Thursday, March 17, 2022

"ஒன்றும் எதிர்பாராமல் கடன் கொடுங்கள். " (லூக்.6:35)

"ஒன்றும் எதிர்பாராமல் கடன் கொடுங்கள். " (லூக்.6:35)

உலகம் ஒரு சடப் பொருள்.
இறைவன் ஆவி.

நமது உடல் ஒரு சடப்பொருள்.
நமது ஆன்மா ஆவி.

நமது உடலைச் சார்ந்த வாழ்க்கை உலக வாழ்க்கை.

நமது ஆன்மாவைச் சார்ந்த வாழ்க்கை இறைவனுக்காக வாழப்படும் ஆன்மீக வாழ்க்கை.

உடலைச் சார்ந்த வசதிகளுக்காகவும், இன்பத்திற்காகவும் மட்டும் வாழ்வோர் லௌகீக வாதிகள்.

ஆன்மாவைச் சார்ந்த அருள் பெறுவதற்காக மட்டும் வாழ்வோர் ஆன்மீக வாதிகள்.

இயேசு மனுவுரு எடுத்தது நமது ஆன்மாவை இரட்சிக்க, உடலை அல்ல.

நமது ஆன்மாவை இரட்சிக்க தன் உடலை சிலுவையில் பலியாக்கினார்.

ஆன்மாவை மீட்க ஆசிக்கும் ஆன்மீகவாதிகள் உடலைச் சார்ந்த லௌகீக வாழ்வைப் பலி கொடுத்து தான் ஆக வேண்டும்.

ஒரே நேரத்தில் இறைவனுக்கும், உலகிற்கும் சேவை செய்ய முடியாது.

இந்த அடிப்படையில் உலகில் வாழ்வோரை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம:

ஆன்மாவிற்காக வாழ்வோர்,
உடலுக்காக அதாவது உலகிற்காக வாழ்வோர்.

ஆன்மாவிற்காக வாழ்வோருக்கு விண்ணகமே தாய்வீடு.

உலகிற்காக வாழ்வோருக்கு உலகமே முதலும், இறுதியும்.

நாம் கிறிஸ்தவர்கள். விண்ணகமே நமது தாய்வீடு.

நாம் உலகிற்காக வாழ்வோரைப் போல் வாழ்ந்தால் கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கு அருகதை அற்றவர்களாக மாறிவிடுவோம்.

கிறிஸ்து நமக்குக் கூறும் அறிவுரைகளை லௌகீக வாதிகளால் பின்பற்ற முடியாது.


கிறிஸ்து கூறுகிறார்:

அனைவரையும் நேசியுங்கள்.
அதாவது உங்களை நேசிப்பவர்களை மட்டுமல்ல,
உங்களை வெறுப்பவர்களையும் நேசியுங்கள்.

லௌகீக வாதிகள் தங்களை வெறுப்பவர்களை நேசிக்க மாட்டார்கள்.

உங்களுக்குத் தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்.

லௌகீக வாதிகள் தங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நன்மை செய்வார்கள்.

கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்குக் கொடுங்கள். திரும்ப வரும் என்று எதிர் பார்க்காமல் கொடுங்கள்.

லௌகீக வாதிகள் கடனைத் திருப்பிச் செலுத்த முடிந்தவர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள்.

உங்கள் பகைவர்களுக்கு அன்புசெய்யுங்கள். அவர்களுக்கு நன்மை புரியுங்கள். ஏனெனில், கடவுள் நன்றிகெட்டவர்க்கும் தீயவர்க்கும் பரிவு காட்டுகிறார்.

லௌகீக வாதிகள் தங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு மட்டுமே நன்மை செய்வார்கள்.

நமது சிந்தனையும், பழக்க வழக்கங்களும் கிறிஸ்து ஆன்மீக வாதிகளுக்குக் கொடுத்திருக்கிற அறிவுரைகளை ஒட்டியே இருக்க வேண்டும்.

மைசூர் மகாராஜா அரண்மனையைப் பார்த்திருப்பீர்கள்.

அந்தக் காலத்து மன்னர்கள் தாங்கள் வாழ நிறைய பணம் செலவழித்து கட்டிய அரண்மனைகளுக்கு ஒரு உதாரணம்.

இது உலகவாதிகள் தங்கள் பெருமையை நிலை நாட்ட எடுத்த முயற்சி.

ஆனால் நமது மன்னர், 

உலகில் வாழ்ந்த காலத்தில் தலை சாய்க்கக் கூட இடமில்லாதிருந்த இயேசு,

 தான் வாழ கோடிக்கணக்கில் செலவழித்து அரண்மனை எதுவும் கட்ட சீடர்களுக்குப் பணிக்கவில்லை.

அவர் தனது திருச்சபையைத்தான் (Church) உலகெங்கும் பரப்பச் சொன்னார்.

சென்றவிடமெல்லாம் கோவில்கள் (Churches) கட்டுங்கள் என்று சொல்ல வில்லை.

வழிபாடு செய்ய கோவில்கள் வேண்டும், ஆனால் கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்டவை அல்ல.

வழிபடச் செல்பவர்களில் பெரும்பாலோர் ஏழைகள்தான்.

ஐரோப்பிய நாடுகளில் மன்னர்கள் காலத்தில் கட்டப் பட்ட பெரிய பெரிய கோவில்களிலிருந்து வழிபட

இப்போது போதிய கிறிஸ்தவர்கள் இல்லை என்று சொல்கிறார்கள்.

கிறிஸ்தவர்களின் ஆன்மீக வாழ்வின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்போம்,

கட்டடங்களுக்கு அல்ல.

 திருவிழாக் காலங்களில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

திருவிழாக்கள் கொண்டாடப்படுவதே ஆன்மீக வளர்ச்சிக்காகத்தான்.

நாம் கோவில் அலங்காரம், சப்பர அலங்காரம், திருவிழாவுக்காக நமக்கு எடுக்கப் படும் புதிய துணிமணிகள், திருவிழாச் சாப்பாடு போன்றவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துலத்தை,

ஆன்மாவை அருள் வரங்களால் அலங்கரிக்கும் பாவசங்கீர்த்தனம்,

திருப்பலி,

 நமது ஆண்டவர் நம்முள் உணவாவும், உறவாகவும் வருதல், 

இறைவன் செய்து வரும் உதவிகளுக்கு நன்றி செலுத்துதல் போன்ற ஆன்மீக காரியங்களுக்குக் கொடுக்கிறோமா?

ஆண்டு முழுவதும் கோவிலுக்கு வராதவர்கள் கூட திருவிழா அன்று வந்து விடுவர், சப்பரம் இழுப்பதற்காக.

திருவிழாவுக்கு முன்னால் திருவிழா எப்படிக் கொண்டாடுவது என்று தீர்மானிப்பதற்கான சபையார் கூட்டத்தில் 

வரி எவ்வளவு போடுவது, எப்படி பிரிப்பது என்பது பற்றி ஆராய்வதற்கே வெகு நேரம் செலவழிப்பார்கள்.

திருவிழாவுக்கு பிந்திய கூட்டத்தில் வரி வரவு செலவு பற்றி சண்டை போடவே முழுநேரத்தையும் 
செலவழிப்பார்கள்.

ஆன்மாவைப் பற்றி கவலைப் பட பங்குச் சாமியார் மட்டும் இருப்பார். ஆனால் அவர் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள்.


பையன் புதுநன்மை வாங்க பெற்றோர் ஏற்பாடு செய்து கொண்டிருப்பார்கள்.

பையனுக்கு புதுநன்மை பற்றி Sister ஞானோபதேசம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

பெற்றோர் புதுநன்மை வாங்கும் விழாவை எப்படிக் கொண்டாடுவது என்று திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

பையனுக்கு White and White dress தைக்க எங்கே, என்ன விலைக்குத் துணி எடுப்போம்?.
யாரிடம் தைக்கக் கொடுப்போம்?

விழாவுக்கு யார் யாரை அழைப்போம்?

Card அச்சிட்டுக் கொடுப்போமா? வாயினால் சொன்னால் போதுமா?

என்ன சாப்பாடு போடுவோம்?

Photos எடுத்தால் போதுமா? அல்லது Video எடுப்போமா? எந்த Photographer ஐ ஏற்பாடு செய்வோம்?

இப்படியெல்லாம் திட்டம் போட்டுக் கொண்டிருப்பார்கள்.

விழா கோலாலமாக நடக்கும்.

விழா முடிந்தபின் யார் யார் என்ன Gift கொடுத்திருப்பார்கள் என்று கணக்கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

விழாவின் நாயகனைப் பற்றி யாரும் கவலைப் படமாட்டார்கள்.

இயேசுவைப் பற்றிப் பேச,
சாப்பாட்டைப் பற்றி பேச எடுத்துக் கொண்ட நேரம் கிடைக்காது.

ஆனால் உண்மையில் விழா அவருக்குதான்.

ஆனால் அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பது விழாவுக்கு மட்டும்தான்.

இப்படித்தான் அநேக ஆன்மீக விழாக்களை உலகத்தனமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

ஆன்மீக வாழ்வை உலகத்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆன்மாவிற்காக வாழ்வோம்.
ஆன்மாவிற்காக மட்டுமே வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment