Monday, March 28, 2022

"குணமாக விரும்புகிறாயா ?" என்று அவனைக் கேட்டார்."(அரு.5:6)

"குணமாக விரும்புகிறாயா ?" என்று அவனைக் கேட்டார்."
(அரு.5:6)

கேட்கும்போது மட்டுமல்ல கேளாமலேயே கொடுப்பவர் இயேசு.

இதற்கு பெத்சாயிதா கட்டடத்தில் அவர் செய்த புதுமையே எடுத்துக்காட்டு.

முப்பத்தெட்டு ஆண்டுகளாகப் பிணியுற்றிருந்த ஒருவன் அங்கே படுத்துக்கிடந்தான்.

அவன் இயேசுவை பார்க்கவில்லை.

இயேசுதான் அவனைப் பார்த்தார்.

பார்த்தது மட்டுமல்ல அவன் எதுவும் கேளாமலேயே,

"குணமாக விரும்புகிறாயா ?" என்று அவனைக் கேட்டார்."


அவன் தனது பிரச்சனையை கூறியவுடன்,

"எழுந்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு நட."
என்றார்.

உடனே அவன் குணமடைந்து, தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடந்தான்.

இவ்வளவுக்கும் இயேசுதான் தன்னைக் குணமாக்கினார் என்றே அவனுக்குத் தெரியாது. 

 தன்னிடம் எந்த உதவியும் கேட்காத ஒருவனுக்கு இயேசு வலிய சென்று அவனுக்கு தேவையான உதவியைச் செய்கிறார்.

உதவி செய்வது அவருக்கு இயல்பான குணம்.

இயேசுவுக்கும் நமக்கும் உள்ள உறவைப் பற்றி சிறிது சிந்தித்துப் பார்த்தால் நமக்கு ஒரு முக்கியமாக உண்மை புரியும்.

அவரது தந்தையை நோக்கி 

"எங்கள் தந்தையே"

என்று அழையுங்கள் என்று இயேசு நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்.

அதாவது,

"நான் உங்கள் சகோதரன்" என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

நம்மை அவரது சகோதரர்களாக ஏற்றுக்கொண்டுள்ளவர் இயேசு.

ஆகவே இயேசுவுக்கும் நமக்கும் உள்ள முதல் உறவு சகோதர உறவு.

அவர் மனிதனாக பிறந்ததன் நோக்கம், நம்மை நமது பாவங்களிலிருந்து மீட்பது மட்டும்தான்.

ஆகவே இயேசுவுக்கும் நமக்கும் உள்ள அடுத்த முக்கிய உறவு மீட்பருக்கும், பாவிகளுக்கும் இடையே உறவு.

அதாவது நமது பாவங்களிலிருந்து மீட்கப் படுவதற்காகத்தான் அவரது சீடர்களாக நாம் மாறியிருக்கிறோம். 

ஆகவே, இயேசுவிடமிருந்து,
அதாவது, நமது அன்பு சகோதரரிடமிருந்து நாம் எதிர்பார்க்க வேண்டிய ஒரே உதவி பாவமன்னிப்பு மட்டும்தான்,

அதாவது, மீட்பு மட்டும்தான்.

மீட்பு பெறுவதற்காக மட்டும்தான் நாம் கிறிஸ்தவர்களாக மாறி இருக்கிறோம்.

வேலைக்காகவோ,

 வருமானத்திற்காகவோ, 

 குழந்தை பாக்கியத்திற்காகவோ, 

நோய்களிலிருந்து குணம் அடைவதற்காகவோ 

நாம் கிறிஸ்தவர்களாக மாறவில்லை.

இவை சம்பந்தப்பட்ட உதவிகளை இயேசு நாம் கேட்காமலேயே நமக்கு தருவார்.

ஆனால் பாவமன்னிப்பு நாம் கேட்டால்தான் தருவார்.

உலக சம்பத்தப்பட்ட உதவிகளின் பயன் நம்மோடு நித்திய காலத்திற்கும் வருவதில்லை.

ஆனால் பாவமன்னிப்பின் பயன் நம்மோடு நித்திய காலத்திற்கும் தங்கும். நமக்கு நிலை வாழ்வை தரும்.

ஆகவே நமது செபங்களில் மீட்பு சம்பந்தப்பட்ட ஆன்மீக உதவிகளுக்கே முதலிடம் கொடுப்போம்.

உலக சம்பந்தப்பட்ட உதவிகள் நாம் கேட்காமலேயே கிடைக்கும்.

"எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று கவலைப்படவேண்டாம்.


 ஏனெனில், புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடுவர்.

 உங்களுக்கு இவையனைத்தும் தேவை என உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.


 ஆகவே, கடவுளின் அரசையும் அவருடைய ஏற்புடையதையும் முதலில் தேடுங்கள்: 

இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.
( மத். 6:31 - 33)

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment