பரலோக, பூலோக அரசி.
"தாத்தா, தாவீதின் வம்சத்தில் ஏராளமான கன்னிப் பெண்கள் இருந்திருப்பார்கள்.
ஏன் கடவுள் மரியாளைத் தன் தாயாகத் தேர்ந்தெடுத்தார்?"
"'நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். ஏன் உன்னை உனது அம்மா மகனாகப் பெற்றாள்?"
"தாத்தா, என்னை என் அம்மா மகனாகப் பெறவில்லை.
நான் பிறப்பதற்கு முன் நான் யாரென்றே எனது அம்மாவுக்குத் தெரியாது.
வயிற்றில் உற்பத்தியானது ஆணா, பெண்ணா என்று கூட என் அம்மாவுக்குத் தெரியாது.
ஒரு பையன் பிறந்தான்.
அவன்தான் நான்."
"' உன் அம்மா உன்னைப் பெற்றாள்.
கடவுள் உன்னைப் படைத்தார்.
இவ்விசயத்தில் உனது அம்மாவுக்கும், கடவுளுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?"
"பெரிய வித்தியாசம் இருக்கிறது. என்னை என் அம்மா மகனாகத் தேர்ந்தெடுக்கவில்லை.
பிறந்த என்னைத் தனது மகனாக ஏற்றுக் கொண்டாள்.
ஆனால் கடவுள் ஒன்றுமில்லாமையிலிருந்து என்னைப் படைக்கு முன்பே,
நித்திய காலமாக என்னைத் தனது உள்ளத்தில் எண்ணமாகச் சுமந்து,
என்னைப் படைத்தார்.
எழுதுவதற்கும், எழுதப் பட்டதை வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா!
கடவுள் என்னை எழுதினார், எழுதப்பட்ட என்னை அம்மா 'மகனே' என்று வாசித்தாள்."
"'இப்போது நீ கேட்ட கேள்வியை நினைத்துப் பார்."
"தாத்தா, கொஞ்சம் பொறுங்கள்.
எனது கேள்வி தப்பு.
கடவுள் மரியாளைத் தன் தாயாகத் தேர்ந்தெடுக்கவில்லை.
ஒன்றுமில்லாமையிலிருந்து தன் தாயைப் படைத்தார்.
கடவுளின் தாய் எப்படி இருக்க வேண்டுமோ அப்படிப் படைத்தார்.
கடவுள் பரிசுத்தர். தனது தாயாகப் போகிற மரியாளை பாவ மாசின்றி பரிசுத்தமானவளாகப் படைத்தார்.
ஆதாமின் வம்சத்தில் மரியாளைத் தவிர அனைத்து மனிதரும் சென்மப் பாவத்தோடு தான் உற்பவிக்கின்றனர்.
சென்மப் பாவ மாசு மருவின்றி,
தனது அருளால் நிறைத்து மாதாவைக் கடவுள் படைத்தார்.
சூசையப்பருக்கும், மரியாளுக்கும் திருமண ஒப்பந்தம் ஆன பின்பு தான் கபிரியேல் தூதர் மரியாளை
"அருள் நிறைந்தவளே வாழ்க"
என்று வாழ்த்தினார்.
ஆனால் மரியாள் தன் தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போதே அருள் நிறைந்தவளாய் உற்பவித்து விட்டார்.
இது கடவுள் அவளுக்கு அளித்த விசேச வரம்.
இயேசு வாழ்ந்து கொண்டிருந்த பெண்களிடமிருந்து மரியாளைத் தன் தாயாகத் தேர்ந்தெடுக்க வில்லை.
தன் தாயாரை அவர்தான் படைத்தார்.
தன் அருளால் நிறைத்து அவளைப் படைத்தார்.
அவளது வாழ்நாள் முழுவதும் பாவ மாசு இல்லாமல் பாதுகாத்தார்.
மரியாள் தனது ஆன்மீக வாழ்வில் கடவுளோடு ஒத்துழைத்தார்.
தன்னையே கடவுளுக்கு அடிமையாக ஒப்புக் கொடுத்தார்.
நம்முடைய ஆன்மீக வாழ்வில் கடவுளுடைய பங்கு நூறு சதவீதம்.
நமது பங்கின் அளவைப் பொறுத்து நமது ஆன்மீகத்தின் அளவு இருக்கும்.
மரியாளின் ஆன்மீகத்தைப் பொறுத்த மட்டில் கடவுளின் பங்கு
நூறு சதவீதம்.
மரியாளின் ஒத்துழைப்பும் நூறு சதவீதம்.
மாதா மிகச் சிறிய அளவு கூட தனக்காக வாழவில்லை.
நூறு சதவீதம் கடவுளுக்காக மட்டுமே வாழ்ந்தாள்.
மற்ற எல்லா புனிதர்களையும் விட மாதாவுக்குதான் உயர்ந்த இடம்.
உலகில் இறைவனின் அடிமையாக வாழ்ந்ததால்தான் விண்ணுலகில் பரலோக, பூலோக அரசியாக முடி சூட்டப் பட்டாள்."
'''அருள் நிறைந்த மரியே வாழ்க.
மரியே, உங்களை அருளால் நிறப்பியது கடவுள்.
நிறைந்த அருளோடு வாழ் நாளெல்லாம் வாழ்ந்தீர்கள்.
இறையருளை ஈட்டும் ஒரே நோக்கோடு நாங்கள் வாழ உங்கள் திரு மகனிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்."
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment