Sunday, March 6, 2022

"அங்கு நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்"(லூக்.4:2)

"அங்கு நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார்"
(லூக்.4:2)

1. இயேசு அருளப்பர் கையால் ஞானஸ்நானம் பெறுகிறார்.

2. பாலைவனத்தில் நாற்பது நாட்கள் நோன்பு இருக்கிறார்.

3. அலகையினால் சோதிக்கப் படுகிறார்.

4. நற்செய்தி போதனையை ஆரம்பிக்கிறார். 

இயேசு முழுமையாக கடவுள்,
(Fully God)

முழுமையாக மனிதன்.
(Fully Man)

கடவுள் என்ற முறையில் அவருக்கு எதற்கும்  தன்னைத் தானே தயாரிக்கத் தேவையில்லை.

ஆனால் மனிதன் என்ற முறையில் தான் செய்யவிருக்கும் நற்செய்திப் பணிக்குத் தன்னைத் தானே தயாரிக்கிறார்.

அதற்காகத்தான் ஞானஸ்நானம், நோன்பு, சோதனை.

இயேசுவின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு நற்செய்தி அறிவிப்பு இருக்கும்.

நாம் அதைத் தியானித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அவரது நற்செய்திப் பணிக்கான தயாரிப்பில் தன்னைச் சோதிக்க அலகைக்கு அனுமதி அளித்ததிலும் ஒரு நற்செய்தி இருக்கிறது.

இது நற்செய்தி அறிவிப்பிற்காகத் தங்களைத் தாங்களே தயாரிப்போர் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய நற்செய்தி.

இயேசு சந்தித்த சோதனையைத் தியானித்து தெரிந்து கொள்வோம்.

நற்செய்தி அறிவிப்பு முழுக்க முழுக்க ஆன்மீகப் பணி, இதில் லெளகீகத்திற்கு கொஞ்சம் கூட இடமில்லை.

லெளகீகத்தில் ஏதாவது ஒரு பணியைத் தேர்ந்தெடுப்போர் மனதில் மூன்று வித நோக்கங்கள் இருக்கும்.

1. உணவும் வாழ்க்கை வசதிகளும்.

2. சொத்து சேர்த்தல்.

3. தங்கள் திறமையை நிரூபித்தல்.

அலகை இயேசுவைப் பார்த்து:

"நீர் கடவுளின் மகனானால் இந்தக் கற்கள் அப்பம் ஆகும்படி கட்டளையிடும்"

அதாவது அவரது கடவுள் தன்மையை தனக்குத் தானே உணவு தயாரிக்கப் பயன்படுத்தும்படி கேட்கிறான்.

இயேசு அலகையை நோக்கி:

" மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர்வாழ்கிறான் "

என்கிறார்.

அதாவது, நற்செய்திக்காகத் தங்களைத் தாங்களே தயாரிப்போர் 

உணவிற்காவும், வாழ்க்கை வசதிகளுகாகவும் பணி புரிய ஆசைப்படக்கூடாது.

தாங்களும் இறை வாக்கினால் வாழ வேண்டும், மற்றவர்களையும் இறை வாக்கினால் வாழ வைக்க வேண்டும்.

அவர்களது ஆன்மீக வாழ்வின் உணவு இறை வாக்கு மட்டும்தான்.

உணவுக்காகவும், வாழ்க்கை வசதிகளுக்காகவும் வாழ நினைப்போர் நற்செய்திப் பணியை முழு நேரப் பணியாகத் தேர்ந்தெடுக்கக் கூடாது

அடுத்து அலகை 

உலக அரசுகள் அனைத்தையும் அவற்றின் மாட்சியையும் காட்டி,

"நீர் என்னைத் தெண்டனிட்டு வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குக் கொடுப்பேன்" என்றது.

இயேசு

 "போ அப்பாலே, சாத்தானே, ஏனெனில், " உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரை மட்டுமே ஆராதிப்பாயாக " 

என்றார்.

உலக அரசுகள் அனைத்தையும் அவற்றின் மாட்சியையும் சம்பாதிப்பது நற்செய்திப் பணியின் நோக்கமல்ல,

கடவுளை வணங்கி ஆராதிப்பதும், மற்றவர்களையும் அதேபோல் செய்ய வைப்பதும்தான் நற்செய்திப் பணியின் நோக்கம்.

உலகச் சொத்துக்களை சம்பாதிக்க ஆசைப்படுவோர் நற்செய்திப் பணிக்கு வரக்கூடாது.

அடுத்து

"நீர் கடவுளின் மகனானால் கீழே குதியும்: 

ஏனெனில், " தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்,

 உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள் " என எழுதியுள்ளது" என்றது.

அதாவது,

தான் கடவுளின் மகன் என்பதை நிரூபிக்க 

கோவில் முகட்டிலிருந்து கீழே குதிக்கக் சொன்னது.

இயேசு அதனிடம்,  " உன் கடவுளாகிய ஆண்டவரை நீ சோதியாதே " என்றார்.

நற்செய்தி அறிவிப்பதில் தனக்குள்ள திறமையை காண்பிப்பதற்காக 
நற்செய்தி அறிவிக்கக் கூடாது.

நற்செய்தி அறிவிப்பதின் நோக்கம் நற்செய்தி சார்ந்த வாழ்வாக மட்டுமே இருக்க வேண்டும், தன் திறமையைக் காட்டுவது அல்ல.

உலக வாழ்வு சார்ந்த பணியை மேற்கொள்வோர் தங்களின் உழைப்பின் திறமையை பறைசாற்ற 

வெள்ளி விழா பொன் விழா போன்ற விழாக்களைக் கொண்டாடுவார்கள்.

நற்செய்தி பணியாளர்கள் இதற்கெல்லாம் ஆசைப்படக்கூடாது.

உலக நோக்கங்களுக்காக நற்செய்தி பணி அறிவிக்க வருவோர் அதில் வெற்றி பெற மாட்டார்கள்.

நற்செய்தி சார்ந்த ஆன்மீக வாழ்வுக்குத் தங்களை அற்பணிப்போர் மட்டுமே
அப்பணிக்கு வரவேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment