Saturday, May 27, 2023

"யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்!"(அரு.7:37)

"யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்!"(அரு.7:37)

குழந்தைக்கு பசி எடுத்தால் அது தாயைத்தான் தேடும்.

மகனுக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவன் தந்தையிடமே கேட்பான்.

மாணவனுக்கு பாடத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால் அவன் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரையே கேட்பான்.

ஆன்மாவுக்கு தாகம் எடுத்தால் அது ஆண்டவரையே தேட வேண்டும்.

உடலுக்குத் தாகம் எடுத்தால் நாம் தண்ணீரைக் குடிப்போம்.

தண்ணீர்க் குடிக்காவிட்டால் உடல் இயங்காது.

ஆண்டவரின் அருள் இல்லாவிட்டால் ஆன்மா இயங்காது.

 ஆன்மாவுக்கு இறைவனோடு உறவு இருந்தால் தான் ஆன்மா உயிர் வாழ முடியும்.

அதற்குத் தேவ இஷ்டப் பிரசாதம் என்னும் அருள்  தேவை.

ஆன்மாவில் சாவான பாவம் இல்லாவிட்டால் தான் இந்த அருள் இருக்கும்.

தேவ இஷ்டப் பிரசாதம் என்னும் அருள்  வேண்டுவோர் தங்களது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற வேண்டும்.

இந்த அருள் உள்ளவர்களுக்கு விண்ணகம் உறுதி.

விண்ணகத்தில் நாம் அனுபவிக்க விருக்கும்  பேரின்பத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமானால் நாம் பூமியில் வாழும்போது நற்செயல்கள் செய்ய வேண்டும்.

நமது நல்ல செயல்களின் அளவுக்கு ஏற்ப விண்ணகத்தின் பேரின்பத்தின் அளவு இருக்கும்.

விண்ணகத்தில் முடிவில்லா காலம் அதிகமாகப் பேரின்பம் அனுபவிக்க விரும்புவோர்

பூமியில் வாழும்போது 
நற்செயல்கள் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

நற்செயல்கள் செய்ய நமக்கு உதவி வரப்பிரசாதம் என்னும் அருள் வேண்டும்.

இந்த அருளையும் நாம் இறைவனிடமிருந்துதான் பெற வேண்டும்.

அதற்காக இறைவனிடம் மன்றாட வேண்டும்.

அருள் என்பது ஆன்மாவின் உணவு.

"எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்"

என்று நாம் வேண்டும்போது நமது ஆன்மா உயிர் வாழவும் நற்செயல்கள் புரியவும் வேண்டிய அருள் வரங்களை தந்தையிடம் கேட்கிறோம். 

நமது உடலுக்கும் உணவு வேண்டும், ஆன்மாவுக்கும் உணவு வேண்டும்.

 இரண்டுக்கும் வேண்டிய உணவைத்தான் ஆண்டவரிடம் கேட்கிறோம்.

ஆனால் எந்தவித உணர்வும் இல்லாமல் அந்த வார்த்தைகளைச் சொன்னால் அவற்றுக்குப் பொருள் இருக்காது.

ஆன்மாவுக்கு வேண்டிய உணவைக் கேட்கும் உணர்வோடு,

"விண்ணகத் தந்தையே, எங்களது ஆன்மா உயிர் வாழ்வதற்கு வேண்டிய தேவ இஷ்டப்பிரசாதத்தையும்,

நாங்கள் நற்செயல்கள் புரிவதற்கு வேண்டிய உதவி வரப்பிரசாதத்தையும்

எங்களுக்கு போதுமான அளவு தாரும்"

என்ற பொருளோடு நான் செபம் சொன்னால் 

இரண்டு விதமான வரங்களும் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

நாமும் பிறருக்கு உதவி செய்வது போன்ற நற்செயல்களைச் செய்து கொண்டேயிருப்போம்.

விண்ணகத்தில் நாம் 
அனுபவிக்கவிருக்கும் பேரின்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

உலகத்தில் வங்கியில் அடிக்கடி பணம் போட்டு நமது வங்கி இருப்பை அதிகரித்துக் கொண்டே போவது போல,

நமது நற்செயல்களால் கிடைக்கும் ஆன்மீக பலனை விண்ணக வங்கியில் அடிக்கடி போட்டுக் கொண்டிருந்தால் நமது பேரின்பத்தின் கையிருப்பு அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

நமது ஆன்மா தாகமாக இருக்கிறது என்று சொல்லும்போது அருள் தாகத்தைத் தான் குறிக்கிறோம்.

நமது அருள் தாகம் தணிய வேண்டிய அருளைப் பெற  நாம் இறைவனிடம் தான் செல்ல வேண்டும்.


"யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்!"

என்று நமது ஆண்டவர் இயேசுவே சொல்லுகிறார்.

பிறகு நமக்கு ஏன் கவலை?

இயேசுவிடம் செல்வோம்.

நமது அருள் தாகத்தை தணிக்க தேவையான அருள் நீரைக் கேட்போம்.

ஆண்டவர் தாராள மனம் உள்ளவர்.

அருள் வெள்ளத்தை  நமக்குள் திறந்து விடுவார்.

வேண்டிய அளவு அருள் நீரை அள்ளி அருந்துவோம்.

இறை உறவுடன் நற்செயல்களைக் குறைவில்லாமல் செய்து விண்ணக வங்கியில் செலுத்துவோம்.

நித்திய காலம் பேரின்பத்தில் வாழ்வோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment