"இம்மையில் இன்னல்களோடு கூட, வீடு, சகோதரர், சகோதரி, தாய், பிள்ளை, நிலபுலங்களை நூறு மடங்காகவும், மறுமையில் முடிவில்லா வாழ்வையும் பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். (மாற்கு.10:30)
நற்செய்தியை அறிவிக்கும் பொருட்டு
வீட்டையும்,
உடன் பிறந்தோரையும்,
பெற்றோரையும்
பிள்ளைகளையும்,
நிலபுலன்களையும்
விட்டுவிட்டு வந்தவர்களுக்கு
என்ன கிடைக்கும்?
முதலாவது இவ்வுலக வாழ்வில் இன்னல்கள் கிடைக்கும்.
இரண்டாவது அவர்கள் யார் மத்தியில் இறைப்பணி ஆற்றுகிறார்களோ அவர்கள் அனைவருமே அவர்களுடைய உறவினர்கள் ஆகி விடுவார்கள்.
மூன்றாவது மறுமையில் நித்திய பேரின்ப வாழ்வு கிடைக்கும்.
தாகம் உள்ளவர்களுக்குத் தண்ணீரும்,
பசித்தோர்க்கு உணவும்,
உடை இல்லாதவர்களுக்கு உடையும்
கொடுப்பவர்களுக்கு நிலைவாழ்வை கொடுக்கும் இறைவன்,
தனது நற்செய்தியை அறிவுப்பதற்காக தனது உறவினர்களைத் தியாகம் செய்து வந்தவர்களை சும்மா விடுவாரா?
சிலுவையைச் சுமப்பதற்காகவே மனுவுரு எடுத்தவர் இறைமகன் இயேசு.
தனது நற்செய்தியை அறிவிப்பவர்களுக்கு தனது சிலுவையில் பங்கு அளிப்பார்.
இயேசுவுக்காக சிலுவையைச் சுமப்பவர்கள் பாக்கியவான்கள்.
ஏனெனில் இயேசுவின் மகிமையில் அவர்கள் பங்கு பெறுவார்கள்.
இயேசுவுக்கு வெள்ளிக்கிழமை சிலுவை, ஞாயிற்றுக்கிழமை மகிமை.
இயேசுவுக்குப் பிரியமானவர்களுக்கு இவ்வுலகில் சிலுவை,
மறுவுலகில் மகிமை.
இவ்வுலகம் தற்காலிகமானது,
மறு உலகம் நிரந்தரமானது.
சிலுவை மரணம் வரைக்கும் தான். மகிமை முடிவில்லாதது.
உலக ரீதியாக சிந்திப்பவர்கள் தாங்கள் யாருக்காவது சேவை செய்தால்
அவர் பதிலுக்கு அவர்களுக்கு எந்தவித கஷ்டமும் வராதபடி காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
ஆனால் இயேசு தனக்கு சேவை செய்பவர்களுக்கு இவ்வுலகில் துன்பங்களும், மறு உலகில் நித்திய பேரின்பமும் கிடைக்கும் என்று கூறுகிறார்.
கடவுள் மனிதர்களைப் படைத்தது நித்திய பேரின்ப வாழ்வுக்காகத்தான்.
நித்திய பேரின்பத்தை சிலுவைகளை சுமப்பதில் மூலமாகத்தான் ஈட்ட வேண்டும் என்பது இயேசுவின் சித்தம்.
இறைவனுக்காக தங்களை அர்ப்பணித்து குடும்பத்தில் வாழ்பவர்களுக்கும்,
குடும்பத்தை தியாகம் செய்துவிட்டு தங்களை முழுவதும் இறை பணிக்கு அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கும்
உலகில் வாழ் அனைவரும் உறவினர்கள் தான்.
இதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஆனாலும் குடும்பத்தில் வாழ்பவர்கள் குடும்ப உறுப்பினர்கள் நலனுக்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
ஆனால் குடும்பத்தை விட்டு வெளியேறி இறைவனுக்காக பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு அகில உலகினரும் குடும்பத்தினர்கள் தான்.
தங்கள் முழு நேரத்தையும் அவர்களுக்காகச் செலவழிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
தாங்கள் பிறந்து வளர்ந்த குடும்பமும் அகில உலக குடும்பத்தில் இணைந்து விடும்.
இயேசு எப்படி அனைவருக்கும் பொதுவானவரோ அப்படியே இறைப் பணிக்காகத் தங்களை முற்றிலும் அர்ப்பணித்தவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்.
தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறை பணிக்காக அர்ப்பணித்தவர்கள்,
தங்கள் உடல், பொருள், ஆவியின் நலனை கடவுள் கையில் ஒப்படைத்து விட்டு
நற்செய்தி பணிக்காக மட்டுமே வாழ்வார்கள்.
நித்திய பேரின்ப வாழ்வு அவர்களுக்கு உண்டு.
ஆனாலும் அவர்களின் அர்ப்பண வாழ்வின் நோக்கம் இறைவனைத் திருப்திப் படுத்துவது மட்டுமே.
தன்னைத் திருப்திப் படுத்த வாழ்ந்தவர்களை இறைவன் நித்திய பேரின்ப வாழ்வால் திருப்திப் படுத்துவார்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment