"எங்க அம்மா வேலையை விடப் போராங்க.
************************************
"அம்மா! "
"என்னடா? "
"நான் யார்னு தெரியுதா? "
"என்னடா கேள்வி இது? நீதான அம்மான்னு கூப்பிட்ட . இப்ப 'நான் யார்னு தெரியுதா? 'ன்னு கேட்கிற?"
"நீங்க யார்னு எனக்கு நல்லாவே தெரியுது. ஆனா நான் யார்னு உங்களுக்குத் தெரிஞ்சது மாதிரி தெரியலிய."
"உன்ன பத்து மாதம் சுமந்து பெத்தவடா நான்."
"கட்டப்பொம்மன்ல சிவாஜி வீர வசனத்த நாங்க ஞாபகத்ல வச்சிருக்கிறது மாதிரி,
தாய்மாரெல்லாம் ஒரு வசனத்த மறக்காம ஞாபகத்ல வச்சிருக்கீங்க,
'பத்து மாதம் சுமந்து பெத்தவடா நான்' னு.
'பிள்ளைய பெற்றெடுத்தா போதுமா?
பேணி வளர்க்க வேண்டும், தெரியுமா? ...."
"டேய், பாடினது போதும், நிறுத்துடா. நான் வளர்க்காமதான் இவ்வளவு உயரம் வளர்ந்தியா?"
"நிச்சயமா நீங்க போட்ட சோத்துலதான் இவ்வளவு உயரம் வளர்ந்திருக்கேன்.
அதோடு, உங்ககிட்ட ரொம்ப அன்பிருக்காமே, அதக் கொஞ்சம் காண்பிக்கக்கூடாதா?"
"என்னடா இது? அன்பு என்ன பேனாவா, பென்சிலா எடுத்துக் காண்பிக்கிறதுக்கு?
அது ஒரு சக்திடா. அதுதான் நம்மள இயக்கிக்கிட்டிருக்கு.
உயிரக் கண்ணால பார்க்க முடியுமா? அதனால அத இல்லேன்னு சொல்ல முடியுமா?"
"உடல் உறுப்புக்கள் அசைஞ்சாத்தான் உயிர் இருக்குன்னு நம்புவாங்க. இல்லாட்டா சந்தேகம் வந்துடும்.
அம்மா உங்கிட்ட அன்பு இல்லேன்னு நான் சொல்லல.
அத ஏன் காட்டலன்னுதான் கேட்டேன்.
ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் என்னோடு செலவழிக்கிறீங்க?"
"உன் அப்பாவும், நானும் உனக்காகத்தான் எங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.
நாங்கள் இரவு பகல்னு பார்க்காம உழைக்கிறது, பணம் சம்பாதிக்கிறது எல்லாம் உனக்காகத்தானே."
" 'எனக்காக'ன்னு நான் கேட்கல, 'என்னோடு'ன்னு கேட்டேன்.
ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரம் என்னோடு செலவழித்திருக்கீங்ளா?
கடவுள் பத்து மாசக்கணக்க இருபது மாசக் கணக்காப் போட்டிருக்கலாம்.
கூடக் கொஞ்ச நாள் உங்க கூட இருந்திருப்பேன், ஆயாக்கூட இல்லாம."
"உனக்கு என்ன ஆச்சி? உன் கூடப் பேசிக்கிட்டிருக்காம ஒரு Student க்கு tution எடுத்தேன்னா கிடைக்கிற
fees அ வச்சி உனக்கு ஒரு dress எடுத்திடுவேன்."
"அப்படியா. கொஞ்சம் பொறுங்க........
இந்தாங்க, நீங்க தந்த பாக்கட் மணி. feesஆ வச்சிக்கோங்க. எனக்கு tution. எடுங்க."
" ஏண்டா,நான் ஏதாவது வேல ஏவுனாக்கூட 'எக்கச்சக்கமா Home work இருக்கு, வேல எதுவும் ஏவாத'ன்னு சொல்லுவ.
இப்ப மணிக்கணக்கா பேசிக்கிட்டிருக்க. டீச்சர் வீட்டுப் பாடம் ஏதும் கொடுக்கலியா?"
"இண்ணைக்கு வீட்டுப் பாடம்,
அம்மாவுடன் உரையாடி,
அத வச்சி ஒரு
கட்டுரை எழுதணும்"
"அத ஏன் முதல்லே சொல்லல? "
"இப்ப சொல்லுங்க.
கடவுள் உங்ககிட்ட கேட்கிறாரு, 'உனக்கு நான் முக்கியமா? உன் வேல முக்கிமா? ' என்ன பதில் சொல்வீங்க? "
"கடவுள்தான் முக்கியமென்பேன்."
"அவர் உங்க வேலையை விட்டிடச் சொன்னா? "
"விட்டிடுவேன்."
"கடவுள் உங்கள்ட கேள்வி கேட்க மாட்டார்ங்கிற தைரியம் ?
பரவாயில்லை. உங்களுக்கு நான் முக்கியமா? உங்க வேல முக்கியமா?"
"நீதான் முக்கியம்."
"அப்போ உடனே வேலய விட்ருங்க."
"ஏண்டா. வேல இருந்தால்தானே உன்ன நல்ல படிப்பு படிக்க வைக்க முடியும்."
"நீங்க நினைக்கது தப்பும்மா. அப்பா குடும்பத் தலைவர். உழைத்து குடும்பத்த காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவங்ககிட்ட இருக்கு.
தாய் தன் முழுத் திறமையைப் பயன்படுத்தி பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும்.
அநேக பெற்றோர் பிள்ளைகளின் ஒழுக்கத்தைவிட
படிப்புக்கும், வேலைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்,
பிள்ளைகளும் குணத்தைவிட பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து
அதை தங்கள் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு படிக்கிறார்கள்.
பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ஏதோ தாங்கள்தான் சாதிதத்ததாக எண்ணி
பெற்றோரை உதறிவிட்டுப் போய் விடுகிறார்ள்.
பெரிய படிப்பையும், உயர்ந்த சம்பாத்தியத்தையும் விட ஒழுக்கமே சிறந்தது.
அதைப் பிள்ளைகட்குக் கொடுக்கவேண்டியது தாய்தான்.
அவளது வேலை அதற்கு இடைஞ்சலாக இருந்தால்
அதைத் தூக்கி எறிய வேண்டியது அவள் கடமை."
"Very good. அப்போ உன் கட்டுரையின் தலைப்பு? "
"எங்க அம்மா வேலையை விடப் போராங்க."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment