தீமையிலிருந்து நன்மை.
"தாத்தா, கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் கேட்கும் ஒரு கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியவில்லை.
நம்மவர் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலைப் பைபிளில் தேடுவோம்.
கடவுளையே நம்பாதவன் பைபிளை எப்படி நம்புவான்?"
"'முதலில் கேள்வியைச் சொல்லு."
"கேள்வி அவனுடையது. சொல்வதுதான் நான்."
"'தெரியும். சொல்லு."
"விண்ணகத் தந்தைத் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பியதன் நோக்கம் மனிதர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு, மரிப்பதற்காகத் தானே.
யூத மதக் குருக்கள் அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தானே உதவியிருக்கிறார்கள்.
தந்தையின் நோக்கம் நிறைவேற உதவியது எப்படிப் பாவமாகும்?
தான் எதற்காக உலகிற்கு வந்தாரோ அதற்கு உதவியவர்களை ஏன் மன்னிக்கும்படி இயேசு தந்தையிடம் வேண்டினார்?"
"'உன்னிடம் கேள்வி கேட்டவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் கடவுள் சொன்னார் என்பதை நம்பித்தானே கேள்வி கேட்டிருக்கிறார்.
அவர் கேள்வி கேட்டது உனது பதிலை எதிர்பார்த்து அல்ல.
உனது விசுவாசத்தில் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதற்காக."
"அது தெரிகிறது. ஆனாலும் உரிய பதிலைச் சொன்னால் அவர் மனதில் விசுவாச விதையை ஊன்றியது போலிருக்குமே. அதனால்தான் கேட்டேன்."
"'கடவுளின் பண்புகளின் அடிப்படையில்தான் பதில் இருக்கும். ஆனால் பண்புகளுக்கு ஆதாரம் பைபிள் தான்.
கடவுள் அன்பே உருவானவர்.
அளவில்லா ஞானம் உள்ளவர்.
தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கக் கூடியவர்.
தனது செயல் திட்டங்களை நித்திய காலமாகத் தீட்டுபவர்.
மனித குலத்தைப் படைக்க வேண்டும் என்று நித்திய காலமாகத் திட்டமிட்டபோதே மனிதர்கள் பாவம் செய்வார்கள் என்று அவருக்குத் தெரியும்.
ஆகவே மனித குலம் பற்றிய அவரது எல்லா திட்டங்களும் நித்தியமானவை.
நாம் ஒரு திட்டம் போட்டால் அதற்கு அது துவக்கம்.
ஆனால் கடவுளுடைய திட்டங்களுக்குத் துவக்கம் இல்லை.
எல்லா திட்டங்களும் அவரது அளவற்ற ஞானத்துக்கு உட்பட்டதாக இருக்கும்.
தீமையிலிருந்தே நன்மையை வரவழைக்கக் கூடியவராகையால் மனிதர்களுடைய பாவத்திலிருந்தே
அவர்களுடைய மீட்பையும் வரவழைக்கத் திட்டமிட்டார்.
நீ இப்படிச் சொன்னவுடனே அவர் வந்து உங்களிடம் சொன்னாரா என்று கேட்பான்.
சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அவர் தந்திருக்கிற புத்தியைப் பயன் படுத்தியே, பைபிள் மூலமாக நாம் தெரிந்து கொண்ட அவருடைய பண்புகளின் அடிப்படையில் நாமே தெரிந்து கொள்ளலாம்.
அவர் படைத்த இயற்கையைப் பார்.
தாவரங்களுக்கான உணவுப் பொருள் எங்திருந்து வருகிறது? அவற்றின் கழிவிலிருந்து தானே.
தாவரங்களை உயிர்ப் பிராணிகள் உண்கின்றன.
அவை போடும் சாணம் கழிவுப் பொருள். ஆனால் அதுவே தாவரங்களுக்கு உணவு.
மனிதன் தன்னுடைய சுதந்திரத்தைப் பயன் படுத்தியே பாவம் செய்தான்.
பாவத்திற்கு மனிதன்தான் பொறுப்பு.
பாவம் கடவுள் முன்னிலையில் தீமை.
அந்த தீமையிலிருந்து நன்மையை வரவழைத்து தீமையை அழிக்கக் கடவுளால் முடியும்.
அதைத்தான் கடவுள் செய்தார்.
யூதர்கள் இயேசுவைக் கொன்றது பாவம். அதற்கு முழுப் பொறுப்பு அவர்கள் தான்.
யூதர்கள் அந்த பாவத்தைச் செய்வார்கள் என்று நித்திய காலமாகக் கடவுளுக்குத் தெரியும்.
அந்த ஞானத்தின் அடிப்படையில் தான் கடவுள் மீட்பு என்னும் நித்திய திட்டத்தை வகுத்தார்.
முள்ளை எடுக்க நாம் முள்ளைப் பயன்படுத்துவது போல,
தீமையை அழிக்க யூதர்கள் செய்த தீமையைக் கடவுள் பயன் படுத்திக் கொண்டார்.
யூதர்கள் செய்த தீமைக்குக் கடவுள் பொறுப்பல்ல.
ஆனால் மீட்புக்குக் கடவுள் மட்டுமே பொறுப்பு.
யூதர்கள் செய்த பாவத்தை மன்னிக்கும்படி மகன் தந்தையை வேண்டினார்.
மனிதர்களின் பாவங்களை மன்னிக்கவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.
தீமைக்கு நன்மை செய் என்ற தனது போதனையின் அடிப்படையில்
தன்னைக் கொன்றவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.
பேரப்புள்ள, புரிகிறதா?"
"புரிகிறது.
யூதர்கள் மனித குல மீட்புக்கு உதவ வேண்டும் என்று திட்டம் போட்டு உதவவில்லை.
அவர்கள் செய்தது தீமை.
அவர்கள் செய்த தீமையிலிருது இயேசு நன்மையை வரவழைத்தார்.
அநேக யூதர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது ரோமை சாம் ராஜ்யத்திலிருந்து அவர்களுக்கான அரசியல் விடுதலையை.
ஆனால் இயேசு வந்தது மனுக் குலம் முழுமைக்கும் பாவத்திலிருந்து விடுதலையைப் பெற்றுத் தர.
இயேசுவுக்கு உதவ வேண்டுமென்று யூத மத குருக்கள் திட்டமிடவில்லை.
இயேசுவை அழிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய திட்டம்.
இயேசு தன் திட்டத்தை நிறைவேற்ற அவர்களுடைய திட்டத்தைப் பயன் படுத்திக் கொண்டார்.
இன்றும் கூட உலகில் நடக்கும் தீமைகளிலிருந்து இயேசு ஏதாவது நன்மையை வரவழைப்பார் என்று நினைக்கிறேன்."
"'உறுதியாக.
என்ன நன்மையென்று உலக
முடிவில்தான் நமக்குத் தெரியும்.
கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.
அவருக்கு எல்லாம் தெரிவதால் தான் என்ன நடந்தாலும் அமைதியாக இருக்கிறார்.
நாம் செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்,
வாழ்க்கையை அவர் கையில் ஒப்படைத்து விட்டு,
அவர் சொற்படி நடக்க வேண்டியதுதான்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment