Wednesday, May 31, 2023

கேளுங்கள் கொடுக்கப்படும்.

கேளுங்கள் கொடுக்கப்படும்.

 "நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டுமா?

படித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டுமா?

எங்கள் பள்ளியில் சேருங்கள்."

ஒரு மாணவன் பள்ளியில் சேர்ந்தான்.

ஆனால் தேர்வில் வெற்றி பெறவில்லை, வேலையும் கிடைக்கவில்லை.

,"கேளுங்கள் கொடுக்கப்படும்."

என்ற வார்த்தைகளின் படி கேட்டேன் ஆனால் கிடைக்கவில்லை."

என்று ஒரு நண்பர் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

பள்ளிக்கூடம் என்றால் என்ன என்பது தெரியாதவர்கள் தான் தங்கள் தோல்விக்குப் பள்ளிக்கூடத்தின் மேல் பழியை போடுவார்கள்.

யாரிடம் கேட்க வேண்டும் என்பது தெரியாதவர்கள் தான் கேட்டது கிடைக்கவில்லை என்று புலம்புவார்கள்.

பள்ளிக்கூடம் என்பது ஒரு கட்டடம் அல்ல. ஆசிரியர்கள் அறிவை மாணவர்களுக்கு புகட்டும் இடம்தான் கல்விக் கூடம்.

ஆசிரியர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்கள் சொன்னபடி செய்யும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

வகுப்பறையில் ஆசிரியர் முன் உட்கார்ந்தவுடனே அறிவு வந்து விடாது.

முதலாவது ஆசிரியரை நம்ப வேண்டும்.

இரண்டாவது ஆசிரியர் கூறுவதைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கி மனதில் பதிய வைக்க வேண்டும்.

மூன்றாவது ஆசிரியர் சொன்னபடி செய்ய வேண்டும்.

இந்த மூன்றையும் செய்தால் வெற்றி உறுதி.

இறைவனிடம் கேட்டது கிடைக்க வேண்டுமென்றால் முதலில் அவரை நம்ப வேண்டும்.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்னவர் இறைமகன் இயேசு.

முதலில் சொன்னவர் மீது கேட்பவருக்கு முழுமையான நம்பிக்கை வேண்டும்.

"கேட்டேன், கிடைக்கவில்லை" என்று ஒருவர் சொன்னால் அவருக்கு இயேசுவின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

அநேகருக்கு நம்பிக்கை என்ற வார்த்தையின் பொருள் புரியவில்லை.

இயேசு நமது மீட்பர் என்று ஏற்றுக் கொள்வது விசுவாசம்.

 நாம் அவர் சொன்னபடி நடந்தால் அவர் நம்மை மீட்பார் என்று நம்புவது என்பது நம்பிக்கை. 

"நம்புங்கள்,

செபியுங்கள்,

நல்லது நடக்கும்."

நம்பிக்கையோடு செபிப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்.

நம்பிக்கையோடு செபிப்பவர்களுக்கு எது நடந்தாலும் அது நல்லதாகவே இருக்கும்.

நமக்கு எது நல்லது என்று இயேசுவுக்குத் தெரியும்.

செபத்தின் விளைவாக நடப்பது நல்லது அல்ல என்று கூறுபவர்களுக்கு இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

தேர்வு எழுதுவதற்காகத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

வெற்றிக்காக இயேசுவிடம் நம்பிக்கையோடு செபிக்க வேண்டும்.

முழு முயற்சியோடு படிக்க வேண்டும்.

இந்த இரண்டையும் ஒழுங்காக செய்த பின் நமக்குத் தோல்வி ஏற்பட்டால் 

நமக்கு ஏற்பட்ட தோல்வி நமக்கு நன்மைக்காகவே என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொண்டால் தான் இயேசுவின் மீது நாம் கொண்ட நம்பிக்கை உறுதியானது.

நமக்கு சுகம் இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

சுகம் தர வேண்டும் என்று இயேசுவிடம் நம்பிக்கையோடு வேண்டுகிறோம்.

சுகம் இரண்டு வகைப்படும்.

நிரந்தரமான சுகம்.
நிரந்தரம் அற்ற சுகம்.

இவ்வுலகில் நாம் அனுபவிப்பது நிரந்தரம் அற்ற சுகம்.

விண்ணுலகில் நாம் அனுபவிக்கப் போவது நிரந்தரமான சுகம்.

இந்த இரண்டில் எது நமக்கு வேண்டியது என்று நம்மை படைத்தவருக்குத் தெரியும்.

நம்பிக்கையோடு கூடிய வேண்டுதலுக்குப் பின்னும் 

சுகம் இல்லாத நாம் மரணம் அடைய நேரிட்டால்

 நம்மைப் படைத்தவர் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வைத் தந்திருக்கிறார் என்று அர்த்தம்.

எது நடந்தாலும் நன்மைக்கே என்பதை ஏற்றுக் கொண்டால் மரணமே வந்தாலும் நன்மைக்கே என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் விரும்புவது நடந்தால் மட்டும் நன்மை என்று நாம் நினைத்தால்

நம்மைப் படைத்த இறைவனை நாம்  நம்பவில்லை என்று அர்த்தம்.

இறைவனிடம் கேட்கும் போது அவர் எதைக் தந்தாலும் நமது நன்மைக்கே எங்க உறுதியான நம்பிக்கையோடு கேட்பதுதான் செபம்.

இறைவனையும் அவரது விருப்பத்தையும் மட்டுமே மையமாக வைத்து நாம் செபிக்க வேண்டும்.

இறைவனது விருப்பம் உறுதியாக நிறைவேறும்.

அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம்.

"என்ன நடந்தாலும் நன்றி கூறுவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment