Sunday, May 7, 2023

விழாவும், விழாவும்.


.. விழாவும், விழாவும்.

''தாத்தா, விழா என்றால் என்ன?"

"'கொண்டாட்டம்."

''கொண்டாடப்படுவதா?
கொண்டாடுவதா?"

"'எனக்குப் புரியாமல் பேச வேண்டும் என்று தீர்மானித்து வந்திருக்கிறாய்."

"தாத்தா, புரியாதவன் வாயிலிருந்து புரியாதது தான் வரும்.

எனக்குப் புரியாததைப் புரிய வைக்க தான் உங்களிடம் கேட்கிறேன்."

"'கேள். தாராளமாக கேள்.

ஆனால் கேள்வியை நான் புரியும் படி கேள்."

"கிறிஸ்மஸ் ஒரு விழா.

மக்களால் கொண்டாடப்பட வேண்டிய திருவிழா.

ஆனால் மக்கள் அதைக் கொண்டாடுகிறார்களா?"

"'டிசம்பர் 25ல் கொண்டாடுகிறார்களே."

"கிறிஸ்மஸ் என்ற பெயரில் ஒரு விழா கொண்டாடுகிறார்கள்.

கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடுகிறார்களா?

கிறிஸ்து மாட்டுத் தொழுவத்தில் ஏழைக் குழந்தையாகப் பிறந்தார்.

ஏழ்மையின் மகத்துவத்தைக் கொண்டாட இலட்சக் கணக்கில் செலவழித்தால் அது கிறிஸ்துமஸ் விழாவா?"

"இப்போது உன் கேள்வி புரிகிறது.

கொண்டாடப் பட வேண்டிய விழாவை மக்கள் உரிய முறையில் கொண்டாடுகிறார்களா?"

"எதைச் செய்தாலும் செய்ய வேண்டிய விதமாகச் செய்ய வேண்டும்.

படிப்பதாகக் கூறிக் கொண்டு பள்ளிக் கூடம் போகும் மாணவர்கள் படிக்கிறார்களா?

அல்லது

படிப்பு என்று கூறிக் கொண்டு படிப்பிற்குச் சம்பந்தம் இல்லாததைச் செய்கிறார்களா.

சாப்பிடுவது எதற்காக?"

"'உடல் சக்தியும், வளர்ச்சியும் பெற."

"சத்துள்ள உணவைச் சாப்பிடுவதற்கு பதில் ருசியுள்ள உணவை ருசிக்காக மட்டும் சாப்பிட்டால் அதற்கு பெயர் சாப்பாடா?

ருசிக்காக கெமிக்கல்ஸ் நிறைய உள்ள உணவைச் சாப்பிட்டால்,

உடல் வளராது, உடலில் நோய்கள்தான் பெருகும்.

தேவத் திரவிய அனுமானத்தின் நோக்கம் என்ன?"

"'ஆன்மீக வளர்ச்சி."

"புதுத்துணி உடுத்துவதாலோ, பிரியாணி சாப்பிடுவதாலோ ஆன்மீகம் வளருமா?"

"'செலவுதான் வளரும்.

குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது அதன் ஜென்ம பாவம் மன்னிக்கப்படுகிறது.

இதனால் நாம் பெற வேண்டியது ஆன்மீக மகிழ்ச்சி.

விருந்தினர்களை வரவழைத்து அனைவருக்கும் பிரியாணி உணவு அளித்தால் நமக்கு ஆன்மீக மகிழ்ச்சி ஏற்படுமா?"

"ஏற்படாது. ஆனால் குழந்தைக்கு 
ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் போதே,

யார் யாரை விருந்துக்கு அழைக்க வேண்டும் என்ன விருந்து கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு விடுகிறது.

ஞானஸ்நானத்தை விட அதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது."

"'தேவ நற்கருணை ஒரு தேவத் திரவிய அனுமானம்.

சிறுவர்களுக்கு புது நன்மை கொடுக்கத் தீர்மானிக்கும் போது 

பாவ சங்கீர்த்தனம், தேவ நற்கருணை ஆகியவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஆனால் பெற்றோர் இந்த பொறுப்பை ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு,

புது நன்மை நாளன்று வீட்டில் கொண்டாடப்பட வேண்டிய விழாவில் முழுக்க முழுக்க இறங்கி விடுகிறார்கள்.

விருந்தினர்களுக்கு அழைப்பு கொடுத்தல்,

விழா அன்று என்ன விருந்து கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தல்,

சாப்பிடுவதற்கான மண்டபங்களை ஏற்பாடு செய்தல்

ஆகியவைதான் கடவுளை மகிமைப்படுத்த அவர்கள் செய்யும் ஏற்பாடுகள்.


"நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு.

 அப்போது நீ பேறுபெற்றவன்.

 ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. 

நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்"

 என்ற இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் விருந்துக்கு அழைப்பு விடுக்கிறார்களா?.


அல்லது

கவர்களின் கனத்தின் அடிப்படையில் அழைப்பு விடுக்கிறார்களா?

உலகினர்களின் வழக்கம் நமக்குத் தெரியும்.

எல்லாம் வியாபார அடிப்படை தான், இலாபம்.

ஏழைகளை மட்டும் அழைத்தால் இயேசுவையே விருந்துக்கு அழைக்கிறார்கள். 
 
வசதி உள்ளவர்களை மட்டும் அழைத்தால் இயேசுவை எதிர்ப்பவர்களை விருந்துக்கு அழைக்கிறார்கள். 

தேவத் திரவிய அனுமானங்களை உலகத் திரவிய அனுமானங்களாக மாற்ற வேண்டாம்.

திருமணம் ஒரு தேவத் திரவிய அனுமானம்.

சொத்துக்கும், பணத்துக்கும், நகை நட்டுகளுக்கும் திருமணத்தை அடகு வைப்பவர்கள்

அடகைத் திருப்ப முடியாது.

திருமணத்துக்கு செல்பவர்களும் மணமக்களை மனதாக ஆசீர்வதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்வதில்லை.

 வாங்கிய கவரைத் திரும்ப கொடுக்க வேண்டும்,

 சாப்பிட வேண்டும் என்ற நோக்கோடு தான் செல்வார்கள்.

சாப்பாடு நன்றாக இருந்தால் நல்ல திருமணம், மோசமாக இருந்தால் மோசமான திருமணம். 

திருமணத்தை மதிப்பீடு செய்வது சாப்பாடு தான்.

இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட தேவ திரவிய அனுமானத்திற்கு மக்களிடமிருந்து கிடைக்கும் மரியாதை இதுதான்.

ஆன்மீக திருவிழாக்களை ஆன்மீக ரீதியாக கொண்டாடுபவர்கள் தான் உண்மைக் கிறிஸ்தவர்கள்.

உலக ரீதியாக கொண்டாடுபவர்கள் பேருக்குக் கிறிஸ்தவர்கள்.

ஆண்டவருடைய திருவிழாக்களை ஆண்டவரைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு கொண்டாடுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment