Wednesday, May 17, 2023

கடவுள் யாருக்கு உதவி செய்கிறார்?

கடவுள் யாருக்கு உதவி செய்கிறார்?

"தாத்தா, கடவுள் யாருக்கு உதவி செய்கிறார்?''

"'ஏன் இந்தத் திடீர்க் கேள்வி?"

"கேள்வி இல்லை, தாத்தா. என் மனதில் உள்ள சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதற்கான நுழைவு வாசல்."

"'என்ன கருத்துக்கள்?''

"God helps those who help themselves என்று ஒரு பழமொழி இருக்கிறது.

God helps those who cannot help themselves. என்று சிலர் சொல்கிறார்கள்.

இதில் எது சரி?"

"'உன் கருத்தைக் கேட்டால் நீ மற்றவர்கள் கூறுவதைக் கூறுகிறாய்."

"நீங்கள் உங்கள் கருத்துக்களைக் கூறிய பின்புதான் என் கருத்துக்கள் சொல்வதற்கு ஏற்றவையா என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்."

"'உனது அம்மா யாருக்கு உதவி செய்வார்கள்?"

"எங்களுக்கு மற்றும் உதவி கேட்டு வருபவர்களுக்கு."

"'எங்களுக்கு என்றால்?"

"அவர்களுடைய பிள்ளைகளுக்கு. நாங்கள் எதுவும் கேட்காமலேயே குறிப்பு அறிந்து உதவி செய்வார்கள்.

மற்றவர்கள் உதவி கேட்டு வந்தால் கேட்ட உதவியைச் செய்வார்கள்."

"'உங்களுக்கு ஏன் எதுவும் கேட்காமலேயே செய்வார்கள்?"

"ஏனென்றால் நாங்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகள்."

"'கடவுளுக்கு நாம் யார்?"

"அவர் படைத்த பிள்ளைகள்."

"'மனிதர்களே அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு கேளாமலேயே உதவி செய்தால்

 கடவுள் தான் படைத்த பிள்ளைகளுக்கு அவர்கள் கேளாமலேயே உதவி செய்ய மாட்டாரா?"

"ஆனால் இயேசு கேளுங்கள் கொடுக்கப்படும் என்று அல்லவா சொன்னார்!"

"'என்ன கேட்கச் சொன்னார்?

 நமக்கு உடலும், ஆன்மாவும் இருப்பதால்

 நமது தேவைகளை உடலை சார்ந்த தேவைகள், ஆன்மாவை சார்ந்த தேவைகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

அவர் கேட்க சொன்னது ஆன்மீக தேவைகளை.

அவர் கற்பித்த செபத்திலிருந்து இதை அறியலாம்.

1. நமது ஆன்மீக உணவாகிய அவருடைய அருள்.
2. பாவ மன்னிப்பு.
3. சோதனைகளில் விழாதிருக்க உதவி.
4. தீமையில் அதாவது பாவத்தில் விழாதிருக்க உதவி.

ஒரு குழந்தை அம்மாவிடம் பால் கேட்டு அழுவது போலவும், எடுக்கச் சொல்லி கைகளை நீட்டுவது போலவும்

ஆன்மீகக் குழந்தைகளாகிய நாம் நமது தாயாகிய இறைவனை நோக்கி வேண்டும் இந்த செபம்

 நாம் ஆன்மீகத்தில் வளர மிகவும் அத்தியாவசியமானது.

உயிரோடு இருப்பவர்கள் இயங்காமல் இருக்க முடியாது.

இதயத் துடிப்பு நின்று விட்டால் உயிர் வாழ முடியாது.

இந்த செபம்தான் நமது ஆன்மாவின் இதயத் துடிப்பு.

அருள் இல்லாத, பாவம் நிறைந்த, சோதனையை வெல்ல முடியாத, தீமைக்குள் மூழ்கிய ஆன்மா

ஆன்மீக உயிரற்றது.

உயிரோடிருக்கும் ஆன்மாவால்
ஆன்மீகத் தேவைகளைக் கேட்டு இறைவனிடம் செபிக்காமலிருக்க முடியாது." 

"நாம் கேட்காமல் கடவுள் இந்த ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்ய மாட்டாரா?"

'"நாம் மூச்சு விடாமல் உயிரோடு இருக்க .முடியாது.

இந்த செபம் நமது உயிர் மூச்சு போன்றது. 

 தாய் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் குழந்தை பால் கேட்டு அழும்.

 குழந்தை பால் கேட்டு அழுவது அதன் உடல் தேவையைப் பூர்த்தி செய்ய.

உடலைத் தந்த தாயிடம் குழந்தை பால் கேட்பது இயல்பு.

ஆன்மாவைத் தந்த இறைவனிடம் மனிதன் அருளைக் கேட்பதும், பாவ மன்னிப்பு கேட்பதும் இயல்பு..

பிறந்தவுடன் குழந்தை அழாவிட்டால் அதன் மேல் தாய்க்கு சந்தேகம் வந்து விடும்.

அருள் கேட்டு நமக்கு அழுகை வராவிட்டால் நம்மீது நமக்கே சந்தேகம் வரவேண்டும்.

கடவுள் நமக்குத் தந்தை மட்டுமல்ல, தாயும் அவர்தான்.

ஆன்மீக நோய் நீக்கும் மருத்துவரும் அவர்தான்.

நம்மோடு மனம் திறந்து பேசும் நண்பரும் அவர்தான்.

நமக்கு எல்லாம் அவர்தான்.

நமது ஆன்மாவுக்கும், உடலுக்கும் உரிய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய அவர் எப்போதும் நம்மோடு தான் இருக்கிறார்.

ஆன்மீக வாழ்வு தான் நமக்கு உயிர். நமது ஆன்மீக உயிரைக் காக்கும்படி மட்டும் கடவுளிடம் கேட்போம்.

நமது உடல் சார்ந்த உலகத் தேவைகளை அவரே பூர்த்தி செய்வார், நாம் கேளாமலே."


"தாத்தா, நமக்கு உடல் நலம் இல்லாவிட்டால் நாம்தானே மருத்துவரிடம் செல்ல வேண்டும்."

"' ஆன்மீகத்துக்கு மட்டுமல்ல,

அறிவியலுக்கும், மருத்துவத்துக்கும், கல்விக்கும், தொழில் நுட்பத்துக்கும் அவர்தான் கடவுள்.

நாம்தான் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

ஆனால் அவரே நம்மோடிருந்து நம்மை இயக்கிக் கொண்டிருப்பார்.

அங்கேயும் நமது ஒவ்வொரு அசைவையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால் 

நமது ஒவ்வொரு அசைவும் ஆன்மீக வாழ்வாக மாறிவிடும்.

என்ன செய்தாலும் கடவுளுக்காக செய்ய வேண்டும்.

என்ன விளைவு ஏற்பட்டாலும் அது கடவுளின் சித்தமாகவே இருக்கும்.

மருத்துவமனையில் நமது நோய் குணமானாலும், ஆகாவிட்டாலும் அது கடவுளின் சித்தமே.

நம்புங்கள், 

செபியுங்கள், 

நல்லதே நடக்கும்.

நம்பிக்கையோடு செபிப்பவர்களுக்கு என்ன நடந்தாலும் அது நல்லதே.

செபத்தின் விளைவாக இறைவன் சித்தம் தான் செயலாகும்.

இறைவன் சித்தம் நன்மை பயக்கக் கூடியதாகவே இருக்கும்.

என்ன நேர்ந்தாலும் அதை மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

"இயேசுவே, தேர்வில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று உம்மிடம் வேண்டிக் கொண்டுதான் கஷ்டப் பட்டுப் படித்தேன்.

ஆனால் வினாத்தாளில் நான் படித்த பகுதியிலிருந்து ஒரு கேள்வி கூட இல்லை.

விளைவு?

தேர்வில் தோற்றேன்.

நான் கஷ்டப் பட்டுப் படித்ததற்கும், தோல்விக்கும் சம்பந்தம் இல்லை.

விளாத்தாள் தான் என் 
தோல்விக்குக் காரணம்.

ஆனாலும் எதுவும் உமக்குத் தெரியாமல் நடக்காது.

நான் படித்த பகுதியிலிருந்து கேள்வி வரக்கூடாது என்பது உமது சித்தம்.

உமது சித்தம் நிறைவேறியதற்கு நன்றி.

எல்லாம் எனது நன்மைக்காகவே இருக்கும்."

"தாத்தா, நாம் தேர்வில் தோற்க வேண்டும் என்பது இறைவனின் சித்தமாக இருக்குமா?"

"'பாவம் தவிர எது வேண்டுமானாலும் இறைவனின் சித்தமாக இருக்கும்."

"ஆக இறைவனின் உதவி, பாவம் தவிர, எந்த உருவில் வேண்டுமானாலும் வரும்.

வாழ்நாள் முழுவதும் நோயால் கஷ்டப்பட வேண்டியிருந்தாலும்

ஆன்மீக ரீதியாக

அது இறைவனின் உதவியாக இருக்க வாய்ப்பு உண்டு. அப்படித்தானே."

"'உறுதியாக. புனித அல்போன்சாவின் வாழ்க்கையை வாசித்துப் பார், தெரியும்."

"God helps those who help themselves"

"God helps those who cannot help themselves."

இந்த கூற்றுகள் சரியா?"

"'முதல் கூற்று ஒரு பழமொழி.

சுயமுயற்சி உள்ளவர்களே   கடவுளின் உதவியைப் பெறுவர்.

ஒரு விவசாயி,

"கடவுளே விவசாயத்தில் நல்ல வருமானத்தைத் தாரும்"  

என்று கடவுளிடம் வேண்டி விட்டு,
  
வயல் பக்கமே போகாமலிருந்தால் எப்படி கடவுள் நல்ல வருமானத்தைத் தருவார்?

கடவுளிடம் வேண்டி விட்டு நாமும் முயற்சி செய்தால் முயற்சி பலன் தரும்.

"என்னைப் பாவத்திலிருந்து காப்பாற்றும், ஆண்டவரே " என்று வேண்டி விட்டு

பாவ சந்தர்ப்பங்களையே தேடி. அலைபவன் எப்படி பாவம் செய்யாதிருப்பான்?

குடிக்க விரும்பாதவன் டாஸ்மாக் பக்கமே போகக் கூடாது.

தன்னிலே இயலாதவன் இறைவனிடம் நம்பிக்கையோடு வேண்டினால் உதவி எந்த வகையிலாவது கிடைக்கும்.

நான்கு மைல்கள் நடந்து பள்ளிக்கூடம் போக வேண்டும்.

எதிர் பாராத விதமாக ஒரு விபத்தில் கால்கள் நடக்க முடியாத நிலையை அடைந்து விட்டன.

பள்ளிக் கூடம் போக வேண்டும். 

நம்பிக்கையோடு இறைவனை வேண்டினால் வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொடுப்பார்."

"உதவி செய்ய கடவுள் எப்போதும் ரெடி.

உதவியைப் பெற நாம் எப்போதும் ரெடியாக இருக்க வேண்டும்."

லூர்து செல்வம்.


No comments:

Post a Comment