http://lrdselvam.blogspot.com/2019/12/blog-post_16.html
"ஆண்டவரே! உம்ம பைபிளில் கை வைக்க உம்ம அனுமதி வேணும்." சாத்தான்.
* * * * * * * * * * * *
"ஹலோ! மைக்கில்! நான் லூசிபெர் வந்திருக்கேன்னு உன் கடவுள்ட போய்ச் சொல்லு!"
"மரியாத தேயுது?"
"நான் பழைய லூசிபெர் இல்லை. சாத்தான். சாத்தான்கிட்ட இருந்து மரியாதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது.ji
நானும் மரியாதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டேன்.
நான் நினைத்தது நடக்கணும். அவ்வளவுதான்."
..."ஹலோ! சாத்தான்! புத்தியே இல்லாம உன் கத எப்படி ஓடுது?"
"எனக்கா புத்தி இல்ல? உன் கடவுளையே சிலுவையில அறைஞ்சவன் நான்."
"இதச் சொல்ல வெட்கமா இல்ல?
கடவுளைச் சிலுவையில அறைஞ்சதினால தோற்றது யார்?
மக்களுக்கு இரட்சண்யம் கொடுக்க மனிதனாகப் பிறந்தவரைக் கொல்ல
அவர் பிறந்த நாளிலிருந்தே முயற்சி செய்தாயே, ஏன்?
அவர் மக்களுக்கு இரட்சண்யம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தானே!
அவரது இறப்பிலேதான் மனித இரட்சண்யம் அடங்கி இருந்தது என்ற எண்ணம் உன் மரமண்டையில் ஏன் ஏறவில்லை?"
"பழைய கதை இப்போ எதற்கு?
நான் அவசரமா கடவுளப் பார்க்கணும்.
போய்ச் சொல்லு."
"யார்ட்டப்போய்ச் சொல்லணும்."
"கடவுள்டதான்."
"ஹலோ! கடவுள் எங்கும் இருக்கிறார் என்ற
எல்லோருக்கும் தெரிந்த உண்மை
நரகுலக மாமன்னனுக்குத் தெரியல! "
"எனக்குத் தெரியாதுன்னு உன்னிடம் யார் சொன்னா?"
"அவர் உனக்குப் பக்கத்திலேயே இருக்கும்போது என்னை ஏன் சொல்லச் சொன்ன?"
"உனக்குத் தெரியுமான்னு சோதிச்சேன்."
"குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலன்னு சொல்ற!"
"எனக்கு மீசையே இல்ல, எப்படி ஒட்டும்? "
"ஹலோ! நான் இங்க இருக்கேன். வந்த விசயத்தச் சொல்லு."
"ஆண்டவரே! உம்ம பைபிளில கை வைக்க உம்ம அனுமதி வேணும்."
"நீ சொல்ல வந்திருக்கது என்னவென்று எனக்குத் தெரியும்.
இருந்தாலும் நீயே சொல்லு."
"உம்ம பைபிள அடிக்கடி மொழி பெயர்த்துக் கிட்டிருக்காங்க.
நானும் அவங்ககூட இருந்து கொஞ்சம் விளையாட அனுமதி வேண்டும்."
"என்ன விளையாட்டு?"
"உங்க அம்மாவை விட்டு என் தலையை நசுக்க வச்சிட்டீங்க.
அவங்க பாவ மாசில்லாம உற்பவித்து,
பாவ மாசில்லாம பிறந்து,
பாவ மாசில்லாம வாழ்ந்து
பாவ மாசில்லாம மரித்து
என்னை அவமானப்படுத்திட்டாங்க."
"எனக்குத் தாயாகப் போறவங்க பாவ மாசில்லாம இருக்க வேண்டும் என்பது என்பது எனது நித்திய காலத்திட்டம்.
அவங்களைப் பாவ மாசின்றி படைத்தது நான்தான்.
அதற்கு இப்ப என்ன செய்யப்போற?"
"உங்க பிள்ளைகள் எல்லோரும் அவங்கள அமலோற்பவத் தாய் என்று கொண்டாடிக் கொண்டிருக்காங்க.
அது எனக்குப் பிடிக்கல"
"உனக்கு என்றைக்கு நல்லது பிடிச்சிருக்கு. இப்ப என்ன செய்யப் போற?"
"அவங்க மற்ற மனிதர்களைப் பாவ மாசு உள்ளவர்கள்தான் என்று உங்க பிள்ளைகளை நம்ப வைக்கணும்."
"அதற்கு?"
"அவங்களது அமல உற்பவத்திற்கான பைபிள் ஆதாரங்களை அழிக்கணும்.
அவற்றை அழிச்சிட்டா மக்கள் நான் சொல்றத நம்புவாங்க.
ஆதாரங்களை அழிக்க இதுதான் சரியான நேரம்.
இப்ப பைபிளுக்கு புதிய மொழி பெயர்ப்புக் கொடுக்கப் போறாங்க.
நீங்க சரின்னு சொல்லிட்டீங்கள்னா மொழி பெயர்ப்பாளர்கள் மூலமா ஆதாரங்களை அழிச்சிடுவேன்."
