Wednesday, March 16, 2022

"ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு, மறுகன்னத்தையும் காட்டு. உன் மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் மறுக்காதே."(லூக்.6:29)

"ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு, மறுகன்னத்தையும் காட்டு. உன் மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் மறுக்காதே."
(லூக்.6:29)

நாம் கிறிஸ்தவர்கள்.

மற்றவர்களிடம் பேசும் போது கிறிஸ்துவைப் பற்றி பெருமையாகப் பேசுகிறோம்.

இது ஒரு அரசியல்வாதி தன் கட்சித் தலைவரைப் பற்றி பெருமையாகப் பேசுகிறானே,
அது மாதிரியா?

அல்லது,

உண்மையிலேயே மனதாற பேசுகிறோமா?

வழக்கமாக அரசியல்வாதிகளின் பேச்சில் உண்மையை விட சுயநலம்தான் அதிகம் இருக்கும்.

அநேக கட்சித் தொண்டர்கள் தங்கள் தலைவரைப் பற்றி பெருமையாகப் பேசுவது தலைவரின் குணநலன்களை விரும்புகிறார்கள் என்பதற்காக அல்ல,

கட்சியில் சலுகைகள் கிடைக்கும், பதவி கிடைக்கும் என்பதற்காகத்தான்.

நம் நிலை எப்படி?

கிறிஸ்துவின் குணநலன்களை உண்மையிலேயே  பிடிக்கும் என்பதற்காக அவரைப் பற்றி புகழ்கிறோமா?

அல்லது,

நாம் கிறிஸ்தவர்கள் என்பதற்காக மட்டும் தானா?

உண்மையிலேயே கிறிஸ்துவைப் பிடித்தால் அவரைப் போலவே வாழ முயல்வோம். அவர் சொன்படி நடப்போம்.

கிறிஸ்து சொல்கிறார்,

உங்களைச் சபிக்கிறவர்களுக்கு ஆசிகூறுங்கள். 

உங்களைத் தூற்றுவோருக்காகச் செபியுங்கள்.

ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு, மறுகன்னத்தையும் காட்டு. 

உன் மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் மறுக்காதே.

உன்னிடம் கேட்பவன் எவனுக்கும் கொடு. 

உன் உடைமைகளைப் பறிப்பவனிடமிருந்து திருப்பிக் கேட்காதே.

இவற்றை எல்லாம் இயேசு சொல்ல மட்டும் செய்ய வில்லை,
'
வாழ்ந்தே காண்பித்தார்.

அவரது பாடுகளைப் பற்றிய முழு விவரங்களையும் வாசித்தால் இது புரியும்.

பிலாத்துவுக்கு இயேசுவிடம் குற்றம் எதுவும் இல்லை என்று தெரிந்திருந்தும் 

அவரைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். எல்லா அடிகளையும் தன் உடல் முழுவதும் வாங்கிக் கொண்டார்.

அவரது தலையில் முள்முடியை
வைத்து, அவர்மேல் துப்பிப் பிரம்பை எடுத்து அவரைத் தலையிலடித்தனர்.

அருகில் வந்து  அவருடைய கன்னத்தில் அறைமேல் அறை அறைந்தனர்.

எல்லாவற்றையும் மறுப்பு இல்லாமல் ஏற்றுக் கொண்டார்.

அவரைச் சிலுவையில் அறையும் முன்   அவருடைய ஆடைகளைக் களைந்து,

 சீட்டுப்போட்டு தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.

ஆடையில்லாமல்தான் சிலுவையில் அறையப்பட்டார்.

அப்படியேதான் மரித்தார்.

நாம் இயேசுவின் சீடர்கள்.

நம்மை யாராவது சபிக்கும்போது, அவர்களை 
ஆசீர்வதித்திருக்கிறோமா?

நம்மை யாராவது தூற்றும் போது அவர்களுக்காக செபித்திருக்கிறோமா?

யாராவது நம்மைக் கன்னத்தில் அறைந்திருக்கிறார்களா?

அதை ஏற்றுக் கொண்டு மறுகன்னத்தையும் 
காட்டியிருக்கிறோமா?

நம்மிடமிருந்து எதையாவது பிடுங்குபவர்களுக்கு,

வேறு எதையாவது சேர்த்துக்  கொடுத்திருக்கிறோமா?

நம்மிடம் கேட்பவர்களுக்கு மறுக்காமல் கொடுக்கிறோமா?

நமது பையிலுள்ள பணத்தை ஒருவன் நம் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொண்டால்

"அவனும் நம் சகோதரன் தானே. அவன் பயன்படுத்தினாலும் நாம் பயன் படுத்தியது மாதிரிதான்."

என்று விட்டு விடுகிறோமா?

இப்படி எல்லாம் நாம் செய்தால் நம்மிடம் இயேசு விரும்பும் சகோதர உணர்வு இருக்கிறது.

நாம் நம்மை நேசிப்பதுபோல் நம் சகோதரனையும்  நேசிப்பது உண்மையிலேயே கிறிஸ்தவ பண்பு.

இயேசு தன்னை நேசிப்பது போல நம்மையும் நேசிக்கிறார்.

அதனால்தான் அவரது தந்தையை நமது தந்தை என்றார்.

அவர் அவரது தந்தையுடன் விண்ணகத்தில் வாழ்வதுபோல நாமும் வாழ வேண்டும் என்று ஆசிக்கிறார்.

அதற்கு நம்மை அழைப்பதற்காகவே மனிதனாய்ப் பிறந்து நம்மிடையே வாழ்ந்தார்.

உலக வாழ்க்கை முடிந்து விண்ணகம் சென்ற பின்பும் தொடர்ந்து நம்மிடையே வாழ்வதற்காகத்தான் 

திவ்ய நற்கருணையை ஏற்படுத்தி தொடர்ந்து நம்மோடு வாழ்ந்து வருகின்றார்.

இதை எல்லாம் உணர்ந்து நாமும் இயேசுவின் குணங்களோடு வாழ்ந்தால்

அவரைப் பற்றி பெருமையாகப் பேச நமக்கு தன்னலம் அற்ற உரிமை இருக்கிறது.

இயேசுவின் குணநலன்களோடு வாழ்ந்தால்தான் கிறிஸ்தவன் என்ற பெயர் நமக்கு ஏற்றதாக இருக்கும்.

நாம் உண்மையிலேயே கிறிஸ்தவனாக, மறு கிறிஸ்துவாக, வாழ வேண்டும்.

இயேசு நம்மில் வாழ வேண்டும்.
நம்மைப் பார்ப்போர் நம்மில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

"வாழ வேண்டியது நாம் அல்ல.
கிறிஸ்து நம்மில் வாழ வேண்டும்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment