திங்கள்3
ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார்.
(மாற்கு நற்செய்தி 5:19)
கடலில் புயலை அடக்கிய புதுமையை செய்தபின் இயேசுவும் சீடர்களும்
கடலுக்கு அக்கரையிலிருந்த தெக்கப்பொலி நாட்டிலிருந்த கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள்.
அது புற இனத்தார் வாழ்ந்த பகுதி.
அங்கு தீய ஆவிகள் கூட்டமாகப் பிடித்திருந்த இளைஞன் ஒருவனை இயேசு குணமாக்கனார் .
அந்தப் தீய ஆவிகளை அங்கு மேய்ந்து கொண்டிருந்த பன்றிகளுக்குள் அவர் அனுப்பியதால், பன்றிகள் கடலில் விழுந்து மாண்டன.
இதைக் கேள்விப் பட்ட அந்த ஊரார் இயேசுவை அவர்களை விட்டு போய்விடும் படி வேண்டினர்.
தங்களைச் சேர்ந்த ஒரு இளைஞனை குணமாக்கியதற்கு அவர்கள் மகிழ்ந்து அவரைத் தங்களது ஊருக்கு அழைத்திருக்க வேண்டும்.
அவர் செய்த புதுமையைப் பார்த்து அவரைப் பற்றி பெருமையாகப் பேசியிருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் மனிதர்களுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை பன்றிகளுக்குக் கொடுத்தார்கள்.
ஆகவேதான் குணமான இளைஞனை நினைத்து மகிழாமலும்,
இயேசு செய்த புதுமையை நினைத்து பெருமைப்படாமலும்
அவரைத் தங்களை விட்டு போய் விடும்படி கேட்டுக் கொண்டார்கள்.
ஆன்மீகத்தை விட லௌகீகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்களுக்கு இவர்கள் ஒரு உதாரணம்.
ஒரு நாள் வேலை செய்தால் சம்பளம் கிடைக்கும் என்பதற்காக ஞாயிறு திருப்பலிக்குச் செல்லாமல் வேலைக்குச் செல்லும் மனிதர்கள் இவர்களைப் போன்றவர்கள்.
உலக சிற்றின்பத்தை அனுபவிப்பதற்காக நித்திய பேரின்பத்தைத் தியாகம் செய்து வாழ்பவர்களும் இவர்களைப் போன்றவர்களே.
மரத்தில் தொங்கும் பலாப்பழம் வேண்டுமா, கையில் இருக்கும் நெல்லிக்காய் வேண்டுமா என்று கேட்டால் மரத்தில் ஏற வருத்தப்பட்டு நெல்லிக்காய் போதும் என்பவர்கள்,
விண்ணக வாழ்வுக்கு ஆசைப்படுங்கள் என்று சொல்லும் போது,
இப்போது கையில் இருக்கும் உலக வாழ்வே போதும் என்று நினைக்கும் மனிதர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.
உண்மையில் நாம் எதிர்பார்ப்பின் திருப் பயணிகள்.
In fact we are pilgrims of hope.
இருப்பது போதும் என்று வாழாமல் இயேசு நமக்கு வாக்களித்திருக்கிற விண்ணக வாழ்வை எதிர் நோக்கியே வாழும் திருப்பயணிகள்தான் நாம்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் யூபிலி ஆண்டின் நோக்கமே அதுதான்.
இயேசுவால் குணமாக்கப்பட்ட இளைஞன் நன்றி உள்ளவன்.
தனது ஊரார்களைப் போலல்லாமல் அவன் இயேசுவுடனேயே இருக்க ஆசைப் பட்டான்.
''அவர் படகில் ஏறியதும் பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்.
ஆனால் அவர் அதற்கு இசையாமல், அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்" என்றார்.
(மாற்கு நற்செய்தி 5:18,19)
வழக்கமாக புதுமைகள் செய்யும்போது இதை யாரிடமும் கூற வேண்டாம் என்று சொல்லும் ஆண்டவர்
குணமான இளைஞனிடம் அவன் பெற்ற உதவியை உறவினர் அனைவருக்கும் அறிவுக்கும் படி கூறுகிறார்.
அவனை ஒரு அப்போஸ்தலராக மாற்றிவிட்டார்.
எப்படி புனித சின்னப்பரைப் புற இனத்தாரிடையே நற்செய்தியை அறிவிக்க அனுப்பினாரோ,
அதே போல் தான் தீய ஆவிகளிடமிருந்து குணமாக்கப்பட்ட இளைஞனை இயேசு நற்செய்தி அறிவிக்க அனுப்புகிறார்.
அவரும் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். கேட்டோர்அனைவரும் வியப்புற்றனர்.
இந்த நிகழ்விலிருந்து நாம் ஒரு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
உண்மையில் நாம் ஒவ்வொருவரும் ஒரு அப்போஸ்தலர்தான்.
நாமும் நமது வாழ்வில்
இயேசுவிடமிருந்து அநேக உதவிகளைப் பெற்றிருப்போம்.
நாம் பெறுவது நமக்காக மட்டுமல்ல. நம்மை நாம் நேசிப்பது போல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்பது இயேசுவின் அன்புக் கட்டளை.
இக்கட்டளையின் அடிப்படை நோக்கமே நாம் மீட்பு அடைய விரும்புவதுபோல மற்றவர்களும் மீட்பு அடைய விரும்ப வேண்டும் என்பதுதான்.
மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோமோ அதையே நாம் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.
மற்றவர்கள் நமக்கு தீமை செய்ய வேண்டும் என்று என்ன மாட்டோம். நாமும் மற்றவர்களுக்குத் தீங்கு செய்யக்கூடாது.
நாம் நமக்கு விண்ணகம் செல்ல உதவும் நற்செய்தியை அறிய ஆசைப்படுகிறோம்.
மற்றவர்களும் நற்செய்தியை அறிய வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும்.
ஆகவே நற்செய்தியையும் அதனால் நாம் பெற்ற நன்மைகளையும் மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.
கடவுளிடமிருந்து நாம் பெற்ற உதவிகளை மற்றவர்களுக்கு அறிவிக்கும் போது அதே மாதிரியான உதவிகளைப் பெற அவர்களும் விரும்புவார்கள்,
அந்த விருப்பத்தின் பலனாக கடவுளை தேடுவார்கள்.
இறை அரசுக்குள் வருவார்கள்.
நாம் பெற்ற உதவிகளை அறிவிப்பது தற்பெருமைக்காக அல்ல, இறையரசை பரப்புவதற்காக.
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையம்." என்ற தமிழ்க் கவிதை வரிகள் நமது நினைவில் இருக்க வேண்டும்.
இறைவனிடமிருந்து நாம் பெற்ற நன்மைகளை மற்றவர்களும் பெற விரும்புவோம்.
அதற்கான உதவிகளை அவர்களுக்கு செய்வோம்.
எல்லாம் இறைவனின் மகிமைக்கே.
லூர்து செல்வம்.