Wednesday, March 30, 2022

"என் தந்தை இந்நேரம்வரை செயலாற்றுகிறார். நானும் செயலாற்றுகிறேன்" என்றார்.(அரு.5:17)

"என் தந்தை இந்நேரம்வரை செயலாற்றுகிறார். நானும் செயலாற்றுகிறேன்" என்றார்.
(அரு.5:17)

இயேசு தனது தந்தையைப் பற்றியும், பரிசுத்த ஆவியைப் பற்றியும் குறிப்பிடும் போதெல்லாம்

 தன்னைப்பற்றிய,

 அதாவது கடவுளைப் பற்றிய,

இறையியல் உண்மையை நமக்கு வெளிப்படுத்துகிறார்.

இயேசு இறைமகன், கடவுள்.

இறை மகன் மனுக்குலத்தின் மீட்புக்காக கன்னி மரியின் வயிற்றில் மனுவுரு எடுத்த விநாடியிலிருந்து அவருக்கு இரண்டு சுபாவங்கள்:

தேவ சுபாவம். (நித்தியமானது)

மனித சுபாவம். (இவ்வுலகில் பிறப்பு, வளர்ச்சி, துன்பங்கள், மரணம் ஆகியவற்றுக்கு உட்பட்டது.)

இயேசு முழுமையாக கடவுள்.
Fully God.

முழுமையாக மனிதன்.
Fully Man 

ஒரு ஆள், இரண்டு சுபாவங்கள்.

இயேசு பிறந்து, வளர்ந்து, போதித்து, பாடுகள் பட்டு, மரித்தது  மனித சுபாவத்தில்.

அவருடைய சீடர்கள் அவரை மனுவுரு எடுத்த இறைமகன் என்பதை விசுவசித்து ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் அவரை மனிதனாகவே பார்த்தார்கள். அவர் இறைமகன் என்பதை விசுவசிக்கவில்லை.

அவர் கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று சொன்னபோது அதை அவர்கள் தேவ தூசணமாகக் கருதினார்கள்.

அவருடைய சீடர்களாகிய நாம் அவரை விசுவசிக்கிறோம்.

இறைமகனாகிய அவர் தந்தையோடும், பரிசுத்த ஆவியோடும் ஒரே கடவுள். "

மூவரும் மூன்று ஆட்கள், ஆனால் ஒரே கடவுள்.

மூவருக்கும் ஒரே தேவ சுபாவம், ஒரே ஞானம், ஒரே சித்தம்.

நம்மைப் பொறுத்த மட்டில் நம்மில் பலர் ஒரே மாதிரியான சுபாவத்தையும், ஒரே மாதிரியான ஞானத்தையும், ஒரே மாதிரியான சித்தத்தையும் உடையவர்களாக இருக்கலாம்.

ஆனால் ஒரே சுபாவத்தையும், ஒரே ஞானத்தையும், ஒரே சித்தத்தையும் உடையவர்களாக இருக்க முடியாது.

ஆனால் கடவுளைப் பொறுத்தமட்டில் தந்தையின் ஞானமே மகனின் ஞானமும்,
பரிசுத்த ஆவியின் ஞானமும்.

 தந்தையின் சித்தமே மகனின் சித்தமும், பரிசுத்த ஆவியின் சித்தமும்.

"என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்." 

என்று கூறிய இயேசு, "எனது விருப்பத்தை நிறைவேற்றவே வந்தேன்." என்றே கூறியிருக்கலாம்.

ஆனால் தம திரித்துவ உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவே,

"என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்." 

என்று கூறினார்.

"எனக்கென்று தனி விருப்பம் கிடையாது. தந்தையின் விருப்பம்தான் எனது விருப்பம்." என்பதை வலியிறுத்தவே

"என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கி வந்தேன்."  

என்று கூறினார்.

மனிதனாய்ப் பிறந்தது இறைமகன்தான்.

இதை,

கடவுள் மனிதனாகப் பிறந்தார்,
கடவுள் தச்சு வேலை செய்தார்,
கடவுள் நற்செய்தி அறிவித்தார்,
கடவுள் பாடுபட்டார்.
கடவுள் சிலுவையில் நமக்காக மரித்தார் என்றும் கூறலாம்.

இயேசு கடவுளாகையால்தான் கன்னி மரியாளை கடவுளின் தாய் என்கிறோம்.

ஆகவே,
பாடுபட்டு சிலுவையில் மரித்தது இறைமகனாக இருந்தாலும்,

நமக்கு மீட்புத் தருவது பரிசுத்த தம திரித்துவமே.

ஆகவே, நமது எல்லா செபங்களையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே சொல்கிறோம். 

மூவரும் மூன்று தனித்தனி ஆட்கள்தான். (Distinct Persons)

ஆனால் 

தந்தை இருக்குமிடத்தில் மகனும் இருப்பார், தூய ஆவியும் இருப்பார்.

ஞானஸ்நானத்தின்போதும்,
உறுதிப் பூசுதலின்போதும்

நம்மீது பரிசுத்த ஆவி இறங்கும்போது, தந்தையும் இறங்குவார், மகனும் இறங்குவார்.

மகனை நோக்கி வேண்டும்போது நமது வேண்டுதலை தந்தையும் கேட்பார், தூய ஆவியானவரும் கேட்பார்.

தந்தையை நோக்கி வேண்டும்போது நமது வேண்டுதலை மகனும் கேட்பார்,
தூய ஆவியானவரும் கேட்பார்.

தூய ஆவியை நோக்கி வேண்டும்போது
நமது வேண்டுதலை தந்தையும் கேட்பார்,
மகனும் கேட்பார்.

ஏனெனில் மூவரும் ஒரே கடவுள். கடவுளைப் பிரிக்க முடியாது.

தந்தை, மகன், தூய ஆவியிடமிருந்து,

அதாவது கடவுளிடமிருந்து,

நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கடவுள் நம்மை அவரது சாயலாகப் படைத்தார்.

அவரைப் போல் இருக்கும்படி நம்மை படைத்தார். 

தந்தை, மகன், தூய ஆவி மூவரும் எப்படி ஒரே கடவுள்?

மூவருக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே தேவ சுபாவம், ஆகவே ஒரே கடவுள்.

'ஒரே' என்ற வார்த்தை நமக்கும், கடவுளுக்கும் பொருந்தாது.

 தம திரித்துவ கடவுளுக்கு மட்டுமே பொருந்தும்.

நாம் அவரது சாயலில் மட்டுமே இருக்க முடியும், 

 அவராக இருக்க முடியாது. 

"உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய்

 'இருப்பதுபோல,'

நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."

அவருடைய சாயல் நம்மிடம் முழுமையாக இருக்க வேண்டுமென்றால் 

அவர் நம்மோடு பகிர்ந்துகொண்ட பண்புகளை நம்மால் முடிந்த அளவு வளர்க்க வேண்டும்.

கடவுளுக்காகவும், நமது பிறனுக்காகவும் நம்மை நாமே தியாகம் செய்யும் அளவுக்கு நமது அன்பு இருக்க வேண்டும்.
(இயேசு நமக்காகத் தன்னையே தியாகம் செய்தது போல)

அன்புக்கு எதிரான குணங்கள் கடவுளிடம் சிறிது கூட இல்லை. அவர் அன்பே உருவானவர்.

 நம்மிடம் எந்த அளவிற்கு அன்பு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நமது இறைச் சாயலும் இருக்கும்.

அன்பு குறைந்தால் சாயலும் குறையும்.

அன்பு முற்றிலும் போய்விட்டால் சாயலும் முற்றிலும் போய்விடும்.

இது கடவுள் நம்மோடு பகிர்ந்து கொண்ட எல்லா பண்புகளுக்கும் பொருந்தும்.

கடவுளும் நமக்கும் ஒரே சித்தம் இருக்க முடியாது.

ஆனால் நம்மால் கடவுளின் சித்தத்தை நமது சித்தமாக ஏற்றுக்கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு நாம் குருவானவர் ஆக வேண்டும் என்பது அவரது சித்தம் என்று வைத்துக் கொள்வோம்.

 நமக்கு தேவ அழைத்தல் இருப்பதை உணர்ந்தால்,

அதை நாம் ஏற்றுக் கொள்ளும்போது கடவுளின் சித்தத்தை ஏற்றுக் கொள்கிறோம்.

அவரது சித்தத்தை ஏற்றுக்கொள்ளும்போது நமக்கும் அவருக்கும் இடையே உள்ள ஒன்றிப்பு அதிகமாகும்.

 We enter into unity with God.  

The more we are united with God the more we are like unto Him.

எந்த அளவுக்கு அவரது சித்தத்தை நமது சித்தமாக ஏற்றுக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கும் அவருக்கும் உள்ள ஒன்றிப்பு அதிகமாகும்.

A க்கும், B க்கும் பிரியாணி சாப்பிட விருப்பம் இருந்தால் இருவருக்கும் ஒரே விருப்பம் உள்ளது என்று சொல்வோம். 

ஆனால் உண்மையில் அது ஒரே விருப்பம் அல்ல.

ஒரே மாதிரியான விருப்பம்.

பரிசுத்த தம திரித்துவத்தின் மூன்று ஆட்களுக்கு மட்டுமே ஒரே விருப்பம் இருக்க முடியும்.

இறைவனது விருப்பத்தை நமது விருப்பமாக ஏற்று, அதை நிறைவேற்றி அவரோடு ஒன்றிப்போம்.  

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment