Thursday, March 3, 2022

தவக்கால நாட்கள் எவை?

தவக்கால நாட்கள் எவை?

"தாத்தா, சாம்பல் புதனில் ஆரம்பித்த தவக்காலம் எப்போது முடிவடைகிறது?"

", தவக்காலம் நீ நினைப்பது போல் சாம்பல் புதனில் ஆரம்பிக்கவில்லை."

"சாமியார் அப்படித்தானே சொன்னார். பிரசங்கம் நடக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தீர்களா?"

".சாமியார் சொன்னதும் உண்மை, நான் சொல்வதும் உண்மை."

"அதெப்படி. சாமியார் சொன்னது உண்மையானால் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்க முடியாது."

", நம்மைப் பொறுத்தமட்டில் நமது தவக்காலம் நாம் பிறந்தபோதே ஆரம்பித்து விட்டது,

நாம் இறக்கும்போது தான் முடிவடையும்."

"சொல்வதைப் புரியும் படி சொல்லுங்களேன்."

", தவக்காலம் என்றால் தவம் செய்யும் காலம்.

இயேசு  நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகப் பாடுகள் படவும், தன் உயிரைப் பலியாகக் கொடுக்கவுமே பிறந்தார்.

நாம் அவருடைய சீடர்கள்.

குருவைப்போல் தான் சீடன் இருக்க வேண்டும்.

நாமும் நாம் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாகத் துன்பங்களை அனுபவிக்கவும்,

அதற்காக நமது உயிரை கடவுளுக்குப் பலியாக ஒப்புக் கொடுக்கவும்தான் உலகில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இயேசு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக சிலுவையைச் சுமந்தார்.

நாம் படும் துன்பங்களே நாம் சுமக்கும் சிலுவை.

நாம் சுமக்கும் சிலுவைக்கு  நாம் வைத்திருக்கும் பெயர் தவ முயற்சி.

நமது வாழ்நாள் முழுவதும் தவ முயற்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது.

ஆகவே நமது வாழ்க்கைதான் நமக்கு தவக்காலம், அதாவது தவ முயற்சிகளைச் செய்யும் காலம்."

"இயேசு வாழ்நாள் முழுவதும் சிலுவையைச் சுமக்கவில்லையே.

மரணத்தீர்வை இடப்பட்ட நேரத்திலிருந்து, சிலுவையில் அறையப்படும் வரை தானே அதைச் சுமந்தார்."

", நீ சொல்வது மரச்சிலுவையை, நான் சொன்னது இயேசு சொன்ன சிலுவையை, அதாவது, துன்பங்களை.

  இயேசு மரியாளின் வயிற்றில் இருக்கும்போதே சிலுவையைச் சுமக்க ஆரம்பித்து விட்டாரே.

அவரோடு சேர்ந்து அவரது தாயுமல்லவா சுமந்தாள்.

நசரேத்தூரில் சொந்த வீடு இருக்கும்போது 
பேறுகாலத்துக்கு மரியாள் வயிற்றில் இயேசுவோடு, சூசையப்பர் அழைத்துச் செல்ல பெத்லகேமுக்குப் பயணம் செய்கிறாள்.

குழந்தை பிறக்க ஊர் முழுதும் தேடியும் இடம் கிடைக்காமல் ஒரு மாட்டுத் தொழுவத்தில் தங்குகிறார்கள்.

மாட்டுச் சாண நாற்றத்துக்கு மத்தியில் இயேசு பிறக்கிறார்.

குழந்தையைக் கிடத்த   இடம் கிடைக்காமல் மாட்டுக் தீவனத் தொட்டியில் கிடத்துகிறாள் மாதா.

ஏரோதுவுக்குப் பயந்து குழந்தை இயேசு எகிப்துக்குப் பயணித்து அங்கு மூன்று ஆண்டுகள் நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்.

குழந்தை பருவத்தில் சுமக்க ஆரம்பித்த சிலுவையை இயேசு வாழ்நாள் முழுவதும் சுமக்கிறார்.

மரச் சிலுவையில் அடைந்த மரணத்துடன் அவரது சிலுவை வாழ்க்கை முடிவடைந்தது."

"நீங்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால் வாழ்க்கை என்றாலே சிலுவை என்று தான் பொருள் போல் தெரிகிறது."

",தெரிகிறது என்ன தெரிகிறது, உண்மையே அதுதான்.

சிலுவை தான் நாம் செய்ய வேண்டிய தவமும்கூட.

தவம் செய்யவே பிறந்தோம்.
தவம் செய்யவே வாழ்கிறோம். தவத்தின் முடிவில் மரிப்போம்.

அடுத்த வினாடி விண்ணகம்தான்."

"ஈஸ்டர் எப்போது?"

", இயேசுவே மூன்று நாள் காத்திருந்தார்.

அவர் நமக்கு எப்போது ஈஸ்டர் என்று நினைக்கிறாரோ அன்று 
ஈஸ்டர். அதற்கு என்ன அவசரம். நாம்தான் விண்ணகம் சென்றுவிடுவோமே!"

"நமது தவக்காலத்தில் நாம் செய்யவேண்டிய தவ முயற்சிகள் பற்றி கொஞ்சம் கூறுங்களேன்."

", என்ன வந்தாலும் அதை ஆண்டவருக்காக ஏற்றுக் கொள்வதுதான் தவம்.

அது இன்பமாகவும் இருக்கலாம் துன்பமாகவும் இருக்கலாம்.

எதுவாக இருந்தாலும் அதுவே நமக்கு மகிழ்ச்சி.

குழந்தைகளாய் இருக்கும்போது பெற்றோருக்கு கீழ்ப் படிந்து வாழ்வது தவம்.

வளர்ந்தபின் அந்தஸ்தின் கடமைகளை நிறைவேற்றுவது தவம்.

ஞானஸ்நானம் பெற்றபின் நல்ல கிறிஸ்தவர்களாக வாழ்வது தவம்.

எல்லா சூழ்நிலைகளிலும் கடவுளின் சந்நிதானத்தில் வாழ்வது தவம்.

நம்மை நாம் நேசிப்பதுபோல அயலானையும் நேசித்து, பிறர் பணி செய்து வாழ்வது தவம்.

புண்ணிய வாழ்வு வாழ்வே தவம்.

 தவவாழ்வு நமது மரணத்துடன் முடிவுக்கு வரும்.

அதன்பின் நித்திய பேரின்ப வாழ்வு தான்."

"பாவத்தைப் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவே இல்லையே?"

",நீ கேட்பது 

'மேற்கு நோக்கி நட'

 என்று சொன்னால்

 'கிழக்கு நோக்கி நடக்காதே'

என்று ஏன் சொல்லவில்லை  என்று கேட்பது போல் இருக்கிறது.

தவம் செய்யவே பிறந்தோம்.
அதை மட்டுமே செய்வோம்" 

"தவம் என்றால் பாவப் பரிகாரம் என்று சொன்னீர்களே, அதனால்தான் பாவத்தைப் பற்றி கேட்டேன்."

", அன்பு செய்து வாழ்வது தவம்.
அன்புக்கு எதிராகச் செயல்படுவது பாவம்.

மனித பலகீனத்தால் பாவத்தில் விழுகிறோம்.

அதற்குப் பரிகாரமாக இறை அருளின் உதவியோடு தவம் செய்வோம்.

போதுமா, இன்னும் விளக்க வேண்டுமா?"

"ஆசிரியர் மாணவனிடம் 'நன்றாகப் படி' என்று மட்டும் சொன்னால் போதாது.
 
எப்படி எப்படி நன்றாகப் படிக்க வேண்டும் என்றும் விளக்க வேண்டும்."

", தொடர்ந்து பேசுவோம்."

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment