Friday, March 11, 2022

முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து." ( மத். 5:24)

"முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். 

பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து." ( மத். 5:24)

தன் அயலானை நேசியாத 
எவனும் கடவுளை நேசிக்கிறேன் என்று சொன்னால் அவன் பொய்யன்.

இறைவன் மீது கொண்டுள்ள அன்பையும், பிறன் மீது கொண்டுள்ள அன்பையும் பிரிக்க முடியாது.

இறைவன் மீது அன்பு இருந்தால், பிறன் மீதும் கட்டாயம் அன்பு இருக்கும்.

யார் மீது நமக்கு உண்மையான அன்பு இருக்கிறதோ அவருடைய நற்குணங்கள் நம்மையும் பற்றிக் கொள்ளும்.

கடவுள் எல்லோரையும் நேசிக்கிறார். நாம் அவரை நேசித்தால், நாமும் அவரைப் போலவே எல்லோரையும் நேசிப்போம்.

எல்லோரையும் என்றால் எல்லோரையும்தான்.

அதாவது நல்லவர், கெட்டவர் என்ற குண வேறுபாடு இன்றி,

ஏழை, பணக்காரன் என்ற பொருளாதார 
வேறுபாடு இன்றி,

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற சமூக வேறுபாடு இன்றி,

நண்பன், எதிரி என்ற வேறுபாடு இன்றி எல்லோரையும்.

கடவுளை நேசிப்பவர்களுக்கு எதிரிகளே இருக்க முடியாது. கடவுள் முன் எதிரியும் நண்பனாகி விடுவான்.

நான் எப்படி எனக்கோ, அப்படியே அனைவரும் எனக்கு.

கடவுளே இல்லை என்பவர்களையும் 
 அவர் நேசிக்கிறார்.

 கடவுளை நேசியாதவர்களையும்,
 அவர் நேசிக்கிறார்.

ரஷ்யர்களையும் நேசிக்கிறார்.
உக்ரேனியர்களையும் நேசிக்கிறார்.

இராயப்பரை நேசிப்பது போலவே யூதாசையும் நேசிக்கிறார்.

நம்மை நேசியாதவர்களையும் நாம் நேசிக்க வேண்டும்.

அன்பின் விளைவு சமாதானம்.

இறைவனை உண்மையாகவே நேசிப்பவர்கள் அவருக்கு விரோதமாக பாவம் எதுவும் செய்ய மாட்டார்கள்.

 ஆகவே இறைவனுக்கும் அவர்களுக்கும் இடையே பரிபூரண சமாதானம் நிலவும்.

அயலானை நேசிப்பவர்கள் பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் எதையும் செய்ய மாட்டார்கள்.

சமூகத்தில் இறையன்பின் அடிப்படையில் சமாதானம் நிலவும்.

அன்பு இருக்கும் இடத்தில் சமாதானமும் இருக்கும்.

இயேசு பிறந்த நாளில் விண்ணவர் பாடிய கீதம்

 அன்பு இருக்கும் இடத்தில் உண்மையாகும்.

இறையன்பாலும், பிறரன்பாலும் நிறைந்த அனைவர் மனமும் நன்மனமாக இருப்பதால்

மனதிலும், சொல்லிலும், செயலிலும் சமாதானம் நிலவும்.

அத்தகையோர் வாழும் உலகில் சண்டை, சச்சரவு, போர் என்ற வார்த்தைகளே இருக்காது.

'இறைவனோடு சமாதான நிலையில் உள்ளவர்களால்தான் அவருக்கு காணிக்கை செலுத்த முடியும்.

இறைவிரோத பாவ வாழ்க்கை வாழ்வோரால் இறைவனுக்கு காணிக்கை செலுத்த முடியாது.

பிறரோடு சமாதானம்  இன்றி காணிக்கை    செலுத்தினால் இறைவன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். 


''நீ பீடத்தின்மேல் காணிக்கை செலுத்த வரும்பொழுது, 

உன் சகோதரனுக்கு உன்மீது மனத்தாங்கல் இருப்பதாக அங்கே நினைவுற்றால்,

24 அங்கேயே, பீடத்தின்முன், உனது காணிக்கையை வைத்துவிட்டு, 

முதலில் போய் உன் சகோதரனோடு சமாதானம் செய்துகொள். 

பின்னர் வந்து, உன் காணிக்கையைச் செலுத்து." ( மத். 5:23, 24)
என்று இயேசு கூறுகிறார்.

நமக்கு நம் சகோதான் மீது எந்த கோபமும் இல்லாவிட்டால்கூட 
அவனுக்கு நம்மீது மனத்தாங்கல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. 

ஒருவேளை அவன் நம்மைத் தவறாக புரிந்து கொண்டால்கூட அவனுக்கு நம்மீது மனத்தாங்கல் ஏற்படலாம். 

நம்மைச் சரியாகப் புரிந்து கொள்ள உதவுவதன் மூலம் மனத்தாங்கலை நீக்கலாம்.

எப்படியாவது மனத்தாங்கலை நீக்கியபின் அவருக்குக் காணிக்கை செலுத்தும்படி ஆண்டவர் சொல்கிறார்.

இதிலிருந்து மக்கள் சமாதானமாக வாழ்வதற்கு ஆண்டவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது.

ஆண்டவரது விருப்பங்களை முழு மனதோடு நிறைவேற்றுவதுதான் அவருடைய சீடர்களாகிய நமது தலையாய கடமை.

இயேசு நமது அன்பர்.

சீடர்கள் என்ற முறையில் குருவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பதுபோல,

அன்பர்கள் என்ற முறையில் அவரை எல்லாவற்றுக்கும் மேலாக அவரை அன்பு செய்ய வேண்டும்,

 அவரை மகிழ்ச்சிப் படுத்த வேண்டும்.

சமாதான வாழ்வே மகிழ்ச்சியான வாழ்வு.

காணிக்கை என்று சொன்னவுடனே ஒரு உண்மை நினைவுக்கு வருகிறது.

காணிக்கை இறைவனுக்கு செலுத்தப்படுவது.

இறைவன் பரிசுத்தர்.

அவருக்குச் செலுத்தப்படும் காணிக்கையும் பரிசுத்தமாக இருக்க வேண்டும், அதாவது, பரிசுத்தமான முறையில் ஈட்டியதாக இருக்க வேண்டும்.

பாவ வழியில், குறுக்கு வழியில் ஈட்டிய பணத்தை இறைவனுக்குச் செலுத்துவது

அவரை அவமானப் 
படுத்துவதற்குச் சமம்.

இறைவனுக்கு ஆலயம் கட்டுவதற்காக நன்கொடை பிரிப்பார்கள்.

அதுவும் காணிக்கைதான்.

நம்மால் இயன்றதை, காணிக்கை செலுத்தும் மன நிலையுடன் நன்கொடையாகக் கொடுக்க வேண்டும்.

நன்கொடை பிரிப்பவர்,

"பத்தாயிரமும் அதற்கு மேலும் கொடுப்பவர் பெயர் கற்பலகையில் பொறிக்கப்பட்டு, 

கோவில் சுவரில் பதிக்கப்படும்"

என்று கூறினால்,

"அப்போ 10,000 எழுதிக் கொள்ளுங்கள்" என்று சொல்லி 10,000 கொடுத்தால்

கொடுத்தது இறைவனுக்குக் கொடுத்த காணிக்கை அல்ல.

சுயவிளம்பரத்துக்கான கூலி.

ஆலயம் கட்டுவது நமது பெயரை விளம்பரப் படுத்துவதற்காக அல்ல.

நல்ல, தாழ்ச்சியான மனதுடன் காணிக்கை செலுத்த வேண்டும்.

அதுதான் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும்.

சமாதான மனதுடன் செலுத்தப்படும் காணிக்கைதான் உண்மையான காணிக்கை.

பாவம் இல்லாதிருக்கும் போது இறைவனோடு சமாதான நிலையில் இருக்கின்றோம்.

பிறருக்கு தீங்கு நினைக்காமல் நல்லதையே நினைக்கும் போது பிறரோடு சமாதான நிலையில் இருக்கின்றோம்.

சமாதானம் என்றாலே இறைவனோடும், பிறனோடும் அன்பு உறவு நிலையில் இருப்பதுதான்.

இறையன்பையும், பிறரன்பையும் பிரிக்க முடியாது.

நமது பிறனுக்கு அன்புடன் செய்யும் உதவியே இறைவனுக்கு செலுத்தும் காணிக்கைதான்.

நம்மிடம் பணம் இருக்கும்போது பிறனது அவசரச் செலவுக்கு 
10 ரூபாய் கொடுக்க மறுத்து விட்டு,

கோவில் உண்டியலில் 
1000 ரூபாய் காணிக்கை போட்டால் அது இறைவனுக்கு ஏற்ற காணிக்கை அல்ல.

நன்மனதோடு இருப்போம். இறைவனோடும், பிறனோடும் சமாதான நிலையில் இருப்போம்.

சமாதான நிலைதான் இறைவனுக்கு காணிக்கை செலுத்த ஏற்ற நிலை.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment