உலகைப் படைத்தவர், ஆனால் உலகைச் சாராதவர் இயேசு.
இயேசு சர்வ வல்லப கடவுள். உலகையும், அதில் வாழும் தாவரங்களையும், உயிரினங்களையும் படைத்தவர்.
ஆறறிவுள்ள உயிரினமான மனிதனைப் படைக்கு முன் அவன் பயன்படுத்துவதற்காக அவற்றைப் படைத்தார்.
உலகை மனிதனுக்காகப் படைத்தார்.
மனிதனைத் தனக்காகப் படைத்தார்.
மனிதனை உலகத்திற்காகப் படைக்கவில்லை, தனக்காகப் படைத்தார்.
"படைத்தார் படைப்பெல்லாம் மனுவுக்காக,
மனுவைப் படைத்தார் தனை வணங்க." என்கிறது தமிழ்.
ஆகவே மனிதன் உலகைச் சார்ந்தவன் அல்ல, கடவுளைச் சார்ந்தவன்.
தன்னைச் சார்ந்தவர்களாகிய மனிதர்களை மீட்பதற்காகவே உலகில் மனிதனாகப் பிறந்தார்.
மண்ணால் ஆன உலகை உரு மாற்றுவதற்காக அவர் மனிதனாகப் பிறக்கவில்லை.
மனிதனின் ஆன்மீக நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவே
உலகில் மனிதனாகப் பிறந்தார்.
ஆகவே அவரது பணி உலகைச் சார்ந்ததல்ல.
அவரால் படைக்கப்பட்ட மனிதர்களைச் சார்ந்தது.
இயேசு உலகிற்கு வந்தது நமக்காக. ஆகவே நாம் வாழ வேண்டியது இயேசுவுக்காக.
நாம் இயேசுவைச் சார்ந்தவர்கள், உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.
நமது ஆன்மா விண்ணிலிருந்து வந்தது.
நமது உடல் மண்ணிலிருந்து வந்தது.
ஆகவே நமது ஆன்மா உடலில் வாழ்ந்தாலும் உடலைச் சார்ந்தது அல்ல.
''நான் உலகைச் சார்ந்தவனாயிராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்."
நமது ஆன்மீக வாழ்வுக்கு இயேசுவே முன்மாதிரிகை.
இயேசு உலகைச் சார்ந்தவராக இராதது போல,
நாமும் உலகைச் சார்ந்தவர்களாக இருக்கக் கூடாது.
TV ஒன்று வாங்க திட்டமிட்டு அதற்காகக் கடைக்குப் போவதாக வைத்துக் கொள்வோம்.
முதலாவது TV விற்கப்படும் கடைக்குதான் போவோம்.
TV வாங்க சாப்பாட்டுக் கடைக்குப் போக மாட்டோம்.
TV கடைக்குப் போய் TVயைப் பற்றி தான் விசாரிப்போம்.
TV கடைக்குப் போய் இட்லி என்ன விலை என்று கேட்க மாட்டோம்.
"கேளுங்கள், கொடுக்கப் படும்" என்று ஆண்டவர் சொன்னார்.
நமது ஆன்மாவை மீட்க வந்த, உலகைச் சாராத ஆண்டவரிடம் போய் உலகைச் சார்ந்த உதவிகளை மட்டும் கேட்டால் அவர் என்ன சொல்வார்?
"தம்பி, நான் உனது ஆன்மாவை மீட்பதற்காகத்தான் உலகிற்கு வந்தேன்.
உனது ஆன்மா மீட்கப்பட என்ன உதவி வேண்டும் என்று கேள்.
உடனே உறுதியாகத் தருகிறேன்.
நீ என்னைக் கேட்காமலேயே உலகை உனக்காகப் படைத்தேன்,
உலகைச் சார்ந்த,
ஆன்மாவின் மீட்புக்கு பயன்படும் உதவிகளை
நீ கேளாமலே உனக்குத் தருவேன்.
உன்னைப் படைத்த எனக்கு உனக்கு என்னவெல்லாம் தேவை என்பது தெரியாதா?
நீ உலகில் வாழ்வது உலகத்திற்காக அல்ல, எனக்காக.
எனக்காக வாழ உனக்கு என்னென்ன உலகப் பொருள்கள் தேவையோ அவற்றையெல்லாம் நீ கேட்காமலேயே உனக்குத் தருவேன்.
ஆன்மா சார்ந்த உதவிகளை கேள்.
நீ செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேள்.
மீண்டும் பாவம் செய்யாதிருக்க உனக்கு வேண்டிய அருள் வரங்களைக் கேள்.
விண்ணக பாதையில் எப்படி நடக்க வேண்டும் என்று கேள்.
அதற்கான உதவிகளையும் கேள்.
உனது ஆன்மாவின் மீட்புக்காக நீ எதை கேட்டாலும் தருவேன்."
ஹோட்டலுக்குள் போய் உட்கார்ந்தாலே போதும்,
சர்வர் வந்து என்ன வேண்டுமென்று கேட்டு,
வேண்டியதைக் கொண்டு வந்து தருவான்.
அதே போல நாம் கடவுளுக்குள் நுழைய வேண்டும்.
அவரது எண்ணங்களோடு நமது எண்ணங்கள் இணைய வேண்டும். அதுதான் செபம்.
இறைவனோடு இணைந்தாலே நமக்கு வேண்டிய அருள் வரங்களை அவரிடம் கேட்கிறோம் என்று தான் அர்த்தம்.
We must be united with God.
Our thoughts must be united with God's thoughts. That is prayer.
கடவுளுடைய எண்ணங்கள் இறைவாக்காக பைபிளில் தரப்பட்டுள்ளன.
எப்போதும் அவரோடு இணைந்தே இருந்தால்,
அவரது அருள் வெள்ளம் நமக்குள் பாயும்.
நமது ஆன்மாவுக்கு வேண்டியதை எல்லாம் நாம் வாயால் கேட்காமலே அள்ளி வரும்.
ஏரிகளை அடுத்த வயல் வெளியில் ஏரித் தண்ணீர் வாய்க்கால்கள் வழியே போய்க் கொண்டிருக்கும்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் வாய்க்கால் தண்ணீரை வயலுக்குள் திறந்து விட வேண்டியதுதான்.
ஏரித் தண்ணீர் வாய்க்கால் வழியாக வயலுக்குள் பாய்ந்து கொண்டிருக்கும்.
கடவுள் என்ற ஏரியிலிருந்து அருள் வெள்ளம் அவரது எண்ணங்கள் என்ற வாய்க்கால் வழியாகப் பாய்ந்து கொண்டிருக்கும்.
நாம் நமது எண்ணங்களை அவரது எண்ணங்களோடு இணைத்து விட்டால் அவரது அருள் வெள்ளம் நமது ஆன்மாவை நிறப்பிக் கொண்டிருக்கும்.
வீட்டில் அம்மாவிடம் சாப்பாடு வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை.
Dining table முன் உட்கார்ந்தாலே போதும்.
குறிப்பறிந்து அம்மா சாப்பாடு தருவார்கள்.
நாம் தியானம் வாயிலாக இறைவனுக்குள் நுழைந்தால் போதும்.
அவரது அருள் வெள்ளம் நமக்குள் பாயும்.
இறைவனுக்குள் நுழைய இயேசு
தந்துள்ள முக்கியமான வழி தேவத்திரவிய அனுமானங்கள்.
ஞானஸ்நானம் வழியே நாம் நுழைந்தபோது நமது சென்மப் பாவம் மன்னிக்கப்பட்டது.
பாவ சங்கீர்த்தனம் வழியே நாம் நுழைந்தால் நமது கர்ம பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும்.
திவ்ய நற்கருணை வழியே நாம் நுழைந்தால் இறைவனே நமக்கு உணவாக வருவார்.
உறுதி பூசுதல் வழியே நாம் நுழைந்தால் நாம் ஆன்மீக வாழ்வில் உறுதிப்படுவோம்.
குருத்துவம் வழியே நுழைபவர்கள் மக்களது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும்,
அப்பத்தை இயேசுவின் உடலாகவும், ரசத்தை அவரது இரத்தமாகவும் மாற்றும் வல்லமையையும் பெறுவார்கள்.
மெய் விவாகம் வழியே நுழைபவர்கள் இறைவனின் படைப்புத் தொழிலில் பங்கு பெறுவார்கள்.
அவஸ்தைப் பூசுதல் வழியே நுழைபவர்கள் விண்ணகத்துக்குள் நுழைய வேண்டிய வலிமையைப் பெறுவார்கள்.
இவை எல்லாம் ஆன்மீகம் சார்ந்த வழிகள்.
நாம் மண்ணுலகில் வாழ்ந்தாலும் விண்ணுலகைச் சார்ந்தவர்கள் என்பதை மறக்காமல்,
இயேசு உடன் வருகிற விண்ணக பாதை வழியே நடப்போம்.
நிலைவாழ்வை ஈட்டுவோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment