Monday, April 16, 2018

ஏன் புதுமைகள் நடக்கின்றன?

ஏன் புதுமைகள் நடக்கின்றன?
********************************

நம் ஆண்டவர் இயேசு சென்றவிடமெல்லாம்

நோயாளிகளைக் குணமாக்கினார்,

நற்செய்தியை அறிவித்தார்.

இறுதியில் நம் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்னையே பலியாக்கினார்.

இயேசு மனிதன் ஆனது நோயாளிகளைக் குணமாக்குவதற்காக அல்ல.

அவர் மனிதன் ஆனது நமது இரட்சண்யத்துக்காகப் பலியாகவும்,

இரட்சண்யத்துக்கான நற்செய்தியை அறிவிக்கவும்தான்.

இரட்சண்யத்துக்கு அத்தியாவசியமான புண்ணியம் விசுவாசம்.

விசுவாசம் அத்தியாவசியம் எனஅறிவிப்பது நற்செய்தி.

"விசுவசித்து ஞானஸ்நானம் பெறுபவன் மீட்புப் பெறுவான், விசுவசியாதவனுக்குத் தண்டனை கிடைக்கும்"
(மாற்.16:16)

இது நற்செய்தி.

மக்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவே இயேசு  நோயாளிகளைக் குணமாக்கினார்.

ஆகவேதான் ஒவ்வொரு முறைக் குணமாக்கியபின்பும், இயேசு 

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று." என்றார்.

இங்கு நினைவில் கொள்ளவேண்டியது,

நற்செய்தியும்,

இயேசுவின் பாவப்பரிகாரப் பலியும்

மீட்புப்பெற அவசியம்.

நோயோடு இருப்பது மீட்புக்கு எதிரி அல்ல.

மாறாக நமக்கு ஏற்படும் நோயைப் பாவப்பரிகாரமாக ஒப்புக்கொடுத்தால் இயேசுவின் பாடுகளில் பங்கேற்ற பாக்கியம் கிடைக்கும்.

இயேசுவின் வாழ்வில் எவ்வாறு நற்செய்தி அறிவித்தலும், சிலுவைப் பலியும் முக்கியத்துவம் பெற்றதோ,

அதுபோல

நமது வாழ்வில் நற்செய்தியின்படி வாழ்ந்து மரித்தல் முக்கியத்துவம் பெற வேண்டும்.

ஆனால் நாம்  ஆன்மீக நோக்கங்ளைவிட

உடல் நோயிலிருந்து விடுதலை பெறுதல்,

வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகட்குத் தீர்வு காணுதல்,

குழந்தைப்பேறு,

வேலை வாய்ப்பு

போன்றவற்றுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

இவற்றை வேண்டாமென்று சொல்லவில்லை.

இயேசுவின் காலத்தில்கூட இத்தகையோர் இருந்திருக்கிறார்கள்.

வியாதிகள் குணமடைய வேண்டும் என்பதற்காக இயேசுவைத் தேடிச்சென்ற கூட்டம் இருந்திருக்கு.

"அவர் பிணியாளிகளுக்குச் செய்துவந்த அருங்குறிகளைக் கண்டதனால், பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது." (அரு.6:2)
                  *
ஆன்மீகத்துக்காக மட்டுமன்றி உடல்சார்ந்த நன்மைகட்காக இயேசுவைப் பின்பற்றிய கூட்டமும் இருந்திருக்கிறது.

"நீங்கள் என்னைத் தேடுவது அருங்குறிகளைக் கண்டதாலன்று, அப்பங்களை வயிறார உண்டதால்தான்."
(அரு.6:26)
                    *
இயேசுவின் புதுமைகளைக் கண்டு அவரை விசுவசித்தோரும் இருந்திருக்கிறார்கள்.

"இயேசு செய்த இந்த அருங்குறியைக் கண்டு, மக்கள், "உலகிற்கு வரப்போகும் இறைவாக்கினர் உண்மையிலே இவர்தாம்" என்றார்கள்."(அரு.6:14)

இம்மூவகையினரும் இப்போதும் இருக்கிறார்கள்.

இப்போதும் செபத்தினால் புதுமைகள் நடக்கின்றன.

இப்போதும் நமது திருத்தலங்களில் எண்ணற்றோர் குணம் பெறுகிறார்கள்.

தண்ணீர் அருந்துவது  தண்ணீர் அருந்துவதற்காக அல்ல,

தாகத்தைத் தணிப்பதற்கு.

மருந்து அருந்துவது மருந்திற்காக அல்ல,

உடல் நலம் பெறுவதற்காக.

உடை அணிவது உடைக்காக அல்ல,

மானம் காப்பதற்கு.

தாகத்தைத் தணிக்காத தண்ணீரால் என்ன பயன்?

மானத்தைக் காக்காத உடையினால் என்ன பயன்?

உடல்நலம் தராத மருந்தினால்
என்ன பயன்?

புதுமைகளைக் கண்டபின்னும் நமது விசுவாச வாழ்வு சிறப்பு அடையாவிட்டால் புதுமைகளால் நமக்கு என்ன பயன்?

'ஆவிக்குரிய குணம் அளிக்கும்' கூட்டங்களில் கலந்துவிட்டு பாவசங்கீத்தனம் செய்யாமல்
திரும்புவோர் சிந்திக்க வேண்டும் ,

"ஆன்மீக நலனுக்கு உதவாத உடல் நலத்தால் என்ன பயன்?" என்று.

நமது உடல் எங்கிருந்து வந்ததோ அங்கு கட்டாயம் திரும்பிவிடும், 

அதைப் பேணினாலும், பேணாவிட்டாலும்.

நமது ஆன்மா இறைவனிடமிருந்து வந்தது ,

அதைப் பேணினால்தான் இறைவனை அடையும்.

பேணாவிட்டால்?

விடை எல்லோருக்கும் தெரியும்.

குணமளிக்கும் செபக்கூட்டங்களுக்குப் போகலாம்,

தடை இல்லை.

எத்தனை திருத்தலங்ளுக்கு வேண்டுமானாலும் போகலாம்,

தடை இல்லை.

ஆனால் அவற்றால் நமது ஆன்மா பயன் அடையாவிட்டால்,

அவற்றாலும் பயனில்லை.

உடல் நலமில்லாவிட்டாலும், மோட்சத்திற்ற்குப் போகலாம்.

ஆன்மா நலமிட்டால் இராயப்பர் திரும்பிக்கொள்வார்.

இறைவன் புதுமைகள் செய்வது நமது விசுவாச வாழ்வு வளம் பெற.

செபிப்போம்.

புதுமைகளைக் காண்போம்.

விசுவாசத்தில் வளர்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment