(லூக். 11:33)
விருந்தினர்கள் வரும் நேரம் நெருங்கி விட்டது.
சமையலறையில் விருந்திற்கான உணவு வகைகள் ரெடி.
தாய் மகளிடம்,
"எல்லா உணவு வகைகளையும் சாப்பாட்டறையில் கொண்டு போய் வை."
மகளும் தாய் சொன்னதைச் செய்தாள்.
சிறிது நேரத்தில் தகப்பனார் விருந்தினர்களுடன் வந்தார்.
எல்லோரும் ஹாலில் உட்கார்ந்தனர்.
மனைவி கணவனிடம்,
"சாப்பாடெல்லாம் சாப்பாட்டறையில் ரெடிங்க.
எல்லோரையும் உள்ளே அழைத்துச் செல்லுங்கள்."
எல்லோரும் சாப்பாட்டறைக்குச் சென்று நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.
ஆனால் மேஜையில் எதுவும் இல்லை.
தாய் உள்ளே நுழைந்து கொண்டே,
"சாப்பிட ஆ......"
சொல்லப் போனவள் Dining Table ஐப் பார்த்தாள்.
அங்கே ஒன்றும் இல்லை.
"அடியே" மகளை அழைத்தாள்.
"சாப்பாட்ட எங்க வச்ச?"
மகள் Cup Board ஐக் காண்பித்தாள்.
"ஏண்டி, சாப்பாட்டை
Dining Tableல வைக்கச் சொன்னா, Cup Board ல வச்சிருக்க?"
"அம்மா, நீங்க அப்படிச் சொல்லல.
சாப்பாட்டறையில் கொண்டு போய் வைன்னுதான் சொன்னீங்க. சொன்னதைத்தானே செய்தேன்.
Cup Boardம் சாப்பாட்டறையில் தானே இருக்கிறது."
* * * *
எதை எங்கே வைக்க வேண்டும் என்று தெரிய வேண்டும்.
"இருட்டுகிறது. விளக்கைப் பொருத்து." என்று சொன்னால்
விளக்கைப் பொருத்தி விளக்குத் தண்டின்மீது வைக்க வேண்டும். மரக்காலுக்கு உள்ளே வைக்கக் கூடாது.
விளக்குத் தண்டின்மீது வைத்தால்தான் ஒளி எங்கும் தெரியும்.
விளக்கும் பயன்படும்.
பங்கு சுவாமியார் பங்கிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும்
குடும்பத்துக்கு ஒரு புது பைபிள் இலவசமாகக் கொடுத்தார்.
சில தினங்களுக்குப் பின் ஒரு குடும்பத்தலைவரிடம்,
"நான் தந்த பைபிளை என்ன செய்கிறீர்கள்."
"அதைப் பத்திரமாகப் பீரோவில் பூட்டி வைத்திருக்கிறேன், சுவாமி."
"பூட்டி வைத்திருக்கிறீர்களா?"
"ஆமா, சுவாமி. அல்லது பையன்கள் எடுத்து வாசிக்க ஆரம்பிச்சிடுவாங்களே!"
"வாசிக்க ஆரம்பிச்சா?"
"புது பைபிள் அழுக்காகி விடுமே!"
"இங்க பாருங்க, நான் பைபிள் தந்தது பீரோவில் பூட்டி வைப்பதற்கு அல்ல.
தினமும் திறந்து வாசித்து, அதன்படி வாழ்வதற்காக.
கைபட்டு பைபிள் அழுக்கு
ஆனதற்காக கடவுள் வருத்தப் படமாட்டார்.
இறைவாக்கினால் நமது ஆன்மா சுத்தம் அடைந்ததற்காக மகிழ்ச்சி அடைவார்.
இறைவாக்கு விளக்கின் ஒளி போன்றது.
யாராவது விளக்கைப் பீரோவுக்குள் பூட்டி வைப்பார்களா?
இறைவாக்கினால் நாம் பயன் பட வேண்டுமென்றால்,
அதை நமது வாழ்வில் அனுசரித்து, அதை நமது வாழ்வாக மாற்ற வேண்டும்.
நாம் அதை வாழ்வாக மாற்றினால் நமது வாழ்க்கை இறைவாக்காகிய ஒளியைப் பிரதிபலிக்கும்.
அதை மற்றவர்கள் பார்த்தால் அவர்களும் இறைவாக்கை தங்கள் வாழ்வாக்க முயல்வார்கள்.
நாம் நடமாடும் பைபிளாக மாறிவிடுவோம்.
உங்களை நடமாடும் பைபிளாக மாற்றுவதற்காகத்தான் நான் குடும்பத்துக்கு ஒரு பைபிள் கொடுத்தேன்.
எனது பீரோவில் வைக்க இடமில்லாமல் தரவில்லை."
"மன்னித்துக் கொள்ளுங்கள், சுவாமி. இனிமேல் குடும்பத்தில் எல்லோரும் பைபிள் வாசித்து அதன்படி வாழ்வோம்."
தட்டில் வைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டால்தான் நமது வயிறு நிறையும்.
உணவைப் பார்த்துக் கொண்டே இருந்தால், உணவின் பயனை அடைய முடியாது.
பைபிள் வசனங்களை வாசிப்பது அவற்றை மனப் பாடம் செய்வதற்காக மட்டுமல்ல, அதை வாழ்வதற்கு.
மனப் பாடம் செய்வது நல்லதுதான்.
மனப் பாடம் செய்ததன்படி நடந்தால்தான் வசனத்தால் நமக்குப் பயன்.
சாத்தானுக்கு நம்மை விட பைபிள் வசனங்கள் நன்கு தெரியும்.
தனக்குத் தெரிந்த வசனங்களை கடவுளைச் சோதிக்கவே அது பயன்படுத்தியது.
ஐயோ பாவம், சாத்தானால் பைபிளை வாழ முடியாது.
ஆனால் நம்மால் வாழ முடியும்,
வாழ வேண்டும்.
எததை எங்கெங்கே வைக்க வேண்டுமோ அததை அங்கங்கே வைக்க வேண்டும்.
இறைவாக்கை சிந்ததையிலும் வைக்க வேண்டும்,
சொல்லிலும் வைக்க வேண்டும்,
செயலிலும் வைக்க வேண்டும்.
அதாவது, வாழ்க்கை முழுவதிலும் வைக்க வேண்டும்.
இறைவாக்கை நாம் வாழ வேண்டும்.
இறைவன் நம்முள்ளும், நாம் அவருள்ளும் வாழ வேண்டும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment