Wednesday, April 18, 2018

மோட்சம் எங்கே இருக்கிறது?

மோட்சம் எங்கே இருக்கிறது?
*********************************

மகன் தந்தையிடம் கேட்டான்,

"அப்பா, நமது வீடு என்ன விலை? "

தந்தை சொன்னார்,

"நாம் விற்பதற்காக இந்த வீட்டைக்  கட்டவில்லை.

இது வியாபாரத்திற்கு அப்பாற்பட்டது

வியாபாரத்திற்கு அப்பாற்பட்ட பொருட்களுக்கு விலை கிடையாது.

நாம் வளர்க்கும் ஆடு, மாடுகளை விற்க வேண்டியிருந்தால் விலை சொல்லலாம்.

யாராவது என்னிடம் வந்து 'உங்கள் மகன் என்ன விலை' என்று கேட்கலாமா?"

"சரி, அப்பா.

என் நண்பன் கேட்கிறான்,  'மோட்சம் மோட்சம் என்கிறீர்களே.

மோட்சம் எங்கே இருக்கிறது?'
என்று."

"நீ என்ன பதில் சொன்ன? "

"கேள்வியே தப்புங்க. ஒரு பொருளையோ அல்லது இடத்தையுந்தாங்க எங்கே இருக்கிறதுன்னு கேட்கலாம்.

மோட்சம் இறைவனோடு நாம் அனுபவிக்கயிருக்கும் பேரின்ப நிலை."

"கரெக்டான பதில்.

இத உனக்கு யார் சொன்னா? "

"எங்க டீச்சர், ஞானோபதேச வகுப்ல."

"நல்ல டீச்சர்.

Heaven  is a state of eternal bliss, not a place.

அது போல நரகம் 'நித்திய வேதனை நிலை,'  இடமல்ல."

"அப்பா, கேள்வி கேட்கவங்கள குறை சொல்ல முடியாது.

நாம 'மோட்சத்துக்கு போவோம்'னு சொல்றமில்லியா?

அதான் அவங்க 'எங்கே'ன்னு கேட்கிறாங்க"

"கரெக்ட்.

நாம் பேசற மொழி இந்த உலகத்ல நாம பழகுகிற மக்களோடு,   அவர்களைப் பற்றியும், உலகத்தைப்பற்றியும்  பேச நாம உருவாக்கிக்கொண்டது.

கடவுள், மோட்சம்,  நரகம், நித்தியம் - இவ்வுலக அனுபவங்களுக்கு அப்பாற்பட்டவை.

கடவுளைப் பற்றியும், மோட்சத்தைப் பற்றியும் விளக்க நம் மொழியில் வார்த்தைகள் இல்லை.

ஆனாலும்,  நம் மொழிக்கு அப்பாற்பட்ட விசயங்களைப் பற்றிப் பேச

நாம் நம் மொழியைத்தான் பயன்படுத்தவேண்டியுள்ளது.

வேறு வழி இல்லை.

அப்படிப் பயன்படுத்தும்போது

எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமென்று

அவ்வார்த்தைகள் பயன்படுத்தப் படுகின்றனவோ

அப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்,

நம் இஸ்டத்துக்கு அல்ல.

உதாரணத்திற்கு,

"இயேசு விண்ணிலிருந்து மண்ணிற்கு வந்தார்."

நமது மொழியில்,  ஒரு நபர் 'வந்தார்' என்று சொன்னால்  நம் மனதில் உதிக்கும் கேள்விகள்:

எப்படி வந்தார்?

நடந்தா?

ஏதாவது வாகனத்திலா?

ஆனால் இயேசுவைப் பற்றி இப்படிக் கேட்கத் தோன்றாது,

ஏனெனில் இயேசுவைப் பற்றி எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமோ

அப்படிப் புரிந்து வைத்திருக்கிறோம். 

பைபிள் வசனங்களுக்கு

இவ்வுலக அகராதிப்படி

பொருள் கொடுப்போர்

தாங்கழும் குழம்பி,

மற்றவர்களையும் குழப்புவர்.

நாம் குழம்பவேண்டாம்.

மோட்சம் நம் மொழிக்கு அப்பாற்பட்ட விசயமாகையால்

அது எங்கே இருக்கிறது  என்று கேட்க வேண்டாம்.

மோட்சம்

நாம் இறைவனோடு

நித்தியமாக வாழும்

பேரின்ப நிலை.

அதை நாம் அனுபவிக்கும்போதுதான் புரியும்.

நிச்சயமாக நாமும் அனுபவிப்போம்.

நமக்கும் புரியும்.

அதுவரைப்  பொறுமையாய்

மோட்ச வழியில் நடப்போம்.

லூர்து செல்வம்.





No comments:

Post a Comment