"ஏண்டா உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா?"
"இல்லை. இருந்திருந்தால் சம்மனசுக்களிலேயே மிக அழகாக இருந்த நான் கொழுத்துப்போய் சாத்தானா மாறியிருப்பேனா?
அனுமதி கொடுங்கள், மாதா பக்தர்களை என்பக்கம் இழுத்துக் காட்டுகிறேன்."
"உன்னால் முடியாதுன்னு உனக்கே தெரியும்.
நீ என்ன தீமை செய்தாலும்
அதிலிருந்து நன்மையை வரவழைக்க என்னால் முடியும் என்றும் உனக்குத் தெரியும்.
ஆனாலும் உனக்கு வேறு வேலை இல்லை.
Go. Permission granted."
"Hi! Michael! Bye! , வெற்றியோடு திரும்புகிறேன்!
By the by, நான் என்ன செய்யப் போகிறேன் என்று சொல்ல வில்லையே!
மரியாளின் அமல உற்பவத்திற்கான பைபிள் ஆதாரங்களை அழிக்கப் போகிறேன்,
பைபிள் படிப்பாளிகளின்(Bible Scholars) துணை கொண்டே!
என்னை யாரும் சந்தேகப்பட மாட்டார்கள்.
இனி ஆதியாகமத்த்தில் 'அவள் உன் தலையை நசுக்குவாள்' என்னும் வசனம் இருக்காது.
புதிய ஏற்பாட்டில் கபிரியேல் மரியாளை 'அருள் நிறைந்தவளே' என்று வாழ்த்த மாட்டார்.
'அருள் மிகப் பெற்றவளே' என்றுதான் வாழ்த்துவார்.
நிறைவு போய்விடும், டும், டும்,டும்!
மிகுதி வந்திடும், டும், டும்,டும்!
ஆதாரம் Out!
அமலோற்பவம் Out!"
"சீ! வாயப்பொத்து! அம்மா உன் தலை நசுங்கி ரொம்ப நாளாச்சி!
அருள் நிறைந்த அன்னை இன்று விண்ணக, மண்ணக அரசி!
உன்னால அன்னையையோ, அன்னை பக்தர்களையோ ஒண்ணும் பண்ண முடியாது.
போ! தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு வா!"
"தலைன்னு ஒண்ணு இருந்தால்தானடா தொங்கப் போட முடியும்!
Bye!"
(சில ஆண்டுகள் கழித்து)
"ஹலோ! மிஸ்டர் சாத்தான்!
ஆளையே காணல!
உன் டும், 'டும்,டும்,டும்' என்னாச்சி?"
"இந்த முட்டாப் பயல்களை நம்பி சவால் விட்டுப் பேசியது தப்பாப் போச்சி."
"ஏன்? என்னாச்சி?"
"பிரிஞ்சி போன எல்லோர் கையிலும் ஒரு பையிள் இருக்கு.
நீ அவங்கள்ட்ட என்ன சொன்னாலும், "பைபிளில இருக்கான்னுதான் கேட்கிறான்.
ஆனால் உங்காள்கள் கையிலும் கட்டாயப்படுத்தி பைபிள் கொடுத்திருக்காங்க.
ஆனால் யாரும் சீரியசா வாசிக்கிறது மாதிரி தெரியல.
அவங்களுக்கு அவங்க பங்குச் சாமியார்தான் எல்லாம்.
சாமிமார் தங்களுடைய பிரசங்கத்தில
கிறிஸ்தவ வாழ்வுக்குரிய அடிப்படை உண்மைகளை எல்லாம்
சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள்.
அப்படியே சிலர் பைபிள் வாசித்திலும் விளக்கத்துக்குச் சாமியார்ட்டதான் போராங்க.
பூமியில ஆயிரக்கணக்கா மாதா கோயில்ள் இருக்கின்றன.
ஒவ்வொரு கோவிலிலேயும் மாதாவுக்கு ஒரு செல்லப்பேர் வச்சிருக்காங்க.
அது மட்டுமல்ல மாதாவுக்கு ஒவ்வொரு மாதமும் திருவிழா வச்சிருக்காங்க.
அவங்க வேலையே மாதா
பெருமையைப் பாடறதும்
மாதா பக்தியை வளர்க்கிறதும்தான்!
பாப்பானவரும், பிஷப்மாரும், சாமிமாரும் இருக்கிற வரைக்கும் என்னால் மக்களை ஒன்றுமே செய்யடியாது.
உண்மையிலேயே இராயப்பர் கல்லுதான்.
மூணுதடவை இயேசுவை மறுதலிக்க வச்சேன்.
அதுக்காக மனுசன் வாழ்நாள் முழுதும் அழுதுருக்காரு.
உங்காட்கள் எல்லாம் அழுமூஞ்சிப் பயலுக.
ரொம்பச் சங்கடப்பட்டு சோதனை மேல் சோதனை கொடுத்து பாவம் செய்ய வச்சிருப்பேன்.
திடீர்னு பார்த்தா அழுதுகிட்டே கோவிலுக்குள் போவாங்க,
சிரிச்சிக்கிட்டே வெளியே வருவாங்க,
உள்ளே எட்டிப் பார்த்தா ஒரு சாமியார் உட்கார்ந்திருப்பார்!"
"ஆதார அழிப்பு என்ன ஆச்சி?"
"ஒண்ணும் ஆகல.
மாதா பக்தி நாளுக்கு நாள் வளர்ந்துகிட்டுதான் இருக்கு.
பைபிள் வாசிக்காவிட்டாலும் செபமாலை ஒழுங்கா சொல்லிடராங்க.
கையில பைபிள் இருக்கோ இல்லியோ, பாக்கட்ல செபமாலை இருக்கு."
"ஆக சாத்தானே மாதா புகழ் பாட ஆரம்பிடிச்சு."
"ஹலோ! நான் ஒண்ணும் புகழ் பாடல. உண்மை நிலையைச் சொன்னேன், பழைய Friend ஆச்ச!"
"வாயக் கழுவு! நான் உனக்கு Friend ஆ?"
"பழையன்னுதான சொன்னேன்!"
"கடவுள எப்போ சந்திக்கப்போற?"
"முயற்சியைக் கைவிட மாட்டேன். மாதாவைத் தோற்கடிச்சிட்டுச் சந்திப்பேன்."
"அது ஒருநாளும் நடக்காது.
பந்தை எவ்வளவு வேகமா கீழ பார்த்து உதைக்கிறியோ அவ்வளவு வேகமா மேலே பார்த்துப் போகும்.
மாதாபக்தியை எவ்வளவு வேகமா அழிக்கப் பார்க்கிறியோ அவ்வளவு வேகமா அது வளரும்!
Every action has its equal reaction!
நீ உன்னையே பெரிய வில்லன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்.
ஆனால் உன் வில்லன்தனத்தை எல்லாம்
கடவுள் தனது நித்திய திட்டத்தை
நிறைவேற்றப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இறுதிக் காலத்தில் உனக்குப் புரியும்,
நீ எதை எல்லாம் அழிக்க நினைக்கிறாயோ
அதெல்லாம் நிறைவேறியிருக்கும்
உன் உதவியாலே!"
"என்ன உளறுகிறாய்?
கடவுளா என்னை வில்லனாக மாற்றினார்?
நான் தீமை. கடவுள் நல்லவர்.
அவர் எப்படித் தீமையைப் பயன் படுத்த முடியும்?"
"முட்டாள்! முட்டாள்!
கடவுள் உன்னை நல்லவனாகத்தான் படைத்தார்.
அவரால் தீமையைப் படைக்க முடியாது.
"கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன."
(ஆதி.1:31)
ஆனால் கடவுள் உனக்கு அளித்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி உன்னையே தீயவனாக மாற்றிக் கொண்டாய்.
உன்னால் தீமையை மட்டும்தான் செய்யமுடியும்.
கடவுளால் நன்மையை மட்டும்தான் செய்ய முடியும்.
அவரது நித்திய நல்ல திட்டம் நிறைவேறிக் கொண்டிருந்தபோது
தீமையாகிய நீ குறுக்கே பாய்ந்தாய்.
ஆனால் கடவுள் உன் தீமையை தனது நல்ல திட்டம் நிறைவேறப் பயன்படுத்திக் கொண்டார்.
தீமையிலிருந்து நன்மையை வரவழைக்க கடவுளால் முடியும்.
ஆதிப் பெற்றோரை பாவத்தில் விழத்தாட்டியவன் நீ.
ஆனால் அதை
அவரே மனிதனாய்ப் பிறந்து
தன் அளவற்ற அன்பை மனிதனுக்கு வெளிப்படையாகக் காட்டப் பயன் படுத்திக் கொண்டார்!
யூதர்களைப் பயன்படுத்தி இயேசுவைக் கொன்றாய்.
ஆனால் இயேசுவின் சாவிலிருந்துதான் அவரது நித்திய திட்டமாகிய மனித இரட்சண்யம் பிறந்தது!
நீ கொன்றாய். இரட்சண்யம் பிறந்தது.
ஐயோ பாவம் நீ! வில்லன் என்று நினைத்துக் கொண்டு Hero வுக்கு உதவிக் கொண்டிருக்கிறாய்!"
"டேய்! மைக்கில்! உன்னை என்ன செய்கிறேன் பார்!"
"அடேய்! நான் கொடுத்த ஒரே மிதியில் நரகத்தில் வித்தையடித்து வீழ்ந்தவன் நீ.
இப்போ என்னைப் பார்த்து
வீர வசனம் பேசுகிறாய்!"
" செய்யத்தான் முடியவில்லை! வசனம் கூட பேசக் கூடடாதா!
டேய் மைக்கில்! நீ விண்ணுலக சேனைகளின் தளபதி என்றால்,
நான் நரகுலக சேனைகளின் தளபதி!
நீயா, நானா? பார்க்கிறேன் ஒரு கை!"
லூர்துசெல்வம்.
No comments:
Post a Comment