Tuesday, March 1, 2022

"இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்சென்றோமே" (மாற்கு. 10:28)

 "இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்சென்றோமே" 
(மாற்கு. 10:28)

ஒருவன் இயேசுவிடம் வந்து, 
"நல்ல போதகரே, நான் முடிவில்லா வாழ்வு பெற என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டபோது,

இயேசு அவனிடம் கட்டளைகளை அனுசரிக்கச் சொன்னார்.

அவன் அவற்றை அனுசரிப்பதாகச் சொன்னபோது 

இயேசு அவனிடம், 

"உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்பு வந்து என்னைப் பின்செல்." என்றார்.

ஆனால் அவனோ இவ்வார்த்தையைக் கேட்டு, முகம் வாடி, வருத்தத்துடன் சென்றான். ஏனெனில், அவனுக்கு ஏராளமான சொத்து இருந்தது.


இயேசு  தம் சீடரிடம் "கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது! " என்றார்.

இந்த உரையாடலின் தொடர்ச்சியில்தான் இராயப்பர் ஆண்டவரிடம்.

"இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்சென்றோமே" என்று சொன்னார்.


இயேசு அவர்களிடம் அவருக்காக தியாகம் செய்தவர்கள் தியாகம் செய்தவற்றை ஒன்றுக்கு நூறாகப் பெறுவதோடு, 

மறுமையில் முடிவில்லா வாழ்வையும் பெறுவார்கள் என்று சொன்னார்.

இராயப்பர் எல்லா 
அப்போஸ்தலர்களையும் உள்ளடக்கிதான் சொன்னார்.

யூதாஸ் எல்லாவற்றையும் விட்டு விட்டு வரவில்லை என்ற விசயம் அவருக்குத் தெரியாது.

யூதாஸ் பண ஆசையை விட்டு விட்டு வரவில்லை.

விளைவு? பணத்துக்காகவே இயேசுவைக் காட்டிக் கொடுத்தான்.

அவன் இயேசுவை நேசிக்கவில்லை என்று கூற முடியாது.

அவரை நேசித்திருக்கா விட்டால் 

அவர் மரணத் தீர்ப்பு இடப்பட்டு விட்டார் என்று தெரிந்தவுடனே

 அவன் நேசித்த பணத்தை தூர விட்டு எறிந்திருக்க மாட்டான்.

இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்பது  இயேசுவின் போதனை.

ஒரே நேரத்தில் இறைவனுக்கும் பணத்துக்கும் ஊழியம் செய்ய முடியாது.

இறை ஊழியத்துக்கு வருபவர்கள் இறைவனைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விட்டு விட்டு வரவேண்டும்.

பணத்தை மட்டுமல்ல, பண ஆசையையும் விட்டு விட்டு வரவேண்டும்.

இவ்வுலகில்தான் இறை ஊழியம் செய்கிறோம்.
 
இவ்வுலகப் பொருட்கள் இறை ஊழியத்துக்குப் பயன் படுத்தப் பட வேண்டும்.

பொருட்கள் மீது ஆசை இருந்தால் அவற்றுக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்து விடுவோம்.

அவற்றுக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்து விட்டால், இறைவனை அதற்குப் பயன் படுத்த ஆரம்பித்து விடுவோம்.

உலகப் பொருட்கள் மீது பற்று இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் நம் ஆண்டவர்,

"எளிய மனத்தோர் பேறுபெற்றோர்"

(Blessed are the poor in spirit.) என்றார்.

எதன் மீது நமக்கு அதிக ஆசை இருக்கிறதோ அதை அடைவதற்காகவே உழைப்போம்.

ஆசை உதிப்பது மனதில்.

ஒருவனுககு யார் மேல், அல்லது எதன்மேல் அதிக ஆசை உள்ளது என்பதை மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

ஒருவரது மனதை வாசிக்கும் சக்தியை இறைவன் யாருக்கும் அளிக்கவில்லை.

இறைவனுக்கு மட்டும்தான் நமது மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியும்.

கடவுள், பணம் ஆகிய இரண்டு எஜமானர்களில் நமது மனதில் முதல் இடம் யாருக்கு என்பது  கடவுளுக்கும், நமக்கும் மட்டுமே தெரியும்.

கடவுளுக்கு முதல் இடமாக இருந்தால், அவருக்கு சேவை செய்ய பணத்தைப் பயன் படுத்துவோம்.

பணத்துக்கு முதல் இடமாக இருந்தால் அதை ஈட்டவே இறை ஊழியத்தைப் பயன்படுத்துவோம்.

இரண்டுக்கும் சம இடம் கொடுக்க முடியாது.

எல்லாவற்றையும் விட்டு விட்டு வரவேண்டும் என்று சொல்லும் போது 

பணம் குறிக்கும் உலகப் பொருட்கள் மீது உள்ள ஆசையை 

முற்றிலும் விட்டு விட்டு வர வேண்டும் என்று ஆண்டவர் சொல்கிறார்.

நம் மனதில் இறைவன் மீது மட்டுமே ஆசை இருக்க வேண்டும்.

நம்மீது கூட நமக்கு ஆசை இருக்கக்கூடாது.

இறைவனுக்காக நம்மையே தியாகம் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும்.

தவக்காலம் ஆரம்பிக்கின்றது.

ஆண்டவர் துறந்தார் தன்னுயிரை நமக்காக,

அனைத்தையும் துறப்போம் அவருக்காக.

அவர்தம் அரசில் நுழைவதற்காக.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment