Sunday, March 27, 2022

"பரிசேயரும் மறைநூல் வல்லுநரும், "இவர் பாவிகளை வரவேற்கிறார். அவர்களோடு உண்கிறார்" என்று முணுமுணுத்தனர்."(லூக்.15:2)

"பரிசேயரும் மறைநூல் வல்லுநரும், "இவர் பாவிகளை வரவேற்கிறார். அவர்களோடு உண்கிறார்" என்று முணுமுணுத்தனர்."
(லூக்.15:2)

இயேசு பாவிகளோடு பழகுவதும், உண்பதும் பரிசேயர்களுக்கும், மறைநூல் வல்லுநர்களுக்கும் பிடிக்கவில்லை.

 ஆனால் இயேசுவுக்கு அதுதான் பிடித்திருக்கிறது.

இயேசு கடவுள், பரிசுத்தர்.
பாவிகள் பாவ அழுக்கால் நிறைந்தவர்கள்.

பரிசுத்தர் ஏன் பாவ அழுக்கு உள்ளவர்களை விரும்புகிறார்?

மருத்துவர் வியாதியஸ்தர்களை ஏன் விரும்புகிறாரோ அதே காரணத்திற்காகத்தான்.

மருத்துவர் வியாதியைக் குணமாக்குவதற்காக வியாதியஸ்தர்களை விரும்புவதுபோல்தான் 

பரிசுத்தர் பாவிகளை மன்னிப்பதற்காக அவர்களைத் தேடுகிறார்.

சோப்பு அழுக்குத் துணிகளைத் தேடிச்செல்லும், அழுக்கை அகற்றுவதற்காக.

அதுபோல் தான் பரிசுத்தர் பாவிகளைத் தேடி வருகிறார் பாவங்களை மன்னிப்பதற்காக. 

பாவங்களை மன்னிக்க வேண்டும் என்பதில் கடவுளுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

இறைவன் தன்னை நேசிப்பது போலவே தன்னால் படைக்கப்பட்ட அனைத்து மனிதர்களையும் நேசிக்கிறார்.

ஆனால் மனிதர்களே கட்டிக்கொண்ட பாவம் என்னும் சுவர் அவர்களை இறைவனை நேசிப்பதிலிருந்து தடுக்கிறது.

பாவத்தை அழித்து மனிதர்கள் தன்னை நேசிப்பதற்கு வழிவகுக்கவே கடவுள் மனிதனாய் பிறந்து பாடுபட்டு சிலுவையில் தன்னையே பலியாக்கினார்.

தன்னைத்தானே பலியாக்கியதன் பயன் மனிதருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக 

மனிதரது பாவங்களை மன்னித்து அவர்களை பரிசுத்தர்களாக மாற்றுவதில் இறைவன் மிகவும் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார்.

மனிதர்கள்மீது அவர் கொண்டுள்ள அன்புதான் அவர்கள் செய்த பாவங்களை மன்னிப்பதற்கு அவர் காட்டும் ஆர்வத்துக்குக் காரணம்.

தனது அன்பு எத்தகையது என்பதை நமக்குப் புரிய வைக்கவே ஊதாரி மைந்தன் உவமையை இயேசு கூறினார்.

ஊதாரி மைந்தன் தந்தையின் சொத்துக்களில் தனது பங்கை வாங்கிக்கொண்டு,

அதை ஊதாரித்தனமாக செலவழித்து கொண்டிருந்தாலும், தந்தைக்கு அவன்மேல் சிறிதுகூட கோபம் வரவில்லை.

அவன் மனம் திருந்தி வரும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தார். 

அவன் தான் கொண்டு சென்ற சொத்துக்களையெல்லாம் காலி செய்தபின், சாப்பாட்டுக்கு வழியில்லாமல், தனது செயலுக்காக மனம் வருந்தி தந்தையிடம் திரும்பிய பொழுது

அவனது குற்றங்களை எல்லாம் மன்னித்தது மல்லாமல் அவனை முழுமனதோடு தனது இல்லத்தில் ஏற்றுக் கொண்டார்.

அவன் திரும்பியதைக் கொண்டாட பெரிய விருந்து ஒன்றை வைத்தார்.   

அவ்வாறே தான் கடவுளும் நாம் பாவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும்

 நாம் மனம் திருந்தி அவரிடம் வரவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை தனது குருக்களுக்கு கொடுத்திருக்கிறார்.

நாம் பாவ மன்னிப்பு பெற செய்ய வேண்டியதெல்லாம் நமது பாவங்களுக்காக மனம் வருந்தி பாவசங்கீர்த்தனம் செய்வதுதான்.

எவ்வாறு நமது உடல் சுத்தமடைய குளிப்பது அவசியமோ 

அவ்வாறே நமது ஆன்மா பரிசுத்தம் அடைய பாவசங்கீர்த்தனம் செய்வது அவசியம்.

பாவசங்கீர்த்தனம் செய்யாமல் பாவத்தோடு எத்தனை தவ முயற்சிகள் செய்தாலும் அத்தனையும் வீண்.

இதை தவக்காலத்தில் மட்டுமல்ல நமது வாழ்நாள் முழுவதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நமது பாவங்களை மன்னிப் பதற்காக நம்மோடு வாழவே இயேசு ஆசைப்படுகிறார்.

அவரது ஆசையை நிறைவேற்றுவோம்.

முடிவில்லா காலம் நம்மை பேரின்பத்தில் வாழ வைப்பார்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment