Wednesday, May 10, 2023

"நான் உங்களிடம் அன்புகூர்ந்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை." (அரு.15:12)


"நான் உங்களிடம் அன்புகூர்ந்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை." (அரு.15:12)

"தாத்தா, "உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக"என்றுதானே இயேசு போதித்தார்."

"'ஆமா. அதில் என்ன சந்தேகம்?"

"ஆனால் அதே இயேசு

"நான் உங்களிடம் அன்புகூர்ந்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை." என்று கூறுகிறாரே."

"'அதில் உனக்கு என்ன பிரச்சனை?"

"எனக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை.

நாம் எப்படி அயலானை அன்பு செய்ய வேண்டும்?

நம்மீது நாம் அன்பு காட்டுவதுபோலா?

அல்லது.

நம்மிடம் கடவுள் அன்பு கூர்வது போலா?"

"'இப்போது உன்னை நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.

நம் மீது நாம் எப்படி அன்பு காட்ட வேண்டும்?

இது தெரிந்தால்தான் நாம் பிறன் மீது அன்பு காட்ட வேண்டும் என்பது தெரியும்."

"தாத்தா, இரண்டு வசனங்களுமே ஒரு வரை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதைப் பற்றிதான்.

ஒவ்வொருவரும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்.

நான் உங்களை அன்பு செய்ய வேண்டும்.

நீங்கள் என்னை அன்பு செய்ய வேண்டும்.

அப்படிப் பார்த்தால்,

நம்மிடம் கடவுள் அன்பு கூர்வது போல், நம்மீது நாம் அன்பு காட்ட வேண்டும்.

அதே போல் நம் அயலான் மீதும் 
அன்பு காட்ட வேண்டும்."

"'கரெக்ட். நம் மீது நாம் காட்டும் அன்பு, கடவுள் நம் மீது காட்டும் அன்பைப் போன்றுதான் இருக்க வேண்டும்.

கடவுளின் அன்பு தன்னலம் அற்றது.

தனது நலனுக்காக அவர் நம்மைப் படைக்கவில்லை.

நாம் இல்லாமலே அவர் பரிபூரணமானவர்.

தனது நலனுக்காக அவர் மனிதனாகப் பிறக்க வில்லை.

நமது நலனுக்காகவே அவர் மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு மரித்தார்.

கடவுளின் அன்பு தன்னலம் அற்றதாக இருப்பது போலவே நம் மீது நாம் கொண்டுள்ள அன்பிலும் தன்னலம் இருக்கக் கூடாது.

நாம் நம்மை நேசிக்க வேண்டியதே கடவுளுக்காகத் தான். கடவுளின் மகிமைக்காக வாழ்வதற்காகத்தான்.

நாம் நம்மை நேசிக்க வேண்டியதே கடவுளுக்காக பிறர் பணி புரிய வாழ்வதற்காகத் தான்.

இப்படி நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்..

தன்னலம் இன்றி,   இறைவனின் மகிமைக்காக நமது அயலானை நேசிக்க வேண்டும்."

"அதாவது அன்பு வட்டத்துக்குள் கடவுளோடு, அவரால் படைக்கப் பட்ட அனைவரும் இருக்கிறோம்.

கடவுள் அன்பு மயமானவர்.
God is love.

நாம் நமது அன்பை இறையன்போடு இணைத்து, 

அதனால்தான் நாம் இயக்கப் பட வேண்டும்.

இறையன்பு நம்முள் இருந்து, நம்மை வாழவைக்க வேண்டும்.

இயேசுவுக்காக மட்டுமல்லாமல் இயேசுவாகவே வாழ வேண்டும்.

இயேசுவின் அத்தனை பண்புகளும் நம்மில் பிரதிபலிக்க வேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைப் பார்க்க வேண்டும்."

"அந்த இரண்டு வசனங்களிலும் இவ்வளவு பொருளா?"

"'இயேசு என்றால் அன்பு. 
அன்புக்குள் நாம் அனைவரும்.

தண்ணீரில் விழுபவர்கள் நனையாமல் இருக்க முடியாது.

நனைப்பது தண்ணீரின் இயல்பு. 

அன்பு செய்பவர்கள் பணி புரியாமல் இருக்க முடியாது.

பணி புரிவது அன்பின் இயல்பு.

தன்னலம் இன்மை,

தியாக உணர்வு,

மன்னிக்கும் தன்மை,

தீமைக்கு நன்மை,

பொருள் பற்றின்மை,

இறைவனின் மகிமைக்காக
ஆகியவை உண்மையான பணியின் இயல்புகள்.

இயேசு நம்மை நேசிப்பது போல நாமும் ஒருவரையொருவர் நேசிப்போம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment