Monday, May 22, 2023

உண்மையான அன்பு.

உண்மையான அன்பு.

"தாத்தா, ஒரு சிறு கேள்வி.

ஒருவன் 24 மணி நேரமும் இறைவனை செபித்துக் கொண்டேயிருக்கிறான்.

இன்னொருவன் செபிப்பதேயில்ல. ஆனால் 24 மணி நேரமும் யாருக்காவது உதவி செய்து கொண்டேயிருக்கிறான்.

இருவரில் சிறந்தவன் யார்?"

"'24 மணி நேரமும் இறைவனை செபித்துக் கொண்டேயிருப்பவன் தான் சிறந்தவன்."

" அயலானை நேசிக்காமல் செபம் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் எப்படித் தாத்தா ஒருவன் நல்லவனாக முடியும்?"

"'செபித்தல் என்றால் இறைவனோடு ஒன்றித்திருத்தல் என்று அர்த்தம்.

இறைவனை உண்மையிலேயே நேசிப்பவனால் தான் இறைவனோடு ஒன்றித்திருக்க முடியும்.

இறைவனை உண்மையிலேயே நேசிப்பவன் அயலானையும் கட்டாயம் நேசிப்பான்.

அயலானை நேசிப்பவன் அவனுக்கு கட்டாயம் உதவி செய்வான்.

சுருக்கமாக இறைவனை உண்மையாகவே நேசிப்பவன் கட்டாயம் மற்றவர்களுக்கு உதவி செய்வான்.

இறைவனை உண்மையாகவே நேசிக்காதவர்களால் பிறரை உண்மையாக நேசிக்கவும் முடியாது,

 அவர்களுக்கு உதவி எதுவும் செய்யவும் முடியாது."

"ஆனால் கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் கூட மற்றவர்களுக்கு உதவி செய்கின்றார்களே!"

"'உதவி என்று நீ எதைச் சொல்கிறாய்?''

"உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் இல்லாமை போன்ற தேவைகளை நிவர்த்தி செய்கிறார்களே!"

'"முதலில் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு உரிய உண்மையான பொருளை தெரிந்து கொண்டு கூற வேண்டும்.

நீ சென்னையிலிருந்து புறப்பட்டு குற்றாலத்திற்கு சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம்.

வரும் வழியில் உள்ளவர்களிடம் எப்படிப்பட்ட உதவியை நீ எதிர்பார்ப்பாய்?"

"குற்றாலத்திற்கு செல்லும் வழியைக் காண்பிக்கூடிய உதவியை எதிர் பார்ப்பேன்."

"'ஒருவன் உனக்கு உண்ண உணவு தந்து விட்டு, தவறான வழியை காண்பித்தால் அது அவன் உனக்கு செய்யக்கூடிய உதவியா?"

"நிச்சயமாக இல்லை. அவன் செய்வது பச்சைத் துரோகம். அது உணவை கொடுத்து சாகடிப்பதற்குச் சமம்."

"'நாம் முழுக்க முழுக்க ஆன்மீகவாதிகள். நாம் ஆன்மிகத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

நமது ஆன்மீக பயணத்தின் நோக்கம் என்ன?"

"இறைவன். இறைவன் மட்டுமே."

"'இறைவனை நம்புகிறவன் மற்றவர்களுக்கு இறைவனை நோக்கிச் செல்ல வழி காட்டுவான்.

அவன் மற்றவர்களுக்கு உணவு உடை போன்ற உலகைச் சார்ந்த உதவிகளைச் செய்வதும் இறைவனை நோக்கி வழி காட்டுவதற்காகத்தான்.

இறைவனை மையமாக வைத்து செய்யக்கூடிய உதவிக்கு பெயர் தான் உதவி.

எப்படி ஆசிரியர் மாணவனுக்கு அவன் எழுதவிருக்கும் தேர்வை மையமாக வைத்து பாடம் நடத்துகிறாரோ,

அதேபோல் நாம் அயலானுக்கு செய்யும் உதவி இறைவனை மையமாக வைத்து இருக்க வேண்டும்.

தேர்வை மையமாக வைக்காமல் மாணவர்கள் மகிழ்ச்சியை மட்டும் மையமாக வைத்து ஆசிரியர் பாடம் நடத்தினால்,

மாணவன் வகுப்பில் மகிழ்ச்சியாக இருப்பான்.

ஆனால் தேர்வு முடிந்து result வரும்போது அழுவான்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் செய்யும் உதவி உலகத்தில் ஒருவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம்.

இவ்வுலகின் வாழ்க்கை முடிந்த பின் அவனது நித்திய கால வாழ்வு எப்படி இருக்கும்?

கடவுளை நம்பாதவர்கள் இதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

உண்மையான உதவி இறைவனுக்காக இறைவனை மையமாக வைத்து செய்யப்படுவதாக இருக்க வேண்டும்.

இறைவனை மையமாக வைத்து உதவி செய்யாதவன் தன்னை மையமாக வைத்து உதவி என்ற பெயரில் செய்வான்.

அவன் செய்வது உண்மையான உதவி அல்ல.

மீட்புப் பெற விரும்புவோர் இரண்டு கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று இயேசு கூறியிருக்கிறார்.

முதலாவது எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசிக்க வேண்டும்.

இரண்டாவது நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

சுருக்கமாக நாம் நம்மைப் படைத்த கடவுளையும்,

 அவர் படைத்த நமது அயானையும் நேசிக்க வேண்டும்.

இதிலிருந்து ஒன்று புரியும், நமது நேசத்திற்கு மையம் கடவுள்.

நம்மைப் படைத்த கடவுள் நம்மை நேசிக்கிறார். ஆகவே நாமும் அவரால் படைக்கப்பட்ட நம்மை நேசிக்கிறோம்.

நம்மைப் படைத்த கடவுள் நமது அயலானையும் படைத்து நேசிக்கிறார்.

 ஆகவே கடவுளால் படைக்கப்பட்ட நாம்

கடவுளால் படைக்கப்பட்ட நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

கடவுளுக்காகத்தான் நாம் நமது அயலானை நேசிக்கிறோம்.

கடவுள் இல்லையென்றால் நமக்கு அயலானும் இல்லை.

நமது உடன் பிறந்தவர்களை நாம் ஏன் நேசிக்கிறோம்?

அவர்கள் நம்மைப் பெற்ற அம்மாவின் பிள்ளைகள் என்பதால் தானே.

கடவுள் நமது அம்மா.

நம்மைப் படைத்த கடவுள் தான் நமது அயலானையும் படைத்தார்.

நமக்கும் நமது அயலானுக்கும் இடையே உள்ள உறவுக்குக் காரணம் இருவரையும் படைத்தவர் ஒரே கடவுள் என்பதுதான்.

ஆகவே கடவுளை நேசிப்பவனால் அயலானை நேசிக்காமல் இருக்க முடியாது.

கடவுளை நேசிக்காதவர்களால் அயலானை நேசிக்க முடியாது."

''நாத்திகர்களும் தங்களது பிள்ளைகளை நேசிக்கிறார்களே."

"'அரசு நிர்வகிக்கும் பள்ளியில் படித்து தேர்வு எழுதி வெற்றி பெறுபவருக்கு அரசு சான்றிதழ் கொடுக்கிறது.

ஒரு பையன் அரசு நிர்வாகிக்கும் பள்ளியில் சேராமல் உன்னிடம் படித்து நீ தேர்வு வைத்து நீ அவனுக்கு ஒரு சான்றிதழ் கொடுக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம்.

இரண்டுமே சான்றிதழ்கள் தான்.

ஆனால் எந்த சான்றிதழ் 
செல்லுபடியாகும்?

(Which certificate is valid?)"

"அரசு கொடுத்த சான்றிதழ்."

"'கடவுளை மையமாக
 வைத்திருக்கும் அன்பு தான் கடவுள் முன் செல்லுபடியாகும்.

புரிகிறதா?"

"புரிகிறது. கடவுளை மையமாகக் கொண்ட அன்பு செயல்களுக்கு மட்டுமே நித்திய சம்பாவனை உண்டு.

மற்றவற்றிற்கான மதிப்பு இவ்வுலகோடு சரி.

அன்பு என்று சொல்லப்படுவதெல்லாம் அன்பல்ல.

இறைவனை மையமாக கொண்ட அன்பே அன்பு."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment