(லூக்.11:23)
மனிதன் கடவுளுக்காக வாழ படைக்கப்பட்டிருக்கிறான்.
உலகில் படைக்கப்பட்டிருந்தாலும் உலகிற்காக வாழ படைக்கப்படவில்லை.
கடவுளுக்காக வாழ்வது ஆன்மீக வாழ்வு.
உலகிற்காக வாழ்வது லௌகீக வாழ்வு.
ஒருவன் ஆன்மீக வாழ்வு வாழ்வான்,
அல்லது,
லௌகீக வாழ்வு வாழ்வான்.
இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வாழ்வு இல்லை.
இரண்டும் எதிர் எதிர் வாழ்வுகள்
ஆன்மீக வாழ்வு வாழாதவன் அதற்கு எதிராக வாழ்கிறான்.
கடவுளுக்காக வாழாதவன் அவருக்கு எதிராக வாழ்கிறான்.
ஆகவேதான் இயேசு சொல்கிறார்,
"என்னோடு இல்லாதவன் எனக்கு எதிராய் இருக்கிறான்."
இயேசுவுக்காக வாழ்பவன் தனது வாழ்வின் மூலம் அவரது நற்செய்தியை உலகிற்கு அறிவிக்கிறான்.
உலகிற்காக வாழ்பவன் தனது வாழ்வின் மூலம் நற்செய்திக்கு எதிர்ச் செய்தியை உலகிற்கு அறிவிக்கிறான்.
ஞானஸ்நானம் பெற்ற கிறிஸ்தவனாக இருந்தாலும் பாவ வாழ்க்கை வாழ்ந்தால் அவன் வாழ்வது ஆன்மீக வாழ்க்கை அல்ல, உலக வாழ்க்கைதான்.
புண்ணிய வாழ்க்கை வாழும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கு புகழ் சேர்க்கிறார்கள்.
பாவ வாழ்க்கை வாழும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கு அவப்பெயர் சேர்க்கிறார்கள்.
நல்ல கிறிஸ்தவர்களைப் பார்ப்பவர்கள்,
",கிறிஸ்துவின் சீடர்கள் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள்."
என்று கூறினால் அது கிறிஸ்துவுக்கு மகிமை.
கெட்ட கிறிஸ்தவர்களைப் பார்ப்பவர்கள்,
",கிறிஸ்துவின் சீடர்கள் மோசமானவர்களாகத்தான் இருப்பார்கள்."
என்று கூறினால் அது கிறிஸ்துவுக்கு அவப்பெயர்.
பிள்ளைகள் தங்களது நல்ல வாழ்க்கை மூலம் பெற்றோருக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
பெற்றோர் நல்லவர்களாக இருந்தாலும் பிள்ளைகள் கெட்டவர்களாக இருந்தால் நல்ல பெற்றோருக்கு கெட்ட பெயர்தான் கிடைக்கும்.
நாம் நமது வாழ்க்கை மூலம் நமது ஆண்டவருக்கு மகிமை சேர்க்க வேண்டும்.
நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும்,
செய்யும் ஒவ்வொரு செயலும்
ஆண்டவரது அதிமிக மகிமைக்காக இருக்க வேண்டும்.
நாம் இயேசுவின் நற்செய்தியின்படி,
தவறு செய்பவர்களை மன்னிப்பவர்களாகவும்,
யார் மேலும் பொறாமைப் படாதவர்களாகவும்,
யாரைப் பற்றியும் கெடுத்துப் பேசாதவர்களாகவும்,
நமக்குத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்பவர்களாகவும்,
விரோதிகளை நேசிப்பவர்களாகவும்,
தேவைப்படுவோருக்குக் கொடுப்பவர்களாகவும்,
எல்லோருக்கும் உதவி செய்பவர்களாகவும்
வாழ்ந்தால்,
நம்மைப் பார்ப்பவர்களும் நம்மைப் போல் வாழ ஆரம்பித்து விடுவோர்.
நாம் விண்ணகத்துக்கு ஆட்களைச் சேகரிப்பவர்களாக மாறிவிடுவோம்.
நற்செய்திக்கு எதிராக வாழ்ந்தால் வருபவர்களைச் சிதறடிப்பவர்களாக மாறிவிடுவோம்.
ஒன்று சேகரிப்போம்,
அல்லது,
சிதறடிப்போம்.
உலகிற்காக வாழ்வோர் மத்தியில் நாம் ஆண்டவருக்காக வாழ்ந்தால்,
நாம் ஒளிபோல் செயல்பட்டு
நம்மைச் சுற்றி வாழ்வோரையும் ஆண்டவருக்காக வாழவைப்போம்.
நாம் கிறிஸ்தவர்களாக இருந்தால் மட்டும் போதாது,
கிறிஸ்தவர்களாக வாழ்வோம்.
வாழ்வோம், வாழ வைப்போம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment