Saturday, May 13, 2023

"அதுவரையில் அவர்களில் ஒருவர்மீதும் பரிசுத்த ஆவி இறங்கவில்லை. ஆண்டவராகிய கிறிஸ்துவின் பெயரால் ஞானஸ்நானம் மட்டுமே பெற்றிருந்தனர்."(அப்.8:16)

"அதுவரையில் அவர்களில் ஒருவர்மீதும் பரிசுத்த ஆவி இறங்கவில்லை. ஆண்டவராகிய கிறிஸ்துவின் பெயரால் ஞானஸ்நானம் மட்டுமே பெற்றிருந்தனர்."
(அப்.8:16)

"இராயப்பரும் அருளப்பரும் சமாரியர்களிடம்
 போய், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்காக வேண்டினர்.

 ஏனெனில், அதுவரையில் அவர்களில் ஒருவர்மீதும் பரிசுத்த ஆவி இறங்கவில்லை.

 ஆண்டவராகிய கிறிஸ்துவின் பெயரால் ஞானஸ்நானம் மட்டுமே பெற்றிருந்தனர்."

இந்த வசனங்களை மேலெழுந்த வாரியாக வாசித்தால் ஒரு சந்தேகம் வரும்,

"சமாரியர்கள் ஞானஸ்நானம் பெற்றபோது ஏன் அவர்கள் மீது பரிசுத்த ஆவி இறங்கவில்லை?"

தேவத்திரவிய அனுமானங்கள் ஏழு.

முதல் தேவத்திரவிய அனுமானம் ஞானஸ்நானம்.

அடுத்தது, உறுதிப் பூசுதல்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் கொடுக்கப் படுகிறது.

ஞானஸ்நானத்தை மட்டுமல்ல, தனது ஒவ்வொரு செயலையும் தாய்த் திருச்சபை தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தான் ஆரம்பிக்கிறது, செய்கிறது.


தமதிரித்துவத்தின் மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவர் இருக்கின்றனர்.

"நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார்." (அரு.14:11)

"பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

23 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:"
(அரு. 20:22, 23)

இயேசு தன் சீடர்கள் மீது ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்." என்றார்.

ஆக மகனுக்குள் பரிசுத்த ஆவி இருக்கிறார்.

பரிசுத்த ஆவிக்குள் மகன் இருக்கிறார்.

நாம் ஒவ்வொரு தேவத் திரவிய அனுமானம் பெறும்போதும், 

கடவுளைப் பெறுகிறோம், அதாவது தந்தை, மகன், தூய ஆவியைப் பெறுகிறோம்.

நாம் ஞானஸ்நானம் பெறும் போது நம்முள் இருக்கும் கடவுள் நமது சென்மப் பாவத்தை மன்னிக்கிறார்.

தாயும் தந்தையும் சேர்ந்துதான் நம்மைப் பெற்றாலும்

நாம் பிறந்ததை நினைக்கும் போது தாய்தானே ஞாபகத்துக்கு வருகிறாள்.

அதுபோல் நம்மைப் படைத்தவர் கடவுள் தான்.

ஆனாலும் படைத்தவர் என்று சொன்னவுடன் நமக்கு ஞாபகத்துக்கு வருபவர் தந்தை.

மனிதனாகப் பிறந்தது மகன் மட்டுமே. மகன்தான் தனது பாடுகளின் மூலமும், மரணத்தின் மூலமும் நம்மை மீட்டார்.

நம்மைப் பரிசுத்தப் படுத்தி, உறுதிப் படுத்தி, வழி நடத்துபவர் பரிசுத்த ஆவி.

ஆனாலும் எல்லாவற்றையும் செய்பவர் கடவுளே.

பரிசுத்தப் படுத்தபவர் என்று சொன்னவுடனே நமது ஞாபகத்துக்கு வருவது பரிசுத்த ஆவி.

ஆகவே நாம் ஞானஸ்நானம் பெறும்போதே நம்மில் பரிசுத்த ஆவி இறங்கி வந்து சென்மப் பாவத்திலிருந்து நம்மை விடுவித்து ஆன்மாவைப் பரிசுத்தப் படுத்துகிறார்.

நாம் ஏதாவது ஒரு திருமண வீட்டிற்குப் போனால் விழா முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து விடுவோம்.

ஆனால் ஞானஸ்நானம் முடிந்தவுடன் பரிசுத்த ஆவி எங்கும் போய்விட மாட்டார்.

எப்போதும், எங்கும் இருப்பவரால் எங்கே போக முடியும்?

நாம் உறுதிப் பூசுதல் பெறும் போது நம்முள் இருக்கும் பரிசுத்த ஆவி நம்மை விசுவாசத்தில் உறுதிப் படுத்துகிறார்.

புரிந்து கொள்வதற்காக :

பரிசுத்த ஆவி எங்கும் இருக்கும் கடவுள்.

அவரால் படைக்கப் பட்ட அனைவருள்ளும் இருக்கிறார்.

அவரால் படைக்கப் பட்டவர்கள் ஞானஸ்நானம் பெறும்போது அவர்களுடைய சென்மப் பாவத்தை மன்னிக்கிறார்.

அவர்கள் உறுதிப் பூசுதல் பெறும்போது அவர்களை விசுவாசத்தில் உறுதிப் படுத்துகிறார்.

அதன் பின்னும் தொடர்ந்து அவர்களுடன்தான் இருப்பார்.

நாம் பாவம் செய்யும்போதும் நம்முடன் தான் இருப்பார், நமது பாவங்களை மன்னிப்பதற்காக.

நாம் புண்ணியம் செய்யும்போதும் நம்முடன் தான் இருப்பார், நம்மைப் புண்ணியத்தில் உறுதிப் படுத்துவதற்காக.


'இறங்கவில்லை' என்ற வார்த்தைக்கு அகராதிப் படி அர்த்தம் எடுக்கக் கூடாது.

நட்சத்திரங்களில் இருக்கும் அதே கடவுள் தான் பூமியிலும் இருக்கிறார்.

பெந்தே கோஸ்தே திருநாள் அன்று தான் தனது சீடர்களை விசுவாசத்தில் உறுதிப் படுத்தி,

அவர்களை போதிக்க அனுப்ப வேண்டும் என்பது இயேசுவின் திட்டம்.

அதனால்தான் உறுதிப் படுத்தப் படாத இராயப்பர் அவரை மூன்று முறை மறுதலித்தார்.

பரிசுத்த ஆவியால் உறுதிப் படுத்தப்பட்ட பின்பு இயேசுவுக்காகத் தன் உயிரையே கொடுத்தார்.

நாம் பாவம் செய்யும்போது நமக்கும், கடவுளுக்கும் உள்ள ஆன்மீக உறவு முறிந்து விடுகிறதே,

அப்போது கடவுள் நம்மை விட்டு போய்விடமாட்டாரா?

கடவுள் மாறாதவர் என்று நமக்குத் தெரியும்.

கடவுள்  எந்த உறவுடன் நம்மைப் படைத்தாரோ அந்த உறவை ஒருபோதும் முறிக்க மாட்டார்.

பாவம் செய்யும்போது கடவுளோடு நமக்குள்ள உறவை நாம் தான் முறித்துக் கொள்கிறோம்,

பாவமன்னிப்புப் பெற்று கடவுளோடு சேர்ந்து கொள்கிறோம்.

பிரிவதும், சேர்வதும் நாம்தான். 

கடவுள் நிலையில் நித்திய காலமும் மாற்றம் இருக்காது.

லூசிபெரைப் படைக்கும்போது அவனை எப்படி நேசித்தாரோ
அதே போல் தான் இப்போதும் அவன் சாத்தான் ஆனபின்னும் நேசிக்கிறார்.

இன்னும் நேசித்துக் கொண்டிருப்பார்.

ஆனால், பதிலுக்குச் சாத்தானால் நேசிக்க முடியாது.

நமது மீட்பு விசயத்திலும் இயேசு நமக்காகச் செய்ய வேண்டியதை நூற்றுக்கு நூறு செய்து விட்டார்.

அவர் செய்ததை ஏற்றுக் கொள்ள வேண்டியது நாம்தான்.

நாம் அவரது பாதங்களை இறுகப் பற்றிக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment