Thursday, May 25, 2023

"நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்."(அரு.17:18)

"நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்."(அரு.17:18)

விண்ணகத் தந்தை எந்த நோக்கத்திற்காக மகனை உலகிற்கு அனுப்பினாரோ,

அதே நோக்கத்திற்காகத் தான் மகன் தனது சீடர்களை உலகெங்கும் அனுப்பினார்.

அதற்காகத்தான் தனது வல்லமைகளை  அவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

மற்றவர்களது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தார்.

அப்பத்தை தனது உடலாகவும் ரசத்தை தனது ரத்தமாகவும் மாற்றும் வல்லமையைக் கொடுத்தார்.

இறைவனுக்கு மட்டுமே உரிய இந்த வல்லமைகளை அவர்களோடு பகிர்ந்து கொண்டதன் மூலம்,

அவர்கள் மூலமும் இயேசு உலகம் முடியும் மட்டும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்.

நாம் குருக்களை பார்க்கும் போது அவர்களில் இயேசுவைப் பார்க்கிறோம்.

இறைவாக்கை வாசிக்கும் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அவற்றை நமது குருக்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்கிறோம்.

நமது பாவங்களை,

அவை எவ்வளவு பெரிய பாவங்களாய் இருந்தாலும்,

அவர்களிடம் போய் சங்கீர்த்தனம் செய்கிறோம்.

அவர்களும் இயேசு கொடுத்த அதிகாரத்தைக் கொண்டு நமது பாவங்களை மன்னிக்கிறார்கள்.

பாவ சங்கீர்த்தன தொட்டியை அணுகும் போது நமது ஆன்மா எவ்வளவு அழுக்கு உள்ளதாக இருந்தாலும்,

வெளியே வரும்போது வெண்பனி போல் தூய்மையாக இருக்கும்.

குழப்பத்தோடு செல்பவர்கள் சமாதான உணர்வோடு வெளியே வருவார்கள். 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்த அதே இயேசுவை,

நம் முன் கொண்டு வந்து நிறுத்துபவர்கள் நமது குருக்களே.

அன்னை மரியாள் மடியில் சுமந்த அதே இயேசுவை நாம் நமது வாயில் சுமக்கிறோம்.

இயேசு நமது வாய் வழியே நமது வயிற்றுக்குள் பயணித்து நம்மை அவரது தாயாகவே மாற்றுகிறார்.

தாய்க்கு மட்டும் தான் குழந்தையை வயிற்றில் சுமக்கும் உரிமை உண்டு.

அதே உரிமையை நமக்கும் தந்த மரியாளின் மைந்தனை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.

திரு விருந்தின் போது நம்முள் வரும் நமது இறைவனை நினைத்துக் கொண்டிருந்தாலே போதும் 

நமது உள்ளங்கள் அவரோடு பேசி வேண்டிய அருள் வரங்களால் தங்களை நிறைத்துக் கொள்ளும்.

சாதாரண உணவை சாப்பிடும் போது அதை அவசரப்படாமல் ருசித்து சாப்பிடுகிறோம்.

விண்ணக உணவை எவ்வளவு ருசித்து உண்ண வேண்டும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

நினைத்துப் பார்த்தாலே எல்லாம் தெரியும்.

விண்ணக வாழ்வையே முன் ருசித்துப் பார்க்கிறோம்.

We have a pretaste of Heaven when we are with Jesus during Holy Communion.

அகில உலகையே படைத்த எல்லாம் வல்ல இறைவனை அப்ப, ரச குணங்களுக்குள் கொண்டுவர தெய்வீக வல்லமை வேண்டும்.

அத்தகைய வல்லமையை உடையவர்கள் நம்மோடு வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும் போது நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைய வேண்டும்.

அவர்களோடு பேசும்போதும், அவர்களைப் பற்றி பேசும் போதும் 

தெய்வீக வல்லமையை தெய்வத்திடமிருந்து பெற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

மரியாதையை கொடுத்தால் மட்டும் போதாது.

அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும்.

அவர்களோடு ஒத்துழைக்கும் போது இயேசுவோடு ஒத்துழைக்கிறோம்.

ஏனெனில் அவர்கள் செய்வது இயேசுவின் பணி.

அவர்கள் மூலமாக இயேசு நமக்கு நற்செய்தியை அறிவிக்கிறார்.

திருப்பலியின் போது அறிவிக்கப்படும் நற்செய்தியை கூர்ந்து கவனித்து,

 அதை உள்வாங்கி,

 உள்ளத்தில் பதித்து,

நமது சொல்லிலும், செயலிலும் அதை வெளிப்படுத்த வேண்டும்.

சொல்லிலும், செயலிலும் அதை வெளிப்படுத்தாவிட்டால் இந்த செய்தியை கேட்பதில் பயன் ஒன்றும் இல்லை.

அவர்கள் மூலமாகவே இயேசு நமது பாவங்களை மன்னிக்கிறார்.

இது விஷயத்தில் நாம் குருக்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆன்மீக காரியங்களில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர்களது ஆலோசனையை கேட்டு பயன்பெற வேண்டும்.

எங்களுக்கு பிரச்சனைகளே இல்லை என்று யாராவது சொன்னால் அவர்கள் முழுப் பொய்யர்கள்.

பிரச்சனைகளே இல்லாவிட்டால் ஆன்மா செயலற்று போய்விட்டது என்று அர்த்தம்.

உயிரோடு இருக்கும் வரை பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும்.

 அவற்றுக்கு வேண்டிய ஆலோசனைகளை நாம் பெறுவதற்காகத் தான் 

இயேசுவே குருக்கள் மூலம் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

திருப்பலியின் போது நமது கண்கள் எப்போதும் பலி பீடத்திலேயே இருக்க வேண்டும்.

நமது உள்ளத்தில் எப்போதும் இயேசுவை பற்றிய எண்ணங்களே ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

அப்போதுதான் நடுப்பூசையின் போது இயேசு தனது ஆன்ம சரீரத்தோடு பீடத்தின் மீது இறங்கி வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

இயேசுவைப் பார்க்கவும், அவரை நமது நாவினால் வாங்கவும் வரம் பெற்ற நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்!

"அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே!''

என்று நாம் அன்னை மரியாளை வாழ்த்தும் போதெல்லாம் அவள் பதிலுக்கு,

"அன்புள்ள மகனே, என் மகன் இயேசு உன்னோடு என்றும் இருப்பாராக"

என்று வாழ்த்துவது போல் தெரிகிறது.

இயேசு நம்மிடம் 
வரும்போதெல்லாம்,

"அன்புள்ள இயேசுவே, உமது அன்னையை உமது அருள் வரங்களால் நிரப்பினீர். 

நானும் உமது அன்னையின் பிள்ளை தானே.

என்னையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளும்."

என்று அவரிடம் கூற வேண்டும்.

இயேசு அவருடைய சீடர்களை மக்களிடமிருந்து தேர்ந்தெடுத்தது போல,

தனது குருக்களை நமது குடும்பங்களிலிருந்து தான் தேர்ந்தெடுக்கிறார். 

நமது குடும்பங்கள் தான் குருத்துவ நடுகைக்கான நாற்றாங்கால்கள். 

நல்ல நாற்றுக்களை தயாரிப்பது நமது கடமை.

நமது கடமையை கடமையுணர்வோடு செய்ய வேண்டும்.

இயேசு தந்தையிடமிருந்து எதற்காக உலகிற்கு வந்தாரோ

அவருக்காகவே அவருடைய சீடர்கள் உலகெங்கும் சென்றார்கள்.

சீடர்கள் என்ன செய்தார்களோ அதையே நமது குருக்களும் செய்கிறார்கள்.

அவர்களோடு ஒத்துழைத்து அவர்கள் சொற்படி நடந்தால் நாம் மீட்பு பெறுவது உறுதி.

நாம் மீட்பு பெற வேண்டும் என்பதுதான் நமது ஆண்டவரின் ஆசை.

அதை நிறைவேற்றுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment