Thursday, March 10, 2022

விண்ணிலிருந்து ஒரு கடிதம்.

விண்ணிலிருந்து ஒரு கடிதம்.

அன்புள்ள தம்பிமாருக்கு,

இறையண்ணன் இயேசுவின் அன்பும், அரவணைப்பும் ஆசீரும்.

பெற்றோருக்குப் பிள்ளைகள் கடிதம் எழுதும்போது பெற்றோர் அதில் எதிர்பார்ப்பது பிள்ளைகளின் அன்பின் வெளிப்பாட்டையா? அல்லது வார்த்தைகளையா?

நிச்சயமாக பிள்ளைகளின் அன்பைத்தான்.

கடிதம் வார்த்தைகளின் தொகுப்பு அல்ல, அன்பின் வெளிப்பாடு.

அதேபோல்தான் மண்ணில் வாழும் எனது சகோதரர்கள் எனக்கு அனுப்பும் கடிதங்களில் நான் எதிர்பார்ப்பது அன்பின் வெளிப்பாட்டைத்தான்,

வெறும் வார்த்தைகளையோ, உலகைச் சார்ந்த விண்ணப்பங்களையோ அல்ல.

உடனே நீங்கள்,

" கேளுங்கள் கொடுக்கப்படும் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்.

அதன்படிதானே நாங்கள் கேட்கிறோம்.

கேட்பதற்கு நாங்கள் விண்ணப்பங்களையும், வார்த்தைகளையும்தானே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

வேறு எப்படி கேட்க?"
என்று கேட்பீர்கள்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்"
என்ற வார்த்தைகளின் உண்மையான பொருளை நீங்கள் தெரிந்து கொண்டிருந்தால் இப்படி கேட்க மாட்டீர்கள்.

இறை மகனாகிய நான் மனுமகனாகப் பிறந்து மக்களிடையே வாழ்ந்தது அவர்களின் உடல் நோய்களைக் குணம் ஆக்குவதற்காக அல்ல.

ஆன்ம நோயைக் குணமாக்கவே மனுவுரு எடுத்தேன்.

நான் சென்றவிடமெல்லாம் மக்களின் நோய்களைக் குணமாக்கியது உண்மைதான்.

ஆனால் அதன் நோக்கம் அவர்களிடையே என்மீது விசுவாசத்தை ஏற்படுத்தவே.

ஒவ்வொரு முறை குணமாக்கியபோதும், "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றுதான் சொன்னேன்.

நான் வளர்ந்த ஊர் மக்களிடம் விசுவாசமில்லாமையால் அங்குப் பல புதுமைகள் செய்யவில்லை.

நான் மனிதன் ஆனதன் நோக்கம் ஆன்மீக மாற்றம், லௌகீக மாற்றம் அல்ல.

விசுவாசம், அன்பு, பாவப் பரிகாரம், பாவ மன்னிப்பு, ஆன்மாவின் மீட்பு, இறையரசு ஆகியவை மட்டுமே நான் மனிதன் ஆனதன் நோக்கம்,

நான் நிறுவிய திருச்சபையின் நோக்கமும் அவை மட்டுமே.

இவைகள் சம்பந்தப்பட்ட உதவிகளைத்தான் "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்று சொன்னேன்.

எனது சகோதார்கள் இவை சம்பந்தப்பட்ட உதவிகளைக் கேட்டால் கட்டாயம் கொடுப்பேன்.

உடனே நீங்கள்,

"நீங்கள்தானே, ஆண்டவரே, எங்களைப் படைத்து இந்த உலகில் வாழ வைத்திருக்கிறீர். 

 உங்களுடைய உதவி இல்லாமல் நாங்கள் எப்படி இங்கே வாழ முடியும்?

உலகம் சம்பந்தப்பட்ட உதவிகளையும் உம்மிடம் அல்லாமல் வேறு யாரிடம் கேட்போம்."
என்று கேட்பீர்கள்.

உங்களைப் படைத்தது நான்தான், உங்களை இந்த உலகில் வாழவைத்ததும் நான்தான்.

ஆனால் நான் உங்களை இந்த உலகில் வாழவைத்தது முழுக்க முழுக்க ஆன்மீகம் சார்ந்தது.

லௌகீகம் சார்ந்தது அல்ல.

நீங்கள் இவ்வுலகில் வாழ்ந்தாலும் நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள் அல்ல.

விண்ணகத்தைச் சார்ந்தவர்கள்.

நீங்கள் இவ்வுலகில் வாழ்வது விண்ணகம் வருவதற்காகத்தான், உலகில் நிரந்தரமாக வாழ்வதற்காக அல்ல.

ஆகவே உங்கள் சிந்தனை, சொல், செயல் எல்லாம் எப்போதும் விண்ணகம் நோக்கியே இருக்க வேண்டும்.

நீங்கள் மூச்சு விட்டால்தான் இவ்வுலகில் வாழ முடியும்.

ஆனால் அது விண்ணகம் செல்வதற்காகத்தான்.

நீங்கள் சாப்பிட்டால்தான் இவ்வுலகில் வாழ முடியும்.

ஆனால் அதுவும் விண்ணகம் செல்வதற்காகத்தான்.

நீங்கள் வேலை பார்த்து சம்பளம் வாங்கினால்தான் இவ்வுலகில் வாழ முடியும்.

ஆனால் அதுவும் விண்ணகம் செல்வதற்காகத்தான்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் விண்ணகம் செல்வதற்காகச் செய்தால்
அது ஆன்மீகம் சார்ந்த செயலாக மாறிவிடுகிறது.

 நீங்கள் கேட்கும் உதவிகள் ஆன்மீகம் சார்ந்தவையாக இருந்தால்தான்

அவை "கேளுங்கள் கொடுக்கப் படும்" என்ற எனது வாக்குறுதியின் கீழ் வரும்.

நீங்கள் கேட்கும் உதவி ஆன்மீக வாழ்விற்கு கேடு விளைவிக்குமானால் அதை எத்தனை தடவை கேட்டாலும் கொடுக்க மாட்டேன்..

ஆகவே நீங்கள் கேட்கும் ஏதாவது ஒரு உதவி உங்களுக்கு கொடுக்கப்படாவிட்டால் அது உங்களது ஆன்மீக நன்மைக்காகவே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஆன்மீகம் சார்ந்த உதவிகளைக் கேளுங்கள்,

கட்டாயம் கிடைக்கும்.

எனது சகோதரர்களின் கடிதங்களில் நான் எதிர் பார்ப்பது அன்பை மட்டுமே.

அன்பை வெளிப்படுத்தும் கடிதங்கள் நமது உறவை வலுப்படுத்தும்.

அன்பை மட்டுமே வெளிப்படுத்தி கடிதங்கள் எழுதலாம்.

எனது அன்பையும், எனது பாடுகளையும் தியானித்து அதன் அடிப்படையில் எழுதப் படும் கடிதங்களில் அன்பும், நன்றி உணர்வும் மட்டுமே இருக்கும்.

விண்ணப்பங்கள் எதுவும் இருக்காது.

உதாரணத்திற்கு,

செபமாலை தியானங்களைக் கடிதமாக அனுப்புகிறவர்கள் நான் அவர்களுக்காகப் பிறந்து வாழ்ந்ததை மட்டும் தியானித்து எழுதுவதால்,

அவர்கள் அதில் எனது அன்பையும், எனது அன்பினால் தூண்டப்படும் அவர்களது அன்பையும் மட்டும் குறிப்பிட்டிருப்பார்கள்.

நான் கற்றுக் கொடுத்த செபத்திலும், மங்கள வார்த்தை செபத்திலும் உள்ள ஆன்மீக விண்ணப்பங்களைத் தவிர வேறு எந்த விண்ணப்பமும் இருக்காது.

ஒரு 53 மணி செபமாலைக் கடிதத்தில்

எங்கள் அன்றாட உணவை இன்று தாரும்,

எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்,

எங்களை சோதனையில் விழாதபடி காப்பாற்றும்,

தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்

என்று ஆறு முறை விண்ணப்பிப்பார்கள்.


53 முறை எனது அன்னையை நோக்கி

"இப்போதும்,எங்கள் மரண நேரத்திலிலும் வேண்டிக் கொள்ளும்" 

என்றும் விண்ணப்பிப்பார்கள்.

தினமும் 153 மணி செபமாலை கடிதம் அனுப்புபவர்கள் அவர்களது வாழ்நாளில் எத்தனை முறை இந்த விண்ணப்பங்களை அனுப்புவார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள்!

அவர்களது விண்ணப்பங்கள் அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும்!

எல்லா விண்ணப்பங்களும் ஆன்மீகம் சார்ந்தவை.

ஆகவே செபமாலைக் கடிதம் எனக்கு மிகவும் பிடிக்கும்,

செபமாலை கடிதத்தை ஒழுங்காக எழுதுபவர்களை எனது அன்னையே விண்ணகம் அழைத்து வந்துவிடுவார்கள். 

மனிதர்கள் அனைவரையும் படைத்தவர் நான்தான்.

ஆயினும் அனைவரையும் எனது சகோதரர்களாக ஏற்றுக் கொண்டுள்ளேன்.

எனது தந்தை அனைவருக்கும் தந்தை.

நான் அனைவருக்கும் சகோதரன்.

நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினர்.

அன்பால் இணைந்து வாழும் குடும்பத்தினர்.

தந்தையும், நானும், பரிசுத்த ஆவியும் உங்கள் அனைவரையும் நேசிப்பதுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள்.

எல்லோரும் விண்ணகத்தில் என்றென்றும் அன்பில் இணைந்து வாழ்வோம்.

உயிருக்கு உயிராய் என்றும் உங்கள் அன்பு அண்ணன்,

இயேசு.

    *********** ***********

இயேசுவே,

உங்கள் சகோதரர்கள் அனைவரும் உங்களை நேசிக்கிறோம்.

நாங்களும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்.

தொடர்ந்து நேசிக்க வரம் அருளும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment