இயேசுவின்
திரு இருதயத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்.
********************************
நாம் தாயின் வயிற்றில் கருத்தரித்த வினாடியிலிருந்து,
இறுதி மூச்சுவரை ஏதாவது பாடம் கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம்.
நாம் காணும் பொருட்கள், ஆட்கள் எல்லாம் ஏதாவது பாடத்தைக் கற்றுத் தந்துதானிருக்கிறார்கள்.
நான் சிறுவனாயிருக்குபோது வீட்டில் இயேசுவின் திரு இருதயப்படம் ஸ்தாபித்தார்கள்.
இருதயப்படத்தைப் பார்க்கும்பொதெல்லாம் ஒரு கேள்வி தோன்றும்.
'இருதயம் உடலுக்குள்ளேதானே இருக்கிறது.
அதை ஏன் வெளியே தெரிவதுபோல் படம் போட்டிருக்கிறார்கள்?'
என்று.
இப்போது அந்தப் படமும் ஒரு பாடம் போதிப்பது தெரிகிறது.
இயேசுவின் திரு இருதயம் ஒரு திறந்த புத்தகம்.
அவ்விருதயம் எப்போதும் அன்பெனும் நெருப்பால் எரிந்துகொண்டிருக்கிறது.
பாசத்தால் பொங்கிவழிந்தோடுகிறது.
அன்பு எண்ணங்களால் நிறைந்திருக்கிறது.
இவையெல்லாம் யாருக்காக?
நமக்காக.
நாமும் அவரது அன்பு நெருப்பில் பற்றி எரிய வேண்டும்.
பாச வெள்ளத்தில் நீந்த வேண்டும்.
அவரது எண்ணங்கள் நமது
எண்ணங்கள் ஆக வேண்டும்.
இதற்காகத்தான் இயேசுவின் இருதயத்தை நாம் காணவேண்டும்.
நமக்காகத்தான் இயேசுவின் இருதயம் திறந்திருக்கிறது.
இயேசுவின் இருதயத்தைப் பார்க்கும்போதெல்லாம்
நம் இதயத்தில் அன்புத் தீ பற்றி எரிய வேண்டும்.
நம் இருதயத்தைத் திறந்து காட்ட முடியாவிட்டாலும்
அதில் எரியும் அன்பெனும் நெருப்பை நம்மைக் காண்போரிடமெல்லாம் பற்றவைக்கலாம்.
எல்லோரையும் அன்புச் செயல்களென்னும் கடலில் நீந்த வைக்கலாம்.
நம் இதயத்தைப் பிரதிபலிக்கும் நம் வாழ்க்கை
இயேசுவின் வாழ்வுபோல் திறந்த புத்தகமாக இருக்கவேண்டும்.
ஒருமுறை இயேசுவிடம் சிலர், நீர் எங்கு தங்குகிறீர் என்று கேட்டபோது,
“வந்து பாருங்கள்” என்றார்.
பிறர் பார்க்கக்கூடாது என்று எந்த இரகசியமும் இயேசுகிறிஸ்துவிடம் இல்லை.
நம் வாழ்வும் அப்படியே இருக்கவேண்டும்.
நம் இருதயத்தை பாவம்
நுழையாதபடி Lock பண்ண வேண்டும்.
ஆனால், நலெண்ணத்தைப் பொறுத்தமட்டில் நமது இருதயம் திறந்தே இருக்கட்டும்.
நலெண்ணத்தை யார் வேண்டுமென்றாலும் நமக்குத் தரலாம்,
யார் வேண்டுமென்றாலும் எடுக்கலாம்.
இது இயேசுவின்
திரு இருதயத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment