Thursday, April 12, 2018

நமது பார்வை இயேசுவின் பார்வையாய் இருக்கட்டும்.

நமது பார்வை இயேசுவின் பார்வையாய் இருக்கட்டும்.
********************************

கண்களின் அருமை கண் இல்லாதவனுக்குதான் தெரியும் என்பார்கள்.

ஆனால் இப்போது கண்கள்  இருக்கும் அநேருக்கு அவற்றின் அருமை தெரிவதில்லை.

பணத்தை ஒழுங்காக பயன்படுத்தத் தெரியாதவனைப்

'பணத்தின் அருமை தெரியாதவன்'

என்கிறோம்.

அதுபோல்தான் கண்களை ஒழுங்காகப் பயன்படுத்தத் தெரியாதவனை

'கண்ணின் அருமை தெரியாதவன்'

என்கிறோம்.

நாம் வீட்டை விட்டு வெளியே போகும்போது

கண்களைத் திறந்து வைத்துக்கொண்டுதான் போகிறோம்.

நாம் விரும்புகிறோமோ, இல்லையோ

எண்ணிறந்த காட்சிகள் கண்ணில் படும்.

அவற்றில் எவற்றைப் பார்த்த இடத்திலேயே விட்டுவிட வேண்டும்,

எவற்றைக் கருத்தில் ஏற்றவேண்டும்

என்பதைப் பகுத்து, அறிந்து செயல்படுபவனே கண்ணின்
அருமை தெரிந்தவன்.

இது கண்ணிற்கு மட்டுமல்ல ஐம்புலன்களுக்கும் பொருந்தும்.

   ஒருமுறை மூன்றாம் வகுப்பு மாணவர்கட்கு மாணவர்கட்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி:

கிராம நிர்வாக அதிகாரியின் கடமைகள் பற்றிய பாடம்.

"கிராம நிர்வாக அதிகாரியின் முக்கிய பணி நிலவரி வசூலித்தல்.

வரி கட்டாதவர்கள் வீட்டில் உள்ள சட்டி, பானை போன்ற பொருட்களை அள்ளிக்கொண்டு
போய்  விடுவார்கள்.

அதற்குப் பயந்து மக்கள் வரியை ஒழுங்காகக் கட்டிவிடுவார்கள்."

ஒரு பையன்,  "நேற்று எங்கள் வீட்ல அள்ளிட்டுப் போய்ட்டாங்க, சார்."

"பார்த்தியா. அப்படித்தான் நிலவரி கொடுக்காட்டா அள்ளிட்டுப் போயிடுவாங்க."

காலாண்டுத் தேர்வு வந்தது.

அதோடு,

"கிராம நிர்வாக அதிகாரியின் முக்கிய பணி என்ன? "

என்ற கேள்வியும் வந்தது.

பேப்பர் திருத்தும்போது சிரிப்பும் வந்தது.

ஏன் சிரிப்பும் வந்தது?

ஒரு பையன் பதில் எழுதியிருந்தான்,

"கிராம நிர்வாக அதிகாரியின் முக்கிய பணி,

வீடுவீடாகச் சென்று சட்டி, பானை பொருக்குவதாகும்."

பையன் வகுப்பில் கவனித்திருக்கிறான்.

எப்படிக் கவனித்திருக்கிறான்?

இப்படித்தான் நாம் பார்க்கிறோம்,

ஆனால் தவறாகப் புரிகிறோம்.

நாம் நிகழ்வுகளைப் பார்க்கும்போது வெறுமனே பார்ப்பதில்லை,

சில வினாக்களோடு பார்க்கிறோம்.

வினாக்களுக்கு நாம் கொடுக்கும் விடையிலிருந்து நமது பார்வையின் தன்மை அமையும்.

நமக்கு இரண்டு விதக் கண்கள் உள்ளன.

1. ஊனக்கண் -  உடலைசேர்ந்தது.

2. விசுவாசக் கண்-  ஆன்மாவைச் சேர்ந்தது.

ஊனக்கண் ஒரு நிகழ்வை நோக்கும்போது,

அந்நிகழ்வை உடல் சார்ந்த

இவ்வுலக வாழ்வு என்ற

எடைக்கல்லால் எடைபோடும்.

அதாவது  ஒரு நிகழ்வு

இவ்வுலக வாழ்வுக்கு எந்த அளவுக்கு

உறுதுணையாக இருக்கும்

அல்லது எதிராக இருக்கும்

என்று ஆராயும்.

ஆனால்,

விசுவாசக்கண்

அந்நிகழ்வு

நமது ஆன்ம இரட்சண்யத்துக்கு
எந்த அளவு

உதவியாக

அல்லது எதிராக இருக்கும்

என்று ஆராயும்.

சுருக்கமாக

ஊனக்கண் உலகப் பார்வை,

விசுவாசக் கண் இயேசுவின் பார்வை.

நமது விசுவாசம் இயேசுவை மையமாகக் கொண்டது.

ஒரு நிகழ்வை உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.

S.S.L.C தேர்வு எழுதிய மாணவன்,

தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறவில்லை.

மதிப்பெண்ணைப் பார்த்த ஊனக்கண்,

"போச்சி, என் எதிர்காலமே போச்சி.

நான் ஆசைப்பட்ட Group கிடைக்காது.

ஆசைப்பட்ட வேலையும் கிடைக்காது"

என்று அழும்.

மார்க்கைக் கேள்விப்பட்ட மற்றவர்களும் இதையே கூறி எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவர்.

ஆனால் விசுவாசக்கண்,

"என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுவோம்.

இயேசு எனக்கென்று ஒரு திட்டம் வைத்திருப்பார்,

அதுவே நிறைவேறட்டும்."

என்று  அமைதியாய் இருக்கும்.

நமது பார்வை இயேசுவின் பார்வையாக மாறவேண்டும்.

ஒரு பிறவிக் குருடன் குறித்து இயேசுவின் சீடர்கள் மனதில் என்ன தோன்றியது,

அதுபற்றி இயேசு என்ன கூறினார் என்பதை  நோக்கினால்

நமது பார்வைக்கும்,  இயேசுவின்  பார்வைக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.

"இயேசு போய்க்கொண்டிருக்கும்போது பிறவிக் குருடன் ஒருவனைக் கண்டார்.

2 "ராபி, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா?" என்று அவருடைய சீடர் அவரை வினவினர்.

3 இயேசு, "இவன் செய்த பாவமும் அன்று, இவன் பெற்றோர் செய்த பாவமும் அன்று. கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்."
(அருளப்பர்.9:1-3)

நாம் தண்டனையாக நினைக்கும் ஒன்றை

இயேசு தந்தையின் திருவுளம் என்கிறார்.

நமது கடமையை ஒழுங்காகச் செய்துவிட்டு,

என்ன நேர்ந்தாலும்  எல்லாம்  இறைவன் செயல் என்று அமையவேண்டும்.

சோம்பேறித்தனமாக இருந்துவிட்டு, பாடங்களையே படிக்காமல் தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டு 'எல்லாம் இறைவன் செயல்',என்று கூறக்கூடாது.

ஏதாவது பிரச்சனை வரும்போது,

'இயேசு இப்பிரச்சனையை எப்படி அணுகியிருப்பார்? ' என்று

கிறிஸ்துவின் மதிப்பீடுகளின்படி அணுகவேண்டும்.



"2 விடியற்காலையில் அவர் கோயிலுக்கு வர, மக்கள் எல்லாரும் அவரிடம் வந்தார்கள். அவர் அமர்ந்து, அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.


3 விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை மறைநூல் வல்லுநரும் பரிசேயரும் கொண்டுவந்து நடுவில் நிறுத்தி,


4 "போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டாள்.


5 இப்படிப்பட்டவர்களைக் கல்லாலெறிந்து கொல்லவேண்டுமென்பது மோயீசன் நமக்குக் கொடுத்த சட்டம். நீர் என்ன சொல்லுகிறீர் ?" என்றனர்.


6 அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது கண்டுபிடிக்கும்படி, அவரைச் சோதிக்க இப்படிக கேட்டனர். இயேசுவோ குனிந்து, விரலாலே தரையில் எழுதத்தொடங்கினார்.


7 அவர்கள் அந்தக் கேள்வியைத் திரும்பத்திரும்பக் கேட்டதால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்றார்.


8 மீண்டும் குனிந்து தரையில் எழுதலானார்.


9 அவர் சொன்னதைக் கேட்டதும் முதியவர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அவர்கள் போய்விட்டார்கள். கடைசியில் இயேசுமட்டும் இருந்தார்: அப்பெண்ணோ அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தாள்.


10 அவர் நிமிர்ந்துபார்த்து, "மாதே, எங்கே அவர்கள் ? உனக்கு எவரும் தீர்ப்பிடவில்லையா ?" என்று கேட்டார்.


11 அவளோ, "ஒருவரும் தீர்ப்பிடவில்லை, ஆண்டவரே" என, இயேசு, "நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ" என்றார்."
(அரு.8:2-11)

இவ்வசனங்கள் நமது பார்வைக்கும்,

இயேசுவின் பார்வைக்கும்

உள்ள வித்தியாசத்தை தெளிவாய் விளக்குகின்றன.


சில கத்தோலிக்கப் பள்ளிகளில்கூட ஒரு மாணவன் ஒரு பெரிய தவறு செய்தால், அவனை பள்ளியிலிருந்து நீக்கும் (Dismiss) பழக்கம் இருக்கிறது.

இது கிறிஸ்தவ அணுகுமுறை அல்ல.

தவறு செய்பவர்களைத்

திருத்துவதும், மன்னிப்பதும்

மட்டுமே  கிறிஸ்தவ அணுகுமுறை.

யூதாஸையே இயேசு பதவி நீக்கம் செய்யவில்லை.

உயிர் விட்ட இறுதி வினாடியில் யூதாஸ் மனஸ்தாபப் பட்டிருப்பான்,

இயேசு அவனை மன்னித்திருப்பார்

என நான் உறுதியாக நம்புகிறேன்.

"வாழ்வது நானல்ல, 

கிறிஸ்து என்னில் வாழ்கிறார்"

என்பது உண்மையானால்,

கிறிஸ்துவின் கண்ணோக்கில்

வாழ்வின் பிரச்சனைகட்குத் தீர்வு காண்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment