Saturday, April 21, 2018

சிலுவை எங்கே, வெற்றி அங்கே.

சிலுவை எங்கே, வெற்றி அங்கே.
************************************

நம் ஆண்டவராகிய இயேசு நமக்காக  சிலுவையில் பாடுகள் பட்டு மரித்ததால்,

பாடுகள், கஸ்டங்கள், துன்பங்கள் ஆகிய வார்த்தைகள் சிலுவையை குறிக்க ஆரம்பித்தன.

'பாடு'பட்டு உழைத்தால்தான் வெற்றி கிட்டும்,

பெரிய வெள்ளிக்குப் பின் உயிர்த்த ஞாயிறு வருவதுபோல.

இயேசு எப்படிச் சிலுவையைச் சுமந்து, அதிலே மரித்து நம்மை இரட்சித்தாரோ,

அதுபோலவே நாமும் நமது சிலுவையைச் சுமந்து, அதிலேயே மரித்தால்தான்
நமக்கு இரட்சண்யம் கிடைக்கும்.

சிலுவை இல்லாத வாழ்க்கையே இல்லை.

தாயின் பிரசவ வேதனையுடன் ஆரம்பிக்கும் மனித வாழ்க்கை,  

அவனுடைய மரணவேதனையுடன் முடிவடைகிறது.

இடைப்பட்ட வாழ்க்கைக் காலத்தில்,

அவன் செய்யவேண்டியது,

ஆன்மீகப்பார்வையில்,

அவனுக்கு அருளப்பட்ட

சிலுவையைச் சுமப்பது மட்டும்தான்.

சிலுவையில் பிறந்து

சிலுவையைச் சுமந்து

சிலுவையில்   மரித்து

நிலைவாழ்வுக்குள் உயிர்ப்பதே

உண்மையான கிறிஸ்தவனின் வாழ்க்கை.

சிலர் கேட்கலாம்:

வாழ்க்கை என்பது சிலுவை மட்டும்தானா?

இன்பம் , மகிழ்ச்சி போன்ற அனுபவங்களுக்கு இடமே இல்லையா?

சிலுவையைப் பற்றி தவறான எதிர்மறைக் கருத்துள்ளோர் கேள்வி இது.

இயேசு சிலுவைச் சுமந்தார்.

சிலுவையைச் சுமக்கவேண்டும் என்பதற்காகவா சிலுவையைச் சுமந்தார்?

Did Jesus carry the Cross for the sake of carrying it, with no other purpose.?

தன்னால் படைக்கப்பட்டவர்கள்

நித்தியமுமம் மகிழ்ச்சியாக வாழவேண்டும்

என்பதற்காகத்தானே

அவர் சிலுவையைச் சுமந்து

அதிலே உயிரையும் விட்டார்.

நித்திய பேரின்பம்தானே

இயேசுவின்

சிலுவை மரணத்தின் நோக்கம்.

ஆக, சிலுவை மகிழ்ச்சிக்கு எதிர் ஆனது அல்ல.

காதலர்களைக் கேளுங்கள்,

சொல்வார்கள்:

காதலன்  அல்லது காதலிக்காக

எவ்வளவு பெரிய தியாகங்களை,

மட்டற்ற மகிழ்ச்சியோடு

  செய்திருக்கிறார்கள் என்று.

சொத்துக்களையும் சுகங்களை மட்டுமல்ல,

உயிரையுங்கூட மகிழ்ச்சியோடு தியாகம் செய்ய துணிந்திருக்கிறார்கள்.

அவ்வாறே பெற்றோர் பிள்ளைகட்காக,

  நண்பர்கள் நண்பர்கட்காக

மகிழ்ச்சியோடு

கஸ்டப்படுவதைக்

கண்டதில்லையா?

மனிதர்கள்  மனிதர்கட்காக மகிழ்ச்சியுடன் கஸ்டப்படத் தயாராய் இருக்கும்போது

நாம், 

அன்பு ஒன்றினால் மட்டுமே  உந்தப்பட்டு

ஒன்றுமில்லாமையிலிருந்து

நம்மை உருவாக்கிக்

காப்பாற்றிவரும்

இறைவனுக்காக,

நம் மீட்பிற்காகத்

தன்னையே பலி கொடுத்த

இயேசுவுக்காக,

வாழ்வின் கஸ்டங்களைத்

தாங்கிக் கொள்ளக் கூடாதா?

இயேசுவுக்காக நாம் சுமக்க வேண்டிய சிலுவைகள் எவை?

1.
நமது ஆன்மீக வாழ்வில் உலகத்தை எதிர்த்து எதிர் நீச்சல் போடண்டியுள்ளது.

அதுவே மிகப்பெரிய சிலுவை.

2.
நமது  உடலுக்கு எதிராகவே நமது ஆன்மா எதிர்நீச்சல் போடண்டியுள்ளது.

உ.ம்:    ஞாயிறு   பூசை எட்டு மணிக்கு . லீவு நாளாகையால் உடல் ஒன்பது  மணி வரை தூங்க ஆசைப்படுகிறது.

சுவாமியார் பிரசங்கத்தை ஆரம்பித்துவிட்டால் நமது கண் சொறுக ஆரம்பித்துவிடுகிறது.

3.
உடல் இச்சைகட்கு எதிரான போராட்டம்.

நமது உடலுக்கு எதிராக நாமே நடத்தும் போரின்போது நாம் சந்திக்கும் கஸ்டங்கள் மிகப்பெரிய சிலுவை.

4.
நமது உடலில் ஏற்படும் நோய் நொடிகளால் ஏற்படும் வேதனை மிகப்பெரும் சிலுவை.

5.
நம் அயலானுக்கு உதவ முற்படும்போது ஏற்படும் கஸ்டங்கள்.

6.
மறை பரப்புப் பணிகளின்போது ஏற்படும் துன்பங்கள்.

7.
நமது சமயப்பணி பிடிக்காதோர் நமது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தச் செய்யும் முயற்சிகளால் நமக்கு ஏற்படும் மனவேதனை

இப்படி நாம் சுமக்கவேண்டிய சிலுவைகளின் வகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அவை நீண்டுகொண்டே போகும்.

நாம் விரும்புகிறோமோ,  விரும்பவில்லையோ வாழ்வில் சிலுவைகள் வந்தே தீரும்.

நாம் அவற்றை விரும்பி ஏற்றுக்கொண்டு

எதாவது ஒரு நல்ல கருத்துக்காக கடவுளிடம் ஒப்புக்கொடுத்தால்

இறைவனின் அருள் அபரிவிதமாகக் கிடைக்கும்.

விரும்பி ஏற்றுக்கொள்ளாவிட்டால்

கஸ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும்,

பயன் ஏதும் இன்றி.

ஆர்வமுடன் சிலுவையைச் சுமப்போம்,

ஆண்டவர் இல்லம் நோக்கி.

சிலுவை எங்கே, வெற்றி அங்கே.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment