Friday, April 13, 2018

உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக!"

உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக!
********************************
"உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக!"

உயிர்த்த இயேசு தன் சீடர்கட்குத் தோன்றியபோதெல்லாம் வாழ்த்திய வாழ்த்துரை.

நாமும் நம் நம் நண்பர்களைச் சந்திக்கும்போது வாழ்த்தவேண்டும் என இயேசு விரும்பும் வாழ்த்துரை.

"நீங்கள் எந்த வீட்டுக்குப் போனாலும், முதலில், "இவ்வீட்டுக்குச் சமாதானம்" என்று வாழ்த்துங்கள்."
(லூக். 10:5)

இவை இயேசு தம் சீடர்கட்குக் கூறிய அறிவுரை.

நாமும் அவருடைய சீடர்கள்தானே.

நாம் செல்லும் வீட்டிலுள்ள அனைவரும் நம் நண்பர்கள்தானே!

நாம் பயன்படுத்தும் மற்ற வாழ்த்துரைகள் நம்மால் உருவாக்கப்பட்டவை.

இவ்வாழ்த்துரையோ நம் ஆண்டவர் உருவாக்கியது.

இவ்வாழ்த்துரையால் இயேசு நமக்குக் கூறுவது, "எல்லோரிடமும் சமாதானமாய் இருங்கள்."

சமாதானமாய் இல்லாதோர் காணிக்கையை இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

அன்பும், சமாதானமும் இணைந்தே இருப்பவை.

சமாதானம் என்ற  தமிழ் வார்த்தைக்கு மற்ற மொழிகளில் இல்லாத தனிச் சிறப்பு உண்டு.

சமம் + தானம் = சம இடம்.

(தமிழ் ஆசான்கள்,  தயவு செய்து,  'தானம்' தமிழ்ச் சொல் இல்லை என்று சண்டைக்கு வந்துவிடவேண்டாம். 'ஸ்தானம்' என்ற வடசொல்லை, 'தானம்' என்று தமிழாக்கி விட்டேன்.)

மனதளவில்
சம இடத்தில்தான் சமாதானம் இருக்கமுடியும்.

ஏற்ற தாழ்வு உள்ள இடத்தில் சமாதானம் இருக்காது.

பொருளாதார ஏற்ற தாழ்வு,  அந்தஸ்து ஏற்ற தாழ்வு போன்றவை இருந்தாலும்,

மனங்கள் ஒத்துப்போனால் மாதானம் நிலவும்.

இறைவன் அளவுகடந்தவர்.

நாம் அளவு உள்ளவர்கள்.

நாம்தான் பாவத்தின்மூலம் இறைவனோடு இருந்த சமாதானத்தை முறித்தோம்.

சர்வ வல்லப இறைவன் நம்மோடு சமாதானத்தை திரும்பவும் ஏற்படுத்திக்கொள்வதற்காக மனிதனாய்ப் பிறந்து,

மனித சுபாவத்தில்

பாவம் தவிற,

மற்ற எல்லாவற்றிலும் நமக்குச் சமமாக தன்னையே ஆக்கிக்கொண்டார்.

நம்மை உயர்த்துவதற்காக, தன்னையே தாழ்த்திக்கொண்டார்.

நாம் இயேசுவின் சீடர்கள்.

நாம் எவ்வாறு நமது அயலானோடு பழகுகிறோம்?

ஏற்றதாழ்வுகளை மனதில் வைத்துக்கொண்டு

சுயநலத்தோடு பழகுகிறோமா?

புற ஏற்ற தாழ்வுகட்கு இடம்கொடாமல்,

அன்பையும், சமாதானத்தையும்  மனதிற்கொண்டு

சமாதானமாகப் பழகுகிறோமா?

இறைவனே நம் அளவிற்கு இறங்கிவந்தாரென்றால்,

நாமும் கொஞ்சம் இறங்கிவந்தால் என்ன தப்பு?

தந்தை மகன் ஸ்தாத்திற்கு இறங்கிவந்தால் தோழனாகிவிடுகிறார்.

மகனும் மனம்விட்டுப்  பேச ஆரம்பிக்கிறான்.

பங்குத் தந்தை தன் கண்காணிப்பிலுள்ள ஒரு ஏழையின் இல்லம் சென்று,

அவனோடு சாதாரணப் பாயில் அமர்ந்து பேச ஆரம்பித்தால்,

அவன் பங்குத்தந்தையில் இயேசுவையே காண்பான்.

"இயேசு பந்தி அமர்ந்திருக்கையில் ஆயக்காரர், பாவிகள் பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் ஒருங்கே அமர்ந்திருந்தனர்." (மாற்.2:25)


11 இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து, "உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" என்றனர்.


12 இதைக் கேட்ட இயேசு, "மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோயுற்றவருக்கே தேவை.

(மத்.9:11,12)

பங்குத் தந்தை

இல்லங்களைச் சந்திக்கவேண்டியதன் அவசியத்தை

இயேசுவே செயல் மூலம் உணர்த்தியுள்ளார்.

கோவிலுக்குள் பயங்கர சண்டை.

என்ன என்று கேட்டால்,  இரண்டு எதிர்க் குழுக்களிடையே சமாதானம் செய்து வைக்கப் பபங்குத் தந்தை முயற்சிக்கிறார்.

குழுக்களோ சமாதானச் சண்டையில் இறங்கிவிட்டனர்.

சாமியார்  பார்த்தார்.

ஒரு முடிவு எடுத்தார்.

நாற்காலியிலிருந்து எழுந்தார்.

தரையில் அமர்ந்தார்.

எல்லோரும் சண்டையை நீறுத்திவிட்டு சாமியாரைப் பார்த்தனர்.

"இங்க பாருங்க.

எதாவது ஒரு குழு விட்டுக்கொடுத்து, இறங்கி வந்தால்தான் சமாதானம் ஏற்படும்.

விட்டுக்கொடுக்க தயாரானோர் மட்டும் என்னோடு தரைக்கு வாங்க. அப்புறம் பேசுவோம்." என்றார்.

மக்கள் ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பார்த்தனர்.

ஒரு குழுத்தலைவர் இறங்கி சாமியாரோடு அமர்ந்தார்.

பிறகு அடுத்த குழுத்தலைவர்,  பிறகு மற்றவர்களும் ஒருவர் பின் ஒருவராகத் தரைக்கு வந்துவிட்டனர்.

இப்போது அவர்களைப் பார்க்கும்போது

மலைப்பிரசங்கத்தில் இயேசுவைச் சுற்றி

மக்கள் அமர்ந்து

அவரது முகத்தையே

பார்த்துக்கொண்டிருந்த காட்சி

ஞாபகத்துக்கு வந்தது.

"சாமி,  சொல்லுங்க, கேட்கிறோம்,

அதன்படி நடக்கிறோம்."

சாமியார் கூறிய சமாதான அறிவுரைகளை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள்.

சாமியார், ஒரு சிறிய செபத்துக்குப்பின்,

"சமாதானமாய்ப் போய் வாருங்கள்,"

என்று கூற மக்கள் 'நன்றி' கூறி,  சமாதானமாய்த் திரும்பினர்.

இயேசு  மக்கள் மீது இரங்கினார்,

விண்ணிலிருந்து இறங்கினார்.

இரக்கமும்,  இறக்கமும்

ஏற்றத்தின் காரணம்.

நமக்குச் சமாதானம் உண்டாகுக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment