Sunday, March 13, 2022

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்." (லூக்.6: 36)

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்." (லூக்.6: 36)

 நம்மைப் பற்றி இயேசுவுக்கு எவ்வளவு பெரிய ஆசை பாருங்கள்!

நேசர்களுக்கு தாங்கள் நேசிப்பவர்களும் தங்களைப் போலவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயற்கைதான்.

ஆனால் நாட்டை ஆளும் மன்னர் தனது குடிமக்கள் தனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று ஆசிப்பாரே  தவிர,

தன்னைப் போல் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட மாட்டார்.

இயேசு நம்மைப் படைத்த கடவுள்.

அவர் அற்ப மனிதர்களாகிய நாம் கடவுளாகிய அவரைப் போல் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுவதை  சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது.

ஆனால் அதுதான் உண்மை.

அவரே சொல்கிறார்:

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்."

தந்தையும், மகனும் ஆட்கள் தான் இரண்டே தவிர ஒரே கடவுள்தான்.

ஆகவே தந்தையைப் போல என்றாலும், மகனைப் போல என்றாலும் ஒன்று தான்.

கடவுள் அளவில்லாதவர். அவருடைய எல்லா பண்புகளும்
 அளவில்லாதவை.

நாமோ அளவுள்ளவர்கள். 

அளவுள்ள நாம் எப்படி அளவில்லாதவரைப் போல் இருக்க முடியும்?

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல, 

நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.

இரக்கத்தைப் பொறுத்த மட்டில்:


உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருக்கிறார்.

அதுபோல நீங்களும் இரக்கமுள்ளவர்களாய் இருங்கள்.

அளவைப் பொறுத்த மட்டில் 

கடவுள் அளவில்லாதவர், ஆகவே அவருடைய இரக்கமும் அளவில்லாதது.


நாம் அளவுள்ளவர்கள்.
நாம் நம்முடைய அளவு எவ்வளவோ அவ்வளவு முழுமையும் இரக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

கடல் நிறைய தண்ணீர் உள்ளது.

நமது வீட்டில் தம்ளர் நிறையவும் 
தண்ணீர் உள்ளது.

அளவு வித்தியாசமாக இருக்கலாம்.

ஆனால் முழுமையில் வித்தியாசமில்லை.

கடவுள் முழுமையும் இரக்கம் உள்ளவராக இருப்பதால், அவரிடம் இரக்கத்திற்கு எதிரான எந்த பண்பும் இருக்க முடியாது.

நாமும் முழுமையாக இரக்கம் உள்ளவர்களாக இருந்தால் நமக்குள்ளும் இரக்கத்திற்கு எதிரான எந்த பண்பும் சிறிது கூட இருக்கக் கூடாது.

இரக்கத்திற்கு எதிரான எந்த பண்பும் சிறிது இருந்தாலும் நாம் கடவுளைப் போல இரக்கம் உள்ளவர்கள் அல்ல.

கடவுள் இவ்வுலக மக்கள் தனக்கு எதிரான பாவங்களைச் செய்து கொண்டேயிருந்தாலும்

 அவர்களைத் தொடர்ந்து பராமரித்துக் கொண்டே வருவதற்குக் காரணம் 

அவரது அளவு கடந்த இரக்கம்தான்.

நாம் வருடக்கணக்காக நமது பிள்ளைகளை இரக்கத்தோடு பராமரித்து விட்டு,

நமக்கு வயது வந்த காலத்தில் அவர்கள் நம்மைக் கவனிக்கா விட்டால்,

 அதற்காக அவர்களை வெறுக்க ஆரம்பித்து விட்டால்,

நம்மிடம் முழுமையாக இரக்கம் இல்லை.

எந்தக் காலத்திலும், எந்த காரணத்தை முன்னிட்டும் மாறாத இரக்கம்தான் முழுமையான இரக்கம்.

நம்மைப் பார்ப்பவர்கள் நமது அன்பையும், இரக்கத்தையும் பார்த்து 'இவர்கள் இயேசுவின் சீடர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment