"குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா?"(லூக்.6:39)
கண் பார்வை இல்லாதவனை சரியான வழியே அழைத்துச் செல்பவனுக்கு நன்கு கண் பார்வை இருக்க வேண்டும்.
எழுத வாசிக்கத் தெரியாதவனுக்கு அதைக் கற்றுக் கொடுப்பவனுக்கு
எழுத வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வழி நடத்துபவனுக்கு வழி தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால்,
நற்செய்தியை அறிவிப்பவருக்கு
நற்செய்தி தெரிந்திருந்தால் மட்டும் போதாது,
அவர் நற்செய்திப்படி வாழ்பவராகவும் இருக்க வேண்டும்.
ஆண்டவர் சீடர்களிடம் வெறுமனே நற்செய்தியை அறிவிக்க மட்டும் சொல்லவில்லை.
"நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்."
அதாவது நற்செய்தியை வாழச் செய்யுங்கள்.
நற்செய்தியை வாழ்பவன்தான் சீடன்.
வெறும் அறிவிப்பு அறிவை மட்டும் வளர்க்கும்.
அறிவிப்பவர்கள் தாங்களும் அதன்படி வாழ்ந்தால்தான் மற்றவர்களை வாழ வைக்க முடியும்.
நற்செய்தியை அறிவிக்கும் போது அறிவிக்கப் படுபவர்கள் கேட்க மட்டும் செய்ய மாட்டார்கள்.
அறிவிப்பவர்களை பார்க்கவும் செய்வார்கள்.
தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழி வாங்குவதையே பழக்கமாகக் கொண்ட ஒருவர்,
"உங்கள் விரோதிகளை நேசியுங்கள், உங்களுக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்யுங்கள்"
என்று மற்றவர்களிடம் சொன்னால்,
கேட்பவர்கள் சொல்வதைக் கேட்பதற்குப் பதிலாக
சொல்பவரை விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
நற்செய்தி வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் வாழப்பட வேண்டும்.
உதாரணத்திற்கு நமது பள்ளிக் கூடங்களை எடுத்துக் கொள்வோம்.
நாம் பள்ளிக்கூடங்கள் நடத்துவது வெறுமனே எழுத வாசிக்கக் கற்றுக் கொடுப்பதற்கும்,
மாணவர்களை மருத்துவர்களாகவும், பொரியியல் வல்லுநர்களாகவும் ஆக்குவதற்கும் அல்ல.
நற்செய்தி பணியை வாழ்க்கை பணியாக செய்துவரும் நாம் பள்ளிக்கூடங்கள் நடத்துவதன் முக்கிய நோக்கம்
அங்கு படிப்போருக்கும் , பணி புரிவோருக்கும் நற்செய்தியின் மதிப்பீடுகளை அளிப்பதுதான்.
நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு எதிராக நாம் எதுவும் செய்துவிடக்கூடாது.
ஒரு உதாரணத்திற்கு,
பள்ளியில் படிக்கும் மாணவரோ, பணி புரியும் ஆசிரியரோ ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
மன்னியுங்கள், மன்னிக்கப் படுவீர்கள் என்பது நம்மை இயக்கக்கூடிய நற்செய்தி மதிப்பீடு.
தப்பு செய்தவர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால் உடனே மன்னிக்க வேண்டும்.
அதை விடுத்து தப்பு செய்தவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து
பணி நீக்கம் அல்லது பணி மாற்றம் செய்வதை மட்டும் நடை முறைப் படுத்திக் கொண்டிருந்தால்,
நமக்கும், மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?
நமக்கு முன்மாதிரிகையான நமது ஆண்டவராகிய
இயேசு
யூதாசைக்கூட பணிநீக்கம் செய்யவில்லையே!
"தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை"
என்ற அவரது செபம் யூதாசுக்கும் சேர்த்துதானே!
இராயப்பர் அவரை மூன்று முறை மறுதலித்தாலும் அவர் மீது இயேசு ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே.
அழுதவுடன் மன்னித்து விட்டாரே.
நம்மிடம் ஒப்படைக்கப் பட்டவர்களை மன்னித்து திருத்துவதுதான் நமது கடைமை, தண்டிப்பதற்காக வெளியேற்றுவது அல்ல.
இயேசுவின் சீடர்கள் நாம்.
அவர் சாதித்ததைத்தான் போதித்தார்.
நாமும் அவரைப் பின்பற்றுவோம்.
நாம் எங்கெல்லாம் வாழ்கின்றோமோ அங்கெல்லாம் நற்செய்தியை அறிவிக்கும் கடமை உண்டு.
அங்கெல்லாம் நற்செய்தியை வாழும் கடமையும் நமக்கு உண்டு.
சிந்தனை, சொல், செயல் ஆகிய மூன்றும் நமது மிகப் பெரிய சொத்து. இறைவன் அளித்தது.
சிந்தனை முழுவதும் நற்செய்தியால் நிறைந்திருக்க வேண்டும்.
அது சொல்லிலும், செயலிலும் மற்றவர்களிடையே வெளிப்பட வேண்டும்.
செயலால் வெளிப்படுவது தான் வாழ்க்கை.
நாம் ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பதாக வைத்துக் கொள்வோம்.
அலுவலகக் கடமைகளை நற்செய்தியின் மதிப்பீடுகளின் படி நிறைவேற்றினால்,
நாம் விளக்குத் தண்டின் மீது வைக்கப்பட்ட விளக்கு போல நற்செய்தி ஒளியை வீசிக் கொண்டேயிருப்போம்.
ஒளி அதன் கடமையை செவ்வனே செய்யும்.
நாம் நமது வாழ்க்கை மூலம் மற்றவர்களை இயேசுவின் சீடர்களாக மாற்றிக் கொண்டேயிருப்போம்.
வார்த்தை மூலம் நற்செய்தியை அறிவிப்பதை விட வாழ்க்கை மூலம் அறிவிப்பது சிறந்தது.
உணவு வாங்க பணம் கொடுப்பதைவிட, உணவையே கொடுப்பது சிறந்தது அல்லவா?
பெற்றோர் நற்செய்தியை வாழ்ந்தால் தான் பிள்ளைகளும் வாழ்வார்கள்.
ஆசிரியர் வாழ்ந்தால் தான் மாணவர்கள் வாழ்வர்.
நாம் வாழ்ந்தால்தான் நம்மைச் சுற்றியுள்ளோரும் வாழ்வர்.
நற்செய்தியைப் போதிக்கும் நாம் அனைவரும் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment