Wednesday, May 10, 2023

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன்."(அரு.15:9)

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன்."
(அரு.15:9)

இயேசுவைப் பற்றி வாசிக்கும் போதும், சிந்திக்கும்போதும், பேசும் போதும், அவர் பெயரால் செயல் புரியும்போதும்

அவரின்   இரண்டு முக்கிய தன்மைகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

1. அவர் மாறாத கடவுள்.
2. 'மாறக் கூடிய நமது' கடவுள்.
(மாறக்கூடிய நமது மாறாத கடவுள்.)

அவர் பரிபூரணராக இருப்பதால் மாற முடியாது.

நித்திய காலமும் அளவில்லாதவராக இருப்பதால் அவர் வளரவும் முடியாது, தளரவும் முடியாது.

அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அவருடைய அளவில்லாத ஞானத்தின் அடிப்படையில் எடுக்கப் படுவதால்,

அவர் தனது முடிவுகளில் மாற மாட்டார்.

அவர் நமக்குத் தந்திருக்கும் வாக்குறுதிகளை அணு பிசகாமல் காப்பாற்றுவார்.

அவர் சொல்கிறார்,

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன்."

அவர் நம் மீது கொண்டுள்ள அன்பை பரிசுத்த தமதிரித்துவத்துக்குள் நிலவும் அன்புக்கு ஒப்பிடுகிறார்.

தந்தை மகன் மீது கொண்டுள்ள அன்பு அளவு கடந்தது. மகன் நம் மீது கொண்டுள்ள அன்பும் அளவு கடந்தது. 

தந்தை மகன் மீது கொண்டுள்ள அன்பு நித்தியமானது. 

நாம் துவக்கம் உள்ளவர்களாக இருந்தாலும் அவர் நம்மீது கொண்டுள்ள அன்பு நித்தியமானது. 

அவர் நம் ஒவ்வொருவரையும் நம்மீது நித்திய காலமாக அன்பு செய்கிறார்.

நம்மைப் படைத்து விட்டு அன்பு செய்யவில்லை. நம்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகவே நம்மைப் படைத்தார்.

நித்திய காலமாக அவர் மனதில் எண்ணமாக இருந்த நாம்,

அவர் குறிப்பிட்டு வைத்திருந்த காலக் கட்டத்தில் உண்மையாகப் பிறந்தோம்.

அவர் நம்மீது வைத்திருந்த உறவு நித்தியமானது.

2. மாற முடியாத கடவுள் நம்மை மாறக் கூடியவர்களாகப் படைத்தார்.

நாம்  அளவு உள்ளவர்களாக இருப்பதாலும்,  அவர்  நம்மைப் பரிபூரண சுதந்திரத்தோடு  படைத்ததாலும்   நாம் மாறுகிறோம்.

பாவமின்றி படைக்கப்பட்ட நமது முதல் பெற்றோர் தங்கள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தியமையால் பாவிகளாக மாறினார்கள்.

நமது சுதந்திரத்தைச் சரியாகப் பயன் படுத்தினால் பாவிகளாகிய நாம் பரிசுத்தர்களாக மாறலாம், இயேசுவின் உதவியோடு.

மேய்ச்சலுக்காக மாட்டைப் புல்வெளியில் விடுபவர்கள், 

ஒரு நீளக் கயிற்றின் ஒரு நுனியில் மாட்டைக் கட்டி, கயிற்றின் மறு நுனியில் அசையாத அளவிற்கு பூமியில் அடிக்கப்பட்ட ஆப்பில் கட்டிவிடுவார்கள்.

கயிற்றின் நீளத்திற்கு உட்பட்ட பகுதியில் மட்டும் மாடு மேயும்.

அதற்கு அப்பால் அதால் போக முடியாது.

நாம் இயேசுவோடு அன்பு என்னும் கயிற்றால் பிணைக்கப் பட்டிருப்பதால் நாம் தொலைய மாட்டோம்.

கயிறு அறுந்தால் தான் பிரச்சனை.

ஆகவே நாம் எப்போதும் அவரை அன்பு செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

அசையக் கூடிய பொருள் கீழே விழாமலிருக்க வேண்டுமானால் அது அசையாத பொருளைச் சார்ந்திருக்க வேண்டும்.

அசையாத சுவற்றின் மீது நாம் சாய்ந்து கொண்டிருந்தால் நாம் கீழே விழ மாட்டோம்.

ஒரு பைக்கின் மீது சாய்ந்து கொண்டிருந்தால் பைக் காரன் பைக்கை எடுக்கும் போது சாய்ந்து விடுவோம்.

ஆன்மீகத்தில் நாம் கடவுளைச் சார்ந்திருந்தால் நாம் கீழே விழ மாட்டோம்.

உலகப் பொருட்களைச் சார்ந்திருந்தால் விழுவது உறுதி.

ஆகவே நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கடவுளையே சார்ந்திருக்க வேண்டும்.

கடவுள் மாறாதவர்.

 நாம் மாறக் கூடியவர்கள். நம்மால் வளரவும் முடியும், தளரவும் முடியும்.

தளராமல் வளர வேண்டுமானால் வளர்ச்சிக்கு வேண்டிய அருள் வரங்களின் வற்றாத ஊற்றாகிய கடவுளைத்தான் முழுவதும் சார்ந்திருக்க வேண்டும்.

''கேளுங்கள், கொடுக்கப் படும்." என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

அவர் மாறாதவராக இருப்பதால் சொன்ன சொல்லைக் கட்டாயம் காப்பாற்றுவார்.

நமது ஆன்மீக வளர்ச்சிக்கான அருள் வரங்களை நாம் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

அவரும் தந்து கொண்டேயிருப்பார்.

கேளாமலே தரலாம் அல்லவா என்று கூறலாம்.

நாம் கேளாமலே தான் நம்மை ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்தார்.

நாம் கேளாமலே தான் நாம் திரும்பவும் ஒன்றுமில்லாமைக்குத் திரும்பாதபடி ஒவ்வொரு வினாடியும் நம்மைப் பராமரித்து வருகிறார்.

அவர் நம்மை ஒரு வினாடி மறந்தால்கூட நாம் ஒன்றுமில்லாமைக்குத் திரும்பி விடுவோம்.

ஆனால் நம்மை ஒரு வினாடி கூட மறக்க மாட்டார்.

பிறகு ஏன் கேட்கச் சொல்கிறார்?

நாம் அவரோடு பேசிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அவர் நம்மோடு உறவில் இருப்பது போல, நாமும் அவரோடு உறவில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம்மை அவருடன் பேசச் சொல்கிறார்.

உரையாடல் உறவை வளர்க்கும்.

நாம் ஒவ்வொரு வினாடியும் கடவுளோடு இணைந்திருந்தால் ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டேயிருப்போம்.

நண்பர் ஒருவர் கேட்கிறார்,

"நம்மை இயேசு அளவில்லாத விதமாய் நேசித்தால் நமக்கு ஏன் துன்பங்களை வர விடுகிறார்?"

நம்மை அளவில்லாத விதமாய் நேசிப்பதால்தான்.

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன்."

இயேசு மேல் அன்புகூர்ந்த தந்தை என்ன செய்தாரோ

அதையே இயேசு நமக்குச் செய்கிறார்.

"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு

 அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."
(அரு.3:16)

தந்தையும், மகனும் ஒரே கடவுள்தான்.

தந்தை மகன் மீதும், தான் படைத்த உலகின் மீதும் அளவு கடந்த அன்பு உள்ளவர்.

தந்தை உலகின் மீது எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்றால்,

தன் ஒரேபேறான மகனையே அதன் மீட்புக்காக பாடுகள் படவும், சிலுவையில் மரிக்கவும் உலகிற்கு அனுப்பினார்.

கடவுள் மனிதர் மீது கொண்டுள்ள அன்பு அளவற்றது.

மனிதர் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாகத்தான்

தந்தை தான் அளவு கடந்த விதமாய் நேசித்த ஒரே மகனை

 பாடுகள் பட்டு மரித்து மனிதர்களை மீட்க உலகத்திற்கு அனுப்பினார்.

இயேசுவின் பாடுகளுக்கு காரணமே தந்தையின் அளவு கடந்த அன்பு தான்.

நமது கஷ்டங்களின் மூலம் நாம் சிலுவையை சுமக்க வேண்டும் என்பதன்  காரணமும்

இயேசு நம் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பு தான்.

நமக்கு சிலுவைகள் வரும்போது இயேசு நம் மீது கொண்டுள்ள அன்புக்காக அவருக்கு நன்றி கூற வேண்டும். 

இயேசு தான் சுமந்த சிலுவையை நமக்காக ஒப்புக் கொடுத்தது போல

நாமும் நமக்கு வரும் சிலுவைகளை மற்றவர்களுக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நாம் எந்த அளவுக்கு நமக்கு வரும் சிலுவைகளை மற்றவர்களுக்காக தந்தைக்கு ஒப்புக்கொடுக்கிறோமோ

அந்த அளவுக்கு நமக்கு கடவுள் மீதும், அயலான் மீதும் அன்பு இருக்கிறது என்று அர்த்தம்.

மாறாத கடவுளின் பாதங்களை இறுக பற்றிக் கொண்டால்தான் 

நாம் ஆன்மீக வளர்ச்சியை நோக்கி மாறுவோம்.

நமது இறுதி வினாடி வரை,

 அதாவது மரணம் வரை,

 நாம் வளர்ச்சியை நோக்கி மாறிக்கொண்டேயிருக்க வேண்டும்.

மரணம் வழியாக விண்ணகத்துக்குள் சென்றவுடன் மாறாத இறைவனோடு நாமும் ஒன்றித்துவிடுவோம்.

முடிவில்லா காலம் நித்திய பேரின்பத்தில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment