Thursday, May 4, 2023

புத்தி, மனது, அன்பு

              புத்தி, மனது, அன்பு


"தாத்தா, மிருகங்களுக்குக் கொடுத்திறாத மூன்று தத்துவங்களைக் கடவுள் மனிதனுக்குக் கொடுத்திருக்கிறார்.

 அவை எவை எனக் கூறுங்கள் பார்ப்போம்."

"'காலையிலேயே பரீட்சையா?"

"பரீட்சை இல்லை, தாத்தா, உரையாடல். நான் ஆரம்பித்து வைக்கிறேன். நீங்கள் தொடருங்கள்."

"'புத்தி, மனது, அன்பு.

புத்தி சிந்திப்பதற்கு.

மனது சிந்திக்கும்போது கிடைக்கும் அறிவை சேமித்து வைப்பதற்கு.

அன்பு தான் அறிந்ததை நேசிப்பதற்கு."

"நாம் ஏன் சிந்திக்க வேண்டும்?"

"'அறிவதற்கு."

"ஏன் அறிய வேண்டும்?"

"'நாம் பிறந்தவுடன் நமக்கு எதுவும் தெரியாது."

"பிறந்தவுடன் அழத் தெரிந்ததே.
நாம் அழுததை வைத்துதானே.
நாம் உயிரோடு பிறந்தோம் என்பதைக் கண்டு பிடித்தார்கள்."

"'அழத் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

அடி விழுந்தாலோ, கீழே விழுந்து காயம் ஏற்பட்டாலோ, நாம் எதிர் பாராத பெரிய கஷ்டம் ஏற்பட்டாலோ அழுகை தானாக வந்துவிடும்."

"பிறந்தவுடன் ஏன் அழுதோம்?"

"'மூச்சு விடாமலேயே தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்த நாம் பிறந்தவுடன் மூச்சு விட முடியாமல் அழுதோம்.

ஆனால் நம்மைப் பற்றியோ, நாம் பிறந்த உலகைப் பற்றியோ நமக்கு எதுவுமே தெரியாது.

அவற்றைப் பற்றி ஏற்கனவே இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருந்தவர் களிடமிருந்து தெரிந்து கொண்டோம்."

"ஆக உலகைப் பற்றித் தெரிந்து கொள்ளப் புத்தி தேவையில்லை"

"'சாப்பிடப் புத்தி தேவையில்லை, ஆனால் சமைக்கப் புத்தி தேவை "

"புரியவில்லை."

"'கடவுள் மனிதர்களைப் புத்தி உள்ளவர்களாகவே படைத்தார்.

மனித புத்தியின் விளைவுதான் இன்றைய விஞ்ஞான வளர்ச்சி."

"இன்றைய அநேக பாவங்களுக்குக் காரணமே இன்றைய விஞ்ஞான வளர்ச்சிதான், தாத்தா."

"'பாவங்களுக்குக் காரணம் விஞ்ஞானம் இல்லை.

புத்தியைச் சரியாகப் பயன்படுத்தாததுதான் காரணம்.

ஏவாள் எந்த விஞ்ஞான வளர்ச்சியால் பாவம் செய்தாள்?"

"புத்தியை எப்படி பயன்படுத்தியிருக்க வேண்டும் என்கிறீர்கள்?"

"'நீ இரவில் தூங்கப் போனவன் இரவு 12 மணிக்கு  எழுந்து பார்க்கும் போது உனது மேஜைமேயின் மேல் ஒரு டம்ளர் இருக்கிறது.

அதற்குள் குளிர்பானம் இருக்கிறது.

நீ உடனே அதை எடுத்துக் குடிப்பாயா?

அல்லது,

படுக்கும்போது இல்லாத தம்ளர் இங்கே எப்படி வந்தது என்று நினைப்பாயா?"

"தம்ளர் இங்கே எப்படி வந்தது என்பதை அறியுமுன் அதில் உள்ளதை முடிக்க மாட்டேன்."

"'ஏன்?"

"யாரும் என்னை கொல்வதற்காக விஷம் கலந்த பானத்தை வைத்திருக்கலாம்.

அதை கண்டு பிடிக்க வேண்டும் என்றால் முதலில் தம்ளர் அங்கே எப்படி வந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்."

"'அதே போல் தான் மனிதன் உலகத்தைப் பற்றி ஆராயுமுன் அது எப்படி வந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அதற்குதான் முதலில் புத்தியைப் பயன்படுத்த வேண்டும்.

பயன்படுத்தியிருந்தால் உலகைப் படைத்த சர்வ வல்லப கடவுள் இருப்பதை அறிந்திருப்பான்.

தன்னையும் அந்த கடவுள் தான் படைத்திருப்பார் என்பதையும் அறிந்திருப்பான்.

தன்னைப் பற்றி அறியவே கடவுள் நமக்கு புத்தியைத் தந்திருக்கிறார். 

ஆனால் அனேக மனிதர்கள் உலகில் எப்படி வாழ்வது என்பதை பற்றி நினைத்தார்களே தவிர கடவுளைப் பற்றி நினைக்கவில்லை.

அதுவே விஞ்ஞானத்தால் ஏற்படும் தீமைகளுக்குக் காரணம்."

"தன்னை அறிவதற்காகப் புத்தியைத் தந்த கடவுள் தன்னை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக மனதை தந்திருக்கிறார்.

ஞாபகத்தில் இருக்கும் அவரை நேசிப்பதற்காக அன்பு என்னும் பண்பைத் தந்திருக்கிறார்."

"அதாவது தன்னை அறியவும் நேசிக்கவுமே கடவுள் நம்மைப் படைத்தார். சரியா?"

"'கரெக்ட். மனதில் அன்பு இருந்தால் அது தன்னையே நல்ல செயல்களில் வெளிப்படுத்தும்.

செயல்கள் மூலம் இறைவன் மீது அன்பு செய்பவர்களுக்கு நித்திய பேரின்ப வாழ்வைச் சன்மானமாகத் தருவார்."

"அதனால் தான் 

'தம்மை அறியவும், நேசிக்கவும், சேவிக்கவும், அதனால் மோட்சத்தை அடையவும் உண்டாக்கினார்."

என்று தாய்த் திருச்சபை கூறுகிறாள்.

"'இறைவனை 
அறிவோம்,
நேசிப்போம், 
சேவிப்போம், 
விண்ணகத்தில் அவரோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வோம்."

லூர்து செல்வம்

No comments:

Post a Comment