவுளே அவனது ஆழமான விசுவாசத்தை
மக்கள் முன்பு பாராட்டினார்!
மேலும் அவனது தாழ்ச்சியான வார்த்தைகள் அவனை உலகம் முடியுமட்டும்
கிறிஸ்தவர்களின் மனதில் அமர வைத்துவிட்டன.
ஒவ்வொரு திருப்பலியிலும் நன்மை வாங்குமுன் நாம்
"ஆண்டவரே, தேவரீர் என்
உள்ளத்தில் எழுந்தருளி வர நான் தகுதி அற்றவன்,
ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும்,
என் ஆன்மா குணமடையும்"
என்று கூறும்போதெல்லாம்
நூற்றுவர் தலைவன் நமது ஞாபகத்திற்குள் வருகிறான்.
இது அவனது தாழ்ச்சிக்கு ஆண்டவர் கொடுத்த பரிசு!
உலகில் நிறைவேற்றப் பட்டுக் கொண்டிருக்கும் கோடிக் கணக்கான திருப்பலிகட்கும் அவனது ஞாபகம் வந்து போகிறது!
தாழ்ச்சி சகல புண்ணியங்களுக்கும் அரசி.
Humility is the queen of all the virtues.
"இதோ ஆண்டவருடைய அடிமை"
என்று கூறிய மரியாளின் தாழ்ச்சிதான்
அவளை விண்ணக, மண்ணக அரசியாக உயர்த்தியது!
3. மேலும் நூற்றுவர் தலைவனின் தகுதியின்மை ஏற்பு மற்றொரு முக்கியமான உண்மையைப் புரிய வைக்கிறது.
ஒருவன் தகுதி பெற முயற்சி எடுக்குமுன், தான் தகுதி இல்லாதவன் என்தை உணர வேண்டும்.
ஒருவன் சுகம் பெற. விரும்பினால், முதலில் தனக்கு வியாதி இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
ஒருவன் பாவ மன்னிப்புப் பெறவேண்டுமானால் முதலில் தான் பாவி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்றைய உலகின் பரிதாப கரமான நிலையே மனிதர் பாவ உணர்வே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.
ஒருவன் பாவ வாழ்வே வாழ்ந்து கொண்டு,
தன் பாவத்தை உணராவிட்டால்
எப்படிப் பாவத்துக்காக வருந்துவான்?
வருந்தாவிட்டால் எப்படி மன்னிப்புப் பெறுவான்?
நாமும் சுயபரிசோதனை செய்து,
நமது தகுதி நிலையின் அளவை உணர்ந்து,
தகுதி இல்லாதிருந்தால் தகுதி உள்ளவர்களாக மாறுவோம்,
தகுதி அளவு குறைவாக
இருந்தால், அதிகமாக்குவோம்.
நமது பள்ளிக்கூட தேர்வில் பாஸ் பண்ண 35 மார்க் போதும்.
ஆனால் நல்ல வேலை கிடைக்க அது போதுமா?
மோட்சத்திற்குப் போக பாவம் இல்லாதிருந்தால் போதும்.
ஆனால் பேரின்பம் அதிகரிக்க
புண்ணியங்களும் அதிகரிக்க வேண்டும்.
ஆகவே பாவத்தை விலக்கினால் மட்டும் போதாது.
புண்ணியங்களை அதிகப்படுத்த வேண்டும்.
எவ்வளவுக்கெவ்வளவு விசுவாசம் ஆழமாக இருக்கிறதோ,
எவ்வளவுக்கெவ்வளவு அன்பு அதிகரிக்கிறதோ,
எவ்வளவுக்கெவ்வளவு நற்செயல்கள் அதிகமாகின்றனவோ,
அவ்வளவுக்கவ்வளவு புண்ணியங்களும் அதிகமாகும்,
அவ்வளவுக்கவ்வளவு பேரின்பமும் கூடும்.
4. நூற்றுவர் தலைவன் மற்றொரு முக்கியமான பாடத்தை நமக்குக் கற்பிக்கிறான்.
அவன் இயேசுவிடம் செபித்தது
தனக்காக அல்ல,
தனது குடும்பத்துக்காகக்கூட அல்ல,
தனது வீட்டு வேலைக்காரனுக்காக!
தனது வீட்டு வேலைக்காரனைத் தன் குடும்பத்தில் ஒருவனாகப் பாவிக்கும் மனப்பக்குவம் அவனுக்கு இருந்திருக்கிறது.
ஆழமான விசுவாசம் இருந்தால்தான் அந்த மனப்பக்குவம் வரும்.
எல்லோரையும் இறைவனில் நம் உடன் பிறந்தவர்களாகப்
பாவிக்கும் அளவிற்கு நம் விசுவாசம் வளர வேண்டும்.
நமக்காக மட்டுமல்ல எல்லோருக்காகவும் செபிக்க வேண்டும்.
5. நூற்றுவர் தலைவரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வேண்டிய இன்னொரு பாடமும் இருக்கிறது.
அவன் ஒரு ரோமானிய படை வீரன். இயேசுவின் காலத்தில் யூதர்கள் ரோமைப் பேரரசால் ஆளப்பட்டு வந்தார்கள்.
யூதர்களால் ரோமானியரை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியாது.
யூதத் தலைவர்கள் இயேசுவைக் கொல்ல ஆசைப்பட்டார்கள்.
ஆனால் அதைக்கூட சுயமாய்ச் செய்ய இயலவில்லை.
அதற்குக்கூட ரோமைக் கவர்ணருடைய உதவியை நாட வேண்டியிருந்தது.
ஆனால்,
இந்தச் சூழ்நிலையிலும்,
ரோமை நூற்றுவர் தலைவன்
யூத மக்கள்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான்
அவர்களுக்கென்று செபக்கூடம்கூட கட்டிக் கொடுத்திருந்தான்.
இன வேறுபாடு பாராத இந்த அன்பை நாமும் பின்பற்றலாமே!
தம்மை வெறுப்பவர்களையும் நேசிக்கிற இயேசுவின் சீடர்கள் நாம்.
இன, மத வேறுபாடின்றி அனைவரையும் அன்பு செய்வோம்,
அனைவருக்கும் இயேசுவின் பெயரால் உதவி செய்வோம்.
நூற்றுவர் தலைவனின் விசுவாசம் இயேசுவுக்குப் பிடித்திருந்தது.
நாமும் இயேசுவுக்குப் பிடித்தவர்களாக மாறுவோம்.
லூர்துசெல்வம்.
No comments:
Post a Comment