Friday, May 19, 2023

“அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். (திரு.1:8)

“அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். (திரு.1:8) 

பாவூர்ச்சத்திரத்திலிருந்து புறப்பட்டு உவரிக்குப் போவதாக வைத்துக் கொள்வோம்.

புறப்பட வேண்டிய இடம் பாவூர்ச்சத்திரம்.

போய்ச் சேர வேண்டிய இடம் உவரி.

வெவ்வேறு இடங்கள்.

செல்லும் வழியில் உள்ள இடங்கள் வெவ்வேறு.

பயணத்தின்போது சரியான வழியே போகா விட்டாலும்,

ஏதாவது ஒரு இடத்தில் தங்கி விட்டாலும்

போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போக முடியாது.

ஆன்மீக வாழ்க்கை என்னும் பயணத்தில் புறப்பட்டது கடவுளிடமிருந்து.

போய்ச் சேர வேண்டியது கடவுளிடம்.

பயணம் செய்ய வேண்டியது கடவுள் வழியேதான்.

தமிழ் மொழியில் முதல் எழுத்து அ.

கடைசி எழுத்து ன.

'அ' வும் நானே, 'ன' வும் நானே என்கிறார்.

அதாவது நமது முதலும் அவரே, முடிவும் அவரே. எல்லாம் அவரே.

அவருக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது.

ஆனால் நமது ஆரம்பமும், முடிவும் அவரே.

உலகியலில் நமது பயணத்தின் ஆரம்பமும், முடிவும் ஒரே இடமாக இருக்க முடியாது.

ஒரே இடத்தில் பயணம் இருக்க முடியாது.

மனிதர்கள் என்ற முறையில் நமது வாழ்க்கையின் ஆரம்பமும், முடிவும் இந்த உலகம்தான்.

இறைவனின் பிள்ளைகள் என்ற முறையில் நமது ஆன்மீக வாழ்க்கைக்கு ஆரம்பம் உண்டு, முடிவு இல்லை.

நமது ஆன்மா எங்கே இருக்கிறதோ அங்கேதான் நமது ஆன்மீக வாழ்க்கையும் இருக்கும்.

ஆன்மா உடலோடு இருக்கும்போது உலகத்தில் ஆன்மீக வாழ்க்கை வாழும். அதற்கு உடலையும் துணையாகச் சேர்த்துக் கொள்ளும்.

ஆன்மீக வாழ்க்கை என்றால் இறைவனிடமிருந்து புறப்பட்டு, இறைவனில், 
இறைவனுக்காக,
 இறைவனை நோக்கிப் பயணிக்கும் வாழ்க்கை.

பயணம் முடிந்தவுடன் நமது ஆன்மா,

உடலைப் பூமியில் விட்டு விட்டு,

 தன்னைப் படைத்தவருடன் சேர்ந்து,

நித்திய காலமும் பேரின்ப வாழ்வு வாழும்.

உலக இறுதியில் பூமியில் விடப் பட்ட சடப் பொருளாலான நமது உடல் இறைவன் வல்லமையால்  Spiritual body யாக மாறி 

நமது ஆன்மாவுடன் சேர்ந்து கொள்ளும்.

இதைத்தான் உயிர்ப்பு என்கிறோம்.

இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்.

நாம் உலக முடிவில் இறைவன் வல்லமையால் உயிர்பிக்கப்படுவோம்.

அதன் பின் நமது ஆன்ம சரீரத்தோடு நிரந்தரமாக விண்ணில் வாழ்வோம்.

உலகில் பயணம் செய்வோர் புறப்பட்ட இடத்திற்கும், போய்ச் சேர வேண்டிய இடத்திற்கும் இடையில் அநேக இடங்களைப் பார்ப்பார்கள்.

ஆனால் அங்கே தங்கள் பயண நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.

எந்த இடத்தைப் பார்த்தாலும் அவர்கள் மனதை நிறைத்துக் கொண்டிருப்பது போய்ச் சேர வேண்டிய இடம்தான்.

இவ்வுலகில் நமது நிலையும் இதுதான்.

நமது ஆன்மீகப் பயணத்தின் போது, நமது உடலையும், உலகையும் சார்ந்த அனுபவங்கள் நிறைய இருக்கும்.

நாம் மூச்சு விடுவது, உண்பது, உடுப்பது, படிப்பது, வேலை செய்வது, ஊதியம் வாங்குவது, செலவழிப்பது போன்றவை நமது உடலையும், உலகையும் சார்ந்த அனுபவங்கள்.

நமக்கு உடல் இருப்பதாலும், நாம் உலகில் வாழ்வதாலும் இந்த அனுபவங்களைத் தவிர்க்க முடியாது.

ஆனால் நமது உள்ளத்தில் நிறைந்திருக்க வேண்டியது இறைவன் மட்டும்.

நமது உலக அனுபவங்களை நமது உள்ளத்தில் வாழும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விட்டு 

இறைவன் வழியாக, இறைவனை நோக்கிய ஆன்மீக பயணத்தைத் தொடர வேண்டும்.

உலக வாழ்வின் போது நாம் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் நமது கண்ணுக்குத் தெரிய வேண்டியது இறைவன் மட்டுமே.

அப்படித் தெரிந்தால் நாம் எதை நேசித்தாலும், யாரை நேசித்தாலும் இறைவனை மட்டுமே நேசிப்போம்.

இறைவனை மட்டுமே நேசித்துக் கொண்டு பயணித்தால், நமது பயணத்தில் பாவம் குறுக்கிட முடியாது.

இறைவனை மட்டும் நேசித்துக் கொண்டு பயணித்தால்,  

நமது இவ்வுலக வாழ்வின் முடிவு 

நம்மை நிரந்தரமான விண்ணக வாழ்வுக்குள் மகிழ்ச்சியுடன் வழியனுப்பும்.

நினைவில் கொள்வோம்:

நாம் புறப்பட்டது இறைவனிடமிருந்து.

பயணிப்பது இறைவன் வழியே.

போய்ச் சேர வேண்டியது இறைவனிடம்.

இறைவனோடு பயணிக்கும் நாம்
இறைவனோடுதான் என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment