Tuesday, May 9, 2023

"என் கிளைகளில் கனிகொடாத எக்கிளையையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் கிளையையோ மிகுந்த கனி தரும்படி கழித்துவிடுவார்."(அரு.15:2)

"என் கிளைகளில் கனிகொடாத எக்கிளையையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் கிளையையோ மிகுந்த கனி தரும்படி கழித்துவிடுவார்."
(அரு.15:2)

"தாத்தா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

கஷ்டப்பட்டு நட்டு, உரம் போட்டு, தண்ணீர் விட்டு வளர்த்த ரோஜா செடிகளை இப்படி வெட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்."

"' பாருடா, செடிகளையா வெட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறேன்?"

''கிளைகளை வெட்டிப் போட்டாலென்ன, செடிகளை வெட்டிப் போட்டாலென்ன, எல்லாம் ஒண்ணுதான."

"'ஏண்டா, தலை முடியை வெட்டுவதும், தலையை வெட்டுவதும் ஒண்ணா?

ரோஜா செடிகளை ஒரு வாரம் கழித்துப் பார்."

(ஒரு வாரம் கழித்து)

"தாத்தா, தாத்தா, இங்க பாருங்க, நீங்க வெட்டி விட்ட ரோஜா செடிகள் எல்லாம் நல்லா தளிர்த்து, நிறைய மொட்டு வச்சிருக்கு.

இன்னும் இரண்டு, மூன்று நாட்களில தோட்டம் முழுவதும் எல்லா செடிகளிலும ரோஜா பூக்களா பூத்துக் குலுங்கும்.

தாத்தா கொப்புகளைக் கத்தரித்து விடும்போது தோட்டமே போய்ட்டுன்னு நினைச்சேன்.

ஆனால் இப்போதான் தோட்டம் தோட்டமாயிருக்கு."


"'கனி தரும் கிளையையோ மிகுந்த கனி தரும்படி கழித்துவிடுவார்." என்று ஆண்டவர் சொன்னதன் கருத்து உனக்கு விளங்குதா?"

"நல்லா விளங்குது தாத்தா.

நம்மிடமிருந்து உலகைச் சார்ந்த பொருட்களை கடவுள் நம்மை விட்டு கத்தரித்து விடுவதே

நாம் ஆன்மீகத்தில் தளிர்த்து, பூத்து, கனி தர வேண்டும் என்பதற்காகத்தான் என்பது புரிகிறது.

ஆன்மாவில் கடவுளுக்கேற்ற உணர்வுகள் நிறைய இருக்கும்.

ஆனால் வெளியே தெரியக் கூடிய உடலில் உள்ள சில அம்சங்கள் உள் உணர்வுகளை வெளியே விடாதபடி தடுத்துக் கொண்டிருக்கும்.

உடலைச் சார்ந்த ஆன்மீக எதிரிகளை கடவுள் அழிக்கும்போது உடலுக்கு வலிக்கலாம் 

ஆனால் அவற்றின் அழிவுதான் ஆன்மீகத்தின் வளர்ச்சி."

"நான் சொன்னதின் அடிப்படையில் கடவுள் என்றால் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.''

"'நீ கண்டுபிடித்ததை நீயே சொல்லு."

"வெளியே இருப்பதை கட் பண்ணி உள்ளே இருப்பதை வெளியே கொண்டு வருபவர் கடவுள்.''

"'நீ சொன்னது என்ன மொழி?  தமிழா? ஆங்கிலமா?"

"இரண்டும் கலந்த மொழி.

பணம் Cut ஆகும்போது குணம் வெளிவருகிறது.

பெருமை Cut ஆகும்போது தாழ்ச்சி வெளிவருகிறது.

ஒவ்வொரு தலையான பாவமும் 
Cut ஆகும்போது ஒவ்வொரு தலையான புண்ணியமும் வெளிவருகிறது.

இதையெல்லாம் செய்பவர் கடவுள்தான்.''

"'Cut ஆகும்போது வலிக்கும்.
தளிர் விடும்போது இனிக்கும்.

மண்ணுலகில் சிற்றின்பம் கட்டானால்தான்,

விண்ணுலகில் பேரின்பம் தளிர்க்கும்."

"ஆண்டவரின் சிலுவையில் பங்கேற்றால்தான் அவருடைய விண்ணக மகிமையிலும் பங்கு கிடைக்கும்.

வெள்ளி இன்றி ஞாயிறு இல்லை.

மரணம் இன்றி வாழ்வு இல்லை.

காலத்தைக் கடந்தால்தான் நித்தியத்துக்குள் நுழைய முடியும்.

நிலையற்ற வாழ்வின் முடிவில்தான் நிலை வாழ்வு ஆரம்பம் ஆகும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment