Wednesday, April 11, 2018

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."
********************************
"மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று, சமாதானமாய்ப் போ."
(மார்க்.5:34)

 "எழுந்து போ, உன் விசுவாசம் .உன்னைக் குணமாக்கிற்று"
(லூக்.17:19)

 "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது, நீ போகலாம்"(மார்க்.10:52)

இயேசு நோயாளிகளைக் குணமாக்கியபின் ஒவ்வொரு முறையும் குணமடைந்தவரை நோக்கி,

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."

என்று கூறுவது வழக்கம்.

குணமாக்குகிறவர் இயேசு.

அவர் தன் சொந்த வல்லமையால்தான் குணமாக்குகிறார்.

பின் ஏன், 

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."

என்று கூறி குணமடைந்தவனைப் பெருமைப்படுத்த வேண்டும்?

"உண்டாகுக"

என்ற ஒரே சொல்லால் உலகையே உருவாக்கிய சர்வ வல்லப கடவுள்,

அவரது வல்லமையினாலேயே குணமாக்கிவிட்டு, 

ஏன் அதற்கான பெருமையை சுகமடைந்தவனுக்குக் கொடுக்கவேண்டும்?

நமது வேண்டுதலும்,  அனுமதியும் இன்றி கடவுள் நம்மைப் படைத்தார் ,

வேண்டுவதற்கு அப்போது நாம் இல்லை.

படைத்தபின் நாம் வாழ வேண்டிய அனைத்து வசதிகளையும் இலவசமாகவே தந்துள்ளார்.

அவர் இலவசமாகத் தந்துள்ள

அனைத்து வசதிகளையும்

சரியான முறையில் பயன்படுத்தி

நமது ஆன்மீக வாழ்வில் வளர வேண்டிய அருள்வரங்களை(Grace)

இலவசமாகவே தருகிறார்.

ஆனால் அவர் தரும் அருளை ஏற்று, பயன்படுத்தி பயன்பெற வேண்டியது நமது கடமை.

மேலும் வேண்டிய அருளைக் கேட்டுப் பெறவேண்டியதும் நமது கடமை.

உதாரணத்திற்கு, நமக்கு செபத்தில் ஆர்வம் பற்றாது என்று  நாம் உணர்ந்தால்,

"இறைவா,  எனக்கு   இவ்வுலக காரியங்களில் இருக்கும் அளவிற்கு ஞானகாரியங்களில் ஆர்வம் இல்லை,  சுவாமி.

ஞானகாரியங்களில் ஆர்வத்தைத் தாரும், அப்பா.

குறிப்பாக பக்தியோடு செபிக்க வேண்டிய ஆர்த்தைத் தாரும், சுவாமி."

என்று அடிக்கடி வேண்டினால் அதற்கான அருளை இறைவன் தருவார்.

அதற்கான அருளை இறைவன் தரும்போது

அதைப் பயன்படுத்தி,

செபத்தில் ஆர்வம் காட்டவேண்டியது

நமது கடமை.

அதாவது இறைவன் தரும் அருளோடு

நமது ஒத்துழைப்பையும் சேர்க்கவேண்டும்.

கிணற்றில் தண்ணீர் எப்போதும் இருக்கிறது.

அதை எடுக்கவேண்டியது நாம்தாம்.

அதேபோன்று இறைவனின் அருளுதவி எப்போதும் தயார்.

நாம் ஒத்துழைத்தால் ஆசைப்பட்டது நடக்கும்.

இயேசு வருகிறார்  நமக்கு வேண்டிய அருளுதவியுடன்.

நம்மிடம் அவர்மேல் உண்மையான விசுவாசம் இருந்து,

விசுவாசத்தோடு கேட்டால்,

கேட்டது உடனே நடக்கிறது.

விசுவாசத்தோடு கேட்டிராவிட்டால் நடந்திருக்காது.

ஆகவேதான் விசுவாசத்தோடு கேட்கும் நோயாளியை குணமாக்கிவிட்டு இயேசு கூறுகிறார், 

"உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."என்று.

வேறு வார்த்தைகளில் விளக்க வேண்டுமென்றால்:

"நான் சுகம் தரும் அருளின் வற்றாத ஊற்று,

விசுவாசம் என்னும் வாளியால் நீ ஊற்றுத் தண்ணீரை எடுத்து

சுகம் அடைதுள்ளாய்."

நமது ஆன்மீக வாழ்வின் உயிர் விசுவாசம்.

ஆன்மீக வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் பூட்டு என்றால்,

விசுவாசம் சாவி.

விசுவாசம் இருந்தால் எல்லா பிரச்சனைகளுக்கும்

அற்புதமாய்த் தீர்வு கிடைக்கும்.

நமது விசுவாசம்
மட்டும் உறுதியாய் இருந்தால்,

சர்வ வல்லப கடவுள் நம் கையில்.

லூர்து செல்வம்.

😂

No comments:

Post a Comment