எல்லாம் இயேசுவே,
எனக்கெல்லாம் இயேசுவே.
சாப்பாட்டுப் பிரியர்களுக்கு வாழ்க்கையே சாப்பாடுதான்.
வாசிப்புப் பிரியர்களுக்கு
உலகமே புத்தகம்தான்.
உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு எல்லாம் இயேசுதான்.
அவர்கள் கண்ணாடியைப் பார்த்தால் உள்ளே அவர்களது பிம்பம் தெரியாது,
இயேசுதான் தெரிவார். வாழ்வது அவர்கள் அல்ல, இயேசுதான் அவர்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
யாரைப் பார்த்தாலும் அவர்களுக்கு இயேசுதான் தெரிவார்.
யாரைப் பார்த்தாலும்,
"இயேசு வாழ்க'' என்கின்றோம்.
நாம் உண்மையானவர்களாக இருந்தால் நாம் எல்லோரிலும் இயேசுவைக் காண வேண்டும்.
எல்லோரிலும் இயேசுவைக் கண்டால்
யாரையாவது வெறுப்போமா? யாரையாவது திட்டுவோமா? யாருக்காவது தீங்கு செய்வோமா?
இயேசுவை நேசிக்கும் இதயத்தால் அயலானை நேசிக்க வேண்டுமென்றால்
அயலானில் இயேசுவைக் காண வேண்டும்.
அப்படிக் காண்பவர்களால்தான் அயலானுக்கு என்ன செய்தாலும் இயேசுவுக்கே செய்ய முடியும்.
ஒரு முறை பரதேசிப் பீற்றர் சொற்பொழிவாற்றும் போது தன் முன் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து கேட்டார்,
"இறைவனை 'விண்ணகத்திலிருக்கும் எங்கள் தந்தையே' என்று அழைக்கிறீர்களே,
உங்கள் வீட்டு வாசலில் நின்று பிச்சை எடுப்பவர்கள் யார்?
உங்கள் விண்ணகத் தந்தையின் பிள்ளைகள்தானே.
என்றாவது அவர்களை வீட்டுக்குள் அழைத்து, உங்களோடு உட்கார வைத்து சாப்பாடு போட்டிருக்கிறீர்களா?
கடவுள் உங்கள் செபத்தைக் கேட்க வேண்டுமென்றால் முதலில் உங்கள் செபத்தை நீங்கள் வாழ வேண்டும்."
இதே கேள்வியை நம்மிடம் கேட்டால் நம்மில் எத்தனை பேர் அதற்குத் துணிந்து பதில் சொல்ல முடியும்?
"இயேசு நமக்காகப் பிறந்தார்,
நமக்காக வாழ்ந்தார்,
நமக்காக மரித்தார்"
என்று சொல்லும் நாம் இயேசுவுக்காக என்ன செய்கிறோம்?
மூச்சி விடுகிறோமே, நாம் உயிர் வாழவா? இயேசுவுக்காகவா?
நாம் சாப்பிடுகிறோமே,
நமது வயிற்றுக்காகவா? இயேசுவுக்காகவா?
நாம் உழைக்கிறோமே,
நாம் வாழவா?
இயேசுவுக்காகவா?
ஒவ்வொரு வேலையைச் செய்யு முன்னும்,
"தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே" என்று சொல்கிறோம்.
இந்த செபத்தை உணர்ந்து சொல்கிறோமா?
வெறும் இயந்திரமாகச் சொல்கிறோமா?
இயந்திரங்களுக்குத் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாது.
என்ன செய்தாலும் இயேசுவுக்காகவே செய்கிறோம் என்பதை உணர்ந்து செய்ய வேண்டும்.
தபசு காலத்தில் நோன்பு இருக்கிறோம்.
தபசு காலத்தில் நோன்பு இருக்க வேண்டும் என்று சட்டம் இருப்பதால் நோன்பு இருந்தால்
இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்ற பரிசேயருக்கும், நமக்கும் வித்தியாசம் இல்லை.
மோயீசன் கொடுத்த சட்டங்களை சட்டங்கள் என்பதற்காக மட்டும் பின்பற்றினார்கள்,
அவற்றின் நோக்கத்தைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை.
They observed the letter of the law, not its spirit.
ஆண்டவர் எதற்காக நோன்பு இருந்தாரோ அதற்காக நாம் நோன்பு இருக்க வேண்டும்.
ஆண்டவர் நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவே உலகிற்கு வந்தார்.
அவரது உடலின் ஒவ்வொரு அசைவும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத்தான்.
நமது பாவங்களுக்குப் பரிகாரமாக நோன்பு இருந்தால் அது உண்மையான நோன்பு,
ஒழுங்கு என்பதற்காக மட்டும் இருந்தால் ஒழுங்கு நிறைவேறும், பயன் இல்லை.
ஞாயிற்றுக் கிழமை ஏன் பூசைக்குப் போகிறோம்?
போவது கடன் என்பதற்காக மட்டும் போனால், கடன் நிறைவேறும். பூசைக்குறிய முழுப்பலன் கிடைக்காது.
இயேசுவை நமது பாவங்களுக்குப் பரிகாரப் பலியாக விண்ணகத் தந்தைக்கு ஒப்புக் கொடுப்பதற்காக போனால் மட்டுமே அது திருப்பலி.
கடவுளை நேசித்து, அவருக்கு சேவை செய்வதற்காக நாம் படைக்கப் பட்டிருப்பதால்
நமது ஒவ்வொரு அசைவிலும் பாச உணர்வும், சேவை உணர்வும் இருக்க வேண்டும்.
இந்த உணர்வு உள்ளத்தை நிறைத்து, உடலில் பொங்கி வடிய வேண்டும்.
நற்கருணை நாதரை உண்மையான விசுவாச உணர்வோடு வாங்குபவனுக்கும்,
வெறும் கடமுறைக்காக வாங்குபவனுக்கும் உள்ள வித்தியாசத்தை அவனுடைய உடல் அசைவுகள் பிரதிபலிக்கும்.
விசுவாச உணர்வோடு வாங்குபவன் முழந்தாள் படியிடுவான்.
கடமுறைக்காக வாங்குபவன் கடையில் பொருட்கள் வாங்கும்போது நிற்பது போல் நிற்பான்.
நற்கருணை ஆன்மீக உணவு, தின்பண்டம் அல்ல.
இயேசுவுக்காக இயேசுவை வாங்குபவனிடம் ஆராதனை உணர்வு இருக்கும்.
கூட்டத்தோடு கூட்டமாக வாங்குபவனிடம் கும்பல் உணர்வுதான் இருக்கும்.
ஒரு முறை ஒரு சப்பரப் பவனிக்குள் ஒரு வியாபாரி புகுந்து,
விளம்பரத்துக்காக அட்டைக் காற்றாடிகளை விநியோகிக்க ஆரம்பித்தான்.
உண்மையான பக்தர்கள் அதைப் பற்றி கவலைப் படாமல் பவனியில் ஜெபித்துக் கொண்டே தொடர்ந்தார்கள்.
கூட்டத்தோடு கூட்டமாக வந்தவர்கள் கைகளை உயர்த்திக் கொண்டு வியாபாரியைச் சுற்றிக் கொண்டார்கள்.
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது மாணவர்களது பார்வை ஆசிரியரது முகத்தில் இருக்க வேண்டும்.
பாடப் புத்தகத்தில் இருந்தால் ஆசிரியர் சொல்வது ஒன்றும் கேட்காது.
பாடமும் விளங்காது.
பூசையின்போது வாசகங்கள் வாசிக்கப்படும்போது நமது கண்களும், காதுகளும் வாசிப்பவர் மேல் இருக்க வேண்டும்.
சுவாமியார் பிரசங்கம் வைக்கும் போது நமது கவனம் பிரசங்கத்தின் மேல் இருக்க வேண்டும்.
பீடத்தில் சுவாமியார் செபம் சொல்லும்போது நமது கவனம் அவர் சொல்லும் செபத்தின் மீது இருக்க வேண்டும்.
நடுப் பூசையின் போது நமது கவனம் ஆண்டவர் மீது இருக்க வேண்டும்.
பூசையின் போது பைபிளை புரட்டிக் கொண்டிருந்தால் நம்மால் பலியை ஒப்புக் கொடுக்க முடியாது.
நல்ல செயலாக இருந்தாலும் செய்ய வேண்டிய இடத்தில் செய்ய வேண்டும்.
திருப்பலியின் மையம் இயேசு மட்டுமே.
செபமாலை சொல்ல வேண்டிய நேரத்தில் செபமாலை சொல்ல வேண்டும்,
திருப்பலியின்போது அல்ல.
பைபிளை வாசித்துத் தியானிக்க வேண்டியது வீட்டில் இருக்கும்போது,
திருப்பலியின்போது அல்ல.
திருப்பலியில் நமது கவனம் முழுவதும் இருக்க வேண்டியது இயேசுவின் மேல் மட்டும்தான்.
நமது வாழ்வின் மையம் இயேசு மட்டுமே.
இயேசுவுக்காக வாழ்வோம்.
இயேசுவை மட்டும் வாழ்வோம்.
லூர்து செல்வம்,
No comments:
Post a Comment