Friday, May 12, 2023

"என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள்: உங்களையும் துன்புறுத்துவார்கள்" (அரு.15:20)

."என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள்: உங்களையும் துன்புறுத்துவார்கள்"
(அரு.15:20)

கிறிஸ்தவம் ஒரு அரசியல் கட்சி அல்ல.

உலகியல் ஆட்சி சார்ந்த உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்பவர்கள், உரிமைகள் மறுக்கப்பட்டால் போராடுபவர்கள் அரசியல் கட்சியினர்.

போராட்டங்களின் போது உயிர் துறப்பவர்களும் இருக்கிறார்கள்.


ஆனால் கிறிஸ்தவர்கள் இயேசுவின் சீடர்கள்.

குரு எவ்வழி, சீடர்கள் அவ்வழி.

இயேசு உலகைச் சார்ந்த அரசியல் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்யவில்லை.

விண்ணுலகைச் சார்ந்த நற்செய்திகளை அறிவித்தார்.

அறிவிப்பதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அறிவிப்பவர்கள் உள்ளத்தைத் தொடுவர்.

பிரச்சாரம் செய்பவர்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவர்.

அறிவிப்பில் உண்மை இருக்கும்.
பிரச்சாரத்தில் உண்மையை விட உணர்ச்சிகள் அதிகம் இருக்கும்.

கிறிஸ்து நற்செய்தியை அறிவித்தார். அதன் விளைவாகப் பாடுகள் பட்டு பலியிடப் பட்டார்.

அரசியல் பிரச்சாரத்தில் எதிரிகளை அழிப்பதே அதிக முக்கியத்துவம் பெறும்,

அதற்காக எந்த முறையையும் கையாள்வார்கள்.  .

அரசியலில் பலியாவோர் வாழ்க்கை அதோடு முடிந்து விடும்.

ஆனால் கிறிஸ்துவை அறிவிப்பதில் பலியாவோர் நித்தியமாக வாழ்வர்.

நற்செய்தி அறிவிப்பினால் துன்புறுத்தப் படுவோர் அதற்காகக் கவலைப் படக் கூடாது.

ஏனெனில் இயேசுவும் நற்செய்தி அறிவிப்பினால் துன்புறுத்தப் பட்டார்.

குருவுக்கு நேர்ந்ததுதான் சீடர்களுக்கும் நேரும்.

 நற்செய்தி அறிவிப்பினால் நமக்குத் துன்பம் வந்தால் நாம் மகிழ வேண்டும்,

ஆண்டவருக்கு ஏற்பட்டது நமக்கும் ஏற்பட பாக்கியம் கிடைத்ததற்காக.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சொன்னது இன்று இந்தியாவில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

தன்னை அறிவிப்பவர்களுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று இயேசு சொன்னது இந்திய கிறிஸ்தவர்களுக்கும் நடக்க ஆரம்பித்திருக்கிறது.

கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப் படுகின்றனர்.

கிறிஸ்தவ கோவில்கள் தீக்கு இரையாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதே நிலை நீடித்தால் இந்தியாவிலிருந்தும் ஆயிரக் கணக்கான வேத சாட்சிகள் மோட்சத்திற்குள் நுழைவார்கள்.

இதற்காக வருத்தப் படலாமா?

ஒரு மாதம் கழித்து கிடைக்க வேண்டிய இலாபம் உடனே கிடைத்து விட்டால் யாராவது வருத்தப் படுவார்களா?

ஆன்மீக ரீதியாக நமது நிலையும் அதுதான்.

ஆன்மீகத்தில் நம்மை எதிர்ப்பவர்களே நம்மை சீக்கிரம் நிலைவாழ்வுக்குள் அனுப்ப முயன்று கொண்டிருக்கிறார்கள்.

அதற்காக நாம் வருத்தப் பட வேண்டாம்,

அவர்களுக்காக வேண்டிக் கொள்வோம்.

இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கும் படி  தந்தையிடம் வேண்டிக் கொண்டார்.

நாமும் அதையே செய்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment