Wednesday, May 31, 2023

கேளுங்கள் கொடுக்கப்படும்.

கேளுங்கள் கொடுக்கப்படும்.

 "நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டுமா?

படித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டுமா?

எங்கள் பள்ளியில் சேருங்கள்."

ஒரு மாணவன் பள்ளியில் சேர்ந்தான்.

ஆனால் தேர்வில் வெற்றி பெறவில்லை, வேலையும் கிடைக்கவில்லை.

,"கேளுங்கள் கொடுக்கப்படும்."

என்ற வார்த்தைகளின் படி கேட்டேன் ஆனால் கிடைக்கவில்லை."

என்று ஒரு நண்பர் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

பள்ளிக்கூடம் என்றால் என்ன என்பது தெரியாதவர்கள் தான் தங்கள் தோல்விக்குப் பள்ளிக்கூடத்தின் மேல் பழியை போடுவார்கள்.

யாரிடம் கேட்க வேண்டும் என்பது தெரியாதவர்கள் தான் கேட்டது கிடைக்கவில்லை என்று புலம்புவார்கள்.

பள்ளிக்கூடம் என்பது ஒரு கட்டடம் அல்ல. ஆசிரியர்கள் அறிவை மாணவர்களுக்கு புகட்டும் இடம்தான் கல்விக் கூடம்.

ஆசிரியர்கள் மீது முழு நம்பிக்கை வைத்து அவர்கள் சொன்னபடி செய்யும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

வகுப்பறையில் ஆசிரியர் முன் உட்கார்ந்தவுடனே அறிவு வந்து விடாது.

முதலாவது ஆசிரியரை நம்ப வேண்டும்.

இரண்டாவது ஆசிரியர் கூறுவதைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கி மனதில் பதிய வைக்க வேண்டும்.

மூன்றாவது ஆசிரியர் சொன்னபடி செய்ய வேண்டும்.

இந்த மூன்றையும் செய்தால் வெற்றி உறுதி.

இறைவனிடம் கேட்டது கிடைக்க வேண்டுமென்றால் முதலில் அவரை நம்ப வேண்டும்.

கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொன்னவர் இறைமகன் இயேசு.

முதலில் சொன்னவர் மீது கேட்பவருக்கு முழுமையான நம்பிக்கை வேண்டும்.

"கேட்டேன், கிடைக்கவில்லை" என்று ஒருவர் சொன்னால் அவருக்கு இயேசுவின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

அநேகருக்கு நம்பிக்கை என்ற வார்த்தையின் பொருள் புரியவில்லை.

இயேசு நமது மீட்பர் என்று ஏற்றுக் கொள்வது விசுவாசம்.

 நாம் அவர் சொன்னபடி நடந்தால் அவர் நம்மை மீட்பார் என்று நம்புவது என்பது நம்பிக்கை. 

"நம்புங்கள்,

செபியுங்கள்,

நல்லது நடக்கும்."

நம்பிக்கையோடு செபிப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்.

நம்பிக்கையோடு செபிப்பவர்களுக்கு எது நடந்தாலும் அது நல்லதாகவே இருக்கும்.

நமக்கு எது நல்லது என்று இயேசுவுக்குத் தெரியும்.

செபத்தின் விளைவாக நடப்பது நல்லது அல்ல என்று கூறுபவர்களுக்கு இயேசுவின் மேல் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.

தேர்வு எழுதுவதற்காகத் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

வெற்றிக்காக இயேசுவிடம் நம்பிக்கையோடு செபிக்க வேண்டும்.

முழு முயற்சியோடு படிக்க வேண்டும்.

இந்த இரண்டையும் ஒழுங்காக செய்த பின் நமக்குத் தோல்வி ஏற்பட்டால் 

நமக்கு ஏற்பட்ட தோல்வி நமக்கு நன்மைக்காகவே என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஏற்றுக்கொண்டால் தான் இயேசுவின் மீது நாம் கொண்ட நம்பிக்கை உறுதியானது.

நமக்கு சுகம் இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

சுகம் தர வேண்டும் என்று இயேசுவிடம் நம்பிக்கையோடு வேண்டுகிறோம்.

சுகம் இரண்டு வகைப்படும்.

நிரந்தரமான சுகம்.
நிரந்தரம் அற்ற சுகம்.

இவ்வுலகில் நாம் அனுபவிப்பது நிரந்தரம் அற்ற சுகம்.

விண்ணுலகில் நாம் அனுபவிக்கப் போவது நிரந்தரமான சுகம்.

இந்த இரண்டில் எது நமக்கு வேண்டியது என்று நம்மை படைத்தவருக்குத் தெரியும்.

நம்பிக்கையோடு கூடிய வேண்டுதலுக்குப் பின்னும் 

சுகம் இல்லாத நாம் மரணம் அடைய நேரிட்டால்

 நம்மைப் படைத்தவர் நமக்கு நித்திய பேரின்ப வாழ்வைத் தந்திருக்கிறார் என்று அர்த்தம்.

எது நடந்தாலும் நன்மைக்கே என்பதை ஏற்றுக் கொண்டால் மரணமே வந்தாலும் நன்மைக்கே என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் விரும்புவது நடந்தால் மட்டும் நன்மை என்று நாம் நினைத்தால்

நம்மைப் படைத்த இறைவனை நாம்  நம்பவில்லை என்று அர்த்தம்.

இறைவனிடம் கேட்கும் போது அவர் எதைக் தந்தாலும் நமது நன்மைக்கே எங்க உறுதியான நம்பிக்கையோடு கேட்பதுதான் செபம்.

இறைவனையும் அவரது விருப்பத்தையும் மட்டுமே மையமாக வைத்து நாம் செபிக்க வேண்டும்.

இறைவனது விருப்பம் உறுதியாக நிறைவேறும்.

அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வோம்.

"என்ன நடந்தாலும் நன்றி கூறுவோம்."

லூர்து செல்வம்.

Monday, May 29, 2023

தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார்."(லூக்.1:48)

"தாழ்நிலை நின்ற தம் அடிமையைக் கடைக்கண் நோக்கினார்."(லூக்.1:48)

அன்னை மரியாள் இறைவன் தன் மீது காட்டிய கருணை குறித்து குறிப்பிடும் வசனம் இது.

வசனம் சிறியது, பொருள் பெரியது.

தாழ்நிலை நின்ற

தம் அடிமையைக்

கடைக்கண் நோக்கினார்.

சமூகத்தில் அடிமைகள்தான் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள்.

ஒரு காலத்தில் சமூகம் அடிமைகளை மனிதர்களாகவே நடத்தவில்லை.

பொருட்களை விற்பதும் வாங்குவதுபோல அடிமைகளையும் விற்பதும் வாங்குவதுமான ஒரு காலம்   இருந்தது.

வேலைக்காரர்கள் உழைத்தால் அவர்களுக்கு சம்பளம் உண்டு.

அவர்கள் இஷ்டப்பட்டால் வேலையை விட்டு நின்று விடலாம்.

இஷ்டப்பட்ட இடத்தில் வேலைக்கு சேர்ந்து கொள்ளலாம்.

ஆனால் அடிமைகள் வேலைக்காரர்களை விட அதிகமாக உழைக்க வேண்டும்.

ஆனால் சம்பளம் கிடையாது.

வண்டி இழுக்கும் மாட்டுக்கு சம்பளமா கொடுக்கிறோம்?

அந்த நிலைக்கு தாழ்ந்து இருந்தவர்கள் அடிமைகள்.

அவர்களை விட தாழ்ந்தவர்கள் கிடையாது.

முதலாளி கொடுத்த வேலையை அவரது திருப்திக்கு ஏற்ப செய்ய வேண்டும்.

முதலாளிக்கு திருப்தி ஏற்படா விட்டால், வண்டியை ஒழுங்காக இழுக்காத மாடு அடிபடுவது போல அடிபட நேரிடும்.

இதுவரை சொன்னது அடிமையின் நிலை பற்றி அறிய,

அன்னை மரியாள் சிறு வயதிலிருந்தே தாழ்ச்சி மிக்கவளாக வளர்ந்தாள்.

கபிரியேல் தூதர் அவளுக்கு மங்கள வார்த்தை சொன்ன அன்று மரியாள் தனது தாழ்ச்சியை வார்த்தை மூலம் வெளிப்படுத்தினாள்.

அவள் வயிற்றில் இறைமகன் மனுமகனாக உற்பவித்துப் பிறப்பார் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை கபிரியேல் தூதர் அவளுக்கு வெளிப்படுத்திய போது,

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது."

என்று அவள் கூறினாள்.

சிறுவயது முதலே கன்னிமை வார்த்தை பாடு கொடுத்திருந்தாள்.

ஆகவே குழந்தைப் பேறு அவளுக்கு விருப்பமில்லாத ஒன்று.

ஆனால் தனது கன்னிமைக்கு பழுது ஏற்படாமல் இயேசு உற்பவித்து பிறப்பார் என்று இறைத்தூதர் கூறிய போது,

இறைவனின் சித்தத்தை ஏற்றுக் கொண்டாள்.

முதலாளி கூறியதைத் தனக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ ஏற்றுக் கொள்ள வேண்டியது அடிமையின் கடமை.

குழந்தைப் பேறு அவளுக்கு விருப்பமில்லாத ஒன்றாக இருந்தாலும்,

அது இறைவனின் சித்தமாக இருந்ததால்,

"இதோ ஆண்டவருடைய அடிமை"
எனக்கூறி அதை ஏற்றுக் கொண்டாள்.

ஒரு அடிமை தனது முதலாளிக்கு கீழ்படிவது போல அவள் தன்னை படைத்த இறைவனுக்குக் கீழ்படிந்தாள்.

"கடைசியானோர் பலர் முதலாவர்."

என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு இணங்க தன்னை மனிதர்களில் கடைசியானவளாகக் கருதிய மரியாள் கடவுளின் தாயாகும் பாக்கியம் பெற்றதோடு,

இன்று விண்ணக மண்ணக அரசியாக விளங்குகிறாள்.

தாழ்ச்சி உள்ளவர்கள் மீது இறைவனின் கடைக்கண் பார்வை எப்போதும் இருக்கும் என்பதற்கு அன்னை மரியாள் ஒரு உதாரணம்.

மரியாள் சென்மப் பாவ மாசின்றி உற்பவித்தது அவளது தாழ்ச்சியான வாழ்வின் விளைவல்ல.

அது தனது அன்னையாக போகின்ற பெண்ணுக்கு இறைவன் கொடுத்த விசேஷ வரம்.

மூன்று வயது முதல் கோவிலில் வளர்ந்த மரியாள் அற்ப பாவத்தின் மாசு கூட இல்லாமல் பரிசுத்தமாய் வளர்ந்தாள்.

அவள் பரிசுத்தமாய் வளர்ந்தது அவளுக்கு தெரியும்.

ஆனால் அவள் அதைப்பற்றி பெருமையாக நினைக்கவில்லை.

கடவுளுக்கு சேவை செய்ய படைக்கப்பட்டுள்ள சாதாரண அடிமை பெண்ணாகவே தன்னை நினைத்து,

இறையன்பிலும், 
பிறரன்பிலும் வளர்ந்து வந்தாள்.

கோவிலில் வளரும் போது கற்பு வார்த்தைப் பாடு கொடுத்தாள்.

இது அவளை வளர்த்த பெரிய குருவுக்கு தெரியும்.

அவளது கற்புக்கு பாதுகாவலாகத்தான் வயதான புனித சூசையப்பருக்கு அவளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.

திருமண ஒப்பந்தம் செய்திருந்த காலகட்டத்திலேயே கபிரியேல் தூதர் இறைமகன் அவள் வயிற்றில் மனு மகனாக உற்பவித்து, பிறக்கப் போகும் செய்தியை அறிவித்தார். 

இறைவனின் அடிமை உணர்வோடு அதை ஏற்றுக் கொண்டாள்.

அதன்பின் வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் அவள் இயேசுவுக்காகவே வாழ்ந்தாள்.

நாம் செபம் சொல்வதற்காக கடவுளை தேடி போகின்றோம்.

ஆனால் அன்னை மரியாள் தன் மகனைப் பற்றி நினைத்த ஒவ்வொரு நினைவும் செபம் தான்.

 இயேசுவோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும் செபம் தான்.

30 வயது வரை அவரை வளர்த்து பொது வாழ்வுக்கு அர்ப்பணித்தாள்.

இயேசுவின் பொது வாழ்வின் போதும் மரியாள் மகனுக்காகவே வாழ்ந்தாள்.

அவருடைய பாடுகளின் போதும் மரணத்தின் போதும் அவள் அவருடனே இருந்தாள்.

கருவறையை விட்டு அற்புதமான விதமாய் வெளிவந்த குழந்தை இயேசுவை மடியில் வைத்திருந்த மரியாள்,

அவரை கல்லறையில் அடக்கம் செய்யும் முன்னும் தன் மடியிலேயே வைத்திருந்தாள்.

இயேசு உயிர்த்தபின் முதல் முதல் காட்சி கொடுத்தது அன்னை மரியாளுக்குத் தான்.

இது நற்செய்தி நூல்களில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலையில் 

இயேசு உயிர்த்தது தெரியாமல்

 அவரது உடலுக்கு பரிமள தைலம் பூசுவதற்கென்று கல்லறைக்கு வந்த பெண்களோடு அவள் வரவில்லை

 என்பதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்.

இயேசு விண்ணகம் எய்திய பின்னும் அவருடைய அப்போஸ்தலர்களோடு இருந்து

அவர்களை வழி நடத்தியதும் அன்னை மரியாள் தான்.

பெந்தகோஸ்தே திருநாள் அன்று கத்தோலிக்க திருச்சபையின் பிறப்பின் போதும் இயேசுவின் சீடர்களுக்கு  வழிகாட்டியவள் அன்னை மரியாள் தான்.

கத்தோலிக்க திருச்சபைக்கும் அதன் உறுப்பினர்களாகிய நமக்கும் ஆன்மீகத் தாய் அவள் தான்.

விண்ணகத்திற்கும் மண்ணகத்திற்கும் ஆன்மீக அரசி அவள் தான்.

தாழ்நிலையில் நின்ற தம் அன்னையாகிய அடிமையின் மீது கடவுள் கடைக்கண் நோக்கியதன் விளைவுதான் அவளது இன்றைய நிலை.

அன்னை மரியாளை நமது அன்னையாக ஏற்று அவள் மீது பக்தியோடு வாழ்கின்றோம்.

தாயைப் போல பிள்ளை இருக்க வேண்டும் என்ற நியதியை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அவளது உயரிய நிலைக்கு காரணம் அவளது தாழ்ச்சி தான்.

நாம் விண்ணக நிலையை அடைய வேண்டுமென்றால் மண்ணகத்தில் அவளைப் போல தாழ்ச்சியோடு வாழ வேண்டும்.

நமது தாழ்ச்சியைப் பார்த்து மற்றவர்கள் நாம் மரியாளின் மைந்தர்கள் என்பதை உணர வேண்டும்.

இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொண்டுள்ள அனைவரும் அவரின் அன்னையை தங்கள் அன்னையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தாயை வெறுப்பவர்களால் அவள் பெற்ற பிள்ளையை நேசிக்க முடியாது.

அன்று மரியாளின் மூலமாகத்தான் உலகம் மீட்பரைப் பெற்றது.

இன்றும் நாம் மரியாளின் வழியாக மீட்பரை அடைய வேண்டும்.

தாழ்ச்சி இல்லாததால்தான் அன்று லூசிபர் விண்ணகத்தை இழந்தான்.

தாழ்ச்சி வழி நின்று நாம் விண்ணகத்தை அடைவோம்.

லூர்து செல்வம்.

"இம்மையில் இன்னல்களோடு கூட, வீடு, சகோதரர், சகோதரி, தாய், பிள்ளை, நிலபுலங்களை நூறு மடங்காகவும், மறுமையில் முடிவில்லா வாழ்வையும் பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். (மாற்கு.10:30)

"இம்மையில் இன்னல்களோடு கூட, வீடு, சகோதரர், சகோதரி, தாய், பிள்ளை, நிலபுலங்களை நூறு மடங்காகவும், மறுமையில் முடிவில்லா வாழ்வையும் பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். (மாற்கு.10:30)


  நற்செய்தியை அறிவிக்கும் பொருட்டு 

வீட்டையும், 
 உடன் பிறந்தோரையும், 
பெற்றோரையும் 
பிள்ளைகளையும், 
நிலபுலன்களையும் 
விட்டுவிட்டு வந்தவர்களுக்கு

என்ன கிடைக்கும்?

முதலாவது இவ்வுலக வாழ்வில்  இன்னல்கள் கிடைக்கும்.

இரண்டாவது அவர்கள் யார் மத்தியில் இறைப்பணி ஆற்றுகிறார்களோ அவர்கள் அனைவருமே அவர்களுடைய உறவினர்கள் ஆகி விடுவார்கள்.

மூன்றாவது மறுமையில் நித்திய பேரின்ப வாழ்வு கிடைக்கும்.

தாகம் உள்ளவர்களுக்குத் தண்ணீரும்,

பசித்தோர்க்கு உணவும்,

உடை இல்லாதவர்களுக்கு உடையும்

கொடுப்பவர்களுக்கு நிலைவாழ்வை கொடுக்கும் இறைவன்,

தனது நற்செய்தியை அறிவுப்பதற்காக தனது உறவினர்களைத் தியாகம் செய்து வந்தவர்களை சும்மா விடுவாரா?

சிலுவையைச் சுமப்பதற்காகவே மனுவுரு எடுத்தவர் இறைமகன் இயேசு.

 தனது நற்செய்தியை அறிவிப்பவர்களுக்கு தனது சிலுவையில் பங்கு அளிப்பார்.

இயேசுவுக்காக சிலுவையைச் சுமப்பவர்கள் பாக்கியவான்கள்.

ஏனெனில் இயேசுவின் மகிமையில் அவர்கள் பங்கு பெறுவார்கள்.

இயேசுவுக்கு வெள்ளிக்கிழமை சிலுவை, ஞாயிற்றுக்கிழமை மகிமை.

இயேசுவுக்குப் பிரியமானவர்களுக்கு இவ்வுலகில் சிலுவை,
மறுவுலகில் மகிமை.

இவ்வுலகம் தற்காலிகமானது,
 மறு உலகம் நிரந்தரமானது.

சிலுவை மரணம் வரைக்கும் தான். மகிமை முடிவில்லாதது.

உலக ரீதியாக சிந்திப்பவர்கள் தாங்கள் யாருக்காவது சேவை செய்தால் 

அவர் பதிலுக்கு அவர்களுக்கு எந்தவித கஷ்டமும் வராதபடி காப்பாற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

ஆனால் இயேசு தனக்கு சேவை செய்பவர்களுக்கு இவ்வுலகில் துன்பங்களும், மறு உலகில் நித்திய பேரின்பமும் கிடைக்கும் என்று கூறுகிறார்.

கடவுள் மனிதர்களைப் படைத்தது நித்திய பேரின்ப வாழ்வுக்காகத்தான்.

நித்திய பேரின்பத்தை சிலுவைகளை சுமப்பதில் மூலமாகத்தான் ஈட்ட வேண்டும் என்பது இயேசுவின் சித்தம்.

இறைவனுக்காக தங்களை அர்ப்பணித்து குடும்பத்தில் வாழ்பவர்களுக்கும்,

குடும்பத்தை தியாகம் செய்துவிட்டு தங்களை முழுவதும் இறை பணிக்கு அர்ப்பணித்து வாழ்பவர்களுக்கும் 

உலகில் வாழ் அனைவரும் உறவினர்கள் தான்.

இதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனாலும் குடும்பத்தில் வாழ்பவர்கள் குடும்ப உறுப்பினர்கள் நலனுக்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் குடும்பத்தை விட்டு வெளியேறி இறைவனுக்காக பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கு அகில உலகினரும் குடும்பத்தினர்கள் தான்.

தங்கள் முழு நேரத்தையும் அவர்களுக்காகச் செலவழிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தாங்கள் பிறந்து வளர்ந்த குடும்பமும் அகில உலக குடும்பத்தில் இணைந்து விடும்.

இயேசு எப்படி அனைவருக்கும் பொதுவானவரோ அப்படியே இறைப் பணிக்காகத் தங்களை முற்றிலும் அர்ப்பணித்தவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்.

தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இறை பணிக்காக அர்ப்பணித்தவர்கள்,

தங்கள் உடல், பொருள், ஆவியின் நலனை கடவுள் கையில் ஒப்படைத்து விட்டு 

நற்செய்தி பணிக்காக மட்டுமே வாழ்வார்கள்.

நித்திய பேரின்ப வாழ்வு அவர்களுக்கு உண்டு.

ஆனாலும் அவர்களின் அர்ப்பண வாழ்வின் நோக்கம் இறைவனைத் திருப்திப் படுத்துவது மட்டுமே.

தன்னைத் திருப்திப் படுத்த வாழ்ந்தவர்களை இறைவன் நித்திய பேரின்ப வாழ்வால் திருப்திப் படுத்துவார்.

லூர்து செல்வம்.

Sunday, May 28, 2023

"கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது!" (மாற்கு.10:23)

"கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது!" 
(மாற்கு.10:23)

"தாத்தா, நம்மைப் படைத்த கடவுள்தானே உலகத்தையும், அதில் உள்ள அத்தனை பொருட்களையும் படைத்தார்?

"'அதற்கென்ன இப்போ?"

"அவர் படைத்த யாவும் நன்றாகத் தானே இருந்தன."

"'நன்றாகத் தான் இருந்தன, இருக்கின்றன, இருக்கும்."

"செல்வமும் அவர் படைப்புதானே.
செல்வம் நல்லதென்றால் அதை வைத்திருப்பவர்களும் நல்லவர்களாகத்தானே இருக்க வேண்டும்.

பின் ஏன் கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது!" என்று ஆண்டவர் சொல்கிறார்?"

"'கத்தி நல்லதா, கெட்டதா?"

"நமக்குப் பயன்படுவதற்காக அதை நாம் தான் செய்திருக்கிறோம்.
சமையலறையில் அது இல்லாவிட்டால் காய்கறிகள் வெட்ட முடியாது."

'''கோபம் உள்ளவர்கள் கையில் கத்தி இருந்தால்?"

"எனது அம்மா கோபம் உள்ளவர்கள் தான். நன்றாகக் காய்கறி வெட்டுவார்கள்"

"'காய்கறி வெட்ட பயன்படும் கத்தி தான் யாரையும் குத்திக் கொல்லவும் பயன்படும்."

"நல்லவர்கள் கையில் இருக்கும் கத்தி நன்மைகள் பயன்படும். கெட்டவர்கள் கையில் இருக்கும் கத்தி தீமைக்கு பயன்படும்."

"'அதேபோல் தான் நல்லவர்கள் கையில் இருக்கும் செல்வம் நன்மைக்குப் பயன்படும். கெட்டவர்கள் கையில் இருக்கும் செல்வம் தீமைக்குப் பயன்படும்."

"ஆனால் தாத்தா செல்வம் உள்ளவர்கள் எல்லாம் கெட்டவர்களா?"

"'கொஞ்சம் கவனி. நமது ஆன்மா விண்ணிலிருந்து வந்தது. நமது உடல் மண்ணிலிருந்து வந்தது.

ஆன்மாவுக்கு நலம் தருவது இறைவன் அருளும் அருள்.

உடலுக்கு இன்பம் தருவது மண்ணிலிருந்து வரும் செல்வம்.

கடவுள் மண்ணையும் செல்வத்தையும் படைத்தது நமக்கு இறை அருளை ஈட்டுவதற்கு உதவியாக இருப்பதற்காகத்தான்.

இறைவனுக்காக செல்வத்தை பயன்படுத்துவோர் அருள் உடையவர்கள்.

உடல் இன்பத்திற்காக மட்டும் செல்வத்தை பயன்படுத்துவோர் செல்வமுடையவர்கள்.

கோடிக் கணக்காகப் பணம் இருந்தாலும் அவர்கள் அதை இறைப் பணிக்காக 
செலவழித்தால் அவர்கள் அருள் உடையவர்கள்தான்.

கொஞ்சம் பணம் இருந்தாலும் அதை இறைவனுக்காகச்
செலவழிக்காமல் சுய இன்பத்திற்காக மட்டும் செலவழித்தால் அவர்கள் பொருளுடையவர்கள்.

செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அருள் உடையவர்கள் இறைவனுக்காக மட்டுமே வாழ்வர்.

செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொருளுடையவர்கள் பொருளுக்காக மட்டுமே வாழ்வர்.

பொருளுக்காக மட்டுமே வாழ்வர்களால் விண்ணரசில் நுழைய முடியாது

 ஏனென்றால் அவர்கள் அதைப்பற்றி அக்கறையின்றி பொருளுக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.

செல்வத்திற்காக மட்டும் வாழ்பவர்களைத்தான் இயேசு செல்வமுடையவர் என்று குறிப்பிடுகிறார்.

செல்வத்திற்காக மட்டும் வாழாமல் தங்களிடம் இருக்கும் செல்வத்தை பிறர் உதவி பணிகளுக்காக 
செலவழிப்பவர்கள் விண்ணரசில் நுழைவது எளிது.

தாகமாய் இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுப்பவர்கள்,

பசியாய் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பவர்கள்,

உடை இல்லாதவர்களுக்கு உடை கொடுப்பவர்கள்

தங்களிடம் உள்ள செல்வத்தை பிறர் உதவிக்காக பயன்படுத்துகிறார்கள்.

அவர்கள் விண்ணரசைச்
 சேர்ந்தவர்கள்.

புரிகிறதா?"

"இப்போது புரிகிறது. கடவுளுக்காக வாழ்பவர்கள் கையில் இருக்கும் செல்வத்தை கடவுளுக்காகப் பயன்படுத்துவார்கள்.

தங்களுக்காக மட்டும் வாழ்பவர்கள் தங்கள் கையால் செல்வம் ஈட்டி தங்களுக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள்.

இறைப் பற்று இன்றி, செல்வப்
 பற்று மட்டும் உள்ளவர்கள் இறைவன் வாழும் விண்ணரசில் நுழைய முடியாது. சரியா?"

"'சரி. நம்மிடம் இருப்பதை இறைவனுக்காக மட்டுமே பயன்படுத்துவோம்.

நாம் உண்பதும், உடுத்துவதும் கூட இறைவனுடைய மகிமைக்காக இருக்க வேண்டும்.

நாம் இவ்வுலகில் வாழ்வதே மறு உலகில் வாழ்வதற்கு நம்மைத் தயாரிப்பதற்காகத்தான்.

நம்மிடம் இருக்கும் செல்வத்தை இறைவனுக்காகப் பயன்படுத்துவோம்."

லூர்து செல்வம்.

Saturday, May 27, 2023

"யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்!"(அரு.7:37)

"யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்!"(அரு.7:37)

குழந்தைக்கு பசி எடுத்தால் அது தாயைத்தான் தேடும்.

மகனுக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவன் தந்தையிடமே கேட்பான்.

மாணவனுக்கு பாடத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால் அவன் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரையே கேட்பான்.

ஆன்மாவுக்கு தாகம் எடுத்தால் அது ஆண்டவரையே தேட வேண்டும்.

உடலுக்குத் தாகம் எடுத்தால் நாம் தண்ணீரைக் குடிப்போம்.

தண்ணீர்க் குடிக்காவிட்டால் உடல் இயங்காது.

ஆண்டவரின் அருள் இல்லாவிட்டால் ஆன்மா இயங்காது.

 ஆன்மாவுக்கு இறைவனோடு உறவு இருந்தால் தான் ஆன்மா உயிர் வாழ முடியும்.

அதற்குத் தேவ இஷ்டப் பிரசாதம் என்னும் அருள்  தேவை.

ஆன்மாவில் சாவான பாவம் இல்லாவிட்டால் தான் இந்த அருள் இருக்கும்.

தேவ இஷ்டப் பிரசாதம் என்னும் அருள்  வேண்டுவோர் தங்களது பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற வேண்டும்.

இந்த அருள் உள்ளவர்களுக்கு விண்ணகம் உறுதி.

விண்ணகத்தில் நாம் அனுபவிக்க விருக்கும்  பேரின்பத்தின் அளவு அதிகரிக்க வேண்டுமானால் நாம் பூமியில் வாழும்போது நற்செயல்கள் செய்ய வேண்டும்.

நமது நல்ல செயல்களின் அளவுக்கு ஏற்ப விண்ணகத்தின் பேரின்பத்தின் அளவு இருக்கும்.

விண்ணகத்தில் முடிவில்லா காலம் அதிகமாகப் பேரின்பம் அனுபவிக்க விரும்புவோர்

பூமியில் வாழும்போது 
நற்செயல்கள் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

நற்செயல்கள் செய்ய நமக்கு உதவி வரப்பிரசாதம் என்னும் அருள் வேண்டும்.

இந்த அருளையும் நாம் இறைவனிடமிருந்துதான் பெற வேண்டும்.

அதற்காக இறைவனிடம் மன்றாட வேண்டும்.

அருள் என்பது ஆன்மாவின் உணவு.

"எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்"

என்று நாம் வேண்டும்போது நமது ஆன்மா உயிர் வாழவும் நற்செயல்கள் புரியவும் வேண்டிய அருள் வரங்களை தந்தையிடம் கேட்கிறோம். 

நமது உடலுக்கும் உணவு வேண்டும், ஆன்மாவுக்கும் உணவு வேண்டும்.

 இரண்டுக்கும் வேண்டிய உணவைத்தான் ஆண்டவரிடம் கேட்கிறோம்.

ஆனால் எந்தவித உணர்வும் இல்லாமல் அந்த வார்த்தைகளைச் சொன்னால் அவற்றுக்குப் பொருள் இருக்காது.

ஆன்மாவுக்கு வேண்டிய உணவைக் கேட்கும் உணர்வோடு,

"விண்ணகத் தந்தையே, எங்களது ஆன்மா உயிர் வாழ்வதற்கு வேண்டிய தேவ இஷ்டப்பிரசாதத்தையும்,

நாங்கள் நற்செயல்கள் புரிவதற்கு வேண்டிய உதவி வரப்பிரசாதத்தையும்

எங்களுக்கு போதுமான அளவு தாரும்"

என்ற பொருளோடு நான் செபம் சொன்னால் 

இரண்டு விதமான வரங்களும் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

நாமும் பிறருக்கு உதவி செய்வது போன்ற நற்செயல்களைச் செய்து கொண்டேயிருப்போம்.

விண்ணகத்தில் நாம் 
அனுபவிக்கவிருக்கும் பேரின்பத்தின் அளவு அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

உலகத்தில் வங்கியில் அடிக்கடி பணம் போட்டு நமது வங்கி இருப்பை அதிகரித்துக் கொண்டே போவது போல,

நமது நற்செயல்களால் கிடைக்கும் ஆன்மீக பலனை விண்ணக வங்கியில் அடிக்கடி போட்டுக் கொண்டிருந்தால் நமது பேரின்பத்தின் கையிருப்பு அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.

நமது ஆன்மா தாகமாக இருக்கிறது என்று சொல்லும்போது அருள் தாகத்தைத் தான் குறிக்கிறோம்.

நமது அருள் தாகம் தணிய வேண்டிய அருளைப் பெற  நாம் இறைவனிடம் தான் செல்ல வேண்டும்.


"யாரேனும் தாகமாயிருந்தால் என்னிடம் வரட்டும்!"

என்று நமது ஆண்டவர் இயேசுவே சொல்லுகிறார்.

பிறகு நமக்கு ஏன் கவலை?

இயேசுவிடம் செல்வோம்.

நமது அருள் தாகத்தை தணிக்க தேவையான அருள் நீரைக் கேட்போம்.

ஆண்டவர் தாராள மனம் உள்ளவர்.

அருள் வெள்ளத்தை  நமக்குள் திறந்து விடுவார்.

வேண்டிய அளவு அருள் நீரை அள்ளி அருந்துவோம்.

இறை உறவுடன் நற்செயல்களைக் குறைவில்லாமல் செய்து விண்ணக வங்கியில் செலுத்துவோம்.

நித்திய காலம் பேரின்பத்தில் வாழ்வோம்.

லூர்து செல்வம்

Friday, May 26, 2023

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."(அரு.21:25)

"இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."(அரு.21:25)

பைபிள் மட்டும் போதும், பாரம்பரியம் தேவையில்லை என்பவர்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதற்காகவே எழுதப் பட்டுள்ளது இந்த இறைவாக்கு.

 "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்."

என்று இயேசு தன் சீடர்களுக்கு கட்டளை கொடுத்தார்.

அவர்களும் அவர் சொன்னபடியே செய்தார்கள்.

எல்லோரும் வாய் வழியே போதித்தார்கள்.

சிலர் மட்டும் தங்கள் போதனைக்கு எழுத்து வடிவம் கொடுத்தார்கள்.

அவர்களும் போதித்ததை எல்லாம் எழுதவில்லை.

அதற்கு "இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்."

என்ற அருளப்பரின் வசனமே சான்று.

அருளப்பரும், மாற்கும் இயேசு பிறந்த வரலாற்றை எழுதவில்லை.

ஸ்நாபக அருளப்பர் போதிக்க ஆரம்பித்ததிலிருந்து இயேசுவின் வரலாற்றை ஆரம்பிக்கிறார்கள்.

எழுதப்பட்ட போதனைகள் பைபிள் வடிவிலும்,

எழுதப்படாத போதனைகள் பாரம்பரியம் மூலமாகவும் மக்களுக்கு வந்தன.

எழுதப்பட்ட போதனைகளுக்கு பைபிள் வடிவம் கொடுத்ததே பாரம்பரியம் தான்.

நற்செய்தி நூல்களில் இருப்பதெல்லாம் உண்மை.

ஆனால் எல்லா உண்மைகளும் நற்செய்தி நூல்களில் இல்லை.

நற்செய்தி நூல்களில் இல்லாத உண்மைகள் பாரம்பரியத்தில் உள்ளன.

நற்செய்தி நூல்களையும், பாரம்பரியத்தையும் சேர்த்து ஏற்றுக் கொள்ளாதவர்கள்

கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

கிறிஸ்துவை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்களை எப்படி கிறிஸ்தவர்கள் என்று ஏற்றுக்கொள்வது?

லூர்து செல்வம்.

Thursday, May 25, 2023

"நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்."(அரு.17:18)

"நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்."(அரு.17:18)

விண்ணகத் தந்தை எந்த நோக்கத்திற்காக மகனை உலகிற்கு அனுப்பினாரோ,

அதே நோக்கத்திற்காகத் தான் மகன் தனது சீடர்களை உலகெங்கும் அனுப்பினார்.

அதற்காகத்தான் தனது வல்லமைகளை  அவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

மற்றவர்களது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தார்.

அப்பத்தை தனது உடலாகவும் ரசத்தை தனது ரத்தமாகவும் மாற்றும் வல்லமையைக் கொடுத்தார்.

இறைவனுக்கு மட்டுமே உரிய இந்த வல்லமைகளை அவர்களோடு பகிர்ந்து கொண்டதன் மூலம்,

அவர்கள் மூலமும் இயேசு உலகம் முடியும் மட்டும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்.

நாம் குருக்களை பார்க்கும் போது அவர்களில் இயேசுவைப் பார்க்கிறோம்.

இறைவாக்கை வாசிக்கும் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் அவற்றை நமது குருக்கள் மூலம் நிவர்த்தி செய்து கொள்கிறோம்.

நமது பாவங்களை,

அவை எவ்வளவு பெரிய பாவங்களாய் இருந்தாலும்,

அவர்களிடம் போய் சங்கீர்த்தனம் செய்கிறோம்.

அவர்களும் இயேசு கொடுத்த அதிகாரத்தைக் கொண்டு நமது பாவங்களை மன்னிக்கிறார்கள்.

பாவ சங்கீர்த்தன தொட்டியை அணுகும் போது நமது ஆன்மா எவ்வளவு அழுக்கு உள்ளதாக இருந்தாலும்,

வெளியே வரும்போது வெண்பனி போல் தூய்மையாக இருக்கும்.

குழப்பத்தோடு செல்பவர்கள் சமாதான உணர்வோடு வெளியே வருவார்கள். 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்த அதே இயேசுவை,

நம் முன் கொண்டு வந்து நிறுத்துபவர்கள் நமது குருக்களே.

அன்னை மரியாள் மடியில் சுமந்த அதே இயேசுவை நாம் நமது வாயில் சுமக்கிறோம்.

இயேசு நமது வாய் வழியே நமது வயிற்றுக்குள் பயணித்து நம்மை அவரது தாயாகவே மாற்றுகிறார்.

தாய்க்கு மட்டும் தான் குழந்தையை வயிற்றில் சுமக்கும் உரிமை உண்டு.

அதே உரிமையை நமக்கும் தந்த மரியாளின் மைந்தனை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும்.

திரு விருந்தின் போது நம்முள் வரும் நமது இறைவனை நினைத்துக் கொண்டிருந்தாலே போதும் 

நமது உள்ளங்கள் அவரோடு பேசி வேண்டிய அருள் வரங்களால் தங்களை நிறைத்துக் கொள்ளும்.

சாதாரண உணவை சாப்பிடும் போது அதை அவசரப்படாமல் ருசித்து சாப்பிடுகிறோம்.

விண்ணக உணவை எவ்வளவு ருசித்து உண்ண வேண்டும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

நினைத்துப் பார்த்தாலே எல்லாம் தெரியும்.

விண்ணக வாழ்வையே முன் ருசித்துப் பார்க்கிறோம்.

We have a pretaste of Heaven when we are with Jesus during Holy Communion.

அகில உலகையே படைத்த எல்லாம் வல்ல இறைவனை அப்ப, ரச குணங்களுக்குள் கொண்டுவர தெய்வீக வல்லமை வேண்டும்.

அத்தகைய வல்லமையை உடையவர்கள் நம்மோடு வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும் போது நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைய வேண்டும்.

அவர்களோடு பேசும்போதும், அவர்களைப் பற்றி பேசும் போதும் 

தெய்வீக வல்லமையை தெய்வத்திடமிருந்து பெற்றவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

மரியாதையை கொடுத்தால் மட்டும் போதாது.

அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும்.

அவர்களோடு ஒத்துழைக்கும் போது இயேசுவோடு ஒத்துழைக்கிறோம்.

ஏனெனில் அவர்கள் செய்வது இயேசுவின் பணி.

அவர்கள் மூலமாக இயேசு நமக்கு நற்செய்தியை அறிவிக்கிறார்.

திருப்பலியின் போது அறிவிக்கப்படும் நற்செய்தியை கூர்ந்து கவனித்து,

 அதை உள்வாங்கி,

 உள்ளத்தில் பதித்து,

நமது சொல்லிலும், செயலிலும் அதை வெளிப்படுத்த வேண்டும்.

சொல்லிலும், செயலிலும் அதை வெளிப்படுத்தாவிட்டால் இந்த செய்தியை கேட்பதில் பயன் ஒன்றும் இல்லை.

அவர்கள் மூலமாகவே இயேசு நமது பாவங்களை மன்னிக்கிறார்.

இது விஷயத்தில் நாம் குருக்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆன்மீக காரியங்களில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டால் அவர்களது ஆலோசனையை கேட்டு பயன்பெற வேண்டும்.

எங்களுக்கு பிரச்சனைகளே இல்லை என்று யாராவது சொன்னால் அவர்கள் முழுப் பொய்யர்கள்.

பிரச்சனைகளே இல்லாவிட்டால் ஆன்மா செயலற்று போய்விட்டது என்று அர்த்தம்.

உயிரோடு இருக்கும் வரை பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும்.

 அவற்றுக்கு வேண்டிய ஆலோசனைகளை நாம் பெறுவதற்காகத் தான் 

இயேசுவே குருக்கள் மூலம் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.

திருப்பலியின் போது நமது கண்கள் எப்போதும் பலி பீடத்திலேயே இருக்க வேண்டும்.

நமது உள்ளத்தில் எப்போதும் இயேசுவை பற்றிய எண்ணங்களே ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

அப்போதுதான் நடுப்பூசையின் போது இயேசு தனது ஆன்ம சரீரத்தோடு பீடத்தின் மீது இறங்கி வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கலாம்.

இயேசுவைப் பார்க்கவும், அவரை நமது நாவினால் வாங்கவும் வரம் பெற்ற நாம் எவ்வளவு பாக்கியசாலிகள்!

"அருள் நிறைந்த மரியே வாழ்க!
கர்த்தர் உம்முடனே!''

என்று நாம் அன்னை மரியாளை வாழ்த்தும் போதெல்லாம் அவள் பதிலுக்கு,

"அன்புள்ள மகனே, என் மகன் இயேசு உன்னோடு என்றும் இருப்பாராக"

என்று வாழ்த்துவது போல் தெரிகிறது.

இயேசு நம்மிடம் 
வரும்போதெல்லாம்,

"அன்புள்ள இயேசுவே, உமது அன்னையை உமது அருள் வரங்களால் நிரப்பினீர். 

நானும் உமது அன்னையின் பிள்ளை தானே.

என்னையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளும்."

என்று அவரிடம் கூற வேண்டும்.

இயேசு அவருடைய சீடர்களை மக்களிடமிருந்து தேர்ந்தெடுத்தது போல,

தனது குருக்களை நமது குடும்பங்களிலிருந்து தான் தேர்ந்தெடுக்கிறார். 

நமது குடும்பங்கள் தான் குருத்துவ நடுகைக்கான நாற்றாங்கால்கள். 

நல்ல நாற்றுக்களை தயாரிப்பது நமது கடமை.

நமது கடமையை கடமையுணர்வோடு செய்ய வேண்டும்.

இயேசு தந்தையிடமிருந்து எதற்காக உலகிற்கு வந்தாரோ

அவருக்காகவே அவருடைய சீடர்கள் உலகெங்கும் சென்றார்கள்.

சீடர்கள் என்ன செய்தார்களோ அதையே நமது குருக்களும் செய்கிறார்கள்.

அவர்களோடு ஒத்துழைத்து அவர்கள் சொற்படி நடந்தால் நாம் மீட்பு பெறுவது உறுதி.

நாம் மீட்பு பெற வேண்டும் என்பதுதான் நமது ஆண்டவரின் ஆசை.

அதை நிறைவேற்றுவோம்.

லூர்து செல்வம்.

Tuesday, May 23, 2023

"நான் உலகைச் சார்ந்தவனாயிராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்."(அரு.17:16)

"நான் உலகைச் சார்ந்தவனாயிராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்."(அரு.17:16)

உலகைப் படைத்தவர், ஆனால் உலகைச் சாராதவர் இயேசு.

இயேசு சர்வ வல்லப கடவுள். உலகையும், அதில் வாழும் தாவரங்களையும், உயிரினங்களையும் படைத்தவர்.

ஆறறிவுள்ள உயிரினமான மனிதனைப் படைக்கு முன் அவன் பயன்படுத்துவதற்காக அவற்றைப் படைத்தார்.

உலகை மனிதனுக்காகப் படைத்தார்.

மனிதனைத் தனக்காகப் படைத்தார்.

மனிதனை உலகத்திற்காகப் படைக்கவில்லை, தனக்காகப் படைத்தார்.

"படைத்தார் படைப்பெல்லாம் மனுவுக்காக,

மனுவைப் படைத்தார் தனை வணங்க." என்கிறது தமிழ்.

ஆகவே மனிதன் உலகைச் சார்ந்தவன் அல்ல, கடவுளைச் சார்ந்தவன்.

தன்னைச் சார்ந்தவர்களாகிய மனிதர்களை மீட்பதற்காகவே உலகில் மனிதனாகப் பிறந்தார்.

மண்ணால் ஆன உலகை உரு மாற்றுவதற்காக அவர் மனிதனாகப் பிறக்கவில்லை.

மனிதனின் ஆன்மீக நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவே 
உலகில் மனிதனாகப் பிறந்தார்.

ஆகவே அவரது பணி உலகைச் சார்ந்ததல்ல. 

அவரால் படைக்கப்பட்ட மனிதர்களைச் சார்ந்தது.

இயேசு உலகிற்கு வந்தது நமக்காக. ஆகவே நாம் வாழ வேண்டியது இயேசுவுக்காக.

நாம் இயேசுவைச் சார்ந்தவர்கள், உலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

நமது ஆன்மா விண்ணிலிருந்து வந்தது.

நமது உடல் மண்ணிலிருந்து வந்தது.

ஆகவே நமது ஆன்மா உடலில் வாழ்ந்தாலும் உடலைச் சார்ந்தது அல்ல.


''நான் உலகைச் சார்ந்தவனாயிராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்."

நமது ஆன்மீக வாழ்வுக்கு இயேசுவே முன்மாதிரிகை.

இயேசு உலகைச் சார்ந்தவராக இராதது போல,

நாமும் உலகைச் சார்ந்தவர்களாக இருக்கக் கூடாது.

TV ஒன்று வாங்க திட்டமிட்டு அதற்காகக் கடைக்குப் போவதாக வைத்துக் கொள்வோம்.

முதலாவது TV விற்கப்படும் கடைக்குதான் போவோம்.

TV வாங்க சாப்பாட்டுக் கடைக்குப் போக மாட்டோம்.

 TV கடைக்குப் போய் TVயைப் பற்றி தான் விசாரிப்போம்.

TV கடைக்குப் போய் இட்லி என்ன விலை என்று கேட்க மாட்டோம்.

"கேளுங்கள், கொடுக்கப் படும்" என்று ஆண்டவர் சொன்னார்.

நமது ஆன்மாவை மீட்க வந்த, உலகைச் சாராத ஆண்டவரிடம் போய் உலகைச் சார்ந்த உதவிகளை மட்டும் கேட்டால் அவர் என்ன சொல்வார்?

"தம்பி, நான் உனது ஆன்மாவை மீட்பதற்காகத்தான் உலகிற்கு வந்தேன்.

உனது ஆன்மா மீட்கப்பட என்ன உதவி வேண்டும் என்று கேள்.

உடனே உறுதியாகத் தருகிறேன்.

 நீ என்னைக் கேட்காமலேயே உலகை உனக்காகப் படைத்தேன்,

உலகைச் சார்ந்த, 

ஆன்மாவின் மீட்புக்கு பயன்படும் உதவிகளை 

நீ கேளாமலே உனக்குத் தருவேன்.

உன்னைப் படைத்த எனக்கு உனக்கு என்னவெல்லாம் தேவை என்பது தெரியாதா?

நீ உலகில் வாழ்வது உலகத்திற்காக அல்ல, எனக்காக.

எனக்காக வாழ உனக்கு என்னென்ன உலகப் பொருள்கள் தேவையோ அவற்றையெல்லாம் நீ கேட்காமலேயே உனக்குத் தருவேன்.

ஆன்மா சார்ந்த உதவிகளை கேள்.

நீ செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேள்.

மீண்டும் பாவம் செய்யாதிருக்க உனக்கு வேண்டிய அருள் வரங்களைக் கேள்.

விண்ணக பாதையில் எப்படி நடக்க வேண்டும் என்று கேள்.

அதற்கான உதவிகளையும் கேள்.

உனது ஆன்மாவின் மீட்புக்காக நீ எதை கேட்டாலும் தருவேன்."

ஹோட்டலுக்குள் போய் உட்கார்ந்தாலே போதும்,

சர்வர் வந்து என்ன வேண்டுமென்று கேட்டு,

வேண்டியதைக் கொண்டு வந்து தருவான்.

அதே போல நாம் கடவுளுக்குள் நுழைய வேண்டும்.

அவரது எண்ணங்களோடு நமது எண்ணங்கள் இணைய வேண்டும். அதுதான் செபம்.

இறைவனோடு இணைந்தாலே நமக்கு வேண்டிய அருள் வரங்களை அவரிடம் கேட்கிறோம் என்று தான் அர்த்தம்.

We must be united with God.
Our thoughts must be united with God's thoughts. That is prayer.

கடவுளுடைய எண்ணங்கள் இறைவாக்காக பைபிளில் தரப்பட்டுள்ளன.

எப்போதும் அவரோடு இணைந்தே இருந்தால்,

அவரது அருள் வெள்ளம் நமக்குள் பாயும்.

நமது ஆன்மாவுக்கு வேண்டியதை எல்லாம் நாம் வாயால் கேட்காமலே அள்ளி வரும்.

ஏரிகளை அடுத்த வயல் வெளியில் ஏரித் தண்ணீர் வாய்க்கால்கள் வழியே போய்க் கொண்டிருக்கும்.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் வாய்க்கால் தண்ணீரை வயலுக்குள் திறந்து விட வேண்டியதுதான்.

ஏரித் தண்ணீர் வாய்க்கால் வழியாக வயலுக்குள் பாய்ந்து கொண்டிருக்கும்.

கடவுள் என்ற ஏரியிலிருந்து அருள் வெள்ளம் அவரது எண்ணங்கள் என்ற வாய்க்கால் வழியாகப் பாய்ந்து கொண்டிருக்கும்.

நாம் நமது எண்ணங்களை அவரது எண்ணங்களோடு இணைத்து விட்டால் அவரது அருள் வெள்ளம் நமது ஆன்மாவை நிறப்பிக் கொண்டிருக்கும்.

வீட்டில் அம்மாவிடம் சாப்பாடு வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியமே இல்லை.

Dining table முன் உட்கார்ந்தாலே போதும்.

குறிப்பறிந்து அம்மா சாப்பாடு தருவார்கள்.

நாம் தியானம் வாயிலாக இறைவனுக்குள் நுழைந்தால் போதும்.

அவரது அருள் வெள்ளம் நமக்குள் பாயும்.

இறைவனுக்குள் நுழைய இயேசு 
தந்துள்ள முக்கியமான வழி தேவத்திரவிய அனுமானங்கள்.

ஞானஸ்நானம் வழியே நாம் நுழைந்தபோது நமது சென்மப் பாவம் மன்னிக்கப்பட்டது.

பாவ சங்கீர்த்தனம் வழியே நாம் நுழைந்தால் நமது கர்ம பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்படும்.

திவ்ய நற்கருணை வழியே நாம் நுழைந்தால் இறைவனே நமக்கு உணவாக வருவார்.

உறுதி பூசுதல் வழியே நாம் நுழைந்தால் நாம் ஆன்மீக வாழ்வில் உறுதிப்படுவோம்.

குருத்துவம் வழியே நுழைபவர்கள் மக்களது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும்,

அப்பத்தை இயேசுவின் உடலாகவும், ரசத்தை அவரது இரத்தமாகவும் மாற்றும் வல்லமையையும் பெறுவார்கள்.

மெய் விவாகம் வழியே நுழைபவர்கள் இறைவனின் படைப்புத் தொழிலில் பங்கு பெறுவார்கள்.

அவஸ்தைப் பூசுதல் வழியே நுழைபவர்கள் விண்ணகத்துக்குள் நுழைய வேண்டிய வலிமையைப் பெறுவார்கள்.

இவை எல்லாம் ஆன்மீகம் சார்ந்த வழிகள்.

நாம் மண்ணுலகில் வாழ்ந்தாலும் விண்ணுலகைச் சார்ந்தவர்கள் என்பதை மறக்காமல்,

இயேசு உடன் வருகிற விண்ணக பாதை வழியே நடப்போம்.

நிலைவாழ்வை ஈட்டுவோம்.

லூர்து செல்வம்.

Monday, May 22, 2023

"பரிசுத்த தந்தாய், நாம் ஒன்றாய் இருப்பதுபோல, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் ஒன்றாயிருக்கும்படி உமது பெயரால் அவர்களைக் காத்தருளும்." ( அரு.17:11)

"பரிசுத்த தந்தாய், நாம் ஒன்றாய் இருப்பதுபோல, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் ஒன்றாயிருக்கும்படி உமது பெயரால் அவர்களைக் காத்தருளும்." ( அரு.17:11)

நம்மைத் தனது சாயலில் படைத்த கடவுள் நமது வாழ்க்கையும் தனது சாயலில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

 தம திரித்துவத்தின் மூன்று ஆட்களும் ஒரே அன்பினால் ஒரே கடவுளாக இருக்கிறார்கள்.

ஆட்கள் மூன்று, கடவுள் ஒன்று.

நூற்றுக்கு நூறு தம திரித்துவத்தைப் போல் நம்மால் இருக்க முடியாது.


நாம் ஒவ்வொருவரும் அன்பு உள்ளவர்களாக இருந்தாலும் நமக்குள் இருப்பது ஒரே அன்பு அல்ல.

ஆனால் தம திரித்துவத்தின் மூன்று ஆட்களும் ஒரே அன்பு ஆனவர்கள்.

நமக்குள் அன்பு இருக்கிறது, ஆனால் நாம் அன்பு அல்ல.
We have  love, but we are not love.

But God is love.
கடவுள் அன்பு மயமானவர்.

நாம் கடவுளைப் போல அன்பு மயமானவர்களாக இல்லாவிட்டாலும்,

அன்பினால் பிணைக்கப்பட்டு எல்லோரும் ஒருவர் வாழ்வது போல வாழ்ந்தால் நாம் கடவுளின் சாயலில் வாழலாம்.

கிறிஸ்துவின் அன்பினால் நாம் அனைவரும் பிணைக்கப்பட்டால் அனைவரும் கிறிஸ்துவின் சாயலில் வாழ்வோம்.

கிறிஸ்து தன்னை பகைத்தவர்களையும் அன்பு செய்தார்.

நாமும் நம்மை பகைப்பவர்களை அன்பு செய்தால் நாம் கிறிஸ்துவின் சாயலில் வாழ்கிறோம்.

கிறிஸ்து அவருக்கு விரோதமாக பாவம் செய்கிறவர்களை மன்னிக்கிறார்.

நாமும் நமக்கு விரோதமாக குற்றம் செய்கிறவர்களை மன்னித்தால் நாம் கிறிஸ்துவின் சாயலில் வாழ்கிறோம்.

கிறிஸ்து நமது பாவங்களுக்கு பரிகாரமாக பாடுகள் பட்டார்.

நாம் நமக்கு வரும் துன்பங்களை மற்றவர்களின் பாவங்களுக்கு பரிகாரமாக ஒப்புக்கொடுத்தால் நாம் கிறிஸ்துவின் சாயலில் வாழ்கிறோம்.

ஒரே கடவுள் மூன்று ஆட்களாக இருக்கிறார்.

நாம் அனைவரும் ஒரே அன்பினால் பிணைக்கப்பட்டு ஒரே குடும்பமாக வாழ்ந்தால் பரிசுத்த தம திரித்துவத்தின் சாயலாக வாழ்கிறோம்.

மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவராக இருப்பதால் ஒரே கடவுளாக இருக்கிறார்கள்.

கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும் ஒருவர் உள்ளத்தில் ஒருவர் வாழ்ந்து ஒரே திருச்சபையாக இயங்கும்போது 

 நமது திருச்சபை கடவுளின் சாயலில் செயல்படுகிறது.

கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் திருச்சபையாகிய அவரது ஒரே ஞான உடலின் உறுப்புக்கள்.

ஆட்கள் மூன்று. கடவுள் ஒருவர்.
கிறிஸ்தவர்கள் பலர், திருச்சபை ஒன்று.

"பரிசுத்த தந்தாய், நாம் ஒன்றாய் இருப்பதுபோல, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் ஒன்றாயிருக்கும்படி உமது பெயரால் அவர்களைக் காத்தருளும்."

இயேசு தந்தையிடம் செய்த இந்த செபத்தின் மூலம் 

தந்தையும், மகனும் ஒரே கடவுளாய் இருப்பது போல

அவரை பின்பற்றும் நாம் அனைவரும் ஒரே குடும்பமாய் வாழ வேண்டும் என்று விரும்புகிறார்.

கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினர்கள் கோடிக்கணக்கானோர் உலகெங்கும் இருக்கலாம்.

ஆனால் அனைவருக்கும் ஒரே விசுவாசம், ஒரே நம்பிக்கை, ஒரே இறையன்பு.

அனைவருக்கும் ஒரே தலைவர், பாப்பரசர்.

அனைவரையும் கண்காணிக்க ஒரே விதமான அதிகாரம் கொண்ட குருக்கள்.

ஒரே திருப்பலி.

பலியாக ஒப்புக் கொடுக்கப்படுபவர் அதே கிறிஸ்து.

கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆன்மீக உணவாக உண்பது ஒரே இயேசுவைத்தான்.

அனைத்து கிறிஸ்தவர்களின் உள்ளங்களில் வாழ்வதும் ஒரே இயேசுதான்.

உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆலயங்களின் திவ்ய நற்கருணை பேழையில் வாழ்ந்து கொண்டிருப்பது அதே இயேசுதான்.

பெரிய வியாழன் அன்று இயேசு செபித்த செபத்தின் படி தான் கிறிஸ்தவர்கள் அனைவரும் வாழ வேண்டும்.

இயேசுவும், நாமும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என்பது நமது மனதில் எப்பொழுதும் இருந்தால்,

நமது சொற்களும், செயல்களும் ஒன்று போலவே இருக்கும்.

தந்தை, மகன், தூய ஆவி வாழ்வது போல,

நாமும் கடவுளின் சாயலில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

உண்மையான அன்பு.

உண்மையான அன்பு.

"தாத்தா, ஒரு சிறு கேள்வி.

ஒருவன் 24 மணி நேரமும் இறைவனை செபித்துக் கொண்டேயிருக்கிறான்.

இன்னொருவன் செபிப்பதேயில்ல. ஆனால் 24 மணி நேரமும் யாருக்காவது உதவி செய்து கொண்டேயிருக்கிறான்.

இருவரில் சிறந்தவன் யார்?"

"'24 மணி நேரமும் இறைவனை செபித்துக் கொண்டேயிருப்பவன் தான் சிறந்தவன்."

" அயலானை நேசிக்காமல் செபம் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் எப்படித் தாத்தா ஒருவன் நல்லவனாக முடியும்?"

"'செபித்தல் என்றால் இறைவனோடு ஒன்றித்திருத்தல் என்று அர்த்தம்.

இறைவனை உண்மையிலேயே நேசிப்பவனால் தான் இறைவனோடு ஒன்றித்திருக்க முடியும்.

இறைவனை உண்மையிலேயே நேசிப்பவன் அயலானையும் கட்டாயம் நேசிப்பான்.

அயலானை நேசிப்பவன் அவனுக்கு கட்டாயம் உதவி செய்வான்.

சுருக்கமாக இறைவனை உண்மையாகவே நேசிப்பவன் கட்டாயம் மற்றவர்களுக்கு உதவி செய்வான்.

இறைவனை உண்மையாகவே நேசிக்காதவர்களால் பிறரை உண்மையாக நேசிக்கவும் முடியாது,

 அவர்களுக்கு உதவி எதுவும் செய்யவும் முடியாது."

"ஆனால் கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் கூட மற்றவர்களுக்கு உதவி செய்கின்றார்களே!"

"'உதவி என்று நீ எதைச் சொல்கிறாய்?''

"உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இருப்பிடமும் இல்லாமை போன்ற தேவைகளை நிவர்த்தி செய்கிறார்களே!"

'"முதலில் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு உரிய உண்மையான பொருளை தெரிந்து கொண்டு கூற வேண்டும்.

நீ சென்னையிலிருந்து புறப்பட்டு குற்றாலத்திற்கு சைக்கிளில் வந்து கொண்டிருக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம்.

வரும் வழியில் உள்ளவர்களிடம் எப்படிப்பட்ட உதவியை நீ எதிர்பார்ப்பாய்?"

"குற்றாலத்திற்கு செல்லும் வழியைக் காண்பிக்கூடிய உதவியை எதிர் பார்ப்பேன்."

"'ஒருவன் உனக்கு உண்ண உணவு தந்து விட்டு, தவறான வழியை காண்பித்தால் அது அவன் உனக்கு செய்யக்கூடிய உதவியா?"

"நிச்சயமாக இல்லை. அவன் செய்வது பச்சைத் துரோகம். அது உணவை கொடுத்து சாகடிப்பதற்குச் சமம்."

"'நாம் முழுக்க முழுக்க ஆன்மீகவாதிகள். நாம் ஆன்மிகத்தைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம்.

நமது ஆன்மீக பயணத்தின் நோக்கம் என்ன?"

"இறைவன். இறைவன் மட்டுமே."

"'இறைவனை நம்புகிறவன் மற்றவர்களுக்கு இறைவனை நோக்கிச் செல்ல வழி காட்டுவான்.

அவன் மற்றவர்களுக்கு உணவு உடை போன்ற உலகைச் சார்ந்த உதவிகளைச் செய்வதும் இறைவனை நோக்கி வழி காட்டுவதற்காகத்தான்.

இறைவனை மையமாக வைத்து செய்யக்கூடிய உதவிக்கு பெயர் தான் உதவி.

எப்படி ஆசிரியர் மாணவனுக்கு அவன் எழுதவிருக்கும் தேர்வை மையமாக வைத்து பாடம் நடத்துகிறாரோ,

அதேபோல் நாம் அயலானுக்கு செய்யும் உதவி இறைவனை மையமாக வைத்து இருக்க வேண்டும்.

தேர்வை மையமாக வைக்காமல் மாணவர்கள் மகிழ்ச்சியை மட்டும் மையமாக வைத்து ஆசிரியர் பாடம் நடத்தினால்,

மாணவன் வகுப்பில் மகிழ்ச்சியாக இருப்பான்.

ஆனால் தேர்வு முடிந்து result வரும்போது அழுவான்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் செய்யும் உதவி உலகத்தில் ஒருவனை மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம்.

இவ்வுலகின் வாழ்க்கை முடிந்த பின் அவனது நித்திய கால வாழ்வு எப்படி இருக்கும்?

கடவுளை நம்பாதவர்கள் இதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

உண்மையான உதவி இறைவனுக்காக இறைவனை மையமாக வைத்து செய்யப்படுவதாக இருக்க வேண்டும்.

இறைவனை மையமாக வைத்து உதவி செய்யாதவன் தன்னை மையமாக வைத்து உதவி என்ற பெயரில் செய்வான்.

அவன் செய்வது உண்மையான உதவி அல்ல.

மீட்புப் பெற விரும்புவோர் இரண்டு கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று இயேசு கூறியிருக்கிறார்.

முதலாவது எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசிக்க வேண்டும்.

இரண்டாவது நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

சுருக்கமாக நாம் நம்மைப் படைத்த கடவுளையும்,

 அவர் படைத்த நமது அயானையும் நேசிக்க வேண்டும்.

இதிலிருந்து ஒன்று புரியும், நமது நேசத்திற்கு மையம் கடவுள்.

நம்மைப் படைத்த கடவுள் நம்மை நேசிக்கிறார். ஆகவே நாமும் அவரால் படைக்கப்பட்ட நம்மை நேசிக்கிறோம்.

நம்மைப் படைத்த கடவுள் நமது அயலானையும் படைத்து நேசிக்கிறார்.

 ஆகவே கடவுளால் படைக்கப்பட்ட நாம்

கடவுளால் படைக்கப்பட்ட நமது அயலானையும் நேசிக்க வேண்டும்.

கடவுளுக்காகத்தான் நாம் நமது அயலானை நேசிக்கிறோம்.

கடவுள் இல்லையென்றால் நமக்கு அயலானும் இல்லை.

நமது உடன் பிறந்தவர்களை நாம் ஏன் நேசிக்கிறோம்?

அவர்கள் நம்மைப் பெற்ற அம்மாவின் பிள்ளைகள் என்பதால் தானே.

கடவுள் நமது அம்மா.

நம்மைப் படைத்த கடவுள் தான் நமது அயலானையும் படைத்தார்.

நமக்கும் நமது அயலானுக்கும் இடையே உள்ள உறவுக்குக் காரணம் இருவரையும் படைத்தவர் ஒரே கடவுள் என்பதுதான்.

ஆகவே கடவுளை நேசிப்பவனால் அயலானை நேசிக்காமல் இருக்க முடியாது.

கடவுளை நேசிக்காதவர்களால் அயலானை நேசிக்க முடியாது."

''நாத்திகர்களும் தங்களது பிள்ளைகளை நேசிக்கிறார்களே."

"'அரசு நிர்வகிக்கும் பள்ளியில் படித்து தேர்வு எழுதி வெற்றி பெறுபவருக்கு அரசு சான்றிதழ் கொடுக்கிறது.

ஒரு பையன் அரசு நிர்வாகிக்கும் பள்ளியில் சேராமல் உன்னிடம் படித்து நீ தேர்வு வைத்து நீ அவனுக்கு ஒரு சான்றிதழ் கொடுக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம்.

இரண்டுமே சான்றிதழ்கள் தான்.

ஆனால் எந்த சான்றிதழ் 
செல்லுபடியாகும்?

(Which certificate is valid?)"

"அரசு கொடுத்த சான்றிதழ்."

"'கடவுளை மையமாக
 வைத்திருக்கும் அன்பு தான் கடவுள் முன் செல்லுபடியாகும்.

புரிகிறதா?"

"புரிகிறது. கடவுளை மையமாகக் கொண்ட அன்பு செயல்களுக்கு மட்டுமே நித்திய சம்பாவனை உண்டு.

மற்றவற்றிற்கான மதிப்பு இவ்வுலகோடு சரி.

அன்பு என்று சொல்லப்படுவதெல்லாம் அன்பல்ல.

இறைவனை மையமாக கொண்ட அன்பே அன்பு."

லூர்து செல்வம்.

Friday, May 19, 2023

“அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். (திரு.1:8)

“அகரமும் னகரமும் நானே” என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். (திரு.1:8) 

பாவூர்ச்சத்திரத்திலிருந்து புறப்பட்டு உவரிக்குப் போவதாக வைத்துக் கொள்வோம்.

புறப்பட வேண்டிய இடம் பாவூர்ச்சத்திரம்.

போய்ச் சேர வேண்டிய இடம் உவரி.

வெவ்வேறு இடங்கள்.

செல்லும் வழியில் உள்ள இடங்கள் வெவ்வேறு.

பயணத்தின்போது சரியான வழியே போகா விட்டாலும்,

ஏதாவது ஒரு இடத்தில் தங்கி விட்டாலும்

போய்ச் சேர வேண்டிய இடத்திற்குப் போக முடியாது.

ஆன்மீக வாழ்க்கை என்னும் பயணத்தில் புறப்பட்டது கடவுளிடமிருந்து.

போய்ச் சேர வேண்டியது கடவுளிடம்.

பயணம் செய்ய வேண்டியது கடவுள் வழியேதான்.

தமிழ் மொழியில் முதல் எழுத்து அ.

கடைசி எழுத்து ன.

'அ' வும் நானே, 'ன' வும் நானே என்கிறார்.

அதாவது நமது முதலும் அவரே, முடிவும் அவரே. எல்லாம் அவரே.

அவருக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது.

ஆனால் நமது ஆரம்பமும், முடிவும் அவரே.

உலகியலில் நமது பயணத்தின் ஆரம்பமும், முடிவும் ஒரே இடமாக இருக்க முடியாது.

ஒரே இடத்தில் பயணம் இருக்க முடியாது.

மனிதர்கள் என்ற முறையில் நமது வாழ்க்கையின் ஆரம்பமும், முடிவும் இந்த உலகம்தான்.

இறைவனின் பிள்ளைகள் என்ற முறையில் நமது ஆன்மீக வாழ்க்கைக்கு ஆரம்பம் உண்டு, முடிவு இல்லை.

நமது ஆன்மா எங்கே இருக்கிறதோ அங்கேதான் நமது ஆன்மீக வாழ்க்கையும் இருக்கும்.

ஆன்மா உடலோடு இருக்கும்போது உலகத்தில் ஆன்மீக வாழ்க்கை வாழும். அதற்கு உடலையும் துணையாகச் சேர்த்துக் கொள்ளும்.

ஆன்மீக வாழ்க்கை என்றால் இறைவனிடமிருந்து புறப்பட்டு, இறைவனில், 
இறைவனுக்காக,
 இறைவனை நோக்கிப் பயணிக்கும் வாழ்க்கை.

பயணம் முடிந்தவுடன் நமது ஆன்மா,

உடலைப் பூமியில் விட்டு விட்டு,

 தன்னைப் படைத்தவருடன் சேர்ந்து,

நித்திய காலமும் பேரின்ப வாழ்வு வாழும்.

உலக இறுதியில் பூமியில் விடப் பட்ட சடப் பொருளாலான நமது உடல் இறைவன் வல்லமையால்  Spiritual body யாக மாறி 

நமது ஆன்மாவுடன் சேர்ந்து கொள்ளும்.

இதைத்தான் உயிர்ப்பு என்கிறோம்.

இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்.

நாம் உலக முடிவில் இறைவன் வல்லமையால் உயிர்பிக்கப்படுவோம்.

அதன் பின் நமது ஆன்ம சரீரத்தோடு நிரந்தரமாக விண்ணில் வாழ்வோம்.

உலகில் பயணம் செய்வோர் புறப்பட்ட இடத்திற்கும், போய்ச் சேர வேண்டிய இடத்திற்கும் இடையில் அநேக இடங்களைப் பார்ப்பார்கள்.

ஆனால் அங்கே தங்கள் பயண நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.

எந்த இடத்தைப் பார்த்தாலும் அவர்கள் மனதை நிறைத்துக் கொண்டிருப்பது போய்ச் சேர வேண்டிய இடம்தான்.

இவ்வுலகில் நமது நிலையும் இதுதான்.

நமது ஆன்மீகப் பயணத்தின் போது, நமது உடலையும், உலகையும் சார்ந்த அனுபவங்கள் நிறைய இருக்கும்.

நாம் மூச்சு விடுவது, உண்பது, உடுப்பது, படிப்பது, வேலை செய்வது, ஊதியம் வாங்குவது, செலவழிப்பது போன்றவை நமது உடலையும், உலகையும் சார்ந்த அனுபவங்கள்.

நமக்கு உடல் இருப்பதாலும், நாம் உலகில் வாழ்வதாலும் இந்த அனுபவங்களைத் தவிர்க்க முடியாது.

ஆனால் நமது உள்ளத்தில் நிறைந்திருக்க வேண்டியது இறைவன் மட்டும்.

நமது உலக அனுபவங்களை நமது உள்ளத்தில் வாழும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து விட்டு 

இறைவன் வழியாக, இறைவனை நோக்கிய ஆன்மீக பயணத்தைத் தொடர வேண்டும்.

உலக வாழ்வின் போது நாம் எதைப் பார்த்தாலும், யாரைப் பார்த்தாலும் நமது கண்ணுக்குத் தெரிய வேண்டியது இறைவன் மட்டுமே.

அப்படித் தெரிந்தால் நாம் எதை நேசித்தாலும், யாரை நேசித்தாலும் இறைவனை மட்டுமே நேசிப்போம்.

இறைவனை மட்டுமே நேசித்துக் கொண்டு பயணித்தால், நமது பயணத்தில் பாவம் குறுக்கிட முடியாது.

இறைவனை மட்டும் நேசித்துக் கொண்டு பயணித்தால்,  

நமது இவ்வுலக வாழ்வின் முடிவு 

நம்மை நிரந்தரமான விண்ணக வாழ்வுக்குள் மகிழ்ச்சியுடன் வழியனுப்பும்.

நினைவில் கொள்வோம்:

நாம் புறப்பட்டது இறைவனிடமிருந்து.

பயணிப்பது இறைவன் வழியே.

போய்ச் சேர வேண்டியது இறைவனிடம்.

இறைவனோடு பயணிக்கும் நாம்
இறைவனோடுதான் என்றென்றும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, May 17, 2023

கடவுள் யாருக்கு உதவி செய்கிறார்?

கடவுள் யாருக்கு உதவி செய்கிறார்?

"தாத்தா, கடவுள் யாருக்கு உதவி செய்கிறார்?''

"'ஏன் இந்தத் திடீர்க் கேள்வி?"

"கேள்வி இல்லை, தாத்தா. என் மனதில் உள்ள சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதற்கான நுழைவு வாசல்."

"'என்ன கருத்துக்கள்?''

"God helps those who help themselves என்று ஒரு பழமொழி இருக்கிறது.

God helps those who cannot help themselves. என்று சிலர் சொல்கிறார்கள்.

இதில் எது சரி?"

"'உன் கருத்தைக் கேட்டால் நீ மற்றவர்கள் கூறுவதைக் கூறுகிறாய்."

"நீங்கள் உங்கள் கருத்துக்களைக் கூறிய பின்புதான் என் கருத்துக்கள் சொல்வதற்கு ஏற்றவையா என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும்."

"'உனது அம்மா யாருக்கு உதவி செய்வார்கள்?"

"எங்களுக்கு மற்றும் உதவி கேட்டு வருபவர்களுக்கு."

"'எங்களுக்கு என்றால்?"

"அவர்களுடைய பிள்ளைகளுக்கு. நாங்கள் எதுவும் கேட்காமலேயே குறிப்பு அறிந்து உதவி செய்வார்கள்.

மற்றவர்கள் உதவி கேட்டு வந்தால் கேட்ட உதவியைச் செய்வார்கள்."

"'உங்களுக்கு ஏன் எதுவும் கேட்காமலேயே செய்வார்கள்?"

"ஏனென்றால் நாங்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகள்."

"'கடவுளுக்கு நாம் யார்?"

"அவர் படைத்த பிள்ளைகள்."

"'மனிதர்களே அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு கேளாமலேயே உதவி செய்தால்

 கடவுள் தான் படைத்த பிள்ளைகளுக்கு அவர்கள் கேளாமலேயே உதவி செய்ய மாட்டாரா?"

"ஆனால் இயேசு கேளுங்கள் கொடுக்கப்படும் என்று அல்லவா சொன்னார்!"

"'என்ன கேட்கச் சொன்னார்?

 நமக்கு உடலும், ஆன்மாவும் இருப்பதால்

 நமது தேவைகளை உடலை சார்ந்த தேவைகள், ஆன்மாவை சார்ந்த தேவைகள் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

அவர் கேட்க சொன்னது ஆன்மீக தேவைகளை.

அவர் கற்பித்த செபத்திலிருந்து இதை அறியலாம்.

1. நமது ஆன்மீக உணவாகிய அவருடைய அருள்.
2. பாவ மன்னிப்பு.
3. சோதனைகளில் விழாதிருக்க உதவி.
4. தீமையில் அதாவது பாவத்தில் விழாதிருக்க உதவி.

ஒரு குழந்தை அம்மாவிடம் பால் கேட்டு அழுவது போலவும், எடுக்கச் சொல்லி கைகளை நீட்டுவது போலவும்

ஆன்மீகக் குழந்தைகளாகிய நாம் நமது தாயாகிய இறைவனை நோக்கி வேண்டும் இந்த செபம்

 நாம் ஆன்மீகத்தில் வளர மிகவும் அத்தியாவசியமானது.

உயிரோடு இருப்பவர்கள் இயங்காமல் இருக்க முடியாது.

இதயத் துடிப்பு நின்று விட்டால் உயிர் வாழ முடியாது.

இந்த செபம்தான் நமது ஆன்மாவின் இதயத் துடிப்பு.

அருள் இல்லாத, பாவம் நிறைந்த, சோதனையை வெல்ல முடியாத, தீமைக்குள் மூழ்கிய ஆன்மா

ஆன்மீக உயிரற்றது.

உயிரோடிருக்கும் ஆன்மாவால்
ஆன்மீகத் தேவைகளைக் கேட்டு இறைவனிடம் செபிக்காமலிருக்க முடியாது." 

"நாம் கேட்காமல் கடவுள் இந்த ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்ய மாட்டாரா?"

'"நாம் மூச்சு விடாமல் உயிரோடு இருக்க .முடியாது.

இந்த செபம் நமது உயிர் மூச்சு போன்றது. 

 தாய் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் குழந்தை பால் கேட்டு அழும்.

 குழந்தை பால் கேட்டு அழுவது அதன் உடல் தேவையைப் பூர்த்தி செய்ய.

உடலைத் தந்த தாயிடம் குழந்தை பால் கேட்பது இயல்பு.

ஆன்மாவைத் தந்த இறைவனிடம் மனிதன் அருளைக் கேட்பதும், பாவ மன்னிப்பு கேட்பதும் இயல்பு..

பிறந்தவுடன் குழந்தை அழாவிட்டால் அதன் மேல் தாய்க்கு சந்தேகம் வந்து விடும்.

அருள் கேட்டு நமக்கு அழுகை வராவிட்டால் நம்மீது நமக்கே சந்தேகம் வரவேண்டும்.

கடவுள் நமக்குத் தந்தை மட்டுமல்ல, தாயும் அவர்தான்.

ஆன்மீக நோய் நீக்கும் மருத்துவரும் அவர்தான்.

நம்மோடு மனம் திறந்து பேசும் நண்பரும் அவர்தான்.

நமக்கு எல்லாம் அவர்தான்.

நமது ஆன்மாவுக்கும், உடலுக்கும் உரிய எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய அவர் எப்போதும் நம்மோடு தான் இருக்கிறார்.

ஆன்மீக வாழ்வு தான் நமக்கு உயிர். நமது ஆன்மீக உயிரைக் காக்கும்படி மட்டும் கடவுளிடம் கேட்போம்.

நமது உடல் சார்ந்த உலகத் தேவைகளை அவரே பூர்த்தி செய்வார், நாம் கேளாமலே."


"தாத்தா, நமக்கு உடல் நலம் இல்லாவிட்டால் நாம்தானே மருத்துவரிடம் செல்ல வேண்டும்."

"' ஆன்மீகத்துக்கு மட்டுமல்ல,

அறிவியலுக்கும், மருத்துவத்துக்கும், கல்விக்கும், தொழில் நுட்பத்துக்கும் அவர்தான் கடவுள்.

நாம்தான் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

ஆனால் அவரே நம்மோடிருந்து நம்மை இயக்கிக் கொண்டிருப்பார்.

அங்கேயும் நமது ஒவ்வொரு அசைவையும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டால் 

நமது ஒவ்வொரு அசைவும் ஆன்மீக வாழ்வாக மாறிவிடும்.

என்ன செய்தாலும் கடவுளுக்காக செய்ய வேண்டும்.

என்ன விளைவு ஏற்பட்டாலும் அது கடவுளின் சித்தமாகவே இருக்கும்.

மருத்துவமனையில் நமது நோய் குணமானாலும், ஆகாவிட்டாலும் அது கடவுளின் சித்தமே.

நம்புங்கள், 

செபியுங்கள், 

நல்லதே நடக்கும்.

நம்பிக்கையோடு செபிப்பவர்களுக்கு என்ன நடந்தாலும் அது நல்லதே.

செபத்தின் விளைவாக இறைவன் சித்தம் தான் செயலாகும்.

இறைவன் சித்தம் நன்மை பயக்கக் கூடியதாகவே இருக்கும்.

என்ன நேர்ந்தாலும் அதை மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

"இயேசுவே, தேர்வில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று உம்மிடம் வேண்டிக் கொண்டுதான் கஷ்டப் பட்டுப் படித்தேன்.

ஆனால் வினாத்தாளில் நான் படித்த பகுதியிலிருந்து ஒரு கேள்வி கூட இல்லை.

விளைவு?

தேர்வில் தோற்றேன்.

நான் கஷ்டப் பட்டுப் படித்ததற்கும், தோல்விக்கும் சம்பந்தம் இல்லை.

விளாத்தாள் தான் என் 
தோல்விக்குக் காரணம்.

ஆனாலும் எதுவும் உமக்குத் தெரியாமல் நடக்காது.

நான் படித்த பகுதியிலிருந்து கேள்வி வரக்கூடாது என்பது உமது சித்தம்.

உமது சித்தம் நிறைவேறியதற்கு நன்றி.

எல்லாம் எனது நன்மைக்காகவே இருக்கும்."

"தாத்தா, நாம் தேர்வில் தோற்க வேண்டும் என்பது இறைவனின் சித்தமாக இருக்குமா?"

"'பாவம் தவிர எது வேண்டுமானாலும் இறைவனின் சித்தமாக இருக்கும்."

"ஆக இறைவனின் உதவி, பாவம் தவிர, எந்த உருவில் வேண்டுமானாலும் வரும்.

வாழ்நாள் முழுவதும் நோயால் கஷ்டப்பட வேண்டியிருந்தாலும்

ஆன்மீக ரீதியாக

அது இறைவனின் உதவியாக இருக்க வாய்ப்பு உண்டு. அப்படித்தானே."

"'உறுதியாக. புனித அல்போன்சாவின் வாழ்க்கையை வாசித்துப் பார், தெரியும்."

"God helps those who help themselves"

"God helps those who cannot help themselves."

இந்த கூற்றுகள் சரியா?"

"'முதல் கூற்று ஒரு பழமொழி.

சுயமுயற்சி உள்ளவர்களே   கடவுளின் உதவியைப் பெறுவர்.

ஒரு விவசாயி,

"கடவுளே விவசாயத்தில் நல்ல வருமானத்தைத் தாரும்"  

என்று கடவுளிடம் வேண்டி விட்டு,
  
வயல் பக்கமே போகாமலிருந்தால் எப்படி கடவுள் நல்ல வருமானத்தைத் தருவார்?

கடவுளிடம் வேண்டி விட்டு நாமும் முயற்சி செய்தால் முயற்சி பலன் தரும்.

"என்னைப் பாவத்திலிருந்து காப்பாற்றும், ஆண்டவரே " என்று வேண்டி விட்டு

பாவ சந்தர்ப்பங்களையே தேடி. அலைபவன் எப்படி பாவம் செய்யாதிருப்பான்?

குடிக்க விரும்பாதவன் டாஸ்மாக் பக்கமே போகக் கூடாது.

தன்னிலே இயலாதவன் இறைவனிடம் நம்பிக்கையோடு வேண்டினால் உதவி எந்த வகையிலாவது கிடைக்கும்.

நான்கு மைல்கள் நடந்து பள்ளிக்கூடம் போக வேண்டும்.

எதிர் பாராத விதமாக ஒரு விபத்தில் கால்கள் நடக்க முடியாத நிலையை அடைந்து விட்டன.

பள்ளிக் கூடம் போக வேண்டும். 

நம்பிக்கையோடு இறைவனை வேண்டினால் வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொடுப்பார்."

"உதவி செய்ய கடவுள் எப்போதும் ரெடி.

உதவியைப் பெற நாம் எப்போதும் ரெடியாக இருக்க வேண்டும்."

லூர்து செல்வம்.


Monday, May 15, 2023

பரலோக, பூலோக அரசி.

பரலோக, பூலோக அரசி.

"தாத்தா, தாவீதின் வம்சத்தில் ஏராளமான கன்னிப் பெண்கள் இருந்திருப்பார்கள்.

ஏன் கடவுள் மரியாளைத் தன் தாயாகத் தேர்ந்தெடுத்தார்?"

"'நான் உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். ஏன் உன்னை  உனது அம்மா மகனாகப் பெற்றாள்?"

"தாத்தா, என்னை என் அம்மா மகனாகப் பெறவில்லை.

நான் பிறப்பதற்கு முன் நான் யாரென்றே எனது அம்மாவுக்குத் தெரியாது.

வயிற்றில் உற்பத்தியானது ஆணா, பெண்ணா என்று கூட என் அம்மாவுக்குத் தெரியாது.

ஒரு பையன் பிறந்தான். 
அவன்தான் நான்."

"' உன் அம்மா உன்னைப் பெற்றாள்.

கடவுள் உன்னைப் படைத்தார்.

இவ்விசயத்தில் உனது அம்மாவுக்கும், கடவுளுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?"

"பெரிய வித்தியாசம் இருக்கிறது.  என்னை என் அம்மா மகனாகத் தேர்ந்தெடுக்கவில்லை.

பிறந்த என்னைத் தனது மகனாக ஏற்றுக் கொண்டாள்.

ஆனால் கடவுள் ஒன்றுமில்லாமையிலிருந்து  என்னைப் படைக்கு முன்பே,

நித்திய காலமாக என்னைத் தனது உள்ளத்தில் எண்ணமாகச் சுமந்து,

என்னைப் படைத்தார்.

எழுதுவதற்கும், எழுதப் பட்டதை வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா!

கடவுள் என்னை எழுதினார், எழுதப்பட்ட என்னை அம்மா 'மகனே' என்று வாசித்தாள்."

"'இப்போது நீ கேட்ட கேள்வியை நினைத்துப் பார்."

"தாத்தா, கொஞ்சம் பொறுங்கள்.

எனது கேள்வி தப்பு.

கடவுள் மரியாளைத் தன் தாயாகத் தேர்ந்தெடுக்கவில்லை. 

ஒன்றுமில்லாமையிலிருந்து தன் தாயைப் படைத்தார்.

கடவுளின் தாய் எப்படி இருக்க வேண்டுமோ அப்படிப் படைத்தார். 

கடவுள் பரிசுத்தர். தனது தாயாகப் போகிற மரியாளை பாவ மாசின்றி பரிசுத்தமானவளாகப் படைத்தார்.

ஆதாமின் வம்சத்தில் மரியாளைத் தவிர அனைத்து மனிதரும் சென்மப் பாவத்தோடு தான் உற்பவிக்கின்றனர்.


சென்மப் பாவ மாசு மருவின்றி,
தனது அருளால் நிறைத்து மாதாவைக் கடவுள் படைத்தார்.

சூசையப்பருக்கும், மரியாளுக்கும் திருமண ஒப்பந்தம் ஆன பின்பு தான் கபிரியேல் தூதர் மரியாளை 

"அருள் நிறைந்தவளே வாழ்க"
என்று வாழ்த்தினார்.

ஆனால் மரியாள் தன் தாயின் வயிற்றில் உற்பவிக்கும் போதே அருள் நிறைந்தவளாய் உற்பவித்து விட்டார். 

இது கடவுள் அவளுக்கு அளித்த  விசேச வரம்.

இயேசு வாழ்ந்து கொண்டிருந்த பெண்களிடமிருந்து மரியாளைத் தன் தாயாகத் தேர்ந்தெடுக்க  வில்லை.

தன் தாயாரை அவர்தான் படைத்தார்.

தன் அருளால் நிறைத்து அவளைப் படைத்தார்.

அவளது வாழ்நாள் முழுவதும் பாவ மாசு இல்லாமல் பாதுகாத்தார்.

மரியாள் தனது ஆன்மீக வாழ்வில் கடவுளோடு ஒத்துழைத்தார்.

தன்னையே கடவுளுக்கு அடிமையாக ஒப்புக் கொடுத்தார். 

நம்முடைய ஆன்மீக வாழ்வில் கடவுளுடைய பங்கு நூறு சதவீதம்.

நமது பங்கின் அளவைப் பொறுத்து நமது ஆன்மீகத்தின் அளவு இருக்கும்.

மரியாளின் ஆன்மீகத்தைப்  பொறுத்த மட்டில் கடவுளின் பங்கு
 நூறு சதவீதம்.

மரியாளின் ஒத்துழைப்பும் நூறு சதவீதம்.

மாதா மிகச் சிறிய அளவு கூட தனக்காக வாழவில்லை.

நூறு சதவீதம் கடவுளுக்காக மட்டுமே வாழ்ந்தாள்.

மற்ற எல்லா புனிதர்களையும் விட மாதாவுக்குதான் உயர்ந்த இடம்.

உலகில் இறைவனின் அடிமையாக வாழ்ந்ததால்தான் விண்ணுலகில் பரலோக, பூலோக அரசியாக முடி சூட்டப் பட்டாள்."

'''அருள் நிறைந்த மரியே வாழ்க.

மரியே, உங்களை அருளால் நிறப்பியது கடவுள்.

நிறைந்த அருளோடு வாழ் நாளெல்லாம் வாழ்ந்தீர்கள்.

இறையருளை ஈட்டும் ஒரே நோக்கோடு நாங்கள் வாழ  உங்கள் திரு மகனிடம் எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்."

லூர்து செல்வம்.

Sunday, May 14, 2023

தீமையிலிருந்து நன்மை.

தீமையிலிருந்து நன்மை.


"தாத்தா, கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் கேட்கும் ஒரு கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியவில்லை.

நம்மவர் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலைப் பைபிளில் தேடுவோம்.

கடவுளையே நம்பாதவன் பைபிளை எப்படி நம்புவான்?"

"'முதலில் கேள்வியைச் சொல்லு."

"கேள்வி அவனுடையது. சொல்வதுதான் நான்."

"'தெரியும். சொல்லு."

"விண்ணகத் தந்தைத் தன் ஒரே மகனை உலகிற்கு அனுப்பியதன் நோக்கம் மனிதர்கள் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக பாடுகள் பட்டு, மரிப்பதற்காகத்  தானே.

யூத மதக் குருக்கள் அந்த நோக்கத்தை நிறைவேற்றத் தானே உதவியிருக்கிறார்கள்.

தந்தையின் நோக்கம் நிறைவேற உதவியது எப்படிப் பாவமாகும்?  

தான் எதற்காக உலகிற்கு வந்தாரோ அதற்கு உதவியவர்களை ஏன் மன்னிக்கும்படி இயேசு தந்தையிடம் வேண்டினார்?"

"'உன்னிடம் கேள்வி கேட்டவர்  கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால் கடவுள் சொன்னார் என்பதை நம்பித்தானே கேள்வி கேட்டிருக்கிறார்.

அவர் கேள்வி கேட்டது உனது பதிலை எதிர்பார்த்து அல்ல.

உனது விசுவாசத்தில் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதற்காக."

"அது தெரிகிறது. ஆனாலும் உரிய பதிலைச் சொன்னால் அவர் மனதில் விசுவாச விதையை ஊன்றியது போலிருக்குமே. அதனால்தான் கேட்டேன்."

"'கடவுளின் பண்புகளின் அடிப்படையில்தான் பதில் இருக்கும். ஆனால் பண்புகளுக்கு ஆதாரம் பைபிள் தான்.

கடவுள் அன்பே உருவானவர். 
அளவில்லா ஞானம் உள்ளவர்.
தீமையிலிருந்து நன்மையை வரவழைக்கக் கூடியவர்.

 தனது செயல் திட்டங்களை நித்திய காலமாகத் தீட்டுபவர்.

மனித குலத்தைப் படைக்க வேண்டும் என்று நித்திய காலமாகத் திட்டமிட்டபோதே மனிதர்கள் பாவம் செய்வார்கள் என்று அவருக்குத் தெரியும்.

ஆகவே மனித குலம் பற்றிய அவரது எல்லா திட்டங்களும் நித்தியமானவை.

நாம் ஒரு திட்டம் போட்டால் அதற்கு அது துவக்கம்.

ஆனால் கடவுளுடைய திட்டங்களுக்குத் துவக்கம் இல்லை.

எல்லா திட்டங்களும் அவரது அளவற்ற ஞானத்துக்கு உட்பட்டதாக இருக்கும்.

தீமையிலிருந்தே நன்மையை வரவழைக்கக் கூடியவராகையால் மனிதர்களுடைய பாவத்திலிருந்தே

அவர்களுடைய மீட்பையும் வரவழைக்கத் திட்டமிட்டார்.

நீ இப்படிச் சொன்னவுடனே அவர் வந்து உங்களிடம் சொன்னாரா என்று கேட்பான்.

சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அவர் தந்திருக்கிற புத்தியைப் பயன் படுத்தியே, பைபிள் மூலமாக நாம் தெரிந்து கொண்ட அவருடைய பண்புகளின் அடிப்படையில் நாமே தெரிந்து கொள்ளலாம்.

அவர் படைத்த இயற்கையைப் பார்.

தாவரங்களுக்கான உணவுப் பொருள் எங்திருந்து வருகிறது? அவற்றின் கழிவிலிருந்து தானே.

தாவரங்களை உயிர்ப் பிராணிகள் உண்கின்றன.

அவை போடும் சாணம் கழிவுப் பொருள். ஆனால் அதுவே தாவரங்களுக்கு உணவு.

மனிதன் தன்னுடைய சுதந்திரத்தைப் பயன் படுத்தியே பாவம் செய்தான்.

பாவத்திற்கு மனிதன்தான் பொறுப்பு.

பாவம் கடவுள் முன்னிலையில் தீமை.

அந்த தீமையிலிருந்து நன்மையை வரவழைத்து தீமையை அழிக்கக் கடவுளால் முடியும்.

அதைத்தான் கடவுள் செய்தார்.

யூதர்கள் இயேசுவைக் கொன்றது பாவம். அதற்கு முழுப் பொறுப்பு அவர்கள் தான்.

யூதர்கள் அந்த பாவத்தைச் செய்வார்கள் என்று  நித்திய காலமாகக் கடவுளுக்குத் தெரியும்.

அந்த ஞானத்தின் அடிப்படையில் தான் கடவுள் மீட்பு என்னும் நித்திய திட்டத்தை வகுத்தார்.

முள்ளை எடுக்க நாம் முள்ளைப்  பயன்படுத்துவது போல,

தீமையை அழிக்க யூதர்கள் செய்த தீமையைக் கடவுள் பயன் படுத்திக் கொண்டார்.

யூதர்கள் செய்த தீமைக்குக் கடவுள் பொறுப்பல்ல.

ஆனால் மீட்புக்குக் கடவுள் மட்டுமே பொறுப்பு.

யூதர்கள் செய்த பாவத்தை மன்னிக்கும்படி மகன் தந்தையை வேண்டினார்.

மனிதர்களின் பாவங்களை மன்னிக்கவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.

தீமைக்கு நன்மை செய் என்ற தனது போதனையின் அடிப்படையில்

 தன்னைக் கொன்றவர்களை மன்னிக்கும்படி தந்தையிடம் வேண்டினார்.

பேரப்புள்ள,  புரிகிறதா?"

"புரிகிறது.

யூதர்கள் மனித குல மீட்புக்கு உதவ வேண்டும் என்று திட்டம் போட்டு உதவவில்லை.

அவர்கள் செய்தது தீமை.

அவர்கள் செய்த தீமையிலிருது இயேசு நன்மையை வரவழைத்தார்.

அநேக யூதர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது ரோமை சாம் ராஜ்யத்திலிருந்து அவர்களுக்கான அரசியல் விடுதலையை.

ஆனால் இயேசு வந்தது மனுக் குலம் முழுமைக்கும் பாவத்திலிருந்து விடுதலையைப் பெற்றுத் தர.

இயேசுவுக்கு உதவ வேண்டுமென்று யூத மத குருக்கள் திட்டமிடவில்லை.

இயேசுவை அழிக்க வேண்டும் என்பதே அவர்களுடைய திட்டம்.

இயேசு தன் திட்டத்தை நிறைவேற்ற அவர்களுடைய திட்டத்தைப் பயன் படுத்திக் கொண்டார்.

இன்றும் கூட உலகில் நடக்கும் தீமைகளிலிருந்து இயேசு ஏதாவது நன்மையை வரவழைப்பார் என்று நினைக்கிறேன்."

"'உறுதியாக.

என்ன நன்மையென்று உலக
முடிவில்தான் நமக்குத் தெரியும்.

கடவுளுக்கு நித்திய காலமாகத் தெரியும்.

அவருக்கு எல்லாம் தெரிவதால் தான் என்ன நடந்தாலும் அமைதியாக இருக்கிறார்.

நாம் செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்,

வாழ்க்கையை அவர் கையில் ஒப்படைத்து விட்டு,

அவர் சொற்படி நடக்க வேண்டியதுதான்.

லூர்து செல்வம்.

Saturday, May 13, 2023

"அதுவரையில் அவர்களில் ஒருவர்மீதும் பரிசுத்த ஆவி இறங்கவில்லை. ஆண்டவராகிய கிறிஸ்துவின் பெயரால் ஞானஸ்நானம் மட்டுமே பெற்றிருந்தனர்."(அப்.8:16)

"அதுவரையில் அவர்களில் ஒருவர்மீதும் பரிசுத்த ஆவி இறங்கவில்லை. ஆண்டவராகிய கிறிஸ்துவின் பெயரால் ஞானஸ்நானம் மட்டுமே பெற்றிருந்தனர்."
(அப்.8:16)

"இராயப்பரும் அருளப்பரும் சமாரியர்களிடம்
 போய், பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர்களுக்காக வேண்டினர்.

 ஏனெனில், அதுவரையில் அவர்களில் ஒருவர்மீதும் பரிசுத்த ஆவி இறங்கவில்லை.

 ஆண்டவராகிய கிறிஸ்துவின் பெயரால் ஞானஸ்நானம் மட்டுமே பெற்றிருந்தனர்."

இந்த வசனங்களை மேலெழுந்த வாரியாக வாசித்தால் ஒரு சந்தேகம் வரும்,

"சமாரியர்கள் ஞானஸ்நானம் பெற்றபோது ஏன் அவர்கள் மீது பரிசுத்த ஆவி இறங்கவில்லை?"

தேவத்திரவிய அனுமானங்கள் ஏழு.

முதல் தேவத்திரவிய அனுமானம் ஞானஸ்நானம்.

அடுத்தது, உறுதிப் பூசுதல்.

தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் ஞானஸ்நானம் கொடுக்கப் படுகிறது.

ஞானஸ்நானத்தை மட்டுமல்ல, தனது ஒவ்வொரு செயலையும் தாய்த் திருச்சபை தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தான் ஆரம்பிக்கிறது, செய்கிறது.


தமதிரித்துவத்தின் மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவர் இருக்கின்றனர்.

"நான் தந்தையினுள் இருக்கிறேன், தந்தை என்னுள் இருக்கிறார்." (அரு.14:11)

"பின்பு அவர்கள்மேல் ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

23 எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்:"
(அரு. 20:22, 23)

இயேசு தன் சீடர்கள் மீது ஊதி, "பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்." என்றார்.

ஆக மகனுக்குள் பரிசுத்த ஆவி இருக்கிறார்.

பரிசுத்த ஆவிக்குள் மகன் இருக்கிறார்.

நாம் ஒவ்வொரு தேவத் திரவிய அனுமானம் பெறும்போதும், 

கடவுளைப் பெறுகிறோம், அதாவது தந்தை, மகன், தூய ஆவியைப் பெறுகிறோம்.

நாம் ஞானஸ்நானம் பெறும் போது நம்முள் இருக்கும் கடவுள் நமது சென்மப் பாவத்தை மன்னிக்கிறார்.

தாயும் தந்தையும் சேர்ந்துதான் நம்மைப் பெற்றாலும்

நாம் பிறந்ததை நினைக்கும் போது தாய்தானே ஞாபகத்துக்கு வருகிறாள்.

அதுபோல் நம்மைப் படைத்தவர் கடவுள் தான்.

ஆனாலும் படைத்தவர் என்று சொன்னவுடன் நமக்கு ஞாபகத்துக்கு வருபவர் தந்தை.

மனிதனாகப் பிறந்தது மகன் மட்டுமே. மகன்தான் தனது பாடுகளின் மூலமும், மரணத்தின் மூலமும் நம்மை மீட்டார்.

நம்மைப் பரிசுத்தப் படுத்தி, உறுதிப் படுத்தி, வழி நடத்துபவர் பரிசுத்த ஆவி.

ஆனாலும் எல்லாவற்றையும் செய்பவர் கடவுளே.

பரிசுத்தப் படுத்தபவர் என்று சொன்னவுடனே நமது ஞாபகத்துக்கு வருவது பரிசுத்த ஆவி.

ஆகவே நாம் ஞானஸ்நானம் பெறும்போதே நம்மில் பரிசுத்த ஆவி இறங்கி வந்து சென்மப் பாவத்திலிருந்து நம்மை விடுவித்து ஆன்மாவைப் பரிசுத்தப் படுத்துகிறார்.

நாம் ஏதாவது ஒரு திருமண வீட்டிற்குப் போனால் விழா முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து விடுவோம்.

ஆனால் ஞானஸ்நானம் முடிந்தவுடன் பரிசுத்த ஆவி எங்கும் போய்விட மாட்டார்.

எப்போதும், எங்கும் இருப்பவரால் எங்கே போக முடியும்?

நாம் உறுதிப் பூசுதல் பெறும் போது நம்முள் இருக்கும் பரிசுத்த ஆவி நம்மை விசுவாசத்தில் உறுதிப் படுத்துகிறார்.

புரிந்து கொள்வதற்காக :

பரிசுத்த ஆவி எங்கும் இருக்கும் கடவுள்.

அவரால் படைக்கப் பட்ட அனைவருள்ளும் இருக்கிறார்.

அவரால் படைக்கப் பட்டவர்கள் ஞானஸ்நானம் பெறும்போது அவர்களுடைய சென்மப் பாவத்தை மன்னிக்கிறார்.

அவர்கள் உறுதிப் பூசுதல் பெறும்போது அவர்களை விசுவாசத்தில் உறுதிப் படுத்துகிறார்.

அதன் பின்னும் தொடர்ந்து அவர்களுடன்தான் இருப்பார்.

நாம் பாவம் செய்யும்போதும் நம்முடன் தான் இருப்பார், நமது பாவங்களை மன்னிப்பதற்காக.

நாம் புண்ணியம் செய்யும்போதும் நம்முடன் தான் இருப்பார், நம்மைப் புண்ணியத்தில் உறுதிப் படுத்துவதற்காக.


'இறங்கவில்லை' என்ற வார்த்தைக்கு அகராதிப் படி அர்த்தம் எடுக்கக் கூடாது.

நட்சத்திரங்களில் இருக்கும் அதே கடவுள் தான் பூமியிலும் இருக்கிறார்.

பெந்தே கோஸ்தே திருநாள் அன்று தான் தனது சீடர்களை விசுவாசத்தில் உறுதிப் படுத்தி,

அவர்களை போதிக்க அனுப்ப வேண்டும் என்பது இயேசுவின் திட்டம்.

அதனால்தான் உறுதிப் படுத்தப் படாத இராயப்பர் அவரை மூன்று முறை மறுதலித்தார்.

பரிசுத்த ஆவியால் உறுதிப் படுத்தப்பட்ட பின்பு இயேசுவுக்காகத் தன் உயிரையே கொடுத்தார்.

நாம் பாவம் செய்யும்போது நமக்கும், கடவுளுக்கும் உள்ள ஆன்மீக உறவு முறிந்து விடுகிறதே,

அப்போது கடவுள் நம்மை விட்டு போய்விடமாட்டாரா?

கடவுள் மாறாதவர் என்று நமக்குத் தெரியும்.

கடவுள்  எந்த உறவுடன் நம்மைப் படைத்தாரோ அந்த உறவை ஒருபோதும் முறிக்க மாட்டார்.

பாவம் செய்யும்போது கடவுளோடு நமக்குள்ள உறவை நாம் தான் முறித்துக் கொள்கிறோம்,

பாவமன்னிப்புப் பெற்று கடவுளோடு சேர்ந்து கொள்கிறோம்.

பிரிவதும், சேர்வதும் நாம்தான். 

கடவுள் நிலையில் நித்திய காலமும் மாற்றம் இருக்காது.

லூசிபெரைப் படைக்கும்போது அவனை எப்படி நேசித்தாரோ
அதே போல் தான் இப்போதும் அவன் சாத்தான் ஆனபின்னும் நேசிக்கிறார்.

இன்னும் நேசித்துக் கொண்டிருப்பார்.

ஆனால், பதிலுக்குச் சாத்தானால் நேசிக்க முடியாது.

நமது மீட்பு விசயத்திலும் இயேசு நமக்காகச் செய்ய வேண்டியதை நூற்றுக்கு நூறு செய்து விட்டார்.

அவர் செய்ததை ஏற்றுக் கொள்ள வேண்டியது நாம்தான்.

நாம் அவரது பாதங்களை இறுகப் பற்றிக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

Friday, May 12, 2023

"என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள்: உங்களையும் துன்புறுத்துவார்கள்" (அரு.15:20)

."என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள்: உங்களையும் துன்புறுத்துவார்கள்"
(அரு.15:20)

கிறிஸ்தவம் ஒரு அரசியல் கட்சி அல்ல.

உலகியல் ஆட்சி சார்ந்த உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்பவர்கள், உரிமைகள் மறுக்கப்பட்டால் போராடுபவர்கள் அரசியல் கட்சியினர்.

போராட்டங்களின் போது உயிர் துறப்பவர்களும் இருக்கிறார்கள்.


ஆனால் கிறிஸ்தவர்கள் இயேசுவின் சீடர்கள்.

குரு எவ்வழி, சீடர்கள் அவ்வழி.

இயேசு உலகைச் சார்ந்த அரசியல் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்யவில்லை.

விண்ணுலகைச் சார்ந்த நற்செய்திகளை அறிவித்தார்.

அறிவிப்பதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அறிவிப்பவர்கள் உள்ளத்தைத் தொடுவர்.

பிரச்சாரம் செய்பவர்கள் உணர்ச்சிகளைத் தூண்டுவர்.

அறிவிப்பில் உண்மை இருக்கும்.
பிரச்சாரத்தில் உண்மையை விட உணர்ச்சிகள் அதிகம் இருக்கும்.

கிறிஸ்து நற்செய்தியை அறிவித்தார். அதன் விளைவாகப் பாடுகள் பட்டு பலியிடப் பட்டார்.

அரசியல் பிரச்சாரத்தில் எதிரிகளை அழிப்பதே அதிக முக்கியத்துவம் பெறும்,

அதற்காக எந்த முறையையும் கையாள்வார்கள்.  .

அரசியலில் பலியாவோர் வாழ்க்கை அதோடு முடிந்து விடும்.

ஆனால் கிறிஸ்துவை அறிவிப்பதில் பலியாவோர் நித்தியமாக வாழ்வர்.

நற்செய்தி அறிவிப்பினால் துன்புறுத்தப் படுவோர் அதற்காகக் கவலைப் படக் கூடாது.

ஏனெனில் இயேசுவும் நற்செய்தி அறிவிப்பினால் துன்புறுத்தப் பட்டார்.

குருவுக்கு நேர்ந்ததுதான் சீடர்களுக்கும் நேரும்.

 நற்செய்தி அறிவிப்பினால் நமக்குத் துன்பம் வந்தால் நாம் மகிழ வேண்டும்,

ஆண்டவருக்கு ஏற்பட்டது நமக்கும் ஏற்பட பாக்கியம் கிடைத்ததற்காக.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சொன்னது இன்று இந்தியாவில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

தன்னை அறிவிப்பவர்களுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று இயேசு சொன்னது இந்திய கிறிஸ்தவர்களுக்கும் நடக்க ஆரம்பித்திருக்கிறது.

கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப் படுகின்றனர்.

கிறிஸ்தவ கோவில்கள் தீக்கு இரையாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதே நிலை நீடித்தால் இந்தியாவிலிருந்தும் ஆயிரக் கணக்கான வேத சாட்சிகள் மோட்சத்திற்குள் நுழைவார்கள்.

இதற்காக வருத்தப் படலாமா?

ஒரு மாதம் கழித்து கிடைக்க வேண்டிய இலாபம் உடனே கிடைத்து விட்டால் யாராவது வருத்தப் படுவார்களா?

ஆன்மீக ரீதியாக நமது நிலையும் அதுதான்.

ஆன்மீகத்தில் நம்மை எதிர்ப்பவர்களே நம்மை சீக்கிரம் நிலைவாழ்வுக்குள் அனுப்ப முயன்று கொண்டிருக்கிறார்கள்.

அதற்காக நாம் வருத்தப் பட வேண்டாம்,

அவர்களுக்காக வேண்டிக் கொள்வோம்.

இயேசு தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கும் படி  தந்தையிடம் வேண்டிக் கொண்டார்.

நாமும் அதையே செய்வோம்.

லூர்து செல்வம்.

Wednesday, May 10, 2023

"நான் உங்களிடம் அன்புகூர்ந்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை." (அரு.15:12)


"நான் உங்களிடம் அன்புகூர்ந்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை." (அரு.15:12)

"தாத்தா, "உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்புகாட்டுவாயாக"என்றுதானே இயேசு போதித்தார்."

"'ஆமா. அதில் என்ன சந்தேகம்?"

"ஆனால் அதே இயேசு

"நான் உங்களிடம் அன்புகூர்ந்ததுபோல நீங்களும் ஒருவர் ஒருவரிடம் அன்புகூரவேண்டுமென்பதே எனது கட்டளை." என்று கூறுகிறாரே."

"'அதில் உனக்கு என்ன பிரச்சனை?"

"எனக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை.

நாம் எப்படி அயலானை அன்பு செய்ய வேண்டும்?

நம்மீது நாம் அன்பு காட்டுவதுபோலா?

அல்லது.

நம்மிடம் கடவுள் அன்பு கூர்வது போலா?"

"'இப்போது உன்னை நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.

நம் மீது நாம் எப்படி அன்பு காட்ட வேண்டும்?

இது தெரிந்தால்தான் நாம் பிறன் மீது அன்பு காட்ட வேண்டும் என்பது தெரியும்."

"தாத்தா, இரண்டு வசனங்களுமே ஒரு வரை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதைப் பற்றிதான்.

ஒவ்வொருவரும் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும்.

நான் உங்களை அன்பு செய்ய வேண்டும்.

நீங்கள் என்னை அன்பு செய்ய வேண்டும்.

அப்படிப் பார்த்தால்,

நம்மிடம் கடவுள் அன்பு கூர்வது போல், நம்மீது நாம் அன்பு காட்ட வேண்டும்.

அதே போல் நம் அயலான் மீதும் 
அன்பு காட்ட வேண்டும்."

"'கரெக்ட். நம் மீது நாம் காட்டும் அன்பு, கடவுள் நம் மீது காட்டும் அன்பைப் போன்றுதான் இருக்க வேண்டும்.

கடவுளின் அன்பு தன்னலம் அற்றது.

தனது நலனுக்காக அவர் நம்மைப் படைக்கவில்லை.

நாம் இல்லாமலே அவர் பரிபூரணமானவர்.

தனது நலனுக்காக அவர் மனிதனாகப் பிறக்க வில்லை.

நமது நலனுக்காகவே அவர் மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு மரித்தார்.

கடவுளின் அன்பு தன்னலம் அற்றதாக இருப்பது போலவே நம் மீது நாம் கொண்டுள்ள அன்பிலும் தன்னலம் இருக்கக் கூடாது.

நாம் நம்மை நேசிக்க வேண்டியதே கடவுளுக்காகத் தான். கடவுளின் மகிமைக்காக வாழ்வதற்காகத்தான்.

நாம் நம்மை நேசிக்க வேண்டியதே கடவுளுக்காக பிறர் பணி புரிய வாழ்வதற்காகத் தான்.

இப்படி நாம் நம்மை நேசிப்பது போல நமது அயலானையும் நேசிக்க வேண்டும்..

தன்னலம் இன்றி,   இறைவனின் மகிமைக்காக நமது அயலானை நேசிக்க வேண்டும்."

"அதாவது அன்பு வட்டத்துக்குள் கடவுளோடு, அவரால் படைக்கப் பட்ட அனைவரும் இருக்கிறோம்.

கடவுள் அன்பு மயமானவர்.
God is love.

நாம் நமது அன்பை இறையன்போடு இணைத்து, 

அதனால்தான் நாம் இயக்கப் பட வேண்டும்.

இறையன்பு நம்முள் இருந்து, நம்மை வாழவைக்க வேண்டும்.

இயேசுவுக்காக மட்டுமல்லாமல் இயேசுவாகவே வாழ வேண்டும்.

இயேசுவின் அத்தனை பண்புகளும் நம்மில் பிரதிபலிக்க வேண்டும்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் இயேசுவைப் பார்க்க வேண்டும்."

"அந்த இரண்டு வசனங்களிலும் இவ்வளவு பொருளா?"

"'இயேசு என்றால் அன்பு. 
அன்புக்குள் நாம் அனைவரும்.

தண்ணீரில் விழுபவர்கள் நனையாமல் இருக்க முடியாது.

நனைப்பது தண்ணீரின் இயல்பு. 

அன்பு செய்பவர்கள் பணி புரியாமல் இருக்க முடியாது.

பணி புரிவது அன்பின் இயல்பு.

தன்னலம் இன்மை,

தியாக உணர்வு,

மன்னிக்கும் தன்மை,

தீமைக்கு நன்மை,

பொருள் பற்றின்மை,

இறைவனின் மகிமைக்காக
ஆகியவை உண்மையான பணியின் இயல்புகள்.

இயேசு நம்மை நேசிப்பது போல நாமும் ஒருவரையொருவர் நேசிப்போம்.

லூர்து செல்வம்.

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன்."(அரு.15:9)

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன்."
(அரு.15:9)

இயேசுவைப் பற்றி வாசிக்கும் போதும், சிந்திக்கும்போதும், பேசும் போதும், அவர் பெயரால் செயல் புரியும்போதும்

அவரின்   இரண்டு முக்கிய தன்மைகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

1. அவர் மாறாத கடவுள்.
2. 'மாறக் கூடிய நமது' கடவுள்.
(மாறக்கூடிய நமது மாறாத கடவுள்.)

அவர் பரிபூரணராக இருப்பதால் மாற முடியாது.

நித்திய காலமும் அளவில்லாதவராக இருப்பதால் அவர் வளரவும் முடியாது, தளரவும் முடியாது.

அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அவருடைய அளவில்லாத ஞானத்தின் அடிப்படையில் எடுக்கப் படுவதால்,

அவர் தனது முடிவுகளில் மாற மாட்டார்.

அவர் நமக்குத் தந்திருக்கும் வாக்குறுதிகளை அணு பிசகாமல் காப்பாற்றுவார்.

அவர் சொல்கிறார்,

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன்."

அவர் நம் மீது கொண்டுள்ள அன்பை பரிசுத்த தமதிரித்துவத்துக்குள் நிலவும் அன்புக்கு ஒப்பிடுகிறார்.

தந்தை மகன் மீது கொண்டுள்ள அன்பு அளவு கடந்தது. மகன் நம் மீது கொண்டுள்ள அன்பும் அளவு கடந்தது. 

தந்தை மகன் மீது கொண்டுள்ள அன்பு நித்தியமானது. 

நாம் துவக்கம் உள்ளவர்களாக இருந்தாலும் அவர் நம்மீது கொண்டுள்ள அன்பு நித்தியமானது. 

அவர் நம் ஒவ்வொருவரையும் நம்மீது நித்திய காலமாக அன்பு செய்கிறார்.

நம்மைப் படைத்து விட்டு அன்பு செய்யவில்லை. நம்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகவே நம்மைப் படைத்தார்.

நித்திய காலமாக அவர் மனதில் எண்ணமாக இருந்த நாம்,

அவர் குறிப்பிட்டு வைத்திருந்த காலக் கட்டத்தில் உண்மையாகப் பிறந்தோம்.

அவர் நம்மீது வைத்திருந்த உறவு நித்தியமானது.

2. மாற முடியாத கடவுள் நம்மை மாறக் கூடியவர்களாகப் படைத்தார்.

நாம்  அளவு உள்ளவர்களாக இருப்பதாலும்,  அவர்  நம்மைப் பரிபூரண சுதந்திரத்தோடு  படைத்ததாலும்   நாம் மாறுகிறோம்.

பாவமின்றி படைக்கப்பட்ட நமது முதல் பெற்றோர் தங்கள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன் படுத்தியமையால் பாவிகளாக மாறினார்கள்.

நமது சுதந்திரத்தைச் சரியாகப் பயன் படுத்தினால் பாவிகளாகிய நாம் பரிசுத்தர்களாக மாறலாம், இயேசுவின் உதவியோடு.

மேய்ச்சலுக்காக மாட்டைப் புல்வெளியில் விடுபவர்கள், 

ஒரு நீளக் கயிற்றின் ஒரு நுனியில் மாட்டைக் கட்டி, கயிற்றின் மறு நுனியில் அசையாத அளவிற்கு பூமியில் அடிக்கப்பட்ட ஆப்பில் கட்டிவிடுவார்கள்.

கயிற்றின் நீளத்திற்கு உட்பட்ட பகுதியில் மட்டும் மாடு மேயும்.

அதற்கு அப்பால் அதால் போக முடியாது.

நாம் இயேசுவோடு அன்பு என்னும் கயிற்றால் பிணைக்கப் பட்டிருப்பதால் நாம் தொலைய மாட்டோம்.

கயிறு அறுந்தால் தான் பிரச்சனை.

ஆகவே நாம் எப்போதும் அவரை அன்பு செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

அசையக் கூடிய பொருள் கீழே விழாமலிருக்க வேண்டுமானால் அது அசையாத பொருளைச் சார்ந்திருக்க வேண்டும்.

அசையாத சுவற்றின் மீது நாம் சாய்ந்து கொண்டிருந்தால் நாம் கீழே விழ மாட்டோம்.

ஒரு பைக்கின் மீது சாய்ந்து கொண்டிருந்தால் பைக் காரன் பைக்கை எடுக்கும் போது சாய்ந்து விடுவோம்.

ஆன்மீகத்தில் நாம் கடவுளைச் சார்ந்திருந்தால் நாம் கீழே விழ மாட்டோம்.

உலகப் பொருட்களைச் சார்ந்திருந்தால் விழுவது உறுதி.

ஆகவே நமது சிந்தனையிலும், சொல்லிலும், செயலிலும் கடவுளையே சார்ந்திருக்க வேண்டும்.

கடவுள் மாறாதவர்.

 நாம் மாறக் கூடியவர்கள். நம்மால் வளரவும் முடியும், தளரவும் முடியும்.

தளராமல் வளர வேண்டுமானால் வளர்ச்சிக்கு வேண்டிய அருள் வரங்களின் வற்றாத ஊற்றாகிய கடவுளைத்தான் முழுவதும் சார்ந்திருக்க வேண்டும்.

''கேளுங்கள், கொடுக்கப் படும்." என்று இயேசு சொல்லியிருக்கிறார்.

அவர் மாறாதவராக இருப்பதால் சொன்ன சொல்லைக் கட்டாயம் காப்பாற்றுவார்.

நமது ஆன்மீக வளர்ச்சிக்கான அருள் வரங்களை நாம் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்.

அவரும் தந்து கொண்டேயிருப்பார்.

கேளாமலே தரலாம் அல்லவா என்று கூறலாம்.

நாம் கேளாமலே தான் நம்மை ஒன்றும் இல்லாமையிலிருந்து படைத்தார்.

நாம் கேளாமலே தான் நாம் திரும்பவும் ஒன்றுமில்லாமைக்குத் திரும்பாதபடி ஒவ்வொரு வினாடியும் நம்மைப் பராமரித்து வருகிறார்.

அவர் நம்மை ஒரு வினாடி மறந்தால்கூட நாம் ஒன்றுமில்லாமைக்குத் திரும்பி விடுவோம்.

ஆனால் நம்மை ஒரு வினாடி கூட மறக்க மாட்டார்.

பிறகு ஏன் கேட்கச் சொல்கிறார்?

நாம் அவரோடு பேசிக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அவர் நம்மோடு உறவில் இருப்பது போல, நாமும் அவரோடு உறவில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நம்மை அவருடன் பேசச் சொல்கிறார்.

உரையாடல் உறவை வளர்க்கும்.

நாம் ஒவ்வொரு வினாடியும் கடவுளோடு இணைந்திருந்தால் ஆன்மீகத்தில் வளர்ந்து கொண்டேயிருப்போம்.

நண்பர் ஒருவர் கேட்கிறார்,

"நம்மை இயேசு அளவில்லாத விதமாய் நேசித்தால் நமக்கு ஏன் துன்பங்களை வர விடுகிறார்?"

நம்மை அளவில்லாத விதமாய் நேசிப்பதால்தான்.

"தந்தை என்மேல் அன்புகூர்ந்ததுபோல நானும் உங்கள்மேல் அன்புகூர்ந்தேன்."

இயேசு மேல் அன்புகூர்ந்த தந்தை என்ன செய்தாரோ

அதையே இயேசு நமக்குச் செய்கிறார்.

"தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு

 அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்."
(அரு.3:16)

தந்தையும், மகனும் ஒரே கடவுள்தான்.

தந்தை மகன் மீதும், தான் படைத்த உலகின் மீதும் அளவு கடந்த அன்பு உள்ளவர்.

தந்தை உலகின் மீது எவ்வளவு அன்பு கொண்டிருந்தார் என்றால்,

தன் ஒரேபேறான மகனையே அதன் மீட்புக்காக பாடுகள் படவும், சிலுவையில் மரிக்கவும் உலகிற்கு அனுப்பினார்.

கடவுள் மனிதர் மீது கொண்டுள்ள அன்பு அளவற்றது.

மனிதர் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாகத்தான்

தந்தை தான் அளவு கடந்த விதமாய் நேசித்த ஒரே மகனை

 பாடுகள் பட்டு மரித்து மனிதர்களை மீட்க உலகத்திற்கு அனுப்பினார்.

இயேசுவின் பாடுகளுக்கு காரணமே தந்தையின் அளவு கடந்த அன்பு தான்.

நமது கஷ்டங்களின் மூலம் நாம் சிலுவையை சுமக்க வேண்டும் என்பதன்  காரணமும்

இயேசு நம் மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பு தான்.

நமக்கு சிலுவைகள் வரும்போது இயேசு நம் மீது கொண்டுள்ள அன்புக்காக அவருக்கு நன்றி கூற வேண்டும். 

இயேசு தான் சுமந்த சிலுவையை நமக்காக ஒப்புக் கொடுத்தது போல

நாமும் நமக்கு வரும் சிலுவைகளை மற்றவர்களுக்காக ஒப்புக்கொடுக்க வேண்டும்.

நாம் எந்த அளவுக்கு நமக்கு வரும் சிலுவைகளை மற்றவர்களுக்காக தந்தைக்கு ஒப்புக்கொடுக்கிறோமோ

அந்த அளவுக்கு நமக்கு கடவுள் மீதும், அயலான் மீதும் அன்பு இருக்கிறது என்று அர்த்தம்.

மாறாத கடவுளின் பாதங்களை இறுக பற்றிக் கொண்டால்தான் 

நாம் ஆன்மீக வளர்ச்சியை நோக்கி மாறுவோம்.

நமது இறுதி வினாடி வரை,

 அதாவது மரணம் வரை,

 நாம் வளர்ச்சியை நோக்கி மாறிக்கொண்டேயிருக்க வேண்டும்.

மரணம் வழியாக விண்ணகத்துக்குள் சென்றவுடன் மாறாத இறைவனோடு நாமும் ஒன்றித்துவிடுவோம்.

முடிவில்லா காலம் நித்திய பேரின்பத்தில் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, May 9, 2023

"என் கிளைகளில் கனிகொடாத எக்கிளையையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் கிளையையோ மிகுந்த கனி தரும்படி கழித்துவிடுவார்."(அரு.15:2)

"என் கிளைகளில் கனிகொடாத எக்கிளையையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் கிளையையோ மிகுந்த கனி தரும்படி கழித்துவிடுவார்."
(அரு.15:2)

"தாத்தா, என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

கஷ்டப்பட்டு நட்டு, உரம் போட்டு, தண்ணீர் விட்டு வளர்த்த ரோஜா செடிகளை இப்படி வெட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்."

"' பாருடா, செடிகளையா வெட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறேன்?"

''கிளைகளை வெட்டிப் போட்டாலென்ன, செடிகளை வெட்டிப் போட்டாலென்ன, எல்லாம் ஒண்ணுதான."

"'ஏண்டா, தலை முடியை வெட்டுவதும், தலையை வெட்டுவதும் ஒண்ணா?

ரோஜா செடிகளை ஒரு வாரம் கழித்துப் பார்."

(ஒரு வாரம் கழித்து)

"தாத்தா, தாத்தா, இங்க பாருங்க, நீங்க வெட்டி விட்ட ரோஜா செடிகள் எல்லாம் நல்லா தளிர்த்து, நிறைய மொட்டு வச்சிருக்கு.

இன்னும் இரண்டு, மூன்று நாட்களில தோட்டம் முழுவதும் எல்லா செடிகளிலும ரோஜா பூக்களா பூத்துக் குலுங்கும்.

தாத்தா கொப்புகளைக் கத்தரித்து விடும்போது தோட்டமே போய்ட்டுன்னு நினைச்சேன்.

ஆனால் இப்போதான் தோட்டம் தோட்டமாயிருக்கு."


"'கனி தரும் கிளையையோ மிகுந்த கனி தரும்படி கழித்துவிடுவார்." என்று ஆண்டவர் சொன்னதன் கருத்து உனக்கு விளங்குதா?"

"நல்லா விளங்குது தாத்தா.

நம்மிடமிருந்து உலகைச் சார்ந்த பொருட்களை கடவுள் நம்மை விட்டு கத்தரித்து விடுவதே

நாம் ஆன்மீகத்தில் தளிர்த்து, பூத்து, கனி தர வேண்டும் என்பதற்காகத்தான் என்பது புரிகிறது.

ஆன்மாவில் கடவுளுக்கேற்ற உணர்வுகள் நிறைய இருக்கும்.

ஆனால் வெளியே தெரியக் கூடிய உடலில் உள்ள சில அம்சங்கள் உள் உணர்வுகளை வெளியே விடாதபடி தடுத்துக் கொண்டிருக்கும்.

உடலைச் சார்ந்த ஆன்மீக எதிரிகளை கடவுள் அழிக்கும்போது உடலுக்கு வலிக்கலாம் 

ஆனால் அவற்றின் அழிவுதான் ஆன்மீகத்தின் வளர்ச்சி."

"நான் சொன்னதின் அடிப்படையில் கடவுள் என்றால் யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.''

"'நீ கண்டுபிடித்ததை நீயே சொல்லு."

"வெளியே இருப்பதை கட் பண்ணி உள்ளே இருப்பதை வெளியே கொண்டு வருபவர் கடவுள்.''

"'நீ சொன்னது என்ன மொழி?  தமிழா? ஆங்கிலமா?"

"இரண்டும் கலந்த மொழி.

பணம் Cut ஆகும்போது குணம் வெளிவருகிறது.

பெருமை Cut ஆகும்போது தாழ்ச்சி வெளிவருகிறது.

ஒவ்வொரு தலையான பாவமும் 
Cut ஆகும்போது ஒவ்வொரு தலையான புண்ணியமும் வெளிவருகிறது.

இதையெல்லாம் செய்பவர் கடவுள்தான்.''

"'Cut ஆகும்போது வலிக்கும்.
தளிர் விடும்போது இனிக்கும்.

மண்ணுலகில் சிற்றின்பம் கட்டானால்தான்,

விண்ணுலகில் பேரின்பம் தளிர்க்கும்."

"ஆண்டவரின் சிலுவையில் பங்கேற்றால்தான் அவருடைய விண்ணக மகிமையிலும் பங்கு கிடைக்கும்.

வெள்ளி இன்றி ஞாயிறு இல்லை.

மரணம் இன்றி வாழ்வு இல்லை.

காலத்தைக் கடந்தால்தான் நித்தியத்துக்குள் நுழைய முடியும்.

நிலையற்ற வாழ்வின் முடிவில்தான் நிலை வாழ்வு ஆரம்பம் ஆகும்."

லூர்து செல்வம்.

Sunday, May 7, 2023

விழாவும், விழாவும்.


.. விழாவும், விழாவும்.

''தாத்தா, விழா என்றால் என்ன?"

"'கொண்டாட்டம்."

''கொண்டாடப்படுவதா?
கொண்டாடுவதா?"

"'எனக்குப் புரியாமல் பேச வேண்டும் என்று தீர்மானித்து வந்திருக்கிறாய்."

"தாத்தா, புரியாதவன் வாயிலிருந்து புரியாதது தான் வரும்.

எனக்குப் புரியாததைப் புரிய வைக்க தான் உங்களிடம் கேட்கிறேன்."

"'கேள். தாராளமாக கேள்.

ஆனால் கேள்வியை நான் புரியும் படி கேள்."

"கிறிஸ்மஸ் ஒரு விழா.

மக்களால் கொண்டாடப்பட வேண்டிய திருவிழா.

ஆனால் மக்கள் அதைக் கொண்டாடுகிறார்களா?"

"'டிசம்பர் 25ல் கொண்டாடுகிறார்களே."

"கிறிஸ்மஸ் என்ற பெயரில் ஒரு விழா கொண்டாடுகிறார்கள்.

கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடுகிறார்களா?

கிறிஸ்து மாட்டுத் தொழுவத்தில் ஏழைக் குழந்தையாகப் பிறந்தார்.

ஏழ்மையின் மகத்துவத்தைக் கொண்டாட இலட்சக் கணக்கில் செலவழித்தால் அது கிறிஸ்துமஸ் விழாவா?"

"இப்போது உன் கேள்வி புரிகிறது.

கொண்டாடப் பட வேண்டிய விழாவை மக்கள் உரிய முறையில் கொண்டாடுகிறார்களா?"

"எதைச் செய்தாலும் செய்ய வேண்டிய விதமாகச் செய்ய வேண்டும்.

படிப்பதாகக் கூறிக் கொண்டு பள்ளிக் கூடம் போகும் மாணவர்கள் படிக்கிறார்களா?

அல்லது

படிப்பு என்று கூறிக் கொண்டு படிப்பிற்குச் சம்பந்தம் இல்லாததைச் செய்கிறார்களா.

சாப்பிடுவது எதற்காக?"

"'உடல் சக்தியும், வளர்ச்சியும் பெற."

"சத்துள்ள உணவைச் சாப்பிடுவதற்கு பதில் ருசியுள்ள உணவை ருசிக்காக மட்டும் சாப்பிட்டால் அதற்கு பெயர் சாப்பாடா?

ருசிக்காக கெமிக்கல்ஸ் நிறைய உள்ள உணவைச் சாப்பிட்டால்,

உடல் வளராது, உடலில் நோய்கள்தான் பெருகும்.

தேவத் திரவிய அனுமானத்தின் நோக்கம் என்ன?"

"'ஆன்மீக வளர்ச்சி."

"புதுத்துணி உடுத்துவதாலோ, பிரியாணி சாப்பிடுவதாலோ ஆன்மீகம் வளருமா?"

"'செலவுதான் வளரும்.

குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது அதன் ஜென்ம பாவம் மன்னிக்கப்படுகிறது.

இதனால் நாம் பெற வேண்டியது ஆன்மீக மகிழ்ச்சி.

விருந்தினர்களை வரவழைத்து அனைவருக்கும் பிரியாணி உணவு அளித்தால் நமக்கு ஆன்மீக மகிழ்ச்சி ஏற்படுமா?"

"ஏற்படாது. ஆனால் குழந்தைக்கு 
ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் போதே,

யார் யாரை விருந்துக்கு அழைக்க வேண்டும் என்ன விருந்து கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டு விடுகிறது.

ஞானஸ்நானத்தை விட அதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது."

"'தேவ நற்கருணை ஒரு தேவத் திரவிய அனுமானம்.

சிறுவர்களுக்கு புது நன்மை கொடுக்கத் தீர்மானிக்கும் போது 

பாவ சங்கீர்த்தனம், தேவ நற்கருணை ஆகியவற்றுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஆனால் பெற்றோர் இந்த பொறுப்பை ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு,

புது நன்மை நாளன்று வீட்டில் கொண்டாடப்பட வேண்டிய விழாவில் முழுக்க முழுக்க இறங்கி விடுகிறார்கள்.

விருந்தினர்களுக்கு அழைப்பு கொடுத்தல்,

விழா அன்று என்ன விருந்து கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்தல்,

சாப்பிடுவதற்கான மண்டபங்களை ஏற்பாடு செய்தல்

ஆகியவைதான் கடவுளை மகிமைப்படுத்த அவர்கள் செய்யும் ஏற்பாடுகள்.


"நீ விருந்து நடத்தும்போது ஏழைகள், ஊனர்கள், முடவர்கள், குருடர்கள் ஆகியோரைக் கூப்பிடு.

 அப்போது நீ பேறுபெற்றவன்.

 ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. 

நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்"

 என்ற இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் விருந்துக்கு அழைப்பு விடுக்கிறார்களா?.


அல்லது

கவர்களின் கனத்தின் அடிப்படையில் அழைப்பு விடுக்கிறார்களா?

உலகினர்களின் வழக்கம் நமக்குத் தெரியும்.

எல்லாம் வியாபார அடிப்படை தான், இலாபம்.

ஏழைகளை மட்டும் அழைத்தால் இயேசுவையே விருந்துக்கு அழைக்கிறார்கள். 
 
வசதி உள்ளவர்களை மட்டும் அழைத்தால் இயேசுவை எதிர்ப்பவர்களை விருந்துக்கு அழைக்கிறார்கள். 

தேவத் திரவிய அனுமானங்களை உலகத் திரவிய அனுமானங்களாக மாற்ற வேண்டாம்.

திருமணம் ஒரு தேவத் திரவிய அனுமானம்.

சொத்துக்கும், பணத்துக்கும், நகை நட்டுகளுக்கும் திருமணத்தை அடகு வைப்பவர்கள்

அடகைத் திருப்ப முடியாது.

திருமணத்துக்கு செல்பவர்களும் மணமக்களை மனதாக ஆசீர்வதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்வதில்லை.

 வாங்கிய கவரைத் திரும்ப கொடுக்க வேண்டும்,

 சாப்பிட வேண்டும் என்ற நோக்கோடு தான் செல்வார்கள்.

சாப்பாடு நன்றாக இருந்தால் நல்ல திருமணம், மோசமாக இருந்தால் மோசமான திருமணம். 

திருமணத்தை மதிப்பீடு செய்வது சாப்பாடு தான்.

இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட தேவ திரவிய அனுமானத்திற்கு மக்களிடமிருந்து கிடைக்கும் மரியாதை இதுதான்.

ஆன்மீக திருவிழாக்களை ஆன்மீக ரீதியாக கொண்டாடுபவர்கள் தான் உண்மைக் கிறிஸ்தவர்கள்.

உலக ரீதியாக கொண்டாடுபவர்கள் பேருக்குக் கிறிஸ்தவர்கள்.

ஆண்டவருடைய திருவிழாக்களை ஆண்டவரைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு கொண்டாடுவோம்.

லூர்து செல்வம்